Thursday, June 24, 2021

வலைக்குள் சிக்கிய மீன்

 4- முகநூல் நண்பன்

-----------------------

 அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியினால் ஏற்பட்ட மன அழுத்தம் அன்றைய இரவு வனஜாவை நீண்ட நேரம் ஆக்கிரமித்திருந்ததால் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுத்தாள்.அதன் காரணமாக விடியலில் சற்று ஆழ்ந்து உறங்கி விட்டாள்.

விழிப்பு வந்து பார்க்கையில் மணி 7-30 ஆகி இருந்தது. வாரி சுருட்டிக் கொண்டு எழுந்தவள்..தன்னை யாராவது வந்து எழுப்பியிருக்கக் கூடாதா? என்று எண்ணியவாறே படுக்கை அறையிலிருந்து வெளியே வந்தாள்.

ஹாலில்..பத்மநாபனும், ரமேஷூம் அவரவர் கைகளில் மொபைலை வைத்து நோண்டிக் கொண்டிருக்க..ப்ரியாவோ சோஃபாவில் அமர்ந்து மடிக்கணினையை தன் மடியில் வைத்து நண்பன் பாஸ்கரனுடன் chat செய்து கொண்டிருந்தாள்.

ப்ரியாவிற்கு ஓரிரு மாதங்களுக்கு முன் முகநூலில் அறிமுகமானவன் பாஸ்கர் எனும் இளைஞன்.

ஒருநாள் அவள் தன் முகநூலில் நண்பர்கள் இட்ட பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்த போது ஒரு செய்தி இன்பாக்ஸில் வந்தது.அது என்ன எனப் பார்த்தாள்.

Hi I am Bhaskar..என ஒருவன் செய்தி அனுப்பி இருந்தான்.

ஆர்வ மிகுதியால், அவனுக்கு ஒரு பதில் அனுப்பினால் என்னவாகிவிடப் போகிறது என அவ்ளும் பதிலுக்கு..

Hi..I am Priyaa...என பதில் அனுப்பினாள்.பின் ,"நீங்க என்ன பண்றீங்க?" என்றாள்.


"உன்னோட ச்சேட் பண்ணிக்கிட்டு இருக்கேன்.."

"ஐயோ..கடி தாங்கல"

"ஓகே..முதல்ல நீ என்ன பண்ணிக்கிட்டு இருக்கே" என்றான் ஒருமையில்.

அப்படி எடுத்ததுமே அவன் ஒருமையில் சொன்னது அவளுக்குப் பிடித்திருந்தது."நான் காலேஜ்ல படிச்சுக் கிட்டு இருக்கேன்..ஆமாம் நீங்க..உங்களைப் பத்தி ஒண்ணும் சொல்லலையே"

"போ ப்ரியா..உன் மேல கோபம்..நான் எப்படி உன்னை ஒருமையில சொன்னேன்..ஆனா..நீ பதிலுக்கு "ங்க"ன்னு சொல்ற.நீ..போ..ன்னே சொல்லு.நான்சிறுசேரியில ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில வேலை செய்யறேன் 26 வயது இளைஞன்.மாச சம்பளம் ஒரு லட்சத்துக்கு மேல.. என்னைப் பத்தின விவரம் போதுமா?" 

இப்படித்தான் அவர்களிடையே அன்று நட்பு ஆரம்பமானது.பின் தினமும் இருவரும் ச்சேட்டிலேயே உரையாடல்களைத் தொடர்ந்தார்கள்.ஒரு கட்டத்தில் பாஸ்கர்.."ப்ரியா ஐ லவ் யு" என்றான்.பின் என்ன..பழைய திரைப்படப் பாடல் ஒன்று போல.."அவன் காதலித்தான்..அவள் ஆதரித்தாள்"

அன்றும் காலையில் அவன் அழைத்திருந்தான்..

"குட் மார்னிங் ப்ரியா"

"குட் மார்னிங் "

"சொல்லிட்டியா"

"என்ன சொல்லணும்..யார் கிட்ட?"

"உன் அம்மாகிட்டத்தான்..நம்மைப்பற்றி.." 

"என்னன்னு சொல்லணும்?"

"நானும்..பாஸ்கரும் ஒருத்தரை ஒருத்தர் லவ் பண்றோம்னு"

"ஐய்யய்யோ"

"என்ன ஐய்யய்யோ?"

"எங்கம்மாவுக்கு நான் ஃபிரண்ட்ஸ் கூட ஃபேஸ்புக்ல எல்லாம் பேசறதே..பிடிக்காது..அவங்கக் கிட்டப் போய் என் ஃபேஸ்புக் ஃபிரண்ட் பாஸ்கரை லவ் பண்றேன்னு சொன்னா..செருப்பு பிஞ்சுடும்.."

"இப்படி பயந்துக் கிட்டே இருந்தா..என்னிக்குத்தான் சொல்லப்போற?"

"கொஞ்ச நாள் போகட்டுமே.."

இந்நேரம்தான் படுக்கை அறையிலிருந்து பரபரப்புடன் வந்த வனஜா.."ப்ரியா..ஏய் ப்ரியா..காலைல இருந்து உருப்படியா என்ன செஞ்சே? எப்பப்பாரு லேப்டாப்தானா.உன்னாலதான் எந்த வேலையும் செய்ய முடியாது..குறைஞ்சது..கொஞ்சம் அசந்து தூங்கிட்ட என்னை எழுப்பக் கூடவா முடியாது?"

"அது வந்து.."என்றபடியே ..முகநூலிலிருந்து வெளியே வந்து விட்டு எழுந்து நின்றாள் ப்ரியா.

"என்ன அது வந்து..உன்னை மட்டுமில்ல..இப்படி தடிமாடு மாதிரி இருக்கிற இவங்களையும் சேர்த்துதான் சொல்றேன்"

மூவரும் தலை குனிந்து நிற்க..வனஜா பாத்ரூமிற்குள் நுழைந்தாள்.

ரமேஷ் , பத்மநாபனைப் பார்த்து சிரிக்க..அவனோ.."டேய்..சிரிக்காதே..இப்படி சிரிச்சா..தடிமாடு கொம்பால குத்திடுவேன்" என்றான். 

  

"  



 

 


வலைக்குள் சிக்கிய மீன்



1 - வனஜா
---------------------
வங்கக் கடலில் கண்ணுக்கெட்டிய தொலைவிலிருந்து,அன்றைய தன் கடமையினை ஆற்றிட மெதுவாக செக்கச் சிவந்த நிறத்தில் நீல வானில் எழுந்துக் கொண்டிருந்தான் கதிரவன்.

நடை பயின்றுக் கொண்டிருந்த வாலிப..வயோதிக அன்பர்கள் அனைவரும்..அவனைக் கண்டு..இயற்கையின் அழகினைக் கண்டு..விடியலில் ஏதோ அவசர வேலைக்குச் செல்லும் வரிசை மாறாது பறக்கும் பறவைகளைக் கண்டு ரசித்துக் கொண்டே நடந்து கொண்டிருந்தனர்.

