Thursday, January 23, 2020

40 - தீர்ப்பு

அடுத்தநாள் காலை..

நீதிமன்றம் நிறைந்திருந்தது.

காலை 11 மணிக்கு தாமோதரன், மயில்வாகனன் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவித்திருந்ததால், தாமோதரன், வாஞ்சி, சிதம்பரம்,மூக்கன் என அனைவரும் நீதிமன்றத்தில் கூடியிருந்தனர்.

நீதிபதி தீர்ப்பினைப் படிக்க ஆரம்பித்தார்..

"தாமோதரனின் மகள் கற்பகம் கற்பழிக்கபப்ட்டு,திராவகம் வீசப்பட்டு இறந்ததாகச் சொல்லப்பட்ட வழக்கினையும்,
தாமோதரன்,மயில்வாகனனைத் தாக்கிய வழக்கினையும் இந்த நீதிமன்றம் ஒன்றாக இணைத்து..ஒரே வழக்காக விசாரித்தது.

நாட்டில் இன்று பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்ற ஆதங்கத்தில் தியாகி சிதம்பரம், நாட்டு நடப்புகளை எடுத்துரைத்தார்.

அதில் இவ் வழக்கிற்கான வாதங்களை மட்டும் இந்த நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.

வழக்கில் சம்பந்தப்பட்ட கற்பகம் இன்று உயிருடன் இல்லை.பிரேத பரிசோதனை  அறிக்கை.அவர் சமையல் அறையில் சமைக்கும்போது தீ பற்றப்பட்டு உடல் முழுதும் தீக்காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு..சிகிச்சை பலனின்றி இறந்ததை உறுதிப்ப்டுத்தியுள்ளது.

கற்பகத்தின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக..தாமோதரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நாட்டில் பெண்கள் பாதுகாப்பாக இருக்கமுடியவில்லை என்பதும்,பெண்களுக்கான வன்முறைகள்,,பாலியல் பலாத்காரங்கள் பெருகி வருகின்றன என்பதும் கசப்பான உண்மைதான்.

சிதம்பரம், தன் வாதத்தில் சொன்னபடி மக்களை, இரும்பு வேலியாய் இருந்து காக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது.

பெண்களுக்கு அநீதி ஏற்பட்டால் சம்பந்தப்பட்டவர்களை உடனே தண்டிக்கும் வகையில் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும்,,,இது போன்ற வழக்குகளுக்கு மேல் முறையீடு கூடாது.

இந்த வழக்கில் திராவகம் வீசப்பட்டதாகவும், கற்பகம் பலாத்காரம் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்ட  குற்றச்சாட்டுகள் சரியான ஆதாரங்களுடன் சமர்ப்பிக்கப்படவில்லை.

சந்தேகத்தை குற்றவாளிக்கு சாதகமாகக் கொண்டு..ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கபடாதிருக்கலாம்..ஆனால்..ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக்கூடாது என்பதை மனதில் கொண்டு மயில்வாகனனை இந்நீதிமன்றம் இவ்வழக்கிலிருந்து விடுவிக்கின்றது.

அதேநேரம், தாமோதரன், மயில்வாகனனைத் தாக்கியதை தகுந்த ஆதாரங்களுடன், மயில்வாகனன் தரப்பு நிரூபித்துள்ளது.ஆகவே தமோதரனை குற்றவாளி என்று தீர்மானித்து..இவ்வழக்கில் அவருக்கு ஓராண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கிறது இந்நீதிமன்றம்.

இவ்வழக்கில், தன் தள்ளாத வயதிலும்  வந்து வாதாடிய சிதம்பரத்தை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது."

நீதிபதி, தீர்ப்பை வாசித்து முடித்ததும் , கூண்டிலிருந்து இறுகிய முகத்துடன் வெளியே வந்த தாமோதரன்..சிதம்பரத்திடம்..

"ஐயா..நான் ஏழை.சட்டத்துக்கு முன்னால அனைவரும் சமம்னு நெனச்சேன்.அனா..இப்ப இல்லையோன்னு தோணுது.எனக்கு பதவி, பணம்,செல்வாக்கு,ஆள்படை..இப்படி எதுவுமில்லை,.அதனால..நான்  தோத்துட்டேன்.ஆனா ஒன்னு..இன்னிக்கு வேணும்னா மயில்வாகனன் தப்பிக்கலாம்..ஏன்னா..இந்த சட்ட திட்டம் எல்லாம் மனுஷங்க உருவாக்கினது>

ஆனா, அந்த ஆண்டவன் கோர்ட்டுல அவன் தப்பிக்க முடியாது.

அந்தத் தீர்ப்பும் ஒருநாள் வரும்.

எனக்காக நீங்க வாதாடியற்கு நன்றி "

என்று கூறிவிட்டு காவல் அதிகாரிகளுடன்  நடந்தான்.

41 -பட்டடைக்கல்

பல ஆண்டுகளுக்கு முன்னால்.
.மரகதப்பட்டுடுத்தி..பச்சைபசேல் என வளமாகக் காணப்பட்ட பூங்குளத்து வயல்கள் இன்று கான்கிரீட் கட்டடங்களைத் தாக்கி நிற்கின்றன.

மாடசாமியின் வண்டி ஒன்றினையே நம்பி இருந்த மக்களுக்கு ,இப்போது டவுன்பஸ் வசதி வந்து விட்டது.

அடிப்படை வசதி கூட இல்லாததாலும், அரசியல்வாதிகள் தலையீட்டாலும் பழைய பூங்குளம் மரணித்துவிட்டது.

கிராமங்கள் எல்லாம் இப்படி உருமாறி வரக் காரணம் என்ன..

மக்கள் தொகைப் பெருக்கமா?
தொழிற்சாலைகள் அதிகரிப்பா?
அரசியல்வாதிகளா?
விவசாயிகள் விவசாயத்தை கைவிடத் தொடங்கிவிட்டதா?
விவசாயிகள் வறுமையா?

இப்படி பல காரணங்களை கேட்டுக் கொண்டேப் போனாலும்..பூங்குளத்தின் இன்றைய நிலையை இனிவரும் நாட்களில் எந்த கிராமமும் அடையக்கூடாது.

இந்தியாவின் அழகு கிராமங்களில்தான் இருக்கிறது என்ற அண்ணலின் வாய்மொழியை பொய்யாக்கி விட வேண்டாம்/

இருங்கள்..இருங்கள்...

பூங்குளத்தில் இன்று என்ன விசேஷம்..

ஒரே பாடல், ஆடல்..வாழ்க கோஷம்..என்ன கொண்டாட்டம்..

வார சந்தை நடக்கும் திடலில்..ஒரு அர்சியல்கட்சி கூட்டம் நடக்கிறார் போல் இருக்கிறது.

கெமிகல், கார் தொழிற்சாலைகள் முன் பல கட்சிக் கொடிகள்..பலவேறு கட்சி சார்பு தொழிலாளர்கள் யூனியன்கள் வந்ததைத் தெரிவிக்கின்றன..

அதோ..யாரோ ஒருவர் தனித்து இருக்கிறாரே! அவர் யார்..தெரிந்த முகமாய் இருக்கிறது...

அருகில் சென்று பார்த்தால்..அட.. நம்ம மூக்கன்..அவனையேக் கேட்போம்.

"மூக்கா! இன்று பூங்குளத்தில் என்ன விசேஷம்"

"மயில்வாகனன் கட்சி ஆஃபீஸ் திறக்கிறான்.தேரடியை ஒட்டி கட்சிக் கம்பம் நிறுவி கட்சிக் கொடியை பறக்க விடுகிறான்.குப்பால் அந்த வட்டத்துக்கு செயலாளர் பொறுப்பினை ஏற்கிறான்" என்றான் .

"தாமோதரன் எப்படியிருக்கிறான்.விடுதலை ஆகி வந்தாச்சா"

"தாமோதரன்..நான்..எல்லாம் அப்படியேத்தான் இருக்கிறோம் பட்டடைக்கல்லாக" என்றான் மூக்கன்.

பட்டடைக்கற்கள் அறிவதில்லை..தன்னை உபயோகப்படுத்தி..தன் இனத்தையே இஷ்டத்திற்கு வளைக்க காரணமாக தாங்களே இருப்பதை.

Wednesday, January 22, 2020

39 - ஆத்திகவாதியானான் ராமன்

மூக்கன் தேரடியில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தான்

"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமைக்
காட்டிடும் திருட்டு உலகமடா - தம்பி
உலகம் புரிந்து நடந்து கொள்ளடா"

காலத்தால் அழியாத பட்டுக்கோட்டையாரின் வரிகள்..

அப்போது மாடசாமியின் வண்டியில் வந்து இறங்கினான் ப்ருத்வி.

ப்ருத்வியைக் கண்டதும் ஓடி வந்து வரவேற்றான் மூக்கன்.

"ப்ருத்வி தம்பி..உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு? நல்லா இருக்கீங்களா?" என்றான்.

"நான் நல்லாயிருக்கேன்.நான் இங்கே வந்து நாலு வருஷம் ஓடி போச்சு.கிராமத்துல என்ன விசேஷம்?"

"விசேஷம் ஒன்னுமில்ல தம்பி.வர்ற வழியில பார்த்து இருப்பீங்களே! கெமிகல் ஃபேக்டரி வந்துடுச்சு.அதற்குப் பக்கத்திலேயே கார் கம்பெனி ஒன்னு வரப்போறதாகவும் சொல்றாங்க"

"உள்ளூர் ஜனங்களுக்கு வேலை கிடைக்குமே"

"எங்கே தம்பி..எல்லாம் வட நாட்டிலே இருந்து தொழிலாளிகள் வந்துட்டாங்க.நம்ம ரயில்வே ஸ்டேசன் மேக்கால இருந்த தென்னந்தோப்பு அழிஞ்சுப் போச்சு.அங்கே..தொழிற்சாலைல வேல பாக்கறவங்களுக்காக  காலனி தயாராகுது.பாத்து இருப்பீங்களே!'

இதற்குள் ப்ருத்வியைப் பார்த்த நாராயணன், மூக்கனுக்கும், ப்ருத்விக்கும் டீ கொணர்ந்தான்.

மூக்கனுக்கான டி வட்டிலை கீழே வைத்து விட்டு, தம்ளரை ப்ருத்வியிடம் கொடுத்தான்.

"இந்த இரட்டை தம்ளர் முறை இன்னமும் மாறலியா?" என்றான் ப்ருத்வி.அதற்கு நாராயணன் ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருக்க..மூக்கன் கோயிலுக்குப் போய் அர்ச்சகரை அழைத்து வந்தான்.

"வாடா..ப்ருத்வி..எப்படி இருக்கே?"

"நலலயிருக்கேன் சித்தப்பா" என்றவன், "ஊர்ல நிறைய மாற்றம் தெரியுது..பண்ணை எப்படியிருக்கார்? என்றான்.

'இயற்கை தொடர்ந்து ஏமாத்திக்கிட்டுத்தான் இருக்கு.இருந்தால் ஒரேயடியா வறட்சி..இல்லைன்னா ஒரே வெள்ளம்.வெள்ளம் வர்றப்ப அதைத் தேக்கி வைக்க தடுப்பணைகள் கட்டணும்னு அரசுக்கு ஏன் தோணலைன்னு தெரியல.எல்லாத்துலேயும் அரசியல்"

"அடடே! சித்தப்பா நீங்களும் ராமனைமாதிரியே பேசறீங்க"

"இப்ப //இங்கேயும் எல்லா செய்தித்தாள்களும் வருது தம்பி" என்றான் நாராயணன்.

"ஆமாம்..பண்ணையாரைப் பத்திக் கேட்டேன்..யாரும் சொல்லலியே"

"என்ன சொல்றது.கடும் வறட்சி.தொடர்ந்து விளைச்சல் இல்லை.வறுமை அவரையும் விட்டு வைக்கவில்லை.எத்தனை நாளைக்கு மத்தவங்க கைகளை எதிர்பார்க்கிறது.  அப்பதான்..இங்க கார் கம்பெனி வர ஏற்பாடுகள் ஆச்சு.அது..பண்ணையாரின் பெரும்பான்மையான நிலங்கள்லதான் வருது.அதனால்..அவருடைய நெலங்களை வேற வழியில்லாம அவங்களுக்கு விற்க அரசாங்கம் பிரஷர் கொடுக்க ஆரம்பிச்சாங்க.இவ்வளவு நாள் சாப்பாடு போட்ட நெலத்தை கொஞ்சம் கூட நன்றி இல்லாம வித்துட்டேனே..பெத்தத்தாயை வித்துட்ட மாதிரின்னு மனசு உடைஞ்சுப் போன பண்ணையார்..படுக்கையிலே விழுந்துட்டார்.அப்பறம் ஆறு மாசம் படுக்கை..ஒருநாள் உயிர் போயிருச்சு" என்றார் அர்ச்சகர்.

