Sunday, July 16, 2023

பினம் தின்னிக் கழுகுகள் -3

 


பினம் தின்னிக் கழுகுகள் -3
2000ஆம் ஆண்டு..
----------------------------------
புது வருடம் பிறந்தது.
ஆனால் இரவு முழுதும் தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தார் ரமேஷ்.
நேற்று அவர் அலுவலகத்தில் புது மில்லியினம் ஆண்டை கொண்டாடும் விதமாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதில் புத்தாண்டு 2000 எப்படியிருக்கும் என் ஒரு பட்டி மன்றம்.அதற்கு நடுவராக ரமேஷ்..
பத்திரிகைகளில் ஒன்றிரெண்டு கதைகள் எழுதி விட்டதால்..ரமேஷிற்கு அலுவலகத்தில் மிகுந்த மரியாதை.
ஒவ்வொருவரும்..ஒவ்வொரு விதமாக பேசினார்கள்.
கடைசியில் நடுவர் தீர்ப்பாக ரமேஷ் பேசியது..
"2000ம் ஆண்டும் மற்ற ஆண்டுகளைப் போலத்தான் இருக்கும்.மழை வானிலிருந்துதான் பெய்யும்.செடி..மரங்கள் மண்ணில் வேரூன்றிதான் வளரும்.தொழிலாளிகள் வேலை செய்தால் தான் வீட்டில் அடுப்பு எரியும்.பிரமாதமான மாற்றங்களை கொண்டுவர யுகமா மாறப்போகிறது..பிரளயமா வரப்போகிறது.
நம்மால் முடிந்ததெல்லாம் ஔவை "வரப்புயர" என வாழ்த்தியதைப் போல.."நம் நிறுவனம் வளர" என பிரார்திப்பதுதான்.
ஆம். நம் நிறுவனம் வளர்ந்தால்..நிறுவனத்திற்கான லாபம் அதிகரிக்கும்..லாபம் அதிகரித்தால்..தொழிலாளர்கள்..நமக்கான சம்பளம் உயரும்.
இதுதான் நடைமுறை..நாம் உழைப்போம்..ஆண்டுகள் எது வந்து போனால் என்ன..எந்த ஆண்டானாலும் உழைப்பவர்க்கே மரியாதை.."
என்று முடித்தார்.
அந்த தொழிற்சாலை அதிபர் உட்பட..அனைவரும் அவரைப் பாராட்டினர்.
அனைவரிடமும்..விடை பெற்று..நிறுவனம் வழங்கிய இனிப்பு பொட்டலத்துடன் ..அவர் வீடு வந்து சேர்ந்த போது.. இரவு மணி எட்டாகியிருந்தது.
வீட்டில் மனைவி ரம்யா..இவருக்காகக் காத்திருந்தாள்.இவர் உள்ளே நுழைந்ததும்.."என்னங்க..நம்ம லாவண்யா..இன்னமும் ஆஃபீஸ்ல இருந்து வரலே.." என்றாள் கவலையுடன்.
லாவண்யா..அவரது ஒரே மகள்.தேசியமயமாக்கப்பட்ட வங்கித் தேர்வு எழுதி..ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறாள்.வேலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது.ஐந்து மணிக்கு வேலை முடிந்ததும் ஆறுமணிக்குள் வீடு வந்து விடுபவள்..இன்னமும் வரவில்லை என்றதும் கவலை ஏற்பட்டது.
இந்த சமயத்திலும்..மாலை தான் பேசும் போது.."எந்த ஆண்டு வந்தாலும்..எவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும்..பெண்களைப் பெற்றவர்கள்..வெளியில் சென்ற பெண்கள் வீடு வந்து சேரும் வரை வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் நிலைதான் தொடரப் போகிறது..என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாமோ..?" என்ற எண்ணம் தோன்றியது.
"பயப்படாதே..அவ வந்துடுவா.."என்று சொன்னாலும்..அவருக்கும் உள்ளத்தில் பயம் ஏற்பட்டது.
இரவு மணி..பத்து
லாவண்யா வரவில்லை.
"நீங்க வேணா ஒருநடை போய் பார்க்கறீங்களா?"
"சரி" என்று சொல்லிவிட்டு லாவண்யா வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்றார்.
அந்த வங்கியில் வெளியே விளக்குகள் எல்லாம் அனைந்திருந்தது.உள்ளே ஓரிரு குழல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
வெளியே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் "தான் யார்" என்று சொல்லிவிட்டு.."லாவண்யா உள்ளே இருக்கிறாளா?" என்று கேட்டார்.
"ஆமாம் சார்..யாரும் போகவில்லை..எல்லோரும் உள்ளேதான் இருக்காங்க"
"ஒருநிமிஷம் லாவண்யாவை வரச் சொல்ல முடியுமா?"
உள்ளே சென்று திரும்பியவன்.."ஸார்..அவங்க ரொம்ப பிசியா இருக்காங்க.சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்களாம்..பயப்படாமல் உங்களைப் போகச் சொன்னாங்க" என்றான்
அவள் பத்திரமாக உள்ளே இருக்கிறாள் என்பதை அறிந்து..நிம்மதியுடன் வீடு திரும்பினார் ரமேஷ்.
ஆனால் அவள் அவள் வரவில்லை.
விபரீதமாக எதேனும் ஆகியிருக்குமா.அவருக்கான புத்தாண்டு கலவரத்தோடுதான் பிறக்கிறதா?
எங்கோ.."ஹேப்பி நியூ இயர்..இளமை இதோ..இதோ..என கமல் பாடிக் கொண்டிருந்தார்.
அங்கங்கு பட்டாசு வெடிக்கும் ஒலி.
லாவண்யா வரவில்லை.ரமேஷ் புரண்டு கொண்டிருந்தார்.
விடிந்தது...
காலை 6 மணி..
வாசலில் ஒரு கார் வந்து நிற்க..அதிலிருந்து லாவண்யாவும்..வேறு ஒரு இளைஞனும் இறங்கினர்.
(தொடரும்)