ஒரு பக்கத்தில் ஐம்பதிற்கும் மேற்பட்டோர் வரிசையாக நின்றுக் கொண்டு வராத சிரிப்பை வலுக்கட்டாயமாக வர வழைத்துக் கொண்டிருந்தனர்.

சிரிப்பு...இயற்கை மனிதனுக்கு மட்டுமே அளித்துள்ள வரப்பிரசாதம்.அதை இன்று வலுக்கட்டாயமாக்க வேண்டிய நிலை..

இப்போது சிவந்த ஆடையை உதறிவிட்டு மஞ்சள் ஆடைக்கு வந்திருந்தான் சூரியன்.சூரிய உதயத்தை ரசிக்கும் இதே மக்கள்..இன்னும் சில மணி நேரங்களில் அவனது உக்கிரகத்தைக் கண்டு..அவனை சபிக்கக் கூடும்.

சபிப்பது என்பது மக்களின் உடன் பிறந்த குணம்.நல்லது செய்யும் வரை போற்றுவதும்..செய்வதில் சற்று தொய்வு ஏற்பட்டாலும் அவர்களை சபிப்பதும் மனித இயல்பாகிப் போனது.

அந்த அருமையான விடியலில் ..

பெசன்ட் நகரில் ..குறுக்குத் தெரு ஒன்றில் இருந்த அடுக்ககங்களில் இருந்த குடியிருப்பு ஒன்றில் ..இருள் இன்னமும் விலகாத நிலையில் மின் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.

விடியலில் எழுந்து விட்ட அந்த வீட்டு இல்லத்தரசி வனஜா..காலைக் கடன்களை முடித்துவிட்டு..கேஸ் அடுப்பினைப் பற்றவைத்து..ஃபிரிட்ஜிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்து..முனையை கத்தரித்து விட்டு பாத்திரம் ஒன்றில் பாலை ஊற்றி காய்ச்ச ஆரம்பித்தாள்.

முந்தின நாள் இரவே போட்டு வைத்திருந்த காஃபி டிகாக்க்ஷனை எடுத்து ஒரு தம்ளரில் சிறிதளவு ஊற்றி, அளவாக ஒரு தேக்கரண்டி சர்க்கரையைப் போட்டாள்.

அதற்குள் தன்னுள் ஐக்கியமாயிருந்த நண்பன் தண்ணீர் பிரிந்து செல்வதைப் பொறுக்காமல் பால் பொங்கியது.
அதை எடுத்து..தம்ளரில் விட்டாள்.

வெள்ளை சர்க்கரை, கறுப்பு டிகாக்க்ஷன்,வெள்ளை நிறப் பால் மூன்றும் சேர்ந்து பழுப்பு நிற திரவமாக மாறியிருந்தது.அதை நுரை பொங்க ஆற்றி..மெதுவாக உறிஞ்சி ருசிக்க ஆரம்பித்தாள்.

இந்த காஃபிக்குத்தான் எவ்வளவு ருசி..எவ்வளவு சக்தி.. .காலையில் இது ஒரு டோஸ் உள்ளே இறங்கிினால்தான்..நாள் முழுதும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடிகிறது.நான் காஃபியே குடிப்பதில்லை என்பவர்கள் வாழ்க்கையில் எப்படிப்பட்ட இன்பத்தை இழந்துள்ளார்கள்! என்று நினைத்தபடியே காஃபியை அருந்தி முடித்தாள் வனஜா.

பின்னர் அலமாரியைத் திறந்து டவல், மாற்றுத் துணிகளை எடுத்துக் கொண்டு குளியலறையினுள் நுழைந்தாள்.

அவள் குளித்து முடித்து வருவதற்குள்..அவளைப் பற்றி சற்று தெரிந்து கொள்வோம்..

நான்கு சகோதரிகளுடனும்..ஒரு சகோதரனுடனும் பிறந்த ஒரு குடும்பத்தின் மூத்த பெண் வனஜா.பேரழகி என்று சொல்ல முடியாவிட்டாலும்..பார்ப்பவர்களை மீண்டும் பார்க்க வைக்கும் ஒரு தெய்வீக அழகு அவளிடம் இருந்தது.சாமுத்ரிகா லட்சணம் அவளிடம் இல்லாமல் இருந்திருக்கலாம்..ஆனால் லட்சணமான அழகு.இருபத்திரெண்டு வயதில் கல்லூரி படிப்பினை முடித்த அவளுக்கு..தன் எதிர்காலம் குறித்து பல கனவுகள் இருந்தன.ஆனால்..அவளுக்குப் பின் நான்கு சகோதரிகள்..கடைக் குட்டி சகோதரன் இருந்ததால் த்ன் கடமைகள் ஒவ்வொன்றாக முடிப்பதில்,அவசரத்தைக் காட்டிய அவளது தந்தை..ஒரு சாதாரண தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்த ஒருவனை அவளுக்கு வாழ்க்கைத் துணையாக்கி விட்டார்.

ஆனால்..வந்தவனோ இதய நோயாளி.அதிகம் உணர்ச்சி வசப்படக் கூடாது...அது கேடாய் முடிய வாய்ப்புண்டு..என்றெல்லாம் மருத்துவர்கள் எச்சரித்திருந்தாலும்...அதையெல்லாம் அவன் வீட்டார் மறைத்து திருமணத்தை முடித்து விட்டனர்.

இந்நிலையிலும்..பெண்களுக்கு இயற்கை அளித்துள்ள தாய்மை எனும் வரத்தை இரு முறை பெற்றாள் அவள்.முதல் குழந்தை பெண்.பெண் குழந்தை என்றாலே பிரியமானவளாகத்தானே இருக்க முடியும்.ஆகவே அக்குழந்தைக்கு ப்ரியா என்று பெயர் சூட்டினாள்.அடுத்து இரண்டு வருடங்களில் ரமேஷ் பிறந்தான். ப்ரியாவிற்கு இப்போது வயத் இருபது.ரமேஷிர்கு பதினெட்டு.ப்ரியா பி.காம் இறுதி ஆண்டும்..ரமேஷ் பொறியியர் கல்லூரி ஒன்றில் முதல் ஆண்டும் படிக்கின்றனர்.

வனஜாவின் தந்தை மற்ற மகள்களுக்கும் திருமணம் முடித்து..அவர் வாழ்நாள் சேமிப்பு முழுவதையும் இழந்திருந்தார்.கடைசிவரை யாரிடமும் அவர் கையேந்தியதில்லை.ஆனால்..மரணம் அவரை தழுவும் நேரம் வனஜாவிடம் அவர் ஒன்றை யாசித்தார்..

சாதாரணமாக நாடகங்களிலும், சினிமாக்களிலும் தந்தை பாத்திரம் இறக்கும் போது..திருமணமாகாத மகளை..மூத்த மகனின் கைகளில் பிடித்துக் கொடுத்து..அவளை வாழ்வில் கரையேற்றுவேன் என எனக்கு சத்தியம் செய்து கொடு..எனக் கேட்பதுண்டு.