"ஆனா..பாரு தம்பி...அப்ப கூடபண்ணை வயல வித்து வந்த காசுல//தனக்கு உழைச்ச மூக்கன் குடும்பம் நல்லாயிருக்கணும்னு..நம்ம கிராமத்துல வந்திருக்கற கூட்டுறவு வங்கிலே மூக்கன் பெயர்ல கொஞ்சம் பணம் டெபாசிட் பண்ணியிருக்கார்.அதுல வர்ற வட்டியிலதான் மூக்கன் பொழப்பு ஓடுது" என்றான் நாராயணன்.

"இப்படி விளைநிலத்தையெல்லாம் அழிச்சுட்டு...தொழிற்சாலை வர ஆரம்பிச்சா..எதிர்காலத்தை நெனச்சு பயமா இருக்கு" என்றார் அர்ச்சகர்.

"நாடு கம்ப்யூட்டர் துறையில நல்ல முன்னேற்றம் அடைஞ்சிருக்குன்னு சொன்னாலும், கம்ப்யூட்டரா சோறு போடும்?"என்றான் ப்ருத்வி.

"ஆமாம் தம்பி, நாலு வருஷ்த்துக்கு முன்னால..நதிநீர் இணைப்புக்குஅரசாங்கம் ஒத்துக்கிட்டு இருக்குன்னு சொன்னியே! அது என்னவாச்சு?"

"தமிழ்நாட்டுல இப்படி ஒரு நெலமை நீடிச்சா, குடி தண்ணீர் கூட இல்லாமல் போயிடும்.அதனால, நதிநீர் இணைப்பு அவசியம்னு..நேத்துக் கூட பிரதமர் கொள்கை அளவுல ஒப்புதல் அளிச்சிருக்கார்"

"தம்பி, இதுதான் அன்னிக்கும் சொன்னே!" என்ற நாராயணன்,"என் கடையில இருக்கற இந்த போர்டைப்  பார்த்தியா தம்பி, "இன்று ரொக்கம் -நாளை கடன்" இந்த அறிவிப்பு என்ன சொல்லுதோ..அதற்கான அர்த்தம் என்னவோ..அதே அர்த்தம்தான் நதிநீர் இணப்புக்கும்" என்றான்.

இடையில் புகுந்த மூக்கன், "ஒன்னு மட்டும் நிச்சயம் நீங்க திரும்ப நாலு வருஷம் கழிச்சு வந்தா
இந்த ஊர் முற்றிலும் ஒரு தொழில் நகரமாகவோ..இல்லை பாலைவனமாகவோ மாறியிருக்கும்.அப்பகூட நீங்க..அன்னிக்கு பேப்பர்ல நதிநீர் இணைப்பு செய்தி வந்து இருக்குன்னு சொல்விங்க" என்றான்.

பேச்சை மாற்ற நினைத்த ப்ருத்வி, அர்ச்சகரைப் பார்த்து, "ஆமாம்..ராமன் எப்படியிருக்கார்.அவரைப் பத்தி சொல்லுங்க" என்றான்.

மூக்கன் சொன்னான், "அவரோட தொடுப்பு அவரை விட்டுட்டு வேற ஒருவனோட ஓடிப் போச்சு.அப்பறம் தான் ராமனுக்கு தன் பொண்டாட்டி அருமை தெரிஞ்சிருக்கு.ராமன் இப்ப எல்லாம் உழச்சு சம்பாதிக்கிறார்.அதோட மட்டுமல்ல..ஆத்திகவாதியாகவும் மாறிட்டார்.நம்ம ஊர் கோயில் அம்மனோட முதல் பக்தன் அவர்தான்..உங்க சித்தப்பாக் கூட இல்லை"

"நாத்திகவாதிகள் போய்க்கொண்டிருக்கும் பாதையின் முடிவு ஆத்திகம்தான்னு ராமன் விஷயத்திலேயும் நிரூபணம் ஆகிப்போச்சு" என்று ப்ருத்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே காவி உடை அணிந்த ராமன் அங்கு வந்தான்..ப்ருத்வியைப் பார்க்காமல் அர்ச்சகரிடம் வந்து,"நேத்து பழநி போயிட்டு வந்தேன்..இந்தாங்க பிரசாதம்" என்றபடியே ஒரு பஞ்சாமிருத டப்பாவைக் கொடுத்தான். 

ப்ருத்வி, "ராமன்" என்றழைத்த உடன்தான் ப்ருத்வியைப் பார்த்த் ராமன்.,"அடடே! ப்ருத்வி தம்பியா? பார்க்கவே இல்லை.எப்ப வந்தீங்க..எப்படி இருக்கீங்க?" என்றான்.

'நான் நல்லாயிருக்கேன்..ஆமாம்..நீங்க எப்ப இப்படி..?"

'உடம்புல திமிர் இருக்கிறவரைக்கும் நாத்திகம் பேசினேன்.இப்ப பக்குவம் வந்துடுச்சு.ஆத்திகம் பேச ஆரம்பிச்சுட்டேன்."என்ற ராமன், அர்ச்சகரிடம், "நம்ம ரெட்டியார் நிலங்களக்கூட கார் கம்பெனி வாங்கிடுச்சாம்.அங்கே கம்பெனி ஷோரும் வரப்போகுதாம்" என்றான்.

"இனிமே இந்த பூங்குளம் கிராமம் காணாமல் போயிடும்.நெல் விளைஞ்ச இடமெல்லாம்..கான்கிரீட் கட்டடங்கள் எழுந்துடும்.அதனால் நெலமை என்னவோ மாறப்போறதில்லை.வயல்லே பயிருக்கும் தண்ணீ இல்லன்னு அவதிப்பட்ட மக்கள் குடிக்கக்கூட தண்ணீ இல்லேன்னுஅவதிப் படப் போறோம்" என்றார் அர்ச்சகர்.

"அர்ச்சகரே! இன்னுமொரு விஷயம்..நாளைக்கு தாமோதரன் வழக்குலதீர்ப்பு சொல்றாங்களாம்" என்றான் ராமன்.

Tuesday, January 21, 2020

38 - தியாகி சிதம்பரத்தின் வாதம்

பூங்குளம் மட்டுமல்ல..அதைப்போன்ற டெல்டா கிராமங்கள் விவசாயிகளின் பல எதிர்பார்ப்புகளுடன்..சில ஆண்டுகள் கழிந்தன.

தாமோதரன் மீது மயில்வாகனனைத் தாக்கிய வழக்கும், கற்பகம் மீது திராவகம் ஊற்றப்பட்ட வழக்கும்..பல வாய்தாக்கள் வழங்கப்பட்டு இறுதி விசாரணைக்கு அன்று வந்தது.

தாமோதரனின் வக்கீலாக சிதம்பரம் வாதாடுவதாகச் சொன்னாலும், தாமோதரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் ஆன நாள் முதலாக ஒரு ஜூனியர் வக்கீலே ஆஜராகி வந்தார்,இறுதி விசாரணையில் வாதாட சிதம்பரமே வரப்போகிறார் என நீதிமன்றமே அவரை எதிர்ப்பார்த்திருந்தது.

இந்நிலையில் அன்றைய நீதிமன்றம் கூடியது.

டவாலி, "சைலன்ஸ்" குரல் கொடுக்க, நீதிபதி  இருக்கைக்கு வந்தார்.அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த..அனைவரையும் கை கூப்பி வணங்கிய நீதிபதி..ஒரு திருக்குளைச் சொல்லிவிட்டு அமர , அனைவரும் அமர்ந்தனர்.

நீதிமன்ற ஊழியர் வழக்கு எண்ணைச் சொல்ல தாமோதரன் குற்றவாளிக்கூண்டில் வந்து நின்றான்.

மயில்வாகனனைத் தாக்கினான் என்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் தாமோதரன் அவன் குற்றவாளிக் கூண்டில்..

கற்பகம் மீது திராவகம் கொட்டிய வழக்கில்குற்றம் சாட்டப்பட்ட மயில்வாகனன் குற்றவாளிக் கூண்டில் ஏறாது..அவனது வக்கீலின் அருகில் அமர்ந்திருந்தான்.

இதுவும் நடைமுறையில்  இன்று நடைபெற்று வருவதுதானே!

"தாமோதரன், வக்கீல் யார்?" என்றார் நீதிபதி.

சிதம்பரம் தள்ளாடியபடியே , "யெஸ் யுவர் ஹானர்' என எழுந்தார்.

அவரைப் பார்த்த நீதிபதி, "ஐயா..நீங்க தியாகி சிதம்பரனார் இல்லையா?" என்றார்.

"யெஸ்..யுவர் ஹானர்..நாட்டிற்காக, நாட்டின் சுதந்திரத்திற்காக நான் ஆற்றியது அணிலைவிட சிறிய பங்கு.அது ஒரு இந்தியன் என்ற முறையில் என் கடமை.கடமையை செய்துவிட்டு அதற்காக "தியாகி" எனும் பட்டத்தை பெற நான் விரும்பவில்லை"

"நீங்க நீதிமன்றம் வந்துள்ள நோக்கம்?"

'குற்றம் சாட்டப்பட்டுள்ள தாமோதரனுக்கான வழக்கில் இறுதி வாதத்தை செய்ய நான் ஆஜராகியுள்ளேன்"

"நீங்க பார் கவுன்சில் அங்கத்தினரா?"

"ஆமாம் ..நான் ஒரு பாரிஸ்டர்.பார் கவுன்சிலில் என் பதிவு எண்ணை அவ்வப்போது புதுப்பித்தும் வந்துள்ளேன்"

:குற்றவாளிக்காக வாதாட வக்காலத்து தாக்கல் செய்துள்ளீர்களா?"

"ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது யுவர் ஹானர்"

"தென் புரொசீட்"

"யுவர் ஹானர்..முதலில் வழக்கிற்கு சம்பந்தமில்லாத சில விஷயங்களைக் கூற உங்கள் அனுமதியை வேண்டுகின்றேன்"

"உங்கள் கருத்துகளைக் கேட்க நானும் ஆவலாக இருக்கிறேன்.நீங்க சொல்ல வேண்டியதைச் சொல்லலாம்"

"நன்றி யுவர் ஹானர்"

சிதம்பரம் பேச அரம்பித்தார்..

அரசியல்வாதின்னா ஊழல் பண்ணத்தான் செய்வான் என சமூக சீரழிகளை சும்மா  Just like that ..சூரியன் கிழக்கேதான் உதிக்கும்னு சொல்றாப்போல சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டோம்.

காந்தி தவறு செய்துட்டார்..சமஸ்கிருதம் ஒழிக..இப்படியெல்லாம் பிதற்றிக் கொண்டு இராமல், ஆக்கப்பூர்வமாக என் தேசத்தை நான்  நேசிக்கிறேன்.இந்த நாடு எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது.பதிலுக்கு நாம் என்ன செய்துள்ளோம் என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

If you salute your duty
you need not salute anybody
If you pollute your duty
you have to salute everybody

ன்னு அப்துல் கலாம் சொன்னாரே.....அதன் பொருள் என்ன..

ஒவ்வொருவரும் செய்யும் தொழிலை நேசியுங்கள் என்பதுதானே!

இந்த வழக்கைப் பொறுத்தவரை...

இன்று தினசரியைக் கையில் எடுத்தால் தினம் தினம் கற்பழிப்புகள்,கொலை,கொள்ளை,ஊழல் இது போன்ற செய்திகள்தான்.

என்று ஒரு பெண்..கழுத்து முழுதும் நகைகள் அணிந்து...தனியாக இரவில் பயமில்லாமல் நடக்கிறாளோ, அன்றுதான் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது எனலாம்..என்றார் தேசப்பிதா..ஆனால் அது இன்றுவரை நடக்கவில்லை.

ஒரு பெண்....இல்லை..இல்லை..பெண் குழந்தைகள் கூட இன்று பாதுகாப்பாக இல்லை.

காமவெறியர்கள்...

இவர்களுக்குக் குழந்தைகள், வயதானவர்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை.இன்று நாட்டில் ஐந்து வயது குழந்தையும் பாலியல் வன்முறைக்கு பலியாகிறது.எண்பது மூதாட்டியும் பலியாகிறாள்.

மக்கள் எனும் பயிர்களை காக்க வேண்டிய..இரும்பு வேலிகளாகத் திகழ வேண்டிய மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் கூட பெண்கள் விஷயத்தில் நூல்வேலியாய் வலுவிழந்துவிடுகிறார்கள்.

இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால்..நம்நாட்டு சட்டதிட்டங்களையும் மாற்றியமைக்க வேண்டும்.அதற்கான நேரம் வந்துவிட்டது.

தவறு செய்பவன் யாராயிருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும்  சாமான்யனுக்கு என்ன தன்டனையோ..அதே தண்டனைதான் பணம் படைத்தவனுக்கும் என்ற நிலை வர வேண்டும்.

பாலியல் பலாத்காரம், ஈவ் டீசிங், வன்கொடுமை, ஆசிட் வீச்சு,கொலை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருகிறது.சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்.