Tuesday, July 11, 2023

பிணம் தின்னிக் கழுகுகள்- 2 (தொடர்)

 


1970ஆம் ஆண்டு...
மாலை மணி 6
வீட்டுக்கு உள்ளேயும்..வெளியேயும் குட்டிப் போட்ட பூனையாய் பலமுறை அலைந்து கொண்டிருந்தார் சபேசன்.
"வரவ..உள்ளே வரப் போறா..?" எதுக்கு இப்படி டென்ஷனோட லைஞ்சுக் கிட்டு இருக்கீங்க.கொஞ்சம் உட்காருங்க..ஒரு வாய் காஃபி தரேன் சாப்பிடுங்க.." என்றாள் சபேசனின் மணைவி சந்திரா.
"ஆமாம்..இந்த முரளி பய எங்கே போயிருக்கான்..ஆளையேக் காணுமே"
"நாந்தான்...வரவாளுக்கு கொடுக்க வெத்தலை கூட இல்லையே.ஒரு கவுளி வைத்தலையும், அசோகா பொட்டலம் பாக்கும் வாங்கி வரச் சொல்லியிருக்கேன்"
"ஆமாம் பொட்டலம் பாக்கு எதுக்கு..ரசிக்லால் வாங்கி வரச் சொல்லி இருக்கலாமே"
"சொல்லியிருக்கலாம்.ஆனா..அவா கிளம்பறச்சே தாம்பூலம் கொடுக்கறப்போ பாக்கைலூசாவா கொடுக்க முடியும்?" அடுக்களையில் இருந்த படியே குரல் கொடுத்தாள் சந்திரா.
சபேசன்..ஒரு தனி்யார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.ஓரளவு சம்பளம் வந்த்து.
சீதா..அவரது மூத்த மகள் 25 வயது.டிகிரி முடித்து விட்டு டெலிஃபோன் ஆபரேட்டராக வேலை செய்கிறாள்.அவளுக்கு அடுத்து 6வருடங்கள் கழித்து பிறந்தவன் முரளி. பி.காம்.இறுதி ஆண்டு படிக்கிறான்.
சீதாவை பெண் பார்க்க வருகிறார்கள் அன்று.மாப்பிள்ளை ராமதுரை ஒரு வங்கியில் பணி புரிபவன்.
ஒரு நண்பர் மூலம் ராமதுரையின் வரன் வர..சீதாவின் ஜாதகத்துடன் பொருந்தியிருந்ததால்...பிள்ளை வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க அன்று மாலை 7 மணிக்கு பெண் பார்க்க வருவதாக சொல்லியிருந்தார்கள்.
பையனின் தந்தையும் ஒரு வங்கி ஊழியர்.
இந்த அரசாங்க உத்தியோகமும் சரி, வங்கி வேலையும் சரி அவரவர் வாரிசுகளுக்கு அங்கங்கேயே வேலை கிடைப்பதன் ரகசியம் என்னவென்று தெரியவில்லை..என்று நினத்த சபேசன்..முரளிக்காவது ஒரு வங்கியில் வேலை கிடைத்தால் நன்றாய் இருக்கும் என அந்த நிலையிலும் நினைத்தார்.
"அம்மா..உன்னைப் பார்க்க..மாப்பிள்ளை வீட்டார் வரேன்னு சொல்லியிருக்காங்க.சாயங்காலம் ஆஃபீஸ் விட்டு அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடு"ன்னு பொண்ணு கிட்ட படிச்சு..படிச்சு சொல்லியும் இன்னமும் அவள் வரவில்லையே என்ற கவலையுடன் இருந்தார் ."பெத்தவங்க அவஸ்தை குழந்தைகளுக்கு எங்கே தெரியறது"
"பஜ்ஜியும், கேசரியும்..ரெடி.காஃபி டிகாக்ஷன் போட்டு வைச்சுட்டேன்"என்றபடியே தன் கைகளை புடவைத்தலைப்பில் துடைத்த படியே வந்த சந்திரா.."நான் போய் முகத்தை அலம்பிட்டு..ஒரு நல்ல புடவையாய் கட்டிட்டு வந்துடறேன்.அதுக்குள்ள நீங்க..வரவா உட்கார நாற்காலியெல்லாம் சரி பண்ணுங்க.டீபாய்ல இருக்கற பேப்பர்.மேகசினியயெல்லாம் ஒழுங்கா அடிக்கி வையுங்க.."என்றவள்.சபேசனிடமிருந்து எந்த பதிலும் வராததால்.."ஏண்ணாா..உங்களைத்தானே" என்றாள்.
சகஜ நிலைக்கு வந்த சபேசன்.."ம்..ம்" என்றார்.
"என்ன யோசனை உங்களுக்கு கவலைப்படாதீங்க.சீதா சரியான நேரத்துக்கு வந்துடுவா"ஏன்று சொல்லிக் கொண்டிருந்த போதே ,சீதா உள்ளே நுழைந்தாள்.
"என்னம்ம..ரொம்ப லேட்டாயிடுத்தே..சரி..சரி..சீக்கிரம் ரெடியாயிக்கோ..அவா எல்லாம் 7 மணிக்கு வந்துடுவா" என்றார் சபேசன்.
அப்போது முரளியும்..வெற்றிலை,பாக்கு வாங்கிக் கொண்டு உள்ளே வந்தான்.
(தொடரும்)