ஆனால் இங்கோ...வனஜாவின் வாழ்விலோ..அவளது தந்தை கடைக்குட்டி தம்பியை வனஜாவிடம் ஒப்படைத்து விட்டு மறைந்தார்.அப்போது அந்தப் பையனுக்கு வயது பதினைந்து இருக்கும்.பிளஸ் டூ படித்துக் கொண்டிருந்தான்.அது முடிந்ததும், வனஜாவும், அவள் கணவனும் எவ்வளவோ முயன்றும் பத்மநாபன்...அதுதான் அவன் பெயர்.. எனக்குப் படிப்பு ஏறாது..நான் படிக்க மாட்டேன் என்று சொல்லி விட்டான்.வேலைக்கும் போகாமல் அவளுக்கு ஒரு சுமையாகவே இருந்து விட்டான்.வனஜாவும், தம்பி என அவனுக்கு அதிகம் செல்லம் கொடுத்து விட்டாள்.

இந்நிலையில் ஒரு நாள் அலுவலகத்திலிருந்து தனது ஸ்கூட்டரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த அவளது கணவனுக்கு...சிக்னல் ஒன்றில் வண்டி நின்ற போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு....கீழே விழ..அவனை உடன் சிலர் மருத்துமனைக்கு எடுத்துச் சென்றனர்.சேதி கேள்விப்பட்டு அவள் மருத்துவ மனைக்கு அவனைப் பார்க்க விரைந்தால்..ஆனால் அதைத்தான் பார்க்க முடிந்தது.

பிறகென்ன..அவள் கணவன் வேலை செய்த அலுவலகத்தில் அவளுக்கு கருணை அடிப்படையில் வேலை கொடுத்தனர்.

வனஜா என்ற பெண்.. தன் குடும்பத்திற்காகஉழைத்துக் கொண்டிருக்கும் இயந்திரமாகி விட்டாள்.

அவள் உழைப்பில் மகள் ப்ரியா கல்லூரி இறுதி ஆண்டும், மகன் ரமேஷ் முதல் ஆண்டும் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

குளியலறையிலிருந்து தேவதையாய் வெளியே வந்தாள் வனஜா.அவள் நாற்பதுகளில் இருக்கிறாள் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.கட்டுக் குலையாத மேனி.சற்றும் சிதைந்து போகாத யௌவனம்.நீல நிறத்தில்..சிறு சிறு மஞ்சள்பூக்கள் போட்ட சேலை உடுத்தி,அதற்கேற்ப வெளிர்நீல ஜாக்கெட் அணிந்திருந்தாள்.அடர்ந்து வளர்ந்திருந்த நீண்ட கூந்தலை தவிட்டியபடியே சமையலறையில் சென்றவள்.. குக்கரை அடுப்பில் வைத்து..இட்லி தட்டுகளை வைத்து மாவினை ஊற்றி வைத்தாள்.அடுத்து பத்து நிமிடங்களில் காலை உணவு இட்லி தயாராகிவிடும்.அதற்குள்..தேங்காயைத் துருவி ஒரு சட்னி அரைத்து விடலாம்..என நினைத்தாள்.

இந்நிலையில், காலியில் எழுந்து நடைப்பயிற்சி முடிந்து திரும்பியிருந்த அவளது தம்பி பத்மநாபன் வீட்டினுள் நுழைந்தபடியே.."வனஜா..காஃபி ப்ளீஸ்" என்றான்.

"வாடா..பத்து..உனக்கு கையில கொண்டு வந்து கொடுக்கணுமா..வந்து எடுத்துக்க"என்றாள்

வாயில் டூத் பிரஷூடன் கையில் மொபைலை நோண்டியபடியே அங்கு வந்த ரமேஷ்.."அம்மா..எனக்கும் காஃபி.." என்றான்.

"முதல்ல பல்லை தேய்ச்சுட்டு வா...அப்படி என்னதான் சதாசர்வ காலமும் கையில மொபைலை வைச்சுக்கிட்டு உன் வயசு பசங்க அலையறீங்களோ" என்றான் பத்மநாபன்.

ரமேஷை ஏறிட்டுப் பார்த்தாள் வனஜா.மனதில் ஒரு பெருமிதம்.ஐந்தரையடிக்கு மேல் வளர்ந்து நின்றான்.கண்டிப்பாக இன்னொரு வளர்த்தி உண்டு அவனுக்கு. நாளை நமக்கு பாதுகாப்பு அவன்தான்..என்று மனதிற்குள் ஒரு மகிழ்ச்சி.இவ்வளவு நாட்கள் இந்த குடும்பத்திற்கு உழைத்த உழைப்பை..தன் தோள்களில் விரைவில் சுமந்து விடுவான்

அம்மா, தன்னையேப் பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த ரமேஷிற்கு அம்மாவின் மன ஓட்டம் புரிந்தது.அவள் மீது ஒரு பரிதாபம் ஏற்பட்டது.அவர்களுக்குள் நடக்கும் உணர்ச்சிப் போராட்டத்தை அறியாத பத்மநாபன், "ரமேஷ்..முதல்ல பல்லை தேய்ச்சுட்டு, காஃபியைக் குடிச்சுட்டுப் போற வழியைப் பாரு" என்றான்.

இதனிடையே..குக்கரை அணைத்து..இட்லிகளை எடுத்து, ஒரு ஹாட் பேக்கில் வைத்து, ஒரு கிண்ணத்தில் சட்னியையும் கொண்டு வந்து டைனிங் டேபிளில் வைத்தாள்.

பல் தேய்த்து,வாய்கொப்பளித்து..மொபைலிலிருந்து கண்களை எடுக்காமல் வந்து டேபிளில் அமர்ந்தவனுக்கு..காஃபியை கலந்து குடுத்துவிட்டு..மீண்டும் சமையலறையில் நுழைந்தவள்..இட்லி எடுத்த குக்கரில் மதிய உணவிற்காக சாதத்தை வைத்தாள்.சாதம் முடிந்ததும்..இருக்கும் புளிக்காய்ச்சலில் மதிய உணவை பிசைந்து அனைவருக்கும் கொடுத்து இன்றைய பொழுதை ஓட்டி விடலாம் என்று எண்ணினாள்.

பத்மநாபன் குளித்து விட்டு, நெற்றி நிறைய விபூதி பட்டையுடன் வந்து ரமேஷ் அருகில் அமர்ந்தான்.அவனது நெற்றிப் பட்டையைப் பார்த்த ரமேஷ், "ஏன் மாமா..எனக்கு ரொம்ப நாளா ஒரு சந்தேகம்.நீங்க விபூதி இட்டுக்கறதும்..சாமி பூஜை செய்யறதும் பார்க்கிறேன் தினமும்.ஆனா..அம்மா பூஜை ரூமுக்குள்ள நுழைஞ்சு பார்த்ததில்லையே..அம்மாவுக்கு சாமி பக்தியெல்லாம் கிடையாதா?"என்றான்.