ஆணுக்கு நிகர் பெண்கள் என படிப்பதும்,சம்பாதிப்பதும்,பெண்கள் சமுதாயத்திற்கே மரியாதையைப் பெற்று தருகிறது என்பது மறக்கமுடியாத உண்மை.

ஆனால், அதே சமயம்..ஒரு ஆபத்தைத் தவிர்க்கவோ..எதிர்கொள்ளவோ தேவையான பலத்தை அது கொடுக்குமா?

உடல்ரீதியாக பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை பெண்கள் சமுதாயம் ஒப்புக் கொள்வதில் எந்த அவமானமும் இல்லை.

நிலவுக்கு சமஒளி இல்லை என்றால் அது நிலவைக் கேவலப்படுத்துவது ஆகாது.

இன்று சமத்துவம் என்ற சொல் பெண்கள் சமுதாயத்தை ஆட்டிப் படைக்கிறது.

இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது..இருக்கவும் கூடாது.

பெண்களுக்கு இழைக்கப்படும் எந்த கொடுமைக்கும்..குறிப்பாக பாலியல் கொடுமைக்கு சம்பந்தப்பட்ட காமுகனுக்கு உடனடியாக தண்டனை  வழங்கப்பட வேண்டும்.அதற்கான சட்டதிட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும்.

நமது சட்டத்துறை, குடியரசுத் தலைவர்,பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஒருமித்து பெண் கொடுமைக்கு சரியான தண்டனை வழங்குவதற்கேற்ப சட்ட திட்டங்களை மாற்ற வேண்டும்.

இப்போது..இந்த வழக்கினைப் பொறுத்தவரை..

கற்பகம்...

மருத்துவம் படிக்கும் மாணவி...படிப்பை முடித்ததும்..ஏழைகளுக்கு இலவசமாக சேவை புரிவேன் என்று சொன்னவள்.ஒரு விவசாயியின் மகள்.அழகாக இருந்தாள் என்ற ஒரே காரணத்திற்காகவும், தனக்கு இணங்கவில்லை என்பதற்காகவும் காமக்கொடூரன் மயில்வாகனால்..கதறக்..கதற...(சிறிது நேரம் மௌனம்)

அதுமட்டுமின்றி..அவள் அழகையும்..சிதைக்க ஆசிடைக் கொட்டி...(மௌனம்)

கற்பகம் இன்று உயிருடன் இல்லை.

தன் மகள் இறந்து விட்டால் என்ற காரணத்தாலும், மயில்வாகனனால்தான் இறந்தாள் என்பதாலும் உணர்ச்சிவசப்பட்டு மயில்வாகனனைக் காணப்போயிருக்கிறார் என் கட்சிக்காரர் தாமோதரன்.

அப்போது இரு தரப்பிலும் தகராறு ஏற்பட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

தாமோதரன் மட்டுமின்றி, மயில்வாகனனும் தாமோதரனைத் தாக்கியுள்ளார்.உணர்ச்சிவசப்பட்டு நடந்த தாக்குதல் என்பதை மனதில் கொண்டு இவ்வழக்கிலிருந்து தாமோதரனை விடுவிக்க வேண்டுகின்றேன்.

யுவர் ஹானர், மலர்ந்து மணம் வீச வேண்டிய கற்பகம் என்ற சின்னச் செடியின் வேரில் திராவகத்தை ஊற்றிஅழித்துவிட்ட மயில்வாகனனுக்கு உரிய தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தட் இஸ் ஆல் யுவர் ஹானர்.

சிதம்பரத்தின் வாதம் முடிந்ததும்..மயில்வாகனனின் வழக்கறிஞர் மயில்வாகனன் நிரபராதி எனவும், அவன் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்றும் கூறியதுடன் ..அப்படியே அவர் செய்திருந்தார் என்று சொன்னால்..அதற்கான ஒரு சாட்சிகூடவா இல்லை என்பதைக் கூறி மயில்வாகனன் நிரபராதி என விடுவிக்க வேண்டுகின்றேன் என்றார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி..தீர்ப்பை ஒத்தி வைத்தார்.  

37 - நதிநீர் இணைப்பு

காலச்சக்கரம் சுழன்றது..

ஒருநாள் காலை  பூங்குளம் வந்தான் ப்ருத்வி.

ரயில் நிலையத்தில் அவனை நிலைய அதிகாரியும், போர்ட்டர் சங்கரனும் வரவேற்றனர். வெளியே வந்தவன் மாடசாமி வண்டி நிற்பதைப் பார்த்தான்.

அதில் ஏறி கிராமத்துக்கு வரும் வழியில் . குப்பால் கடை மீண்டும் வளர்ந்து பல புதிய இரு சக்கர வாகனங்கள் வெளியே நின்றிருந்ததைப் பார்த்தான்.குப்பாலின், திடீர் வளர்ச்சிக்கான காரணம் அவனுக்குப் புரிந்து.விட்டது.

தாமோதரன் வயல்கள் இருந்த இடம், மற்றும் சிலர் வயல்கள் அனைத்திலும் முள்வேலி அமைகக்ப்பட்டு இருந்தது.கெமிகல் ஃபேக்டரி பெயர் தாங்கிய பலகை ஒன்றும் காணப்பட்டது.வயல்கள் முழுதும் மயில்வாகனன் ஆக்கிரமித்திருப்பான் என ப்ருத்வி யூகித்தான்.

அதற்குள் தேரடி வர..அங்கேயே இறங்கிக் கொண்டான்.மாடசாமி வண்டியை நிறுத்தி, அவனை இறக்கி விட்டுவிட்டு..மாட்டை வண்டியிலிருந்து அவிழ்த்து , வண்டியிலேயே கட்டிவிட்டு, அதன் முன் சிறிது வைக்கோலைப் போட்டான்.பின், பிருத்வியுடன், நாராயணன் டீக்கடைக்குச் சென்றான்.

டீக்கடையின் முன் மூக்கன், ராமன் அமர்ந்திருந்தனர்.

ப்ருத்வியின் திடீர் வருகை அவர்களுக்கு சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்த, "வாங்க தம்பி" என மூக்கன் வரவேற்றான்.

பிருத்வி, அவர்களைப் பார்த்து, குடுகுடுப்பைக்காரர் போல,"நல்ல காலம் பொறக்குது..நல்ல காலம் பொறக்குது" என்றான்.

"என்ன விஷயம் தம்பி" என்றான் ராமன்.

"கிராம அதிகாரியின் உண்மையான அறிக்கையும், அவர் மரணச் செய்தி பற்றியும் அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வந்துவிட்டது.இப்போது உங்க பூங்குளம் பெயரே தமிழ்நாடு முழுதும் பிரபலமாகி விட்டது.உடனே,நிவாரணப்பணிகளில் ஈடுபடச் சொல்லி அரசாங்கம் ஆணை பிறப்பித்து இருக்கிறது" என்றான்.

"உடனடியா நமக்கு எதுவும் அதனால பிரயோசனம் இருக்கா?" என்றான் மூக்கன்.

"மின்சாரக் கட்டணம்,வரி இவற்றிலிருந்து விவசாயிகளுக்கு விலக்குக் கிடைக்கும்.விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடியாகும்.இன்னுமொரு முக்கிய விஷயம், எல்லா பத்திரிகைகளும் வாசகர்களிடமிருந்து நிதி திரட்டுகிறார்கள்.இந்த கிராமத்தால..இதுபோல பிரச்னை உள்ள எல்லா கிராமங்களுக்கும் பலன் கிடைக்கப் போகுது,நம்ம ஊர் ஜனங்களுக்கு ஆறுமாசம் இலவசமா உணவுப் பொருள்களை வழங்க ஏற்பாடாகியுள்ளது" என்றான் ப்ருத்வி.

"நாட்டில் எவ்வளவு அட்டூழியம்,அநீதி நடந்தாலும் நல்லது பண்றவங்களும் இருக்காங்கன்னு சொல்லு"

"ஆமாம் ராமன். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.ஆனா..இன்னிக்கு நல்லத்தலைவருங்க யாருன்னு தேட வேண்டியிருக்கு,எல்லாமே சுயநலத் தலைவரா ஆயிட்டதாலேதான் மழைகூட சரியான பருவத்துல பெய்யறதில்லை'

இப்போது ப்ருத்வியிடம் மூக்கன், "தம்பி,ஒரு வேடிக்கைப் பாத்தியா..இந்த ஊர் விவசாயிகள் கைகள் பல பேருக்கு உணவை விளைய வைச்சுக் கொடுத்து இருக்கு.ஆனா, இன்னிக்கு அதே விவசாயியோட கைகள் உணவை யாசகம் பெறப்போகுது.ஆனா, விவசாயிங்க தன்மானம் மிக்கவங்க.எந்த ஒரு பொருளையும் இலவசமா வாங்க ஆசைப்படமாட்டாங்க"  என்றான். 

"நீங்க அப்படி நினைக்கக் கூடாது.இவ்வளவு வருஷமா நீங்க மக்கள் வயிற்றை நிரப்பி இருக்கீங்க..அந்த மக்களுக்கு உங்க வயிற்றை நிரப்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.மக்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்க இது ஒரு சந்தர்ப்பம் அவ்வளவுதான்" என்ற ப்ருத்வி, இவ்வளவு நேரம் நடந்ததையெல்லாம் மௌனமாகவேப் பார்த்துக் கொண்டிருந்த நாராயணனை நோக்கி"நீங்க எதுவும் பேசாம இருக்கீங்க?" என்றான்.

"நான் சொல்ல என்ன இருக்கு..இந்த கிராமத்து ஜனங்களுக்கே சாப்பாடே இல்லைங்கற நிலைமை.என் கடையிலும் டீ சாப்பிடற கும்பல் குறைஞ்சுப் போச்சு.கடையை மூடிட்டு வேற எங்கேயாவதுப் போய் புழப்பைத் தேட வேண்டியதுதான்"

"நாராயணன் கவலைப்படாதீங்க..இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்"

இதனிடையே, நாராயணன் போட்ட டீயைக் கொணர மூவரும் அருந்தினர்.ராமன் செய்தித்தாளைப் படிக்க ஆரம்பித்தான்.

கோயிலுக்கு வந்த பண்ணையார்..டீக்கடையில் ப்ருத்வியைப் பார்த்து குசலம் விசாரித்தார்.

இதற்கிடையே அர்ச்சகரும் அங்கு வந்தார்.


"அடடே! வாடா ப்ருத்வி எப்ப வந்தே! வந்ததும் சித்தப்பா நான் கூட முக்கியமில்ல..டீக்கடை நண்பர்கள்தான் உனக்கு முக்கியமாய்ப் போய்விட்டது இல்லையா?" என்றார் சற்றே ஆதங்கத்துடன்.

ப்ருத்வியும், அதற்கான பதிலைச் சொல்லாமல்..அசட்டு புன்னகை புரிந்தான்.

இப்போது ராமன்.."தம்பி...இந்தச் செய்தியைப் பாரு" என செய்தித்தாளை ப்ருத்வியிடம் நீட்டினான்.

"அப்படி என்ன செய்தி" என்றார் அர்ச்சகர்.

"நானே படிக்கிறேன் ..கேளுங்க" என ராமன் படிக்க ஆரம்பித்தான்.

"தமிழ்நாட்டு அவல நிலைமையை மத்திய அரசு மனதில் கொண்டு..தேவையான நிவாரணப்பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.மத்திய நிதி அமைச்சரும்..நிதி ஒரு பிரச்னையாய் இருக்காது என சொல்லியுள்ளார்.மேலும், பிரதமர்..நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்"

இச்செய்தியைக் கேட்டதும் அர்ச்சகர்,'நதிநீர் இணைப்புக்கு சம்பந்தப்பட்ட மாநிலம் ஒத்துக்கணுமே" என்றார்.

"நதிநீர் இணைப்பால் அந்தந்த மாநிலத்திற்கு இழப்பு இல்லைங்கறதைப் புரிய வைக்கணும்" என்றான் ராமன்.

"அப்புறம் என்ன ஆகும்" - மூக்கன்

"அப்புறம் என்ன..பீகாரில் வறட்சி..உத்தரபிரதேசத்தில் வெள்ளம்..போன்ற அரசியல் செய்திப்படங்கள் வராது" என்றான் ராமன்.

"கேட்கவே மனசுக்கு சந்தோஷமா இருக்கு.அதேநேரம் இனம் புரியாத கவலையும் இருக்கு.எல்லாம் நல்லபடியா நடந்துட்டா..இனிமே நிலங்களை தரிசா போட வேண்டாம்.நிலத்தைத் தரிசா போடறது நல்லதில்லை.பூமாதேவி, அள்ளி அள்ளிக் கொடுக்கறவ.அவள நாம காயப்போடறது பாவம்.பெத்தத் தாயை எப்படி பட்டினி போடமாட்டோமோ..அதுபோல நிலத்துக்கு விதை இல்லாம பட்டினி போடக்கூடாது.விதை விதைச்சு..தண்ணீ பாய்ச்சி,களை பிடுங்கி,உரம் போட்டு..ஆள் உயரத்துக்கு நெற்பயிர் வளர்ந்ததும் அதைத் தடவிப் பார்க்கற சுகம் இருக்கே..அந்த சுகம் வேற எதிலேயும் இல்ல" என்றார் பண்ணையார்.