Sunday, July 2, 2023

பிணம் தின்னிக் கழுகுகள்

 பிணம் தின்னிக் கழுகுகள் (தொடர்)

முதல் அத்தியாயம்
---------------------------------------
1952 ஆம் ஆண்டு
..--------------------------
தை மாதம்..ஒரு வெள்ளிக்கிழமை
காலையிலேயே ராமநாதன் வீடு அல்லோகலப்பட்டது .
ராமநாதன் ஒரு மத்தியத்தர குடும்பத் தலைவன்.ஒரு வக்கீலிடம் குமாஸ்தா/டைப்பிஸ்ட் ஆக பணி புரிபவர்.
வீட்டில் மனைவி மரகதம்,மகள்கள் வனஜா,கிரிஜா, ஜலஜா என மூன்று பெண்கள்
வனஜா ஈ எஸ் எஸ் சி வரை படித்து படிப்பை நிறுத்தக் கொண்டவள்.வயது 23.அடுத்து கிரிஜா 16 வயது ஏழாவது படிக்கிறாள், ஜலஜா கடைக்குட்டி நாலாவது.
வரும் சொற்ப வருவாயில்..வயிற்றைக் கட்டி..வாயைக் கட்டி குடும்பம் நடந்து வந்தது
இந்நிலையில்..சுற்றமும், நட்பும்.."என்ன..ராமநாதா..பொண்ணுக்கு 23 வயசாச்சு ..எவ்வளவு நாள் வீட்டுல வைச்சுக்கப் போற.காலாகாலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணி புருஷன் வீட்டுக்கு அனுப்பப் பார்ப்பியா?.அதைவிட்டு அதைப் பற்றியெல்லாம் கொஞசமும் கவலைப்படாமல் இருக்க" என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
"ஆமாம்..இப்படி சொல்பவர்களுக்கு என்ன..சொல்லிவிடுவார்கள்.யாரால் ஆயிரக்கணக்கில் செலவு செஞ்சு கல்யாணத்தை பண்ண முடியும்? எவ்வளவு சிக்கனமா பண்ணினாலும் ஒரு பத்தாயிரமாவது செலவாகும்..சொல்பவர்களுக்கு என்ன..கல்யாணத்து அன்னிக்கு வந்துட்டு..ஆசிர்வாதம் பண்ணிட்டு..அஞ்சோ..பத்தோ மொய் எழுதிட்டு போயிடுவாங்க.அப்புறம் கடனை அடைக்க முடியாமல் தவிக்கப் போவது நாந்தானே" என மனதிற்குள்சொல்லிக் கொண்டார் ராமநாதன்.
ஆனாலும்..கல்யாண வயதில் பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு சில கல்யாணத் தரகர்கள் அவ்வப்போது வந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில்,ஒருநாள் புரோக்கர் பஞ்சாபகேசன் வந்து.."ஒரு அருமையான வரன்.வந்து இருக்கு.மாப்பிள்ளை நம்ம ஊரு எலிமெண்டரி ஸ்கூல்ல இரண்டாம் வகுப்பு ஆசிரியரா இருக்கார்.நூறு ரூபாய் மாசம் சுளையா சம்பளம்.அப்பா..அம்மா..ஒரு சகோதரி அவ்வளவுதான்.பிக்கல்..பிடுங்கல் அதிகம் இருக்காது,என்னைக் கேட்டால் (யார் இவரைக் கேட்டார்கள்) கடனோ..உடனோ வாங்கி கல்யாணத்தை முதல் முடிச்சுடலாம்.என்ன சொல்றீங்க?" என்றார்.
ராமநாதன் மௌனமாய் இருக்க..அவரது மனைவி மரகதம் முந்திக் கொண்டு.."இருங்க பொண்ணு ஜாதகம் தரேன்.கொடுத்துட்டு..நம்ம குடும்பம் பத்தியும் அவங்கக் கிட்ட சொல்லிட்டு..பையன் ஜாதகம் வாங்கிட்டு வாங்க..பொருத்தம் இருந்தா மேலே பேசலாம்" என்று சொல்லிவிட்டு..வீட்டினுள் சென்று வனஜாவின் ஜாதகத்தை எடுத்து ..நான்கு புறமும் மஞ்சள் தீட்டி..சுவாமி படம் முன் வைத்து வணங்கி..எடுத்து வந்து பஞ்சாபகேசனிடம் தந்தாள்.வாங்கிக் கொண்டு அவர் சென்றார்.
இவ்வளவு நேரம் மௌனமாய் பிரமை பிடிச்சது போல இருந்த ராமநாதன்.."என்ன மரகதம்.நம்ம் கையில தம்பிடி கூட சேமிப்பு இல்லை.இப்படி சட்டுன்னு ஜாதகம் கொடுத்துட்டே.நாளைக்கே அவங்க "சரி" ன்னு சொல்லிட்டா..கல்யாண செலவுக்கெல்லாம் நாம எங்கே போறது?" என்றார்
"கையில காசை வச்சுண்டு..கல்யான காரியங்கள்ல இறங்கணும்னா..அலை அடிச்சு ஓய்ந்த பிறகு சமுத்திரத்தை பார்க்க ஆசைப்படறதைப் போல் தான்.துணிச்சலா இறங்கிடணும்.நீச்சல் தெரியாதவனை தண்ணீலே தள்ளி விட்டா..கையை காலை உதைச்சுக் கிட்டு நீச்சல் கத்துக்கறாப் போலத்தான் இதுவும்" என்றாள்.
மரகதம்..ஜாதகத்தை கொடுத்த ராசியோ என்னவோ..அடுத்த இரண்டு நாட்களில் பையன் ஜாதகமும் வர..ஜாதகத்தில் பத்து பொருத்தங்களும் சரியாய் இருக்க வெள்ளிக்கிழமை சாயங்காலம் பொண்ணு பார்க்க வருவதாக சொல்லிவிட்டார்கள் பையன் வீட்டில்.
அப்படி..இப்படி என அந்த வெள்ளிக் கிழமையும் வந்தது.
அதனால் தான் அந்த வீடு அன்று அல்லோகலப்பட்டது..
(தொடரும்)
May be an image of vulture
All reactions:
Prakash K and Lakshminarasimhan Rajaraman