அக்கம் பக்கத்தில் வனஜா இல்லை என்பதை உறுதி செய்து கொண்ட பத்மநாபன்.."டேய்..அவளுக்கு சின்ன வயசுல சாமி பக்தி அதிகம்.கண்டதுக்கெல்லாம் சாமியை வேண்டிப்பா.ஆனா பாரு..உங்கப்பாவிற்கு ஹார்ட் அட்டேக் வந்து ஆஸ்பத்திரிக்கு எடுத்துட்டு போனப்போ.."ஆண்டவா..அவரை எப்படியாவது காப்பாற்று"ன்னு வேண்டிக்கிட்டா..ஆனா..அவ வேண்டுதல் அந்த ஆண்டவன் காதுல விழல..உங்கப்பாவை காப்பாத்த முடியல..அவ்வளவுதான்..அந்த விரக்தியில.."இனிமே..நான் சாமியே கும்பிட மாட்டேன்..அவன் ஒருதலை பட்சமானவன்.பணக்காரங்களுக்குத்தான் வேண்டியதைச் செய்வான்"னு சொன்னவதான்..அதுக்குப் பிறகு இதுவரைக்கும் பூஜை ரூமிற்குக் கூட போக மாட்டாள்"என்றான்.

"ஓஹோ..சாமி மேல கோபிச்சுக் கிட்டு சாமியே இல்லன்னு சொல்லிட்டாங்களாக்கும்"

"டேய்..ரமேஷ்..அவ எப்பவாவது கஷ்டத்துல இருக்கறப்போ..அந்த ஆண்டவன் வந்து ஹெல்ப் பண்ணனும்..அப்ப அவளுக்கு திரும்ப சாமி பக்தி வந்துடும்"

"மாமா..ஒன்னை கவனிச்சீங்களா? சுவாமி பக்தியெல்லாம் இந்த காலத்துல பண்டமாற்று போல ஆயிடுச்சு.நீ எனக்கு இதைக் கொடு..நான் உனக்கு அதைத் தரேன்னு"

"அது இப்ப இல்லடா.அந்த காலத்துல இருந்து அப்படித்தான்.ஔவையார் அந்த பிள்ளையார் கிட்ட என்ன வேண்டிக்கிட்டா..
"பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்து உனக்கு நான் தரேன்..நீ எனக்கு சங்கத் தமிழ் மூணும் தான்னு . மனுஷங்க அன்னிலே இருந்து இன்னி வரைக்கும் மாறலை'

"பத்து..கார்த்தால் இருந்து அவனோட அப்படி என்ன வெட்டிப் பேச்சு.எனக்கு கொஞ்சம் வந்து ஹெல்ப் பண்ணக் கூடாதா.நான் சமையலை முடிச்சுட்டு..பிரியாவுக்கும்..ரமேஷுக்கும், எனக்கும் லஞ்ச் பேக் பண்ணிட்டு ஆஃபீசூக்குக் கிளம்பணும்..எனக்கு உதவலன்னாலும் பரவாயில்லை..அந்த ப்ரியாவை எழுப்பக் கூடாதா?" என சமையலறையிலிருந்து குரல் கொடுத்தபடியே , குக்கரை அணைத்துவிட்டு வெளியே வந்தாள் வனஜா.

வனஜாவைப் பார்த்ததும் பத்மநாபன் பேச்சை மாற்றினான்,"ஏன்டா ரமேஷ்..காலங்கார்த்தால வெட்டியா என் கிட்ட வம்பளந்துகிட்டு இருக்க.போய்..காலேஜ் பாடம் எதாவது படி" என்றான்.

தன் அக்காவின் மீது உள்ள பாசத்தால் மாமா பேச்சை மாற்றுகிறார் என்பதை அறிந்து கொண்ட ரமேஷ்..வனஜாவைப் பார்த்து,"வனஜா..இன்னிக்கு இந்தப் புடவையில நீ அப்சரஸ் மாதிரியே இருக்க.." என்றான்.

"டேய்..அம்மாவைப் பேர் சொல்லிக் கூப்பிடறே..உன்ன...உன்னை.."என்ற படியே போலிக் கோபத்துடன் அவனிடம் கையை ஓங்கியபடி வந்தவள்.."உருப்படாது..உருப்படாது.." என்றாள்.

"குழந்தையை ஏம்மா திட்டறே.." என பத்மநாபன் இப்போது ரமேஷிற்கு வக்காலத்து வாங்கினான்.

"ஆமாம்..குழந்தை..கோட்டான்..கொஞ்சம் கூட பொறுப்பிலாம எப்பப் பாரு செல் ஃபோனும் கையுமா அலைஞ்சு கிட்டு இருக்கு.."கையில் மொபைலை பார்க்க இருந்தவன் அம்மாவை ஏறிட.."என்ன பார்க்கிற..நீ மட்டும் இல்ல..உன் வயசு பசங்க எல்லாமே..இப்ப எல்லாம் ஏதோ அகழ்வாராய்ச்சி பண்றாப் போல ..எப்பப்பாரு கையில மொபைலை வைச்சு நோண்டிக் கிட்டு இருக்கீங்க.அப்படி என்னதான் இருக்கோ அதுல.."

"வனஜா..நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதே..உன் காலம் வேற..அவன் காலம் வேற.8 இன்டூ 8 என்னன்னு வாய்ப்பாட்டைமனப்பாடம் பண்ணி னது உன் காலம்.ஆனா..8 இன்டூ 8 எவ்வளவுன்னு கால்குலேட்டர்ல போட்டுப் பார்க்கிறது அவனோட காலம்"

"ஆமாம்டா..இவனை எங்கே கூட்டிக்கிட்டுப் போறதுக்கும் எனக்கு வெட்கமாயிருக்கு.அன்னிக்கு அப்படித்தான் இவனை அழைச்சுக்கிட்டு மார்க்கெட்டுக்க காய் வாங்கப் போணேன்.நாலு காய்களை வாங்கினதும்..எவ்வளவு ஆச்சுன்னு மொபைல்ல இவன் கால்குலேட் பண்றதுக்குள்ள ..அதிகம் படிப்பறிவில்லாத கடைக்காரன் மனசுல கணக்குப் போட்டு நூற்றியிருபது ரூபாய் ஆயிடுச்சுன்னு சொல்லிட்டான்"

"சரி..பதட்டப்படாத"

"ஆமாம் மாமா..சின்ன விஷயத்துக்கு எல்லாம் பதட்டப்படறாங்க...முதல்ல பீபி செக் பண்ணனும்"

"கொஞ்சம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருடா"

"ஏன்..மாமா..நீங்க வேணும்னா..உங்க அக்காவுக்கு பயந்துண்டு சும்மா இருக்கலாம்.நான் ஏன் பயப்படணும்? என் ஃபிரண்ட்ஸ் அம்மா..அப்பாக்களுக்கு எல்லாம் கிட்டத்தட்ட இவங்க வயசுதானே இருக்கும்..அவங்க எல்லாம் கம்ப்யூட்டர்ல "ப்ளாக்" என்ன.."ஃபேஸ் புக்" என்னன்னு புகுந்து விளையாடறாங்க.இவங்களுக்கு அட்லீஸ்ட் கம்ப்யூட்டர்னா என்னன்னு தெரியுமான்னு கேளுங்க?"