"ஆனா..பாவம், அந்த தாமோதரன், செங்கோடன்,ஆனந்தன் நெலங்களை ,மயில்வாகனன் அபகரிச்சு,அவங்களை ஒன்னுமில்லாதவங்களா ஆக்கிட்டான்" என அர்ச்சகர் வருத்தப்பட்டார்.

அவரைத் தேற்றிய பண்ணை, ப்ருத்வியைப் பார்த்து "தம்பி உன்னோட பங்கு இதுல ரொம்ப அதிகம்..நன்றி தம்பி" என்றார்.

ராமனும், "பேனா முனை..கூர்மை, வாள்முனை கூர்மையை விட அதிகம்னு தெரியாமலா சொன்னாங்க" என்றான்.

"முக்கியமா இந்த செய்திகளை சொல்லி விட்டுப் போகத்தான்  வந்தேன்.நாளைக்கேக் கிளம்பிடுவேன்.அடுத்தமுறை நான் வர்றப்ப ஊர் வளமா இருக்கப் போகுது.நதிநீர் இணைப்புத் திட்டமும் நிறைவேறி, வேலையும் முடிஞ்சுதுனா..எல்லா கிராமங்களிலும் என்னிக்கும் வறுமையே இருக்காது" என்றான் ப்ருத்வி.

"தம்பி..உனக்கு நான் ஏதாவது செஞ்சாகணுமே! உனக்கு என்ன வேணும்னு சொல்லு தம்பி" என்றார் பண்ணை.

"இப்ப ஒன்னும் வேண்டாம்.அடுத்தமுறை நான் வர்றப்ப..உங்க நிலத்துல அறுவடை ஆன அரிசிலே எனக்கு விருந்து வைங்க போதும்"

"விருந்து என்ன தம்பி  விருந்து.நீ எங்களுக்கெல்லாம் செஞ்ச நல்ல காரியத்துக்கு என் உயிரையேத் தரேன்" என்றார் பண்ணையார்.

பின் ,அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆனாலும், அன்று இரவும் வழக்கம்போல பண்ணையாரின் கனவில் பேய் எலும்புக்கூடு அவரை சாகடிக்கத்தான் பார்த்தது. 

Monday, January 20, 2020

36 - பிரேத பரிசோதனை

பிரேத பரிசோதனைகள் முடிந்து கற்பகம், கிராம அதிகாரியின் உடல்கள், அவரவர் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன.கிராம அதிகாரி குடும்பத்துடன் டஹ்ற்கொலை செய்து கொண்டதால், உடல்களை அவரின் உறவினர் ஒருவர் பெற்றுக் கொண்டார்.

கற்பகத்தின் உடலை தாமோதரனும், வாஞ்சியும் பூங்குளம் எடுத்து வந்தனர்.

கிராம அதிகாரி,மற்றும் அவர் குடும்பத்தினர் உடல்களை அவரது உறவினர்கள் மூலம் பூங்குளம்  கொண்டு வந்தார் பண்ணையார்.

தாமோதரன் அழுதபடியே இருந்தான்.நடந்தவை அனைத்திற்கும் காரணம், தன் மூடத்தனமே என்றான்.முதன்முதல் மயில்வாகனனின் கட்சிக் கொடிக்கம்பத்தைத் தான் பூங்குளத்தில் நிறுவியது முதல் ஏழரைப் பிடித்தது எனக் கதறினான்

ஈமக்கிரியைகளை, மூக்கன்,மாடசாமியின் உதவியோடு நடத்தி முடித்தான்.மயானத்துக்குப் பிரேதம் எடுத்து சென்றபோது, அவளுடன் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் படித்த மாணவர்கள் அனைவரும் வந்திருந்தனர்.

எல்லாம் முடிந்து சில நாட்கள் கழித்து வாஞ்சி, தாமோதரனை தன் தாத்தா சிதம்பரத்திடம ழைத்துச் சென்றான்.

அவனை வரவேற்ற சிதம்பரம் ஆறுதல் கூறினார்..

கற்பகத்தின் பிரேத பரிசோதனை அறிக்கையைப் பார்த்தார்.

அதில், சமையல் செய்யும் போது தீ கற்பகத்தில் ஆடையில் பற்றி எண்பது சதவிகிதம் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு எடுத்து வந்ததாகவும், மருத்துவர்கள் எவ்வளவோ போராடியும் காப்பாற்ற முடியவில்லை என்றும் இருந்தது.

அப்படிப்பட்ட ஒரு அறிக்கையை வெளியிட பணமும், அரசியல் அதிகாரமும் வியையாடி இருக்கக் கூடும் என்றார் சிதம்பரம்.

மேலும் சிதம்பரம் வேதனையுடன், "பணம் இருந்தால் இன்னிக்கு எந்தத் தப்பும் செய்துட்டு சட்டத்துப் பிடியில் இருந்து த்ப்பி விடலாம்" என்றார்.

கற்பகத்தின் சாவு ஒரு திட்டமிட்டக் கொலையென்றும்..மயில்வாகனன் மேல் வழக்குத் தொடரலாம் என்றும்..தாமோதரன் ,மயில்வாகனனைத் தாக்கினான் என்ற வழக்குடன் சேர்த்து இவ்வழக்கினையும் விசாரிக்கக் கோரி மனு தாக்கலாம் என்றும் கூறினார்.

தாமோதரன் சார்பில், நீதிமன்றத்தில் தானே ஆஜராகி வாதாடுவதாகவும் தெரிவித்தார்.

:ஐயா..ரொம்ப நன்றிங்க,சட்டம் அந்த மயில்வாகனனை தண்டிக்கணும்.அப்போதான், செங்கமலம், கற்பகம் ஆன்மாக்கள் சாந்தியடையும் என்றான் தாமோதரன்.  

35 - அவள்..அதுவானாள்

பூங்குளமே..வெறிச்சோடிக் காணப்பட்டது.

குப்பால் சைக்கிள் கடை சூறையாடப்பட்டு அங்கிருந்த சைக்கிள்கள் சில உடைந்தும்..பல காணாமலும் போயிருந்தன.பலர் கிடைத்த வாகனங்களில் தஞ்சாவூர் விரைந்தனர்.

பண்ணையாரும், அர்ச்சகரும் மாடசாமியின் மாட்டு வண்டியில் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.அங்கு நின்று கொண்டிருந்த குட்ஸ் வண்டியில், ஸ்டேஷன் மாஸ்டர் சொல்ல குட்ஸ் வண்டி கார்ட் தன் பெட்டியில் அவர்களை ஏற்றிக் கொண்டு, தஞ்சையில் இறக்க ஒப்புக் கொண்டார்.

அதற்கு முன்னரே....பக்கத்து கிராம மருத்துவமனையில் இருந்து வந்திருந்த ஆம்புலன்ஸில் கற்பகமும்.தாமோதரனும், மூக்கனும் தஞ்சைமருத்துவமனைக்கு கற்பகத்தை எடுத்துச் சென்றிருந்தனர்.

மருத்துவமனையில்..

கற்பகத்தின் முகத்தில் மட்டுமல்லாமல்..உடலில் பல இடங்களில் ஆசிட் வீசியிருந்ததால்..அவளை தனியாக ஒரு பிரிவில் வைத்திருந்தனர்.பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.

அதே ..மருத்துவமனையில் விஷம் அருந்தியிருந்த கிராமத்து
 அதிகாரியும் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பூங்குளம் கிராமமே அங்கு இருந்தது எனலாம்/

விஷயம் அறிந்து வாஞ்சியும் மருத்துவமனைக்கு வந்திருந்தான்.

வந்தவன்..அங்கு சோகமாய் அமர்ந்திருந்த தாமோதரனைப் பார்த்து, "கற்பகம் எப்படியிருக்கா?"என்றான்.

அவனுக்கு பதில் சொல்ல நினைத்த தாமோதரன், "தம்பி" என்றான்.அதற்குப் பிறகு வாய் வார்த்தைகள் வராது..நாத்தழுதழுக்க அழ ஆரம்பித்தான்.

"அழாதீங்க! கற்பகத்துக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி அழுதால் எப்படி?" என்றான் வாஞ்சி.

கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு, மனதை சற்று திடப்படுத்திக் கொண்டவனாக தாமோதரன், "வலி தாங்காமல் அலறிக்கிட்டேதான் இருக்கா..இப்பதான் கொஞ்சம் கண் அசந்ததா" டாக்டருங்க சொன்னாங்க.நானும் வெளியே இருந்து இந்த கண்றாவிக் காட்சியைப் பார்த்தேன்" என்றான்.

"வருத்தப்படாதீங்க"

"வருத்தப்படாம எப்படி தம்பி இருக்கமுடியும்?அவ..எப்பவுமே மனசு முழுக்க சந்தோஷத்தோட இருக்கறவ.எதிர்காலம் குறிச்சு நெறய கனவுகளோட வாழ்ந்துக்கிட்டு இருந்தா...தம்பி..அந்த மயில்வாகனனுக்கு ஒன்னுன்னா என் உயிரையேக் கொடுக்கத் தயார்னு சொல்லியிருந்தேன்..ஆன..அந்த கேடு கெட்டவன் என் உயிரான என் பொண்ணை இப்படி சிதைச்சுட்டானே! நான் தவமிருந்து பெத்தப் பொண்ணு தம்பி இது..எங்கக் குடும்பத்திலேயே...ஏன்..எங்க கிராமத்திலேயே முதன் முதலா காலேசுக்குப் போன பொண்ணு..அவளை..அவளை..எனக்குக் கிடைச்ச புதையலா பர்த்துக் கிட்டு இருந்தேன்.."

"கற்பகத்தை நான் இப்ப பார்க்க முடியுமா?"

"யாரும் பார்க்கக் கூடாதாம்.நோய்க்கிருமிகள் தொத்திக்குமாம்...ஆனா..நீங்க டக்டரைப் பார்த்து கேளுங்க..நீங்களும் டாக்டருக்குத்தானே படிக்கிறீங்க..அதனால பார்க்க அனுமதிப்பாங்க"

வாஞ்சி, மருத்துவரைப் பார்த்து, அனுமதி பெற்று..முகவுறை அணிந்துக் கொண்டு..தாமோதரனுடன் கற்பகத்தைப் பார்த்தான்.

கற்பகம் வலி தாளாது, "அப்பா..அப்பா.." என முணகிக் கொண்டிருந்தாள்.

தாமோதரன், "அம்மா..!அப்பா..நான் பக்கத்துல இருக்கேன்.சீக்கிரம் உனக்குக் குணமாயிடும்னு டாக்டர் சொன்னார்.இதோபார், வாஞ்சித்தம்பிக் கூட உன்னைப் பாக்க வந்திருக்கு"

"நான் பாக்கறதா.." அந்த வேதனையிலும் சிரிக்க முயன்ற கற்பகம், "அப்பா..என்னால எப்படிப்பா பார்க்க முடியும்?" என்றபடியே.."வாஞ்சி ..வாஞ்சி' என்றழைத்து அவனது கைகளைப் பற்றினாள்.

"வலி அதிகமா இருக்காடா..கொஞ்சம் பொறுத்துக்க ..எல்லாம் சரியாயிடும்"

"என்ன..வாஞ்சி..நீயும் என் அப்பா மாதிரியே பேசற..நான் பொழைக்கறதே கஷ்டம்.அப்படியேப் பொழச்சாலும் எனக்குப் பார்வைக் கிடைக்க வழியே இல்லை.ஆசிட் இஞ்சுரீஸ்ங்கறது அவ்வளவு சாதாரணமானதில்லை.இது, "செப்டிகீமியா" ரத்தம் கொஞ்சம்..கொஞ்சமா..விஷமாயிட்டே வரும்.என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தாலும் பிரயோசனமில்ல..எனக்குத் தெரியும்"

இதைக்கேட்டு அழ ஆரம்பித்த தாமோதரன்.."இப்படித்தான் தம்பி அனத்திக்கிட்டே இருக்கா.திடீர்னு வலி தாங்காம..கதறிக் கதறி அழறா.நான் பொழச்சாலும் பிரயோசனமில்லன்னு சொல்றா.........................திடீர்னு "அப்பா..என்னை எப்படியாவது காப்பாத்துங்க..நான்  மயில்வாகனனைப் பழி வாங்கணும்னு சொல்றா.இடுப்பு, கைகள்,தோள்படடி என எங்கும் சதை இல்லாம தவிக்கிறா..ஒரு பாட்டில் ஆசிட்..பச்சைப்புள்ள..தாங்குமா? தம்பி" என்றான்

"வாஞ்சி.." என்றாள் கற்பகம்.