Wednesday, December 14, 2022

நளவெண்பா

 நளன் கதையை யார் கூறியது? ஏன் கூறப்பட்டது?  என்பதை முதலில் தெரிந்து கொள்வோம். 

தருமன் நேர்மை தவறாதவன்; தவறு செய்யாதவன்; அத்தகையவன் சூது ஆடினான்; அதனால் விளைந்த விளைவு நாட்டை இழந்தான்; காட்டை அடைந்தான்; இழந்த நாட்டை மீண்டும் பெற்றான். இது பாரதக் கதை.

காட்டில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்தான்; விராட நகரில் ஒர் ஆண்டு மறைந்து வாழ்ந்தான். பின்பு வெளிப்பட்டான்.

பன்னிரண்டு ஆண்டுகள் காட்டிலும், ஒர் ஆண்டு மறைந்தும் வாழ்ந்து பின் நாடு கேட்டனர்; தருகிறோம் என்று கூறிய துரியோதனன் வார்த்தை தவறிவிட்டான்.

அடுத்து போர் தொடுப்பதே நேர்வழி என்று தம்பியர் உரைத்தனர். கண்ணன் உடனிருந்து அவர்கள் கருத்துரைகளைக் கேட்டான்; பாஞ்சாலியும் தான் விரித்த கூந்தலை முடிக்க வேண்டும் என்று துடி துடித்தாள்; போர் செய்வதே தக்க வழி என்று எடுத்து உரைத்தாள். பீமன் வீரம் பேசினான்; அர்ச்சுனன் காண்டீபம் எடுத்தான்; தருமன் அவர்களை அமைதிப் படுத்தினான்.


எதற்கும் கண்ணனைத் தூது அனுப்பி வைப்பது என்று முடிவு எடுத்தனர்; கண்ணனைத் தூது அனுப்பி வைத்தனர். நாடும் தரமுடியாது; இருக்க வீடும் கிடையாது என்று துரியோதனன் சொன்னான்..

அடுத்துப் போர் செய்வதுதான் வழி என்று அதற்கு வேண்டிய படைகளைத் திரட்டுவதில் பாண்டவர் முனைந்தனர்; 

வியாசர்ஆறுதல் கூற வந்தார். அவரை தருமன் தருமன் வரவேற்றான்.

பின்,தருமன் தன்நிலையை அவருக்கு எடுத்து உரைத்தான். “போருக்கு உரிய செயற்பாடுகள் அனைத்தும்டைபெறுகின்றன; அர்ச்சுனனும் கயிலை சென்று பரமசிவன்பால் அஸ்திரம் பெறச் சென்றுள்ளான். விரைவில் வருவான்” என்று தெரிவித்தான். “எங்களுக்கு ஆற்றல் உள்ளது; நாங்கள் வெல்வோம்” என்று கூறினான்.




மேலும் தருமன் சொன்னான்“நான் செய்த தவறு என்னை வாட்டுகிறது;  நான்ன் சூது ஆடியதால்தானே இந்தத் தீமைகள் வந்து சேர்ந்தன; அரசர்களில் என்னைப் போல் யாராவது இப்படிச் சூது ஆடிக் கேடுகளை விளைவித்துக் கொண்டவர்கள் இருக்கின்றார்களா?” என்று கேட்டான்.

அவனுக்கு ஆறுதல் கூறிய வியாசர் “மன்னர்கள் இருக்கிறார்கள்; சூதாடுவது கேடு தருவதுதான்; என்றாலும் அதனை மேற்கொண்டு அழிந்தவர்கள் உனக்கு முன்பும் இருந்திருக்கிறார்கள். நீ செய்தது புதிது அன்று; வருந்தாதே” என்று கூறினார்.

மேலும் அவனுக்கு ஆறுதல் கூற நளன் கதையைக் கூறத் தொடங்கினார்.கலியால் விளைந்த கதை இது; நளன் என்பவன் உன்னைப் போல் நாடு இழந்தான்; இந்தக் கேடுகள் நிகழ்வதற்குக் கலிதான் காரணம். விதி வலிமையுடையது; அதனால் ஏற்பட்ட பாதிப்பு இது” என்று கூறினார்.

தருமன் நளன் கதையைக் கேட்பதில் ஆர்வம் காட்டினான். ‘பாரதம்’ நிகழ்வதற்கு முன் தோன்றிய கதை இது என்று தெரிகிறது.

தருமன், தன் வாழ்வைப் போலவே நளன் கதை அமைந்திருப் பது கண்டு மன ஆறுதல் பெற்றான். 

