Wednesday, January 19, 2022

நாய்வால் - 1 (புதிய தொடர்)

  நாய் வால்..(புதிய தொடர்.. வாரம் ஒரு அத்தியாயம்)


அத்தியாயம் - 1
------------------------------------

சென்னை....அண்ணாநகரில் இருக்கும் அப்பூங்காவில் ஒரு மரத்தடிடில் அமர்ந்து ஏதோ எழுதிக் கொண்டிருந்தான் அவன்..
அவன்... சேகர்..
தமிழ் வெள்ளித்திரையில்..ஒருநாள் பிரபல இயக்குநராக முடியும் என்ற நம்பிக்கையில்..விருகம்பாக்கத்தில் உள்ள மேன்ஷன் ஒன்றில் உதவி இயக்குநர்கள் இருவருடன் தங்கியுள்ளான். விவசாயியான அவன் தந்தையிடமிருந்து மாதம் அவன் செலவிற்கு பணம் வந்து கொண்டிருந்தது..
அவன் முன்னே..
பரட்டைத் தலை..கிழ்ந்த ஒரு கோட்டு அணிந்து..அழுக்கேறிய கால் சட்டையுடன் ஒரு முதியவன் கையேந்தினான்..
"தம்பி..ஏதாவது தர்மம் பண்ணுங்க..சாப்பிட்டு இரண்டு நாள் ஆச்சு.ரொம்ப பசிக்குது.."
அந்த குரல்..அந்த குரல்..
அடுத்த வினாடி அவனை ஏறிட்டான் சேகர்..
அந்தப் பிச்சைக்காரன் அவன் கண்களுக்கு முண்டாசுக் கவி போல தெரிந்தான்..ரௌத்திரம் மேலிட..மீசைத் துடிக்க.."சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம்..வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞசம்" என கர்ஜிப்பது போல இருந்தது.

அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான் சேகர்.

இவனிடமிருந்து நமக்கு ஏதும் தர்மம் கிடைக்காது என நினைத்து..நகர்ந்தான் பிச்சைக்காரன்.

"நில்லுங்க.." என குரல் கொடுத்த சேகர்.."நீங்க யார்? உங்கக் குரல் எனக்கு ரொம்ப பரிச்சியமாய் இருக்கு"..

முதியவர் பதில் ஏதும் கூறாது நிற்க, சேகர் தொடர்ந்தான்.."நீங்க பிச்சை எடுப்பவர் இல்ல.அந்தநாட்கள்ல திரையுலகைக் கலக்கிக் கிட்டு இருந்த நாடகக் கோமகன் ராஜசிம்ம்மன் நீங்க.."

அவசர..அவசரமாக முதியவர் மறுத்தார்.."இல்ல..இல்ல..நீ நினைக்கிற ஆள் நான் இல்ல"

"ஐய்யா..இன்னிக்கு நான் ஒரு உதவி இயக்குநர்.பல பிரபல இயக்குநர்கள் கிட்ட வேலை செஞ்சு இருக்கேன்.அந்த நாட்களில்..ஏன்..இன்னமும் கூட நான் உங்கள் ரசிகன்.ரசிகர்களை நடிகர்கள் என்றுமே ஏமாற்ற முடியாது..பல ஆண்டுகளுக்கு முன் பல ஆண்டுகள் தமிழ் சினிமா உலகில் கொடி கட்டிப் பறந்தவர்கள் நீங்கள்.."

பிச்சைக்கார முதியவர் சிரித்தார்...தம்பி...வாழ்க்கையிலேயே நிலை இல்லாதவை எது எதுன்னு தெரியுமா?

இளமை...செல்வம்..ஆயுள்..

எனக்கு இளமை போயிடுச்சு.

செல்வம் நிறைய சம்பாதித்தேன்.சம்பாதித்த வேகத்திலேயே..அனைத்தும் என்னை விட்டுப் போயிடுச்சு.ஆனா...

ஆயுள்..

அதை மட்டும் அந்த ஆண்டவன் எனக்கு அதிகமா போட்டு இருக்கான் போல இருக்கு."

"எது எப்படியோ..உங்களை அறியாம..நீங்க தான் ராஜசிம்மன்னு ஒத்துக்கிட்டீங்க.ஏய்யா..ஏய்யா..உங்களுக்கு இப்படி ஒரு நெலமை" கேட்கும் போதே சேகரின் குரல் தழுதழுத்தது.

"ம்...ம் ,..ஹ..ஹ..ஹா.."என தனக்கே உரித்த பாணியில் சிரித்த ராஜசிம்மன், "என்ன..என்னை மடக்கிட்டதா எண்ணமா?..தம்பி..ஒரு விதத்திலே என்னை நினச்சா..என் தொழிலை நினைச்சாஎனக்கே பெருமையா இருக்கு...."
..
"எந்தத் தொழில்...இப்படி கையை நீட்டி பிச்சை எடுக்கறதா?"