"என்னம்மா?"

"வாஞ்சி நான் பொழைக்க மாட்டேன்.எனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா..என் அப்பா பாவம்..ஒரு அப்பாவி அவருக்கு எந்த ஆபத்தும் வராம..நீதான் பாத்துக்கணும்..பாத்துப்பியா வாஞ்சி"

"உங்கப்பாவுக்கு நானும் ஒரு மகந்தான்ம்மா" என்றான் வாஞ்சி.

அடுத்த சில மணித்துளிகளில் கற்பகம் , அதுவானாள்.

அதே நேரம் அடுத்தப் பிரிவில் இருந்த கிராம அதிகாரியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஒரு அரசியல்வாதியின் வருகை..ஒரு அழகிய கிராமத்தையேப் புரட்டிப் போட்டு அவல நிலைக்கு கொண்டுவந்துவிட்டதே! என பண்ணையாரும், அர்ச்சகரும் புலம்பினர். 

Sunday, January 19, 2020

34 - சிதைக்கப்பட்ட கற்பகம்

மயில்வாகனனுக்கு அன்று காலை எழுந்தது முதலே கற்பகத்தின் ஞாபகமாகவே இருந்தது.இவ்வளவு நாளாக அவன் ஆசைப்பட்ட எந்தப் பெண்ணையும் விட்டு வைத்ததில்லை.

உடனே பூங்குளம் சென்று, கற்பகத்தைப் பார்த்து...தாமோதரன் மீது தான் போட்ட வழக்கை வாபஸ் வாங்குவதாகக் கூறி தன் ஆசையைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்ற முடிவுக்கு வந்தான் மயில்வாகனன்.

உடன் பூங்குளம் செல்ல தனது காரை தயார் செய்யச் சொன்னான்.

இந்நிலையில், தாமோதரனின் பூங்குளம் நிலத்தில் ..கூலி வேலை செய்யும் ஆட்களை ,அதிகாரி போல இருந்தவன், வேலி அமைக்கும் வேலை வாங்கி வந்தான்.

காலையில் வெளிக்கு வந்த மூக்கன் ,அதைப்பார்த்து கற்பகத்தைப் பார்க்க ஓடோடி வந்தான்.

எரிந்த  சாம்பலான இடத்திலேயே ஒரு குடிசை வீடு கட்டி இருந்தான் தாமோதரன்.அன்று புதன் கிழமை என்பதால் பக்கத்து கிராமத்து காவல் நிலையத்தில் கையெழுத்திட தாமோதரன் சென்றிருந்தான்.

கற்பகம் வீட்டின் ஒரு மூலையில் முடங்கி இருந்தாள்.
"கற்பகம்..கற்பகம்.." எனக் கூவியபடியே வந்த மூக்கனைப் பார்த்ததும், "என்ன் பெரியப்பா? என்ன விஷயம்..ஏன் பதட்டமாய்ருக்கீங்க?" என்றாள்.

"அம்மா...நம்ம நிலத்திலே ஏதோ கெமிகல் ஃபேக்டரின்னு போர்டு போட்டு..ஆட்கள் வேலி போட்டுக்கிட்டு இருக்காங்க" என்றான் மூக்கன்.

"அப்படியா? நாமதான் நம்ம நிலத்தை விற்கமுடியாதுன்னு சொல்லிட்டோமே"

"சொல்லிட்டோம்..ஆனா..இப்ப அபகரிச்சுட்டாங்க.நம்ம நிலத்தை மட்டுமில்லம்மா.சுத்தியிருக்கிற செங்கோடன் நிலம்,ஆனந்தன் நிலம்னு எல்லாமே போச்சும்மா"

"பெரியப்பா..என் கூட கொஞ்சம் தஞ்சாவூர் வரைக்கும் வர முடியுமா?நம்ம வாஞ்சியைப் பார்த்து இதுக்கு உடனடியா தடை உத்தரவு வாங்கணும்"

அவள் இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே..மயில்வாகனன் வீட்டிற்குள் நுழைந்தான்."பேஷ்..தடை உத்தரவு வாங்கப் போறியா?வாங்கு..வாங்கு..உடனே வாங்கு...கற்பகம்...இப்படியெல்லாம் நடக்கும்னு தெரிஞ்சுதான்..வெத்து ஸ்டாம்ப் பேப்பர்ல உங்கப்பன் கிட்ட சில கையெழுத்துகளை வாங்கி வைச்சேன்.இப்ப, அதுல உங்கப்பா என்னோட உதவியாளருக்கு நிலத்தை விற்க பவர் ஆஃப் அட்டார்னி கொடுத்ததா செட்டப் பண்ணிட்டேன்.இப்ப என்ன பண்ணுவ?..
இதோ பாரு கற்பகம், இப்பவும் ஒன்னும் கெட்டுப் போயிடலை..நான் முன்ன ஒரு விஷயம் சொன்னேனே..ஞாபகமிருக்கா..ஒரு தடவை...ஒரே தடவைன்னு..அதுக்கு "சரி"ன்னு சொல்லிடு..எனக்கு கோஆபரேட் பண்ணு..அதே அளவு நிலத்தை வேற எடத்துல வாங்கிக் கொடுத்துடறேன்.உங்கப்பாவையும் வழக்கிலிருந்து விடுவிச்சுடறேன்,,என்ன சொல்ற.."

"மிஸ்டர்...மிஸ்டர் என்ன மிஸ்டர் உனக்கு..டேய்..மயில்வாகனா..பேசி முடிச்சுட்டியா?உன் கிட்ட இருந்து எங்க நெலத்தை எப்படி மீட்கறதுன்னு எங்களுக்குத் தெரியும்.இப்போ நீ வெளியே போகலாம்"

மயில்வாகனன்  கோபமாக "கற்பகம்" என கத்தினான்.

"கெட் அவுட்" - கற்பகம்

சற்றே கோபத்தை அடக்கிய மயில், "கற்பகம் நான் என்ன சொல்ல வரேன்னா" என்றான்.

"ச்சீ வெளியே போடா.." என்றவள் , மூக்கனைப் பார்த்து, "பெரியப்பா..நீங்க உடனே எங்கப்பாவை இங்க வரச் சொல்லுங்க" என்றாள்.

"இந்த நேரத்துல என்னைப் போகச் சொல்றியே அம்மா" என்ற மூக்கன், தயங்கி நிற்க..

"மூக்கா..பாப்பா சொல்லுது இல்ல..போ..போய் அவ அப்பன் கிட்ட குழந்தை கூப்புடுதுன்னு சொல்லி கூட்டிக்கிட்டு வா" என்றான் மயில்வாகனன்.

"மூக்கனிடம், கற்பகம், "பெரியப்பா...என்னைப் பத்திக் கவலைப்படாதீங்க.தன்னம்பிக்கை,தெளிவு, துணிச்சல் இந்த மூணும் ஒருத்தரைக் காப்பாத்தி வழி நடத்தும்னு சொல்லுவாங்க.என் கிட்ட இந்த மூணும் இருக்கு.என்னை, இவனால ஒன்னும் செய்ய முடியாது"

மூக்கன் தயங்கியபடியே வெளியே செல்ல...

மயில்வாகனன், கற்பகத்திடம் "நீ சொன்னியே..அது ரொம்ப சரி.தன்னம்பிக்கை...எனக்கு ரொம்ப அதிகம்.தெளிவு..கேட்கவே வேண்டாம்.துணிச்சல்...நான் எல்லா விஷயத்திலேயும் துணிச்சல்காரன். ஆனா ..பாவம்.உனக்கு தன்னம்பிக்கையும் கிடையாது.தெளிவான அறிவும் இல்லை..துணிச்சல்..அது அதிகமாகவே இருக்கு...ஆனா..என்ன ஒண்ணு அசட்டுத் துணிச்சல்.இப்போ நமக்குள்ள இடைஞ்சலா இருந்தது அந்த மூக்கன்தான்.அவனையும், உன் அசட்டுத் துனிச்சல் வெளியே அனுப்பிடுச்சு.இப்போ...நானும்..நீயும்தான்.வா....வாடி" என்ற படியே கற்பகத்தின் கையைப் பற்றி இழுத்தான்.

அவன் கையை உதறிய கற்பகம், "மரியாதையா வெளியே போயிடு..இல்ல...கூச்சல் போட்டு ஊரைக் கூட்டிடுவேன்" என்றாள்.

"கூச்சல் போடுவியா...தாராளமா போடு" என்றபடியே , மயில்வாகனன் அவளைக் கட்டிப்பிடிக்க முயல, கற்பகம் கைகளைக் கூப்பியபடி, "உன்னைக் கையெடுத்து கும்படறேன்..என்னை விட்டுடு.." என் அழ ஆரம்பித்தாள்.

"அவ்வளவு பேசின...இப்ப..எங்கே போச்சு உன் தன்னம்பிக்கை" என்ற படியே..அவளை முரட்டுத்தனமாக அணைத்த மயில்வாகனன்..முதலில் தாவணியை இழுத்தான்..

சிறிது நேரம் ஆர்ப்பாட்டம், அழுகை ..கொஞ்சம் கொஞ்சமாக நிசப்தம்..

சிறிது நேரம் கழித்து, கலைந்த வேட்டியை..எடுத்துக் கட்டிக்கொண்டு வெளியே தன் காருக்கு வந்த மயில்வாகனன்..சிறு கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொண்டு மீண்டும் உள்ளே சென்றான்.

வீட்டின் ஒரு மூலையில் அமர்ந்து..கலைந்த உடைகளுடன் அழுதுக் கொண்டிருந்த கற்பகத்திடம்.."உனக்கு பேரழகின்னு நினைப்பு.அதனாலத்தான் இவ்வளவு திமிர்..ஆர்ப்பாட்டம்.இன்னமும்..உன்னை இதே அழகோட விட்டா..நான் தெளிவில்லாதவன்,துணிச்சல் இல்லாதவன் ஆகிடுவேன்.அதனால், இப்ப நான் உன் அழகை அழிக்கணுமே....அதுக்கு நான் என்ன செய்யப்போறேன் தெரியுமா..?

ஆசிட்....திராவகம்..இதை உன் முகத்துல கொட்டப் போறேன்..அப்பறம்..அப்பறம்..இந்த அழகு உனக்கு அழிஞ்சுடும்" என்றபடியே..அந்தக் கண்ணாடிக் குடுவையைத் திறந்து..திராவகத்தை அவள் முகத்தில் கொட்டினான்.

"ஐயய்யோ..எரியுதே...எரியுதே..'துடி துடித்து ..இங்கும் ..அங்கும் புரண்டாள் கற்பகம்..

ஆனால்..மயில்வாகனனோ...மெதுவாக..வெளியே வந்து காரில் ஏறி விரைந்தான்.

Saturday, January 18, 2020

33 - கிராம அதிகாரியின் அறிக்கை

அன்று வெள்ளிக்கிழமை

விடியலிலேயே..பண்ணையார் கோயிலுக்குக் கிளம்பி வந்தார்..அப்போது, மாடசாமியின் வண்டியில் கையில் ஒரு செய்தித் தாளுடன் வந்த ராமன்..பண்ணையைப் பார்த்ததும் இறங்கி ஓடி வந்தான்.

வந்தவன், "பண்ணை..பண்ணை..இன்னிக்கு பேப்பர்ல நம்ம கிராமத்து அதிகாரியோட விசாரணை அறிக்கையை, ஒரு அமைச்சரோட விசாரணை அறிக்கைன்னு தலைப்புப் போட்டு செய்தி வந்திருக்கு" என்றான்.

"நம்ம கிராமத்து அதிகாரிதானே! நடக்கற விஷயங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும்தானே..அதன்படி அறிக்கைக் கொடுத்திருப்பார்" என்றார் கோயில் அருகே நின்று கொண்டிருந்த அர்ச்சகர்.

"அதுதான் இல்லை..நம்ம ஆளுங்கதான் நம்ம கழுத்தை அறுப்பாங்க"

"என்ன சொல்ற ராமா?"

"சொல்றேன்..நாம கொடுத்த மனுவுல சொன்ன அளவிற்கு நம்ம கிராமத்துல வறுமை இல்லையாம்.மழையில்லாம வறட்சி, பயிர் விளையலங்கறதெல்லாம் உணமையில்லையாம்.அப்படி நாம காட்டின வயல்கள் எல்லாம்..அறுவடை நடந்து முடிஞ்ச வயல்களாம்.ஊர்ல இருக்கற யாரோ ஒருத்தர் தூண்டிவிட..நாம பொய் மனு கொடுத்திருக்கோமாம்"

"அப்படியா போட்டு இருக்காங்க?"