ஆனால்,நளன் தமயந்தியை வைத்துச் சூதாடவில்லை; தருமன் அவ் வகையில் நெறி பிறழ்ந்து விட்டான் என்றுதான் கூற முடியும்.

மனைவி தன் உடைமை என்ற தவறான கருத்தே தருமனைத் தவறு செய்யத் தூண்டியது. நளன் தன் காதலியை மதித்தான்; அவள் தனக்கு உரியவள்; ஆனால் உடைமையள் அல்லள்; இந்த வேறுபாட்டை அறிந்து அவன் செயல்பட்டான்.

இனி நளன் கதையை வியாசர் கூறத் தொடங்கினார்.

3 - நளனும்..அன்னமும்


 


அந்த அன்னப் பறவையால் ,பசுமையான அந்த சோலை நிறம் மாறி வெண்மை நிறம் பெற்றது என்று சொல்லும்படி அதன் சிறகுகள் வெண்மையாகக் காட்சி தந்தன.

அதன் தாள் நிறத்தால் பொய்கையின் தலம் சிவப்பு பெற்றது.

இது கண்டு..சிலையையொத்த அழகுடன் தன்னை சுற்றி நின்ர பெண்களிடம், "அந்த அன்னப் பறவையை பிடித்து வாஉம்கள்" என்று கூறினான்.

ஒரு மயில் கூட்டமே சென்று அன்னத்தை வளைத்து பிடிப்பது போல இருந்த்து அந்தக் காட்சி.அவர்கள் அன்னத்தை நளன் முன்னால் கொண்டு வந்து நிறுத்தினார்கள்.

தன்னை இவர்கள் ஏன் பிடித்து வந்தார்கள் என அந்த அன்னத்திற்கு விளங்கவில்லை.தன் கூட்டத்தோடு கூடி இருந்து மகிழும் பறவை அது.இப்போது தனித்து விடப்பட்டதால்..சுற்றுமுற்றும் தனது சுற்றமாகிய அன்னப்பறவை ஏதேனும் அங்கு தென்படுகிறதா என்று பார்த்த்து.எதையும் காணாததால் அதன் உடல் அச்சத்தில் நடுங்கியது.

அதைக் கண்டு நளன் அதனிடம் கூறினான்..

"அன்னமே அஞ்சாதே! நான் உன்னை பிடித்து வரச்சொன்னது உன் அழகிய நடையைப் பார்த்துதான்.கவிஞர்கள் மகளிரின் நடைக்கு உன் நடையை ஒப்பிட்டு சொல்வார்கள்.எனக்கு ஒரு ஐயம் இருக்கின்றது.அழகிய உன் நடை சிறந்ததா அல்லது மாட்சிமை மிக்க மகளிரின் நடை சிறந்ததா? என ஒப்பிட்டு காணவே பிடித்து வரச் சொன்னேன்.இதில் தவறேதும் இல்லை" என்றான்.

அன்னத்தின் அருகே,அதனை பிடித்து வந்திருந்த அழகான பெண்ணொருத்தி நின்றிருந்தாள்.அந்த அழகி பார்ப்பதற்கு திருமகள் போல இருந்தாள்.அவள் அருகில் நிற்க, அன்னத்திற்கு அந்த சூழ்நிலை மகிழ்ச்சியினை அளித்தது.

நளன் மகளிர்பால் நாட்டம் உடையவன் என்பதை அறிந்த்து.காதல் செய்யும் காளை அவன் என அறிந்தது.தவிர்த்து,அவன் இரக்கம் உள்ளவன் என்பதனையும் அறிந்தது.

"தண்ணனியாள்" (தண்மையான இரக்கத்தினை கொண்டுள்ளவன்)என அவனைப்  பற்றி முடிவு செய்த்து.அவனுக்கு ஏற்றவள் யார்? என யோசித்தது.

அதற்கு தமயந்தியின் நினைவு வந்த்து.அவளது அழகிய நடை..அவனைக் கவரும் என முடிவு செய்தது.மூங்கில் போன்ற தோள்களை உயையவள் அவள்.அவள் தோள்களை தழுவுவதற்கு ஏற்றவன் அவன் என முடிவு செய்தது.

"புகழ்மிக்க அரசனே! உனது பருத்த தோள்களுக்கு ஏற்றவள்.சிறுத்த நெற்றியினை உடைய தமயந்தி என்பவள் இருக்கிறாள்.அவள்தான் உனக்கு ஏற்றவள்" என்றது.

காதல் விருப்பு அவனுக்கு எழுந்த்து.அன்னத்தின் சொற்கள் அவனுக்கு மகிழ்ச்சியை ஊட்டின.வேட்கையைத் தூண்டின.அவளை, அவன் தன் இதயத்தில் இருத்தினான்.கன்னி அவள் அவனது மனக்கோயிலில் இடம் பெற்றாள்.

மன்மதன் ஆவலைத் தூண்டிவிட தன் மனதை அடக்கிக் கொள்ள முடியவில்லை அவனால்.


மயிலே  வந்து நடனமாடுவது போல அவளை,அவன்..அதன் சொற்களில் கண்டான்.தமயந்தியின் மென்மையான சாயல் அவனைக் கவர்ந்த்து."மயில் அணையாள்..யார் மகள் அவள்?"என ஆர்வத்துடன் கேட்டான்.

அவள் அரசர் மகளா? தெய்வ மகளா? என ஐயம் ஏற்பட்டது.

அரசர் மகள் என்றால்..அவள் தந்தை யார்?நாடு எது? என்பதை அறியும் ஆவல் ஏற்பட்டது.ஊர்,பெயர் ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம் என ஆவல் கொண்டான்.