ரமேஷ் அப்படி சொன்னதும்..வனஜாவிற்கு சற்றே கோபம் வர.."டேய்..உங்க அம்மா அந்த அளவுக்கு முட்டாள் இல்ல.எங்க ஆஃபீஸ்லேயும் கம்ப்யூட்டர்தான்.எனக்கும் ஓரளவு கம்ப்யூட்டர் நாலெட்ஜ் உண்டாக்கும்"என்றாள்.

"என்ன பெரிய கம்ப்யூட்டர் நாலெட்ஜ்..கன்ட்ரோல் "சி"யும், கன்ண்ட்ரோல் "வீ"யும் அழுத்தத் தெரிஞ்சுட்டா எல்லாம் தெரிஞ்ச மாதிரியா?"

"டேய்.." என பத்மநாபன் குறுக்கிட..

"அவன் பேசட்டும் விடு..ஆஃபீஸ்ல போய் வேலைப் பார்த்தால்தானே..எல்லாம் தெரியும்.எங்க ஆஃபீஸ்லேயும் எனக்கு கம்ப்யூட்டர் டிரெயினிங் கொடுத்து இருக்காங்க..தெரியுமா..?"

"ஆமாம்..கம்ப்யூட்டர்ல புளந்து கட்டிடுவ.." என அவன் முணுமுணுக்க.."என்னடா முணுமுணுக்கறே..நல்லா படிச்சு கடைசி வருஷம் கேம்பஸ் இன்டர்வியூல நல்ல இடத்துல பிளேஸ்மெண்ட் வாங்கு"

"எனககு என்ன..நான் நல்லாத்தான் படிக்கிறேன்."

"படிப்பு வேற..உழைப்பு வேற.."

"ஆமாம்..உழைச்சு..உழைச்சு உங்க ஆஃபீஸ்ல உன் தலையில கிரீடமா வைச்சுட்டாங்க...உழைப்பாம்..உழைப்பு.."

"டேய் ரமேஷ், என்னை என்ன வேணும்னாலும் சொல்லு..ஆனா நான் வேலை செய்யற..ஆஃபீசைப் பத்தி மட்டும் எதுவும் சொல்லாதே! எனக்குக் கெட்ட கோபம் வரும்.இருபத்திரெண்டு வருஷமா..எனக்கு...ஏன் நம்ம எல்லோருக்கும் சோறு போடற ஆஃபீஸ்.இது மட்டுமில்லைன்னா..நாம சோத்துக்கே லாட்டரி அடிச்சிருப்போம்.நான் சுண்டல் செஞ்சு கொடுத்து..நீ..உங்க மாமா..ப்ரியா எல்லாம் எலியட்ஸ் பீச்ல சுண்டல்தான் வித்து இருக்கணும்... சரி..சரி..ப்ரியா எங்க..இன்னமுமா எழுந்தக்கலை..?"

"அவ இன்னமும் எழுந்துக்கலை.ஒவ்வொரு அம்மாக்களும் தன் பிள்ளைகள் எஞ்சினியர் ஆகணும் டாக்டர் ஆகணும்னு நினைப்பாங்க.ஆனா..எங்கம்மா..தன் பையன் சுண்டல் விக்கணும்னு நினைக்கிறாங்க.."

"அந்த சுண்டலை நானும் விக்கணும்னு சொல்றாடா" இது பத்மநாபன்.

"என் கிட்ட இவ்வளவு பேசறவங்க..அவங்க செல்லப் பொண்ணு..ப்ரியா இன்னமும் எழுந்துக்கலை.அதை மட்டும் ஏன் கண்டுக்க மாட்டேன்னு சொல்றாங்க....அம்மாவுக்கு எப்பவுமே ஒரு கண்ணுல வெண்ணெய்..ஒரு கண்ணுல சுண்ணாம்பு. "

"ப்ரியா...ப்ரியா.."எனஹாலில் இருந்தபடியே குரல் கொடுத்தாள் வனஜா.

யாரோ கிணற்றிலிருந்து தன்னைக் கூப்பிடுவது போல உணர்ந்த காலைத்தூக்கத்திலிருந்த ப்ரியா..மெதுவாகக் கண் விழித்தாள். விடிந்துவிட்டதை உணர்ந்து பதறியபடியே எழுந்து..ஹாலுக்கு விரந்து வந்தவள்.."எங்கே வைச்சேன்..எங்கே வைச்சேன்" எனத் தேட ஆரம்பித்தாள்.

தான் இருபதில் இருந்தது போலவே இருக்கும் ப்ரியாவைப் பார்த்து வியந்தபடியே.."என்ன தேடற?" என்றாள் வனஜா.

"காலையில் எதைத் தேடுவாங்க..பேஸ்டையும்,பிரஷ்ஷையும் தானே" என்ற பத்மநாபனிடம், "ஐயா..மாமா..என் மொபைலைத் தேடறேன்..எதாவது மெஸ்ஸேஜ் வந்து இருக்கான்னு பார்க்கணும்"என்றபடியே..சோஃபாவின் மீது போடப்பட்டிருந்த மொபைலைத் தேடி எடுத்தாள்.

"அம்மா..இப்ப வாயத்திறங்களேன்..மாட்டீங்களே.உங்களைப் பொறுத்தவரை மகள்னா ஒரு ட்ரீட்மென்ட்..மகன்னா ஒரு ட்ரீட்மென்ட்"என்ற ரமேஷிடம்..ப்ரியாவை அணைத்தபடியே.."என் மகளுக்கு அவளோட லிமிட் தெரியும்டா" என்றாள் வனஜா.


2- I Have been shot

அன்று ப்ரியா கல்லூரியிலிருந்து கடைசி வகுப்பை கட் அடித்துவிட்டு வீட்டிற்கு முன்னதாகவே வந்து விட்டாள்.வீட்டின் காலிங் பெல்லினை அழுத்த பத்மநாபன் வந்து கதவைத் திறந்தான்.

"என்ன ப்ரியா சீக்கிரம் வந்துட்ட..உடம்புக்கு ஒன்னுமில்லையே?" என்றான்.