"அதுமட்டும் போடலை.நம்ம கவுண்டர் வறுமை தாங்காம தற்கொலை செய்து கொள்ளவில்லையாம்.அவர் தற்கொலைக்குக் காரணம் வறுமை இல்லையாம்.அவர் ஒரு ஜாலி பேர்வழியாம்.அதனால் அவருக்கு வெளியே சொல்ல முடியாத வியாதியாம்.அதனாலத்தான் மனசு உடைஞ்சு குடும்பத்தோட தற்கொலை செய்துக் கிட்டாராம்"

"அடப்பாவி  மனுஷா..உண்ட வீட்டுக்கு இரண்டகம்னு சொல்வாங்களே..அது இதுதானா?"

இப்போது ராமன் அர்ச்சகரைப் பார்த்து, "அர்ச்சகரே! இப்ப சொல்லுங்க..நீங்க இன்னமும் சாமி இருக்கார்னு நம்பறீங்களா?உண்மையா நீங்க சொல்ற சாமி இருக்கார்னா அந்த அண்டப்புளுகை விசாரணை அறிக்கையாய்க் கொடுத்த கிராம அதிகாரியை உடனே தண்டிச்சு இருக்க வேண்டாம்?" என்றான்.

அதற்கு அர்ச்சகர், "ராமா...நீ சொல்ற அறிக்கையை நம்ம அதிகாரி மனசு வந்து எழுதிக் கொடுத்து இருப்பார்னு நீ நினைக்கிறியா? பாவம்..அவருக்கு எங்கே..என்ன பிரஷரோ?"

"என்ன பிரஷரா இருந்தா என்ன? உண்மையை எழுத ஏன் பயப்படணும்?நம்ம கிராமம் போலவே டெல்டா மாவட்டங்கள்ல பல கிராமங்கள் பயிரிட முடியாம..வறுமை கோரத்தாண்டவம் ஆடிட்டு இருக்கு.இனிமே இந்த வருஷம் பயிரிட்டு..பயிர் வெளஞ்சாத்தான் ஒவ்வொரு விவசாயியும் கொஞ்சம் சில்லறையைப் பார்க்க முடியும்.அதுவரைக்கும் தேவையானப் பொருட்களை வாங்கக் கூட யார் கிட்டேயும் காசு இல்லை.காசு வைச்சிருக்கவங்களும் வாங்கப் பொருள் கிடைக்காம தவிக்கிறாங்க.இந்த லட்சணத்துல நம்ம தாமோதரன் நிலம் கூட எரிஞ்சுப்போச்சு பாவம் . பண்ணை. நீங்க உண்மையைச் சொல்லுங்க..உங்க பரம்பரையில இதுவரைக்கும் நீங்க இப்படி ஒரு வறுமையைப் பார்த்து இருப்பீங்களா?" என்றான் ராமன்.

அதற்கு அர்ச்சகர், "ராமா..நாம கோபப்பட்டு ஒரு பிரயோசனமும் இல்லை. இன்ப..துன்பம்ங்கறது ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் மாறிமாறி வரக்கூடியது.அதுதான் இயற்கை நியதி" என்றார்.

"அர்ச்சகரே! நீங்க சொல்ற துன்பங்களும்..நாம் சொல்ற வறுமையும் வேற..வேற அர்த்தம்.நம்ம கிராமத்து அதிகாரி இன்னமும் என்ன சொல்லியிருக்கார் பாருங்க.." என செய்தித்தாளில் வந்துள்ள செய்தினைப் படிக்க ஆரம்பித்தான் ராமன்..

"பண்ணையாருக்கு ஊரில் விரோதிகள் அதிகம்.போராட்டம் நடந்த அன்று..தனிப்பட்ட  விரோதம் காரணமாகவே பண்ணையார் அரிவாளால் வெட்டப்பட்டார்.அவர் தாக்குதல்களுக்கும்..அரசியலுக்கும் சம்மந்தமில்லை'
படித்து முடித்த ராமன், "பார்த்தீங்களா? முழுப்பூசணிக்காயை சோத்துல மறைச்சு இருக்காங்க" என்றான்.

அந்த சமயத்தில் கிராம அதிகாரி அங்கு வர..அவரைப் பார்த்ததும் ராமன் ,அர்ச்சகரிடம். "நீங்க தேங்காய் உடைக்க..ஒரு இரும்பு சுத்தியல் வைச்சு இருப்பீங்களே! அதைக் கொடுங்க..இப்பவே அவர் தலையில ஒரே போடா போட்டு..உங்க அம்மனுக்கு பலி கொடுத்துடறேன்" என்றான் கோபமாக.

'ராமா! உன்னை நான் பல சமயத்துல தப்பா நினைச்சு இருக்கேன்..உனக்கு இந்த ஊர் மேல இருக்கிற பற்றும், பண்ணையார் மேல இருக்கற மரியாதையும் இப்பதான் எனக்கு புரியுது.கூடவே இருந்து குழி தோண்டிக்கிட்டு இருக்காங்களே..அவங்களை விட நேர்மையா..மனசுல இருக்கறதை "பட்"டுன்னு பேசற உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு" என்றார் அர்ச்சகர்.

"நான் ஒரு பிராமணதுவேஷி..என்னைப் போய்..."

"நீ ஒரு பிராமணதுவேஷியாய் இருக்கலாம்.ஏன்னா..என்னோட முன்னோர்கள் உங்களையெல்லாம் கேவலமா நடத்தி இருப்பாங்க! அது உங்க மனசுல பதிந்துப் போச்சு.ஆனா..இப்ப காலம் மாறிப்போச்சு.அதை நீங்க உணரலை.நீ நாத்திகவாதியா இருக்கறது உன் இஷ்டம்.ஆனா..நாத்திகவாதிங்க..தங்களை அறியாமல் ஆத்திகத்தை வளர்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க!"

"நான் இப்பவும் சொல்றேன்..நான் கடவுள் இல்லைன்னு சொல்லலை.என்னை நீங்க தப்பாப் புரிஞ்சுக் கிட்டு இருக்கீங்க.கடவுளுக்கு உருவம் கிடையாது.இயற்கைதான் கடவுள்னு சொல்றேன்.அவ்வளவுதான்"

இருவரின் வாதத்திற்கிடையே..புகுந்த பண்ணையார்"ராமா!உன் பிரச்னையை அப்புறம் பாத்துக்கலாம்."என்று சொல்லிவிட்டு..நெருங்கி வந்துவிட்ட அதிகாரியிடம், "வாங்க..தயங்காதீங்க..எய்தவன் இருக்க அம்பை ஏன் நோகப் போறோம்" என வரவேற்றார்.

ராமன் அவரைப் பார்த்து, "நீங்க விசாரணைன்னு வந்த போதே  எதுவும் பேசலை.இப்ப மட்டும் என்ன பேசிடப் போறீங்க! ஏங்க..இந்த கிராமத்துல நடந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும் இல்லையா?" என்றான்.

அதிகாரி மௌனமாய் இருக்க,அர்ச்சகர் "ஏன் மௌனமாய் இருக்கீங்க? ஏன் இப்படி செஞ்சீங்க?" என்றார்.

கிராம அதிகாரி..ஒரு கடிதத்தை பண்ணையாரிடம் கொடுக்க..அவர் அதை வாங்கி ராமனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்..

ராமன் படிக்க ஆரம்பித்தான்....

'பூங்குளம் கிராமத்து அதிகாரி சுப்ரமணியனான நான்..யாருடைய நிர்ப்பந்தமும் இல்லாமல் எழுதிய கடிதம் இது.

இந்த கிராமத்து மக்கள்..அவங்க மனுவில் கூறியிருந்தபடி சொல்லியுள்ளது எல்லாம் உண்மை.வறுமை கிராமத்தில் கோரத்தாண்டவம் ஆடுது.கவுண்டர் வறுமை தாங்காமல்தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் .பண்ணையாரைத் தாக்கியதில் அரசியல் உள்ளது.இதையெல்லாம் அறிக்கையாய் எழுதிக் கொடுக்க இருந்த என்னை ..கட்டாயப்படுத்தி,பயமுறுத்தி, என் குடும்பத்தினரைக் கிட்டத்தட்ட மிரட்டி..மாற்றி எழுத வைத்துவிட்டார்கள்""

ராமன் இதைப் படித்து முடித்ததும்..பண்ணையார் அதிகாரியிடம் "நீங்க வெறும் அம்புன்னு எங்களுக்குத் தெரியும்...ஆனா..இந்தக் கடிதத்தை இப்ப நீங்க எழுத வேண்டிய அவசியம் என்ன?" என்றார்.

கிராம அதிகாரி மௌனமாகவே நின்றார்.

"இப்பவாவது வாயத் திறந்து ஏதாவது சொல்லுங்களேன்" என்றார் அர்ச்சகர் பொறுமை இழந்து.

கிராம அதிகாரி வாயைத் திறந்தார்..

"மக்களுக்கு இதன் மூலம் உண்மை தெரியணும்.இதை பிருத்வி கிட்ட கொடுத்து பத்திரிகையில போடச்சொல்லுங்க.இந்த கிராமத்து மக்களுக்கு என்னை அறியாமல் செய்த துரோகத்திற்கு பரிகாரமாக என்னையே அழிச்சுக்கத்   தீர்மானம் செய்து..விஷத்தை சாப்பிட்டிட்டுத்தான் இப்போ வந்திருக்கேன்" என்று அவர்களைப் பார்த்து சொல்லியவாறு..கைகளைக் கூப்பியபடியே கீழே சாய்ந்தார்

Friday, January 17, 2020

32 - தாமோதரனுக்கு ஜாமீன்

தஞ்சை கோர்ட்..

காலை 10 மணிக்கு ஒரு போலீஸ் ஜீப் வந்து நிற்க..அதிலிருந்து இரண்டு  காவலர்கள், தாமோதரனை இறக்கி வளாகத்தினுள் அழைத்து வந்தனர்.

கறுப்பு கோட்டும்,அங்கியும் அணிந்த வக்கீல்கள் இங்கும் ..அங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

ஒரு சிலர் தன் கட்சிக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு வக்கீல் சென்றமுறை வாய்தா வாங்கியதற்கே, கட்சிக்காரர் ஏதும் கொடுக்காமல் சென்றுவிட்டதாகக் கத்திக் கொண்டிருந்தார்.

சில வக்கீல்கள், எதிர் தரப்பு வக்கீல் என்ன கேட்பார்? அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் ..என சொல்லிக் கொண்டிருந்தனர்...கட்சிக்காரர்களும் கிளிப்பிள்ளைபோல அவர்கள் சொன்னதை திருப்ப சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

திடீரென.....டவாலியின்...

"சைலன்ஸ்" என்ற உரக்க குரல் கேட்க..கோர்ட் அமைதியானது...

மாஜிஸ்ட்ரேட்..தன் இருக்கைக்கு வந்தார். அனைவரும் எழுந்து நின்றனர்.அவர்...

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்"

என ஒரு திருக்குறளைச் சொல்லி, அனைவருக்கும் பதில் வணக்கம் சொல்லி..அமரச் சொன்னார்.

பின்னர்..சில வழக்கு எண்கள் படிக்கப்பட்டு..அவை ஒத்தி வைக்கப் பட்ட தேதிகளை மேஜிஸ்ட்ரேட் குறிப்புகளைப் பார்த்து கோர்ட் குமாஸ்தா தெரிவித்தார்.

வேறு சில வழக்குகளில், குற்றம் சாட்டப்ப்ட்டவர் வழக்கு எண் படிக்கப்பட்டதும் கூண்டில் ஏற..அவரை  ..ஒரு சில கேள்விகள் கேட்டு..வழக்கினைத் தள்ளிப் போட்டார் மாஜிஸ்ட்ரேட்..

இந்நிலையில்..வழக்கு எண் சொல்லப்பட்டு.."பூங்குளம் தாமோதரன்" அழைக்கப்பட்டான்.அவனை..காவல்துறை கூண்டிலேற்றினர்.

அவனின் வழக்கு சம்மந்தப்பட்ட குறிப்புகள் அடங்கிய ஆவணத்தை மேலோட்டமாகப் பார்த்த மாஜிஸ்ட்ரேட், தாமோதரனைப் பார்த்து, "மயில்வாகனனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நீங்கள் ஏதேனும் சொல்ல வேண்டுமா?" என்றார்.

அதற்கு தாமோதரன்..

"ஐயா நீங்களே சொல்லிட்டீங்களே! குற்றம் சாட்டப்பட்டவன்னு..நான் அப்பாவிங்க.எனக்கு ஒன்னும் தெரியாது.எனக்குத் தெரிந்தது எல்லாம்..மயில்வாகனனும்..ஒரு காமராஜர் மாதிரி,ஒரு கக்கன் மாதிரி,ஒரு ஜீவா மாதிரி  நல்லவராய் இருப்பார்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.ஆனால்..அவர்..அவர்..வேண்டாம்யா..அவர் எப்படிப்பட்டவர்னு என் வாயால சொல்ல விரும்பல" என்றான்.