"விதர்ப்பன் மகள்" என அன்னம் சொன்னது.

பேரரசன் மகள் அவள் என்பதை அறிந்து கோண்டான்.

ஆனால் அவளை அடைவது எப்படி?  

நளவெண்பா - சுயம்வர காண்டம்

(புகழேந்தி புலவர் பாடிய பாடல்களின் பொருளையே பெரும்பாலும் எடுத்து எழுதியுள்ளேன்)  

நிடத நாட்டின் மன்னன் நளன். அவனது மனைவி தமயந்தி நளனை விரும்பி சுயம்வரத்தில் அவனைத் தேர்ந்தெடுத்து மணந்ததை இந்திரன் மூலம் கேட்டு, தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்துகொண்டிருந்த கலிபுருஷன் நளனைப் பழிவாங்க முடிவு செய்வதும், அதன் பின்னர் நடக்கும் சூதாட்டத்தில் நளன் நாடிழந்து, மனைவி குழந்தைகளைப் பிரிந்து சிரமப்பட்டுப் பின்னர் இழந்த அனைத்தையும் திரும்பப்பெறுவதைக் கூறும் கதை.

சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில், 427 வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் 7 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். சுயம்வர காண்டத்தில் 171 வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் 155 வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் 94 வெண்பாக்களும் (7+171+155+94= 427) உள்ளன.

2 - நிடத நாடு

-----------------------

நிடதநாடு..

நளன் ஆண்ட நாடு.

அதன் நீர்வளம்,நிலவளம், அதனைச் செல்வம் மிக்க நாடாக ஆக்கின.

கண்களைக் கவரும் பொய்கைகள்.அவற்றில் வண்ண வண்ண மலர்கள்.அந்த நிர்நிலைகளுக்கு அழகினைத் தந்தன.

வயல்களில்...பயிர் வளர்ச்சிக்கு தேங்கி இருந்த தண்ணீரில் கயல் மீன்கள் அழகாக நீந்தின.குவளை மலர்கள் பூத்துக் கிடந்தன.

கயல் மீன்களும்,குவளை மலர்ச்சியும்,தாமரை நெகிழ்ச்சியும் திருமகளின் கண்களை நினைவூட்டின.

நிடத நாடும் நிலமடந்தையின் கண்கள் போல தோற்றம் அளித்தது.

இந்த நாட்டின் தலைநகரம் மாவிந்தம் ஆகும்.

இந்நகர் செல்வம் மிக்க நகராக விளங்கியது.

மகளிர் தங்கள் நறுமண உடலுக்கு அப்பிய கலவைச் சாந்து..உலர்ந்து குப்பையாய் தெருவினை நிரப்பியது.யானைகள் அக்குப்பைக் கலவைச் சாந்தில் கால் வழுக்கி விழுந்து..தெருவை சேறாக்கியன.

அவ்வூர் மகளிர்,அவர்கள் கூந்தலுக்கு ஊட்டிய அகில் புகை வான் மேகத்தைக் கவர்ந்து,அது பொழியும் மழைநீருக்கு மணத்தை அளித்தது.அதனால் அவ்வூரில் பெய்யும் மழைநீரிலும் அகில் மணம் வீசியது.

அவ்வூர் மக்கள் கல்வியும்,ஞானமும் மிக்கவராகத் திகழ்ந்தனர்.அவ்வூர் மாணவர்கள் கல்வி பயில சிறந்த கல்வி நிலையங்கள் அமைந்திருந்தன.பல்கலைக்கழகங்களில் புலவர்கள் நூல்களை ஆராய்ந்தனர்.கவிஞர்கள் கவிதை இயற்றினர்,அரங்கேற்றங்கள் பல நடந்தன.

ஆடல்,பாடல் மகளிர் மேடைகளில் காட்சி அளித்தனர்.அவர்கள் இடை கவர்ச்சி தந்த்து.கண்புலனுக்கு அறியாத அழகைப் பெற்றிருந்தது இடை.

எங்கும் இசை முழங்க முத்தமிழ் வளர்த்த வித்தகர்கள் கலையையும்,ஞானத்தையும் வளர்த்தனர்.அறிவு மிக்க சான்றோர்கள் வாழ்ந்ததால் மக்கள் கவலையின்றி இருந்தனர்.

ஒழுக்கத்தை உயிரினும் மேலாக அவர்கள் எண்ணினர்.சோர்வும், சோம்பலும் அற்றவர்களாக இருந்தனர்.ஆண்மை மிக்கவர்களாக ஆண்கள் திகழ்ந்தனர்.விற்பயிற்சியும்,படைக்கலப் பயிற்சியும் அவர்களை சிறந்த வீரர்கள் ஆக்கின.

புறமுதுகிட்டு ஓடாத படையை உடையவன் நளன் என்ற புகழுக்கு காரணமாய்த் திகழ்ந்தான் நளன்.

வறுமை இல்லை.அதனால் திருட்டு இல்லை.

இரத்தல் இழிவு என வாழ்ந்தனர்..உழைத்தனர்..உயர்வு அடைந்தனர்.மக்கள் அழுது அரற்றியது இல்லை.கலக்கம் என்பதே இல்லை.

சோர்வு,கலக்கம்,அரற்றுதல் என்பதைக் காண வேண்டும் என்றால்..

மகளிர் கூந்தலில் சோர்வு காண முடிந்தது.

கலக்கம் என்பது நீர் குடைந்தாடும் குளங்களில் காண முடிந்த்து.

அரற்றுதல் என்பது மகளிர் கால் சிலம்பால் மட்டுமே கேட்க முடிந்த்து.