"அதெல்லாம் ஒன்னுமில்ல மாமா.கடைசி பீரியட் அறுவை அரங்கநாதன் கிளாஸ்.அறுத்துத் தள்ளிடுவார்.தலைவலியே வந்துடும்.அதான்..கட் அடிச்சுட்டு வந்துட்டேன்" என்றவள்..தன் மொபைலை பையிலிருந்து எடுத்துக் கொண்டு தன் அறைக்குள் நுழைந்தாள்.பின் ஏதோ ஞாபகம் வநதவளைப் போல திரும்பி வந்து, "மாமா..அம்மாகிட்ட நான் கிளாஸ் கட் பண்ணிட்டு வந்தேன்னு சொல்லாதீங்க..அம்மா திட்டுவாங்க" என்றாள்.

"நான்ன் ஏம்மா சொல்லப் போறேன்..எனக்கு வெளியே கொஞ்சம் வேலையிருக்கு.யாராவது வந்ததும் கிள்மபணும்னு நினைச்சேன்.நல்லவேளை நீ வந்துட்ட..நான் போயிட்டு வரேன்..ஜாக்கிரதையா இரு..கதவைத் தாழ் போட்டுக்க" என்று சொல்லியபடியே பத்மநாபன் வெளியேற..வீட்டில் யாரும் இல்லை என்ற தைரியத்தில் மொபைலை எடுத்து விளையாட ஆரம்பித்தாள்.நேரம் போனதோ..இருட்டிவிட்டதோத் தெரியாமல் விளையடைக் கொண்டிருந்தாள்.

மணி ஏழு..

அலுவலகத்திலிருந்து வந்த வனஜா..வாசல் கதவு திறந்து இருப்பதையும்..வீட்டில் விளக்குகள் எரியாமல் இருப்பதையும் கண்டு..சற்று திகைப்புடன்..."யார் வீட்டுல..யார் வீட்டுல.." என்றபடியே ஸ்விட்சைப் போட்டாள்.

ப்ரியா, சோஃபாவில் படுத்தபடியே..மொபைலில் ஏதோ செய்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவள்.."ஏய்..ப்ரியா..கதவைத் திறந்து போட்டுட்டு லைட்டைக் கூடப் போடாம..நான் வந்ததும் தெரியாம அப்படி என்ன செஞ்சுக் கிட்டு இருக்க.." என்றாள்.

திடீரென மொபைலில் இருந்து சப்தம்.."I have been shot..I have been shot..I am dead"

"ப்ரியா..என்ன இது..அப்படி என்ன சப்தம்? என்ன விளையாடறே?எப்பப்பாரு மொபைல்..மொபைல்னு சர்வசதாகாலமும்..காலேஜுக்கு எல்லாம் ஒழுங்காப் போறியா? இல்லையா?"
"அம்ம..எங்க ஜெனெரேஷன் பத்தி உனக்கு ஒன்னும் தெரியாது அம்மா.எங்களால கம்ப்யூட்டர் இல்லாம..மொபைல் இல்லாம ஒரு நிமிஷ்ம கூட இருக்க முடியாது..வாட்ஸப்,ஃபேஸ் புக், இன்ஸ்டாகிராம்,டுவிட்டர் அப்படி இப்படின்னு எவ்வளவு இருக்கு..?" என்றபடியே மொபைலைப் பார்த்தவள்..வனஜாவிடம், "உஷ்..பேசாதே"என்றாள் சைகையில்.

அப்போது மொபைலில் குரல்.."ஓ..someone shot me..உன் பின்னாலேயும் வரான்.முடிஞ்சா என் கால்களின் கீழே இருக்கும் துப்பாக்கியை எடுத்து உன்னைக் காப்பாற்றிக் கொள்" என்ற்டஹு.

"ப்ரியா மொபைலை ஆஃப் பண்ணிட்டு நான் சொல்றதைக் கொஞ்சம் கேள்"

"அம்மா..பிளீஸ்..கொஞ்சம் சும்மா இரேன்.நான் பப்ஜி விளியயாடிட்டு இருக்கேன்"

"பப்ஜியா..அப்படின்னா.."

பப்ஜின்னா ..Players unknown battle ground. இது ஒரு சண்டை விளையாட்டு.ஒரே நேரம் வேற..வேற இடத்துல இருக்கறவங்கக் கூட ஆன்லைன்ல விளையாட முடியும்.விளையாடற எங்களுக்கு முன்னால இருக்கறவங்களைப் பார்த்து சண்டை போடலாம்.தப்பிக்கலாம்..பின்னால வர்ற நண்பர்கள் யாராவது எச்சரித்தா கண்டுக்கலாம்"

உனக்கு எப்படி சொல்றதுன்னேத் தெரியல ப்ரியா.கண்களையும்,காதுகளையும் கெடுத்துண்டு சுடறது, கொல்றதுன்னு விளையாடறது மனசுல வயலன்ஸை ஏற்படுத்தல.இன்டெர்னெட்டால நமக்கு பயங்கள் இருக்கோ..இல்லையோ..இது போன்ற "ஆப்"களால் ஆபத்து ஏற்பட்டு காயப்படப்போறது நிச்சயம்.இன்டெர்னெட்டுங்கறது இரண்டு பக்கமும் கூரான ஆயுதம்.அது உன்னைப் போன்ற தலைமுறைகள் கையில மாட்டிண்டு இருக்கு.உங்க தலைமுறை எங்கேப் போகப் போறதுன்னு கவலையா இருக்கு.சரி..சரி..காலேஜுக்கு எல்லாம் ஒழுங்காப் போறியா இல்லையா?..இப்ப எல்லாம் காலேஜ் பாடங்களை நீ படிக்கறதையே நான் பார்க்கறதில்லை?"

"போம்மா..எப்பப் பார்த்த்தாலும் படிப்பு..படிப்புதானா? வீட்டைவிட்டு வெளியே போக விடாம படிப்பு சுமை. இதுதான் எங்க தலைமுறையோட தலைவிதி.நாங்க எல்லாம் இதனால எவ்வளவு மன நிம்மதியை இழந்து..மனச்சுமையில அவதிப்படறோம்னு தெரியுமா? எங்களுக்கு இருக்கற ஒரே பொழுது போக்கு இது போன்ற கேம்ஸ்கள் தான்.இல்லேன்னா ஃபேஸ்புக், இன்ஸ்டகிராம், வாட்ஸப்தான்"

"ப்ரியா..செல்ஃபோனும் ,கம்ப்யூட்டரும் வர்றதுக்கு முன்னால எல்லாம் பசங்க..பம்பரம் சுத்தறது,கோலி விளையாடறது,கிட்டிப்புள் விளியாடறதுன்னு விளையாடிட்டு இருந்தாங்க.அது ஒரு உடற்பயிற்சி போலவும் இருக்கும், பொழுதும் போகும், உடலும் ஆரோக்கியமாய் இருந்தது.அதுபோல பெண்களுக்கெல்லாம், கண்ணாமூச்சி,ஸ்கிப்பிங்,தாயம், பரமபதம்,பாண்டி என விளையாட்டுகள் இருக்கும்.இந்த விளையாட்டுகள் எல்லாம் பிறரோட ஒத்து போற குணத்தையும்,வெற்றி..தோல்வியை எதிர் கொள்ளும் பக்குவத்தையும் கொடுத்தது.இன்னிக்கு இந்த செல்ஃபோன் கேம்ஸ் எல்லாம் வன்முறையைத்தான் சொல்லித் தருது"