அப்போது வாஞ்சிநாதன், ஒரு வக்கீலுடன் உள்ளே நுழைந்தான்.வக்கீல், , தான் தாமோதரனுக்காக வாதாட இருப்பதாகவும்..அதற்கான வக்காலத்து, ஜாமீன் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளதாகவும் கூற, வழக்கு சம்பந்தப்பட்ட பேப்பர்களை தனியே எடுத்து வைத்த மேஜிஸ்ட்ரேட்..மாலைக்குமேல் அது பற்றி விசாரிப்பதாகக் கூறினார்.
---      -----   -----   -----   ----

மாலை மீண்டும் நீதிமன்றம் கூட..நீதிபதி தாமோதரனை 25000 ருபாய் சொந்த ஜாமீனில் விடுவிப்பதாகவும்..பக்கத்து கிராமக் காவல் நிலையத்தில் ஒவ்வொரு புதனன்றும் தாமோதரன் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

31 - பஞ்சாயத்துக் கலைந்தது

தாமோதரன் வீடும்,நிலங்களும் தீக்கிரையான பின்னர், அது பற்றியும் அவனுக்கு இழப்பீடு தருவது குறித்தும், அவன் கைது குறித்தும் விசாரிக்க பஞ்சாயத்தைக் கூட்டினார் பண்ணையார்.

பண்ணையார் முதலில்பேச ஆரம்பித்தார்,,

"தாமோதரன் வீடு நிலம் ஆகியவற்றை எரித்தவர் யார்? என ஓரளவு நம்மால் யூகிக்க முடியும் ஆனாலும், அதை சட்டப் பூர்வமாக நாம் நிரூபிக்க வேண்டும்.

ஏற்கனவே..பக்கத்து கிராம காவல்துறை, இது குறித்து ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.இதனைடையே நாம் தாமோதரனுக்கு ஏதேனும் நஷ்டஈடு வழங்கலாம்.உடனடியாக பஞ்சாயத்து செலவில் அவனுக்கு வீடு கட்டித் தரப்படும்.தீ விபத்தில் உயிரிழந்த செங்கமலம் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்துவோமாக.

கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தி, அமர்ந்த பின்னர்..ராமன் எழுந்து..

"நம்ம கவுண்டர் தற்கொலை செய்து கொண்டதும், அது பற்றியும், நம் கிராமத்து வறுமை குறித்தும், அதற்கான நிவாரணம் கேட்டும், நம்ம ஊர் கிராம அதிகாரி மூலமாக அரசாங்கத்துக்கு ஐந்து..ஆறு மாதம் முன்னால ஒரு மனு கொடுத்தோமே..அது பற்றிய விவரம் ஏதேனும் தெரியுமா?" என்றான்.

"அது விஷயமாகவும் பேசத்தான் இப்பஞ்சாயத்துக் கூடியுள்ளது.அது குறித்து விசாரிக்க இன்று அதிகாரிகள் வர்றாங்களாம்" என்றார் பண்ணையார்.

உடன் அர்ச்சகர், "மனு கொடுத்தோம்..போராட்டமும் பண்ணினோம்.நீங்களும் தாக்கப்பட்டீங்க!இது எல்லாம் நடந்து முடிஞ்சுப் போன விஷயங்கள்.இதில் அதிகாரி வந்து விசாரிக்க என்ன இருக்கிறது?"

"நீஙக இங்க பேசிட்டீங்க.இதையே அதிகாரிகள் கிட்டக் கேட்டா கோபம் வரும்.இந்த  நாட்டுல அரசியல்வாதிங்க எல்லாம் கடிவாளம் மாட்டிய குதிரைகள் போலத்தான்.அக்கம் பக்கத்துல என்ன நடக்குது..என்ன நடந்தது என்று எல்லாம் தெரிவதில்லை.சம்மந்தப்பட்ட பிரிவுக்கு ஒரு மனு அனுப்பினா அதை உடனடியாக விசாரணைக்கு எடுக்கறப்போ..எல்லாமே முடிஞ்சுடும்" என்றான் ராமன்.

"ஆமை புகுந்த வீடு உருப்படாதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.எல்லா அரசு அலுவலகங்களும் ஆமை வேகத்துலதான் செயல்படுது" - பண்ணையார்.

"நீங்க சொல்றது எல்லாம் அந்தக் காலம்.இப்ப எல்லாத் துறையிலும் கம்ப்யூட்டர் வந்தாச்சு.பட்டனைத் தட்டினா அடுத்த நிமிஷமே நமக்கு வேணும்கற விவரங்கள் எல்லாம் கிடைச்சுடும்.ஆனா..என்ன ஒன்னு..அந்த பட்டனைத் தட்ட வேண்டிய கை மனுஷனுடையதுதானே! அதுக்கே, அதிகாரிங்களுக்கு மாசக்கணக்குல டயம் வேண்டியிருக்கே"

"இதோ பார் ராமா..விசாரிக்க அதிகாரிங்க இங்க வர்ற நேரம்..நமக்கு நம்ம காரியம் முடியணும்.நீ பாட்டுக்கு இப்படி ஏதாவது ஏடாகூடமா சொல்லி அவங்களுக்கு கோபம் வந்து போயிடப்போறாங்க"

'நான் ஏன் வாயத் திறக்கப் போறேன்.நீங்க திறடான்னாலும் திறக்க மாட்டேன். ஆனா..ஒரு விஷயம்..வர்ற அதிகாரி ஏதாவது கேட்டு நீங்க சரியா பதில் சொல்லலைன்னா..நான் வாயைத் திறந்தா மூட மாட்டேன்..ஆமாம்..சொல்லிட்டேன்" என்றான் சற்று கோபமாக ராமன்.

பின்னர் சற்று நேரம் கழித்து ராமன் , "பண்ணை..வர அதிகாரிங்க முதல்லே மக்கள்கிட்டதான் விசாரிப்பாங்க.அப்புறம் வயல்களை பார்வையிடுவாங்க.அதைவைச்சு அரசாங்கத்துக்கு அறிக்கையைத் தாக்கல் செய்வாங்க.அரசு, சட்டசபையில அந்த அறிக்கையை வைக்கும்.சில சமயம் விவாதம்..சில சமயம் விதண்டா விவாதம்..எதிர்க்கட்சிகள் வெளிநடப்புன்னு எல்லாம் நடக்கும்.உடனடி நிவாரணம் கொடுக்கணும்னு எதிர்க்கட்சிகள் கேட்டா  நிவாரணம் கிடைக்காது.நிவாரணம் கூடாது அவங்க சொன்னா உடனே நிவாரணம் கிடைக்கும்" என்றான்.

"இதோ பாரு ராமா..வர்றவங்க எது கேட்டாலும்..நானோ இல்ல அர்ச்சகரோ பதில் சொல்றோம்.நீ தப்பித் தவறிக்கூட எதுவும் பேசாதே! வெண்ணெய் திரண்டு வர்ற சமயத்தில தாழியை உடைச்சக் கதை பண்ணிடாதே!"

இச்சமயம்..மூக்கன் ஓடி வந்து "ஐயா..நம்ம கிராம அதிகாரி வர்றார்" என்றான்.

"அவர் கூட வேற யாராவது வர்றாங்களா?"

"இல்லை. அவர் மட்டும்தான் வரார்"

"ஒருசமயம்..விசாரணை அதிகாரி..இப்போ வரலைப் போல இருக்கு" என்ற பண்ணையாரிடம்,. ராமன், "தான் வாயத் திறக்கலாமா?" என சைகையில் கேட்க..அதற்கு பண்ணையார் "இன்னும் யாரும்தான் வரலியே..நீ இப்ப என்ன சொல்லப் போற சொல்லு.." என்றார்.

"ஒருவேளை, நம்ம கிராமத்து அதிகாரிதான்..விசாரணை அதிகாரியோ?"  என்றான்.

"அது எப்படி ராமா..அவர்கிட்ட தானே நாம நம்ம மனுவைக் கொடுத்தோம்.மேலிடத்துக்கு அனுப்பச் சொன்னோம்.அவர் நம்ம ஊர்க்காரர் ஆயிற்றே..அவருக்குத்தான் எல்லா விஷயங்களும் தெரியுமே"

"நீங்க சொல்றது சரிதான்..ஆனா..அரசாங்கம் அவரை விசாரணை அதிகாரியாய் போட்டு விசாரிக்கச் சொன்னா விசாரிச்சுத்தானே ஆகணும்"

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருந்த போதே கிராம அதிகாரி அங்கு வந்து சேர்ந்தார்.பண்ணை அவரை வரவேற்று, "இன்னிக்கு விசாரணைக்கு அதிகாரிங்க வர்றதா செய்தி வந்தது.அவங்க வர்றாங்களா?" என்றார்.

கிராம அதிகாரியோ , அத்ற்கு "இல்லை" என்பது போலத் தலையை வலமும்..இடமும் ஆட்டினார்.

"அவருக்கு பதிலாக நீங்க வந்து இருக்கீங்களா?" என்று ராமன் கேட்க, அதிகாரி "ஆமாம்" என்பது போல மேலும், கீழும் தலையாட்டினார்.

"ஓஹோ...எனக்குப் புரிஞ்சுப் போச்சு" என்றவன்.."நாம இந்த அதிகாரி கிட்ட கொடுத்த மனுவை இவர் கலெக்டருக்கு அனுப்பினார்.கலெக்டர், விவசாயத் துறைக்கு அனுப்பினார்.அவங்க, தண்ணீர் வழங்குத் துறைக்கு அனுப்பினார்கள்.அவங்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அனுப்பினாங்க.சம்பந்தப்பட்ட அமைச்சகம்..மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பினார்கள்.முதல்வர் அலுவலகம், அதை முதல்வர் பார்வைக்கு அனுப்பினாங்க.முதல்வர் அதைப் பார்வையிட்டு, விசாரிக்கச் சொன்னதும், முதல்வர் அலுவலகம் சம்மந்தப்பட்ட  அமைச்சகத்துக்கு அதை அனுப்ப..அவங்க, தண்ணீர்த் துறைக்கு அனுப்ப..அவங்க விவசாயத் துறைக்கு அனுப்ப, விவசாயத்துறை கலக்டருக்கு அனுப்ப, கலெக்டர் நம்ம அதிகாரிக்கேத் திருப்பி அனுப்பி விசாரிக்கச் சொல்லியிருக்கார்.அதை எடுத்துக்கிட்டு..நம்ம அதிகாரி வந்து இருக்கார்.என்ன நான் சொல்றது சரிதானே!" என்றான் அதிகாரியிடம் மூக்கன்.

அதிகாரியும் "ஆமாம்" என்பது போல தலையினை ஆட்ட..

"அடடா..நம்ம மனுவிற்கு என்ன ஒரு முன்னேற்றம்" என்றார் அர்ச்சகர்.

"நான் ஏதாவது சொன்னால் உங்களுக்குக் கோபம் மட்டும் வருது..ஆனால் நடைமுறை கோபத்தை ஏன் வரவழிக்கலை?"
என்ற ராமனிடம், "பண்ணையார்"ராமா! நாம கோபப்ப்ட்டு என்ன பிரயோசனம்?நமக்கு நம்ம வேலை முடியணும்" என்று சொல்லிவிட்டு, அதிகாரியிடம், "நீங்க உங்க விசாரணையை ஆரம்பிக்கலாம்" என்றார்.

"அவர் விசாரிக்க இனிமே என்ன இருக்கு.இங்கு நடக்கற விஷயமெல்லாம் அவருக்குத் தெரியுமே!..அதனால.."மனுவில் சொல்லப்பட்டதெல்லாம் உண்மை"ன்னு, இவர் எழுதி கலெக்டருக்கு..." என்று ராமன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட பண்ணையார், "ராமன் வாய மூடு" என்றவர், அதிகாரியிடம்"என்ன நீங்க ஒன்னும் சொல்லலியே" என்றார்.

அதற்கும் அந்த அதிகாரி மௌனம் சாதிக்க, ராமன்,"அவர் எப்படி பேசுவார்.அவர் ஏதாவது பேசினா...அதிகாரி விசாரணைக்கு வந்து நிவாரணம் தர ஒப்புக் கொண்டார்னு விஷயம் வெளியாயிட்டா..இவர் பதவிக்கு ஆபத்து வந்திடுமே! என்ன நான் சொல்றது சரிதானே!" என்றான் அதிகாரியைப் பார்த்து.

அதிகாரி, ராமன் சொல்லியவற்றிற்கு "ஆமாம்" என்பது போல தலையினை ஆட்ட.."சரியான தஞ்சாவூர் பொம்மையைத்தான் விசாரணைக்கு அனுப்பியிருக்காங்க' என்றான் ராமன்.

இறுதியில்..எந்த பிரச்னைக்கும் முடிவெடுக்க இயலாமல் பஞ்சாயத்து கலைந்தது.

Thursday, January 16, 2020

30 - சுதந்திர அடிமைகள்

வீட்டை இழந்து..தாயையும் இழந்து..மூக்கனின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த கற்பகத்திற்கு, தாமோதரன் கைதான செய்தி தெரிய வந்த்து.