வளைவு என்பதை வில்லில் கண்டனர்.மக்கள் செயலில் காணவில்லை.

இத்தகைய வளம் மிக்க நகரில் எங்கும் சோலைகள் நிரம்பி வழிந்தன.சேலை கட்டிய மகளிர் சோலைகளில் பூப்பறித்து மகிழ்ந்தனர்.புனல் விளையாடினர்.மகிழ்ச்சியுடன் விளங்கினர்.

இளவேனிற் பருவம் வந்தது. 

மன்மதன்,தனது கரும்பு வில்லில் மலர்களாகிய அம்புகளைத் தொடுத்தான்.தென்றல் வீசியது.அது சோலைகளில் இருந்த பூக்களின் வாசத்தை தெருக்களில் வீசியது.சுகமான காற்று இளைஞர்களின் காம விருப்பத்தை தூண்டின.

பூக்களில் தேனினை நாடி வண்டுகள் சென்றன.

நளன் சோலைகளில் பூவினை நாடி சென்றான்.

அவனுடன்,அந்தபுரத்து அழகியர் சிலர் உடன் இருந்தனர்.

கருங்குவளை மலர்களாய் கண்கள் .அம்மகளிர் நளனை சுற்றி இருந்தனர்.நளன் சோலையை அடைந்தான்.

அங்கே..அழகிய அன்னப்பறவை ஒன்று பறந்து வந்த்து. 

Wednesday, January 19, 2022

நாய்வால் - 1 (புதிய தொடர்)

  நாய் வால்..(புதிய தொடர்.. வாரம் ஒரு அத்தியாயம்)


அத்தியாயம் - 1
------------------------------------

சென்னை....அண்ணாநகரில் இருக்கும் அப்பூங்காவில் ஒரு மரத்தடிடில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான் அவன்..
அவன்... சேகர்..
தமிழ் வெள்ளித்திரையில்..ஒருநாள் பிரபல இயக்குநராக முடியும் என்ற நம்பிக்கையில்..விருகம்பாக்கத்தில் உள்ள மேன்ஷன் ஒன்றில் உதவி இயக்குநர்கள் இருவருடன் தங்கியுள்ளான். விவசாயியான அவன் தந்தையிடமிருந்து மாதம் அவன் செலவிற்கு பணம் வந்து கொண்டிருந்தது..
அவன் முன்னே..
பரட்டைத் தலை..கிழ்ந்த ஒரு கோட்டு அணிந்து..அழுக்கேறிய கால் சட்டையுடன் ஒரு முதியவன் கையேந்தினான்..
"தம்பி..ஏதாவது தர்மம் பண்ணுங்க..சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு.ரொம்ப பசிக்குது.."
அந்த குரல்..அந்த குரல்..
அடுத்த வினாடி அவனை ஏறிட்டான் சேகர்..
அந்தப் பிச்சைக்காரன் அவன் கண்களுக்கு முண்டாசுக் கவி போல தெரிந்தான்..ரௌத்திரம் மேலிட..மீசைத் துடிக்க.."சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்..வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞசம்" என கர்ஜிப்பது போல இருந்தது.

அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சேகர்.

இவனிடமிருந்து நமக்கு ஏதும் தர்மம் கிடைக்காது என நினைத்து..நகர்ந்தான் பிச்சைக்காரன்.

"நில்லுங்க.." என குரல் கொடுத்த சேகர்.."நீங்க யார்? உங்கக் குரல் எனக்கு ரொம்ப பரிச்சியமாய் இருக்கு"..

முதியவர் பதில் ஏதும் கூறாது நிற்க, சேகர் தொடர்ந்தான்.."நீங்க பிச்சை எடுப்பவர் இல்ல.அந்தநாட்கள்ல திரையுலகைக் கலக்கிக் கிட்டு இருந்த நாடகக் கோமகன் ராஜசிம்ம்மன் நீங்க.."

அவசர..அவசரமாக முதியவர் மறுத்தார்.."இல்ல..இல்ல..நீ நினைக்கிற ஆள் நான் இல்ல"

"ஐய்யா..இன்னிக்கு நான் ஒரு உதவி இயக்குநர்.பல பிரபல இயக்குநர்கள் கிட்ட வேலை செஞ்சு இருக்கேன்.அந்த நாட்களில்..ஏன்..இன்னமும் கூட நான் உங்கள் ரசிகன்.ரசிகர்களை நடிகர்கள் என்றுமே ஏமாற்ற முடியாது..பல ஆண்டுகளுக்கு முன் பல ஆண்டுகள் தமிழ் சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள் நீங்கள்.."

பிச்சைக்கார முதியவர் சிரித்தார்...தம்பி...வாழ்க்கையிலேயே நிலை இல்லாதவை எது எதுன்னு தெரியுமா?

இளமை...செல்வம்..ஆயுள்..

எனக்கு இளமை போயிடுச்சு.

செல்வம் நிறைய சம்பாதித்தேன்.சம்பாதித்த வேகத்திலேயே..அனைத்தும் என்னை விட்டுப் போயிடுச்சு.ஆனா...

ஆயுள்..

அதை மட்டும் அந்த ஆண்டவன் எனக்கு அதிகமா போட்டு இருக்கான் போல இருக்கு."

"எது எப்படியோ..உங்களை அறியாம..நீங்க தான் ராஜசிம்மன்னு ஒத்துக்கிட்டீங்க.ஏய்யா..ஏய்யா..உங்களுக்கு இப்படி ஒரு நெலமை" கேட்கும் போதே சேகரின் குரல் தழுதழுத்தது.