"விளையாடாதே தம்பி..நடிப்புத் தொழிலைச் சொல்றேன்.நான் நடிப்பிலே எவ்வளவு திறமையைக் காட்டியிருந்தா..இண்டஸ்ட்ரீயை விட்டு இவ்வளவு வருஷங்கள் ஆகியும்..என்னை நீ ஞாபகம் வைச்சுக்கிட்டு இருக்க்கியே..அதைச் சொல்றேன்.ரொம்ப சந்தோஷமா இருக்குப்பா..."

"நான் கேட்ட கேள்விக்கு நீங்க இன்னமும் பதில் சொல்லலையே!"

"எது..எனக்கு ஏன் இப்படி ஒரு நெலமை வந்துதுன்னா..சொல்றேன்..

வாழ்க்கையிலே தோற்றுப் போனவங்க இரண்டு வகை.ஒண்ணு..யார் பேச்சையும் கேட்காதவங்க..இரண்டு எல்லார் பேச்சையும் கேட்கறவங்க..என் வாழ்க்கையிலே கிட்டத்தட்ட நான் இரண்டையுமே செஞ்சிருக்கேன்.

தம்பி ஒன்னு தெரியுமா?

Everyman has 3 lives
A public life...என்னோட பொது வாழ்க்கை ரொம்ப சக்ஸஸ்ஃபுல்.நான் நடிக்காத பாத்திரங்கள் இல்லை.நான் வாங்காத பட்டங்கள் இல்லை.சம்பாதிக்காத பணம் இல்லை.லட்சக் கணக்குல்...லட்சக்கணக்குல சம்பாதித்தேன்.

இரண்டாவது...Private Life..

இந்த லைஃப்தான்..நான் என்னோட மனைவி..இரண்டு மகன்கள். இந்த லைஃப்ஃபும் எனக்கு ஓகேதான்.என் மனைவி இருந்தாளே..சும்மா சொல்லக் கூடாது..எனக்கு இறைவன் கொடுத்த வரம் அவ.அவ உயிரோட இருந்த வரைக்கும் அது எனக்குத் தெரியல.வாழ்க்கையில நான் செஞ்ச முட்டாள்தனத்தால..இந்த லைஃப் எனக்கு தோல்வி.

மூன்றாவது..secreat Life ..அது..இதுதான்." என்றபடியே பிச்சை எடுப்பது போல கைகளை நீட்டுகின்றார்."இதுவரைக்கும் என்னை யாரும் கண்டுபிடிக்க முடியாதுன்னு ஒரு ரகசிய வாழ்க்கை வாழ்ந்துக் கிட்டு இருந்தேன்.ஆனா..இன்னிக்கு நீ கண்டு பிடிச்சுட்ட.."

"ஐயா..நான் உங்களோட பல்லாயிரக்கணக்கான...வெறித்தனமான ரசிகர்களில் ஒருவன்.ரசிகர்களை கலைஞர்கள் சுலபமாக ஏமாற்றிடலாம்னு நினைக்கறது தப்பு.அவர்களால் அப்படி ஏமாற்ற முடியாது. ஒவ்வொருவர் வாழ்க்கையிலும்..அவங்க முன்னேற ஒரு ஆதர்ஸ நாயகன் இருப்பாங்க.அது பெரும்பாலும்..நடிகர்களாகத்தான் இருக்கும்..."

"அது சும்மா...தம்பி.இப்பவெல்லாம் சினிமா பார்த்து வாழ்க்கையை பாழாக்கிக் கிட்டவங்கதான் அதிகம்.எல்லாப் படங்களிலும் வன்முறை, சாதியம், ஆபாசம்னு பெருகிப் போச்சு" என்றபடியே..ராஜசிம்மன்..தன் வயிற்றினைத் தடவியவாறு.."தம்பி..."என இழுத்தார்.

"என்னோட வாங்க..உங்களை உட்கார வைச்சு சாப்பாடு போட்டு உங்களை கடைசிவரைக்கும் காப்பாத்தறேன்"

"இல்லப்பா..நான் யாருக்கும் எப்போதும் பாரமா இருக்கறதை விரும்பாதவன்.இப்படி நான் சொல்றதால..நீ எனக்கு இப்ப சாப்பாடு வாங்கித்தரல்லேனாலும் பரவாயில்லை..நான் வரேன்" அவர்..அவனைவிட்டு சற்று நகர..எழுந்து அவரது கைகளைப் பற்றிக் கொண்டான் சேகர்.

"ஐயா..இப்ப நீங்க என் கூட வர்றீங்க..உங்களைப் பத்தி இனிமே நான் எட்துவும் கேட்க மாட்டேன்.உங்களுக்கு என்னிக்கு என் மீது நம்பிக்கை வருதோ..அன்னிக்குச் சொல்லலாம்.நீங்க விரும்பற நாள்வரை என் கூட இருக்கலாம்.."

"அப்ப..இனிமே என்னைப் பற்றி நீ எதுவும் கேட்கக் கூடாது..சரியா.."என்றவரிடம்.."கண்டிப்பாக மாட்டேன்" என்றான் சேகர்.

"தம்பி..பசிக்குதுப்பா.."என்றவரை அருகில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றான் சேகர்.

(தொடரும்)