"அம்மா..ஆளை விடு.எங்களுக்கெல்லாம் இப்ப இது போன்ற கேம்ஸ்கள் தான் போரடிக்காம..பொழுது போக உதவுது"

"இப்படி விளையாடறதால பொழுது போகலை..உங்க பொழுது வீணாகுது..."வனஜா பேசிக் கொண்டிருக்க அதைக் காதில் வாங்காமல் மொபைல் விளையாட்டிலேயே குறியாய் இருந்த ப்றியாவைப் பார்த்த வனஜா, "நான் இவ்வளவு பேசிக்கிட்டு இருக்கேன்.நீ அதை சட்டை செய்யாமல் விளையாடிட்டு இருக்க..நீங்க எல்லாம் தானாத் திருந்தினாத்தான் உண்டு"

"அம்மா..ப்ளீஸ்..புரிஞ்சுக்கம்மா.காலம் மாறிக்கிட்டே இருக்கு.நாமும் அதற்கேற்றார் பொல அப்டேட் ஆகிட்டே இருக்கணும்..ம் ஹூம்..நான் மாட்டேன் நான் பத்தாம்பசலியாகத்தான் இருப்பேன்னு சொன்னா..நம்மளை முந்திக்கிட்டு மத்தவங்க போய்க்கிட்டே இருப்பாங்க"

"இப்ப என்னதான் சொல்ல வரே?"

"ம்..ஒருநாள் இல்லேன்னா ஒருநாள்..இது விஷயமா நீ என் உதவியை நாடி வரத்தான் போற.."என்று கூறியபடியே, ப்ரியா தன் அறைக்குப் போக.."இவளுக்கு நல்லதைச் சொன்னா..என் கிட்டேயே சவால்விடற மாதிரி சொல்லிட்டுப் போறா.."என்று முணுமுணுத்தபடியே..இரவு என்ன சமைப்பது..என்று எண்ணியபடியே சென்றாள் வனஜா.

3

வழக்கம் போல தன் இருக்கையில் அமர்ந்து வேலை ஏதும் செய்யாது ஆழ்ந்த யோசனையில் இருந்தாள் வனஜா.அவள் ஒரு இரு சக்கர வாகனம் தயாரிக்கும் அலுவலகத்தில் விற்பனைப் பிரிவில் அதிகாரியாய் இருந்தாள்.

அப்போது அவளை பொது மேலாளர் அழைப்பதாக அந்த அதிகாரியின் உதவியாளர் ஃபோனில் அழைத்தார்.

மேலதிகாரி அழைக்கிறார் என்றதுமே சற்று பட்டத்துடன் அவரது அறைக்கு விரைந்தவள்..அறையின் கதவுகளை சற்று தட்ட, அதிகாரியின்.."எஸ்..கம் இன்" என்ற குரல் கேட்டதும் உள்ளே நுழைந்தாள்.

அவளைப் பார்த்த அதிகாரி..தன் வழுக்கைத் தலையை சற்றே வருடியபடி" வாங்க வனஜா..சிட் டௌன்" என்றார்.

இன்று ஏதோ நடக்கப் போகிறது என வனஜாவின் உள்மனது சொல்ல..அவர் எதிரே இருந்த நாற்காலியின் நுனியில் அமர்ந்தாள்.பின், "சார்..என்னை வரச் சொன்னதா சொன்னாங்க..."என இழுத்தாள்.

"எஸ்..எஸ்.."என்றவர்.."நாம தயாரிக்கிற பைக் (baike) கு களின் மாடலுக்கு இப்ப மவுஸ் குறைஞ்சுப் போச்சு.பல கம்பெனிகள் ஸ்மார்ட் பைக்குகளை மார்க்கெட்டுக்குக் கொண்டு வந்துள்ளன. நாமும் இன்னிக்கு..இளைய தலைமுறையைக் கவரும்படி புதுப் புது மாடலை கொண்டு வரணும்.அதுக்காக ஒரு சாஃப்ட்வேர் நம்ம கம்ப்யூட்டர் அதிகாரிகள் கொண்டு வந்து இருக்காங்க..அதை நீங்க கற்றுக்கணும்னு..போன வாரமே சொன்னேன்..ஆனா..அதுல நீங்க கொஞ்சமும் அக்கறைக் காட்டலை.."

புது சாஃப்ட்வேர்..இந்த வார்த்தைகளைக் கேட்டதுமே..வனஜாவின் இதயத்துடிப்பு அதிகமானது.தன்னுடைய அரைகுறையான கம்ப்யூட்டர் அறிவைக் கொண்டு..ஓரளவு இப்போது சமாளித்து வருகிறாள்.இது போதாது என புதிதாகக் கற்றுக் கொள்ள வேண்டுமாம்.அது கண்டிப்பால தன்னால் முடியாது என எண்ணினாள்.

"வனஜா.. என்ன பதிலைக் காணோம்..."என்றார் அதிகாரி.

"சார்..நான் சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க..அப்பப்ப..புது மாடல்..அதுக்கு புது சாஃப்ட்வேர் என மாற்றிக் கொண்டே போவீங்க.அதையெல்லாம் கற்றுக்கச் சொன்னா...என்னால முடியாது.."

"உங்களுக்குன்னு தனியா வேணும்னா டிரெயினிங் கொடுக்கச் சொல்றேன்.ஒன்னை புரிஞ்சுக்கங்க..மக்களோட ரசனை அப்பப்ப மாறிக்கிட்டே இருக்கு.அதுக்கு ஏற்றாற்போல நாமும் மாறினாத்தான் ..நம்மால மார்க்கெட்ல தாக்குப் பிடிக்க முடியும்.வேற வழியில்லை.கம்பெனி சொல்றதை நாமக் கேட்டுத்தான் ஆகணும்.அதுக்குத்தான் நமக்கு சம்பளம் கொடுக்கறாங்க.."

"சாரி..சார்..இந்த வயசுக்கு மேல என்னால அப்பப்ப உங்க ட்தேவைக்கேற்ப அப்டேட் ஆக முடியாது.முதல்ல புதுசா கொண்டுவர சாஃப்ட்வேர் எனக்குப் புரியணும்.அதுக்கான சான்சே இல்லேன்னுதான் தோணுது"

"நல்லா யோசனைப் பண்ணிப் பாருங்க.நீங்க மாட்டேன்னு சொன்னா..எங்களுக்கும் வேற வழியில்ல.உங்க இடத்துல புதுசா ஒருத்தரை நியமிக்கணூம்.உங்களையும் கட்டாய ஓய்வு பெறச் சொல்லணும்.." என்றபடியே அவளை ஏறிட்டுப் பார்த்தவர்.."வீட்டுக்குப் போய் நல்லா யோசனைப் பண்ணுங்க.உங்களுக்கு ஒரு வாரம் டயம் தரேன்.அதுக்குள்ள யோசனைப் பண்ணி ஒரு முடிவிற்கு வாங்க" என்றார்.