"ம்...ம் ,..ஹ..ஹ..ஹா.."என தனக்கே உரித்த பாணியில் சிரித்த ராஜசிம்மன், "என்ன..என்னை மடக்கிட்டதா எண்ணமா?..தம்பி..ஒரு விதத்திலே என்னை நினச்சா..என் தொழிலை நினைச்சாஎனக்கே பெருமையா இருக்கு...."
..
"எந்தத் தொழில்...இப்படி கையை நீட்டி பிச்சை எடுக்கறதா?"

"விளையாடாதே தம்பி..நடிப்புத் தொழிலைச் சொல்றேன்.நான் நடிப்பிலே எவ்வளவு திறமையைக் காட்டியிருந்தா..இண்டஸ்ட்ரீயை விட்டு இவ்வளவு வருஷங்கள் ஆகியும்..என்னை நீ ஞாபகம் வைச்சுக்கிட்டு இருக்க்கியே..அதைச் சொல்றேன்.ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா..."

"நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னமும் பதில் சொல்லலையே!"

"எது..எனக்கு ஏன் இப்படி ஒரு நெலமை வந்துதுன்னா..சொல்றேன்..

வாழ்க்கையிலே தோற்றுப் போனவங்க இரண்டு வகை.ஒண்ணு..யார் பேச்சையும் கேட்காதவங்க..இரண்டு எல்லார் பேச்சையும் கேட்கறவங்க..என் வாழ்க்கையிலே கிட்டத்தட்ட நான் இரண்டையுமே செஞ்சிருக்கேன்.

தம்பி ஒன்னு தெரியுமா?

Everyman has 3 lives
A public life...என்னோட பொது வாழ்க்கை ரொம்ப சக்ஸஸ்ஃபுல்.நான் நடிக்காத பாத்திரங்கள் இல்லை.நான் வாங்காத பட்டங்கள் இல்லை.சம்பாதிக்காத பணம் இல்லை.லட்சக் கணக்குல்...லட்சக்கணக்குல சம்பாதித்தேன்.

இரண்டாவது...Private Life..

இந்த லைஃப்தான்..நான் என்னோட மனைவி..இரண்டு மகன்கள். இந்த லைஃப்ஃபும் எனக்கு ஓகேதான்.என் மனைவி இருந்தாளே..சும்மா சொல்லக் கூடாது..எனக்கு இறைவன் கொடுத்த வரம் அவ.அவ உயிரோட இருந்த வரைக்கும் அது எனக்குத் தெரியல.வாழ்க்கையில நான் செஞ்ச முட்டாள்தனத்தால..இந்த லைஃப் எனக்கு தோல்வி.

மூன்றாவது..secreat Life ..அது..இதுதான்." என்றபடியே பிச்சை எடுப்பது போல கைகளை நீட்டுகின்றார்."இதுவரைக்கும் என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதுன்னு ஒரு ரகசிய வாழ்க்கை வாழ்ந்துக் கிட்டு இருந்தேன்.ஆனா..இன்னிக்கு நீ கண்டு பிடிச்சுட்ட.."

"ஐயா..நான் உங்களோட பல்லாயிரக்கணக்கான...வெறித்தனமான ரசிகர்களில் ஒருவன்.ரசிகர்களை கலைஞர்கள் சுலபமாக ஏமாற்றிடலாம்னு நினைக்கறது தப்பு.அவர்களால் அப்படி ஏமாற்ற முடியாது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்..அவங்க முன்னேற ஒரு ஆதர்ஸ நாயகன் இருப்பாங்க.அது பெரும்பாலும்..நடிகர்களாகத்தான் இருக்கும்..."

"அது சும்மா...தம்பி.இப்பவெல்லாம் சினிமா பார்த்து வாழ்க்கையை பாழாக்கிக் கிட்டவங்கதான் அதிகம்.எல்லாப் படங்களிலும் வன்முறை, சாதியம், ஆபாசம்னு பெருகிப் போச்சு" என்றபடியே..ராஜசிம்மன்..தன் வயிற்றினைத் தடவியவாறு.."தம்பி..."என இழுத்தார்.

"என்னோட வாங்க..உங்களை உட்கார வைச்சு சாப்பாடு போட்டு உங்களை கடைசிவரைக்கும் காப்பாத்தறேன்"

"இல்லப்பா..நான் யாருக்கும் எப்போதும் பாரமா இருக்கறதை விரும்பாதவன்.இப்படி நான் சொல்றதால..நீ எனக்கு இப்ப சாப்பாடு வாங்கித்தரல்லேனாலும் பரவாயில்லை..நான் வரேன்" அவர்..அவனைவிட்டு சற்று நகர..எழுந்து அவரது கைகளைப் பற்றிக் கொண்டான் சேகர்.

"ஐயா..இப்ப நீங்க என் கூட வர்றீங்க..உங்களைப் பத்தி இனிமே நான் எட்துவும் கேட்க மாட்டேன்.உங்களுக்கு என்னிக்கு என் மீது நம்பிக்கை வருதோ..அன்னிக்குச் சொல்லலாம்.நீங்க விரும்பற நாள்வரை என் கூட இருக்கலாம்.."

"அப்ப..இனிமே என்னைப் பற்றி நீ எதுவும் கேட்கக் கூடாது..சரியா.."என்றவரிடம்.."கண்டிப்பாக மாட்டேன்" என்றான் சேகர்.

"தம்பி..பசிக்குதுப்பா.."என்றவரை அருகில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான் சேகர்.

(தொடரும்)