இயந்திரத்தனமாக வெளியே வந்த வனஜா, தன் இருக்கைக்கு வந்து அமர்ந்தாள்.

அவள் கண் முன் ரமேஷ்,"அம்மா நான் எம் எஸ் பண்ண யூ எஸ் போணும்மா..அதுதான் என் ஆசை" என்று சொல்வது போல இருந்தது.

"அம்மா..அவன் மேல் படிப்புக்கு யூ எஸ் போனா நான் சும்மா இருக்க மாட்டேன்.எனக்கும் போகணும்..பொண்ணுன்னா இளப்பமா?" என ப்ரியா வந்து சொன்னாள்.

"வனஜா..ப்ரியா படிப்பை முடிஞ்சதும்..அவளுக்குக் கல்யாணம் பண்ணனும்..பெண்ணைப் பெத்தவங்களுக்கு இப்ப கல்யாணத்துக்கு அதிகம் செலவு செய்ய வேண்டாம்னு சொன்னாலும்..கல்யாண செலவுகளை பெண்ணை பெத்தவங்கதான் செய்ய வேண்டியிருக்கு.."என பத்மநாபன் வந்து சொன்னான்.

தலையை வலித்தது அவளுக்கு.பின்னர்..அவள் என்ன வேலையைச் செய்தாள்..எப்படி மாலை ஐந்து மணி ஆயிற்று என்பதே அவளுக்குத் தெரியவில்லை.

வீடு வந்து சேர்ந்தவள்..வீடு திறந்து இருப்பதையும்..ப்ரியா,ரமேஷ், பத்மநாபன் மூவரும் ஆளுக்கொரு இருக்கையில் அமர்ந்து செல்ஃபோனை நோண்டிக் கொண்டிருப்பதையும் கண்டாள்.

அவளுக்கு கோபம் எற்பட..அதை முதலில் ப்ரியா மீது காட்டினாள்."ப்ரியா..ஏய் ப்ரியா..நான் வந்தது கூடத் தெரியாம, வாசலைத் திறந்து போட்டுட்டு அப்படி என்ன செய்யற?" என சீறினாள்.

"ஐய்யோ..அம்மா..நான் ஃபேஸ் புக் பார்த்துக்கிட்டு இருக்கேன்.என் ஃப்ரண்ட்ஸ் போட்ட பதிவுகளுக்கு கமெண்ட் போட்டுக்கிட்டு இருக்கேன்.கொஞ்சம் சும்மா இரு..உங்ககு ஃபேஸ் புக்குன்னா என்னன்னு தெரியாது" என்றாள் ப்ரியா.

"என்ன சும்மா இருன்னு சொல்றியா..அடி செருப்பால..அவ்வளவு தைரியம் வந்துடுச்சா உனக்கு?"

வனஜா கோபமாய் இருப்பதை உணர்ந்த பத்மநாபன் அவசர அவசரமாக் எழுந்து.."வனஜா..ஏன் இப்ப கோபப்படுறே>." என்றான்.

"அது ஒண்ணுமில்ல மாமா..ஆஃபீஸ்ல யார் மேலேயோ காட்ட வேண்டிய கோபத்தை..இப்ப என் கிட்ட காட்டறாங்க.."என்ற ப்ரியாவிடம்..பத்மநாபன்.."கொஞ்சம் சும்மா இரு ப்ரியா.."என்றபடியே.."ஆஃபீஸ்ல இருந்து வர இன்னிக்கு ஏன் லேட்?" என்றான் வனஜாவிடம்.

சற்று கோபம் தணிந்து தன்னிலைக்கு வந்த வனஜா.."வேலை கொஞ்சம் அதிகம் அவ்வளவுதான்'என்றபடியே.."ரமேஷ், ப்ரியா..இரண்டு பேரும் நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க..ஆஃபிஸ்ல எனக்குத் தொல்லை அதிகாப் போச்சு.எனக்கு தெரிந்த அரைகுறை கம்ப்யூட்டர் நாலெட்ஜை வைச்சு..இத்த்னை நாட்கள் காலத்தை ஓட்டிட்டேன்.இப்ப..புதுசா ஏதோ சாஃப்ட் வேர் கொண்டு வந்து இருக்காங்களாம்..அதை நான் கத்துக்கணூமாம.என்னால முடியல.உண்மையைச் சொல்லணும்னா சிலது எனக்குப் புரிய மாட்டேன்னு சொல்லுது. புரிஞ்சுண்டதா நான் நெனைக்கறதும்..கொஞ்ச நேரத்துல மறந்துடுது.இத்தனை நாட்கள் நான் அங்கே காலம் தள்ளினதே பெரிசு....சிவனேன்னு வேலையை விட்டுடலாம்னு பார்க்கறேன்" என்றாள்.

அதைக் கேட்ட பத்மநாபன், ".ரமேஷ் மேலே படிக்கணூம்னு சொல்றான்.ப்ரியாவும் இன்னமும் டிகிரி முடிக்கல..இதையெல்லாம் யோசனைப் பண்ணிப் பார்த்தியா?" என்றான்.

"யோசனைப் பண்ணாம இருப்பேனா.நான் ரிடையர் ஆனா..பி எஃப்., கிராஜுவட்டின்னு கிடைக்கும்.அந்தப் பணத்தை பேங்க்ல டிபாசிட் பண்ணினா..அதுல வர வட்டிலே எஞ்சிய காலத்தை ஓட்டிடலாம்..."

"சரிம்மா..நீ வேலையை விட்டுட்டா..வீட்ல உனக்கு எப்படி பொழுது போகும்?" என்றான் ரமேஷ்.

"ரமேஷ்..இவ்வளவு நாளா மாடுபோல உழைச்சாச்சு.இனிமே கார்த்தால எழுந்ததும் ஒரு மணி நேரம் வாக்..அப்புறம் வீட்டு வந்து காஃபி சாப்பிட்டுட்டு..நியூஸ் பேப்பர் படிப்பேன்.அப்புறம் டிஃபன்.இலக்கியப் புத்தகங்கள் படிப்பேன்.சாப்பிடுவேன்..கொஞ்ச நேரம் தூங்குவேன்.சாயங்காலமா ஒரு மியூசிக் நிகழ்ச்சியோ இல்ல டிராமாவோ போவேன்..இப்படி எஞ்சிய நாட்களை ஜாலியா கழிப்பேன்...சரி..சரி..அம்மா இவ்வளவு டயர்டா வந்து இருக்கேனே..உங்கள்ல யாருக்காவது..ஒரு காஃபி சாப்பிடறியான்னு கேட்கத் தோணலை இல்லை.ம்..அதையும் நான் தான் போட்டுக்கணும்..என் தலையெழுத்து..என்றபடியே அடுக்களைக்குள் நுழைய ஆயத்தமானாள்.