சற்றே அதிர்ச்சி ஏற்பட்டாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும்? என யோசனையில் ஆழ்ந்தாள். பெண்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதற்கு கற்பகத்தை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.அதனால்தான்..இந்த சூழலிலும் அடுத்து என்ன செய்யலாம்?என்று அவளால்  யோசிக்கத் தோன்றியது.

மூக்கனிடம் வாஞ்சிநாதனைப் போய்ப் பார்த்து வருவதாகக்கூறி கிளம்பினாள்.

வாஞ்சியின் வீடு...

சிதம்பரம் அப்போதுதான் குளித்து வந்து..தனது தினசரி பூஜையை செய்து முடித்துவிட்டு சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தார்.

அவரது வாய்....

"பரித்ராணாய சாதுனாம்
 விநாஷாய சதுஷ்கிருதாம்
தர்ம சம்ஸ் தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே1"

என முணுமுணுத்தது.

அப்போது வீட்டின் வெளியே, "வாஞ்சி..வாஞ்சி" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க..எழுந்து வந்தவர் "யாரும்மா நீ..உள்ளே வா" என்றழைத்தார்.

தயங்கியப்படியே கற்பகம் உள்ளே வந்தாள்.

"யாரும்மா நீ..உனக்கு என்ன வேணும்?"

"என் பெயர் கற்பகம்.நான் வாஞ்சியைப் பார்க்கணும்"

"என்ன விஷயம்..என் கிட்ட சொல்லலாம்னா சொல்லு..நான் அவனோட தாத்தாதான்."

"தெரியும்..நீங்க ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி..ஐயா..உங்களைப் போல நாட்டுப்பற்று உள்ளவங்க எல்லாம்..நம்ம நாட்டுக்கு சுதந்திரத்தை ஏன் வாங்கிக் கொடுத்தீங்க?"

"நீ ஏம்மா பேச மாட்ட..சுதந்திர நாட்டில இருக்க..அதுதான் சுதந்திரமா பேசறே! அம்மா..சுதந்திரத்தை அனுபவிக்க வேணும்னா..ஒருமுறை அடிமையாய் இருந்து பார்னு சொல்லுவாங்க.நாங்க எல்லாம் அந்த வெள்ளைக்காரன் கிட்ட அடிமையாய் இருந்ததால்தான் உங்களால எல்லாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகிறது"

"இப்ப..இந்த அரசியல்வாதிங்க அட்டூழியம் அந்த வெள்ளைக்காரன் கிட்டேயே நாடு இருந்திருக்கலாமோ எனும் எண்ணத்தை ஏற்படுத்திடுச்சே"

"அம்மா! நம்ம நாட்டு மக்கள் எல்லாம் துன்பங்களை அனுபவிக்கறது அரசியல்வாதிகளால் மட்டும் இல்லைம்மா.அதை அமைதியா பார்த்துக்கிட்டு இருக்கிற நல்லவங்களாலும்தான்.அன்னிக்கு இருந்த தலைவர்கள் எல்லாம்..தங்களுக்கப்புறம் நாட்டை ஆளப்போறவங்க..தங்களை மாதிரி நேர்மையானவங்களா..ஊழல் இல்லாதவங்களா..தகுதி உள்ளவங்களா இருப்பாங்கன்னு நினைச்சாங்க.ஆனா..அவங்க எண்ணம் எல்லாம் தவிடு பொடியாயிடுச்சே! இந்த உலகத்துல நாம பொறந்தப்போ என்ன கொண்டு வந்தோம்..போறப்போ என்ன கொண்டு போகப்போறோம்ங்கற எண்ணம் இருந்தா..இன்னிக்கு ஒரு பயலும் பேராசைப் பிடிச்சு அலையமாட்டான்"

"ஐயா..உங்கக் கிட்ட இதைப்பத்தியெல்லாம் நிறைய பேச ஆசை.இப்ப ரொம்ப அவசரம்.வாஞ்சி  இல்லியா?"

கற்பகம், இதைக் கேட்டுக் கொண்டிருந்த போதே..வெளியே  சென்றிருந்த வாஞ்சி உள்ளே நுழைந்தான்.வீட்டினுள் கற்பகத்தைப் பார்த்தவன், "அடடே..கற்பகம்..வா..வா..எப்ப வந்தே?" என்றான்.

"அவ அப்பவே வந்துட்டா..நாந்தான் அவ கிட்ட தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேசிக்கிட்டு இருந்தேன்"..
 என்ற சிதம்பரம், அவனருகே வந்து "ஏண்டா..இவதான் நீ சொல்லிக்கிட்டு இருந்த கற்பகமா?" என்று கேட்டபடியே கண்ணடித்தார்.

அதைப் பார்த்த வாஞ்சி தனக்குள் ,"கிழம் இந்த வயசிலேயும் இப்படி கண்ணடிக்குது" என நினத்தான்.

"பார்த்தா நல்லப் பொண்ணாத்தான் தெரியறா" என்றார் சிதம்பரம்.

வாஞ்சி, கற்பகத்திடம், "என்ன மேடம்..இவ்வளவு தூரம் என்னைத் தேடி வந்து இருக்கீங்க!..காஃபி சாப்பிடறீங்களா? "என்றான்.

"ப்ளீஸ்..வாஞ்சி, நீயாவது என் அவசரத்தைப் புரிஞ்சுக்க.மயில்வாகனன் ஆளுங்க நேத்து  ராத்திரி, எங்க வீட்டையும், நிலத்துல அறுவடைக்குத் தயாரான பயிர்களையும் தீ வைச்சு அழிச்சுட்டான்.அதைத் தட்டிக் கேட்கப்போன எங்கப்பாவை..தன்னை தாக்க வந்ததா புகார் கொடுத்து கைது பண்ண வைச்சுட்டான்"

"அப்படியா? வா..நாம இப்பவே உங்கப்பாவைப் போய் ..அவரை ரிமாண்ட் பண்ணிவைச்சிருக்கிற போலீஸ் ஸ்டஷனுக்குப் போய்ப் பார்ப்போம்.அப்புறம் அவரை கோர்ட்ல  ஆஜர் படுத்தறப்போ ஒரு வக்கீலை வைச்சு ஜாமீன் கேட்போம்.."என்ற வாஞ்சி, தாத்தாவிடம் "என்ன தாத்தா சொல்றீங்க" என்றான்.

"நான் சொல்ல என்ன இருக்கு? நீதான் யாரையாவது வக்கீலை வைச்சு ஜாமீன் எடுக்கலாம்னு சொல்றியே..உங்க தாத்தாவே ஒரு வக்கீல்ங்கறதை மறந்துட்டு"

"சாரி தாத்தா..நிஜமாவே அதை மறந்துட்டேன்" என்றான் வாஞ்சி.

தாத்தா கற்பகத்திடம்,"இதோ பாரும்மா..கவலைப்படாதே! நீண்ட நாள் கழிச்சு வக்கீலா உங்கப்பாவுக்காக நான் ஆஜராகப் போறேன்.அந்த ஆண்டவன் இருக்கான் ..நம்பு" என்றார்.

"தாத்தா , ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா, அப்பாவிகளான எங்களுக்கு ஏன் இவ்வளவு கஷடங்களைக் கொடுக்கறான்"

"அம்மா இங்கிலீஷ்ல சொல்லுவாங்க..

When God pushes you to the edge of difficulty, Trust him fully because two things can happen either he will catch you when you fall or he will teach you how to fly "

Wednesday, January 15, 2020

29 - தாமோதரன் கைது

பகலுக்கு விடை கொடுத்து இரவை வரவேற்கத் தயாரானாள் இயற்கை அன்னை.

மயில்வாகனனும்..வேறு சில அரசியல்வாதிகளும் மயில்வாகனன் இல்லத்தில் கூடி இருந்தனர். ஒவ்வொருவர் கைகளிலும் இருந்த கண்ணாடி தம்ளர்களில் பொன்னிற திரவம்.எதிரில் தட்டுகளில் உப்பு, காரம் சரியாகக் கலந்து பசு நெய்யில் வறுத்தெடுக்கப்பட்ட முந்திரி.

தங்களுக்குள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒருவன் மயில்வாகனனிடம் ,"என்ன அரசியல்வாதிய்யா நீ..பூங்குளத்தில் டாக்டருக்குப் படிக்கும் உன் தொண்டன் ஒருவனின் மகளைப் பற்றி ஆஹா..ஓஹோன்னு சொல்லிக் கிட்டு இருந்தே..அவளை அனுபவிச்சேத் தீரணும்னு சொன்னே..ஆனா.. வாய்ச்சவடால்தான்..செயல்ல ஒன்னும் காணோம்" என்றான்.

அதைக் கேட்டதும் மற்றவர்கள் சிரித்தார்கள்.

மயில்வாகனனுக்கு போதை மட்டுமில்லாமல், கோபமும் தலைக்கேறியது.

"டேய்..இந்த மயில்வாகனன் கேரக்டரை யாருமே புரிஞ்சுக்கலையே! எதுவுமே தானாகப் பழுத்தால் தான் ருசி.தடிகொண்டு அடிச்சு பழுக்க வைத்தால் சுவை குறைவுதான்னுதான் காத்துக் கிட்டு இருக்கேன்.கற்பகம் விஷயத்துல மாசக்கணக்குல மௌனமா இருந்தது உண்மைதான்.இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க...இன்னும் எண்ணி பதினைஞ்சே நாட்கள்ல..நான் அவளை அடைஞ்சேத் தீருவேன்.அது..இதோ என் கையில இருக்கே அந்த விஸ்கி மேல் சத்தியம்"

மயில்வாகனன் இதைச் சொன்னதும் இதற்கும் அவர்கள் சிரித்தனர்.

இச்சமயத்தில்..மயில்வாகனனின் ஆள் ஒருவன் வந்து  அவனிடம் "ஐயா..பூங்குளத்திலிருந்து குப்பால்" வந்திருக்கான்' என்றான்.

கற்பகம் பற்றிப் பேசும்போதே, அவள் ஊரைச் சேர்ந்த குப்பால் வந்திருந்தது ஒரு நல்ல சகுனமாக மயில் நினைத்தான்.உடனே அவனைக் கூட்டி வரச்சொன்னான்.

குப்பால் வந்து மயில்வாகனனைப் பார்த்து கும்பிட்டான்.

"என்ன குப்பால்..ஜெயில்ல ஒரு மாசம் களி தின்னியா" என்று மயில் கூற, இதற்கும் மற்றவர்கள் சிரித்தனர்.

குப்பாலின் முகம் மாறியது.இருந்தாலும்..மயில்வாகனனால் ஏற்பட்ட, ஏற்படப்போகும் வசதிகளை எண்ணி வாளாயிருந்தான்.மேலும் மயில் முழு போதையில் பேசுகிறான் என்பதை அவனின்  செக்கச் சிவந்த கண்களும்,சூழலும், பேச்சும் அவனுக்கு உணர்த்தியது.

"ஐயா..நான் வந்த விஷயம் என்னன்னா.." என்றபடியே, அன்று காலையில் , பண்ணையார்,மூக்கன்,ராமன், இடையே நடைபெற்ற நிகழ்வுகளைச் சொன்னான். பின்னர் தாமோதரனும், கற்பகமும் வாஞ்சியின் காரில் வந்ததையும், தாமோதரன் பண்ணையாரின் கால்களில் விழுந்துஅழுதுமன்னிப்புக் கேட்டதையும் கூறினான்.

தாமோதரனைப் பட்டடைக்கல்லாக வைத்து மற்ற தலித்துகளையும் தன் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி தன் வாக்கு வங்கியையும் அதிகரித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்த அவனுக்கு,நடப்பது எல்லாமே எதிராக இருந்து வருவதாகத் தோன்றியது.இனியும் தாமோதரன் சம்மந்தப்பட்ட விஷயத்தைத் தள்ளிப் போடக் கூடாது என எண்ணினான்.

தடுமாறியபடியே எழுந்து குப்பாலை அடுத்த அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அடுத்த பத்தாவது மணித்துணிகளில் குப்பால் கையில் சில பணக்கட்டுகளுடன் வெளியேறினான்.

===       --------     ---------

அன்று இரவு மணி பன்னிரெண்டு

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கற்பகம்..திடீரென வெப்பம் அதிகமாவது போலத் தோன்றியதால் கண் விழித்தாள்.வீடு தீப்பற்றி  எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

"ஐயய்யோ..அப்பா..அப்பா..என உறங்கிக் கொண்டிருந்த தாமோதரனையும், செங்கமலத்தையும் எழுப்பினாள்.

நிலைமையை  அறிந்த மூவரும் வெளியே தப்ப முயன்றனர்.அந்நேரம்..எரிந்தபடியே ஓலைக்குவியல் ஒன்று செங்கமலம் மேல் விழுந்தது.செங்கமலம் அலற, தாமோதரன், கற்பகம் அவளைக் காப்பாற்ற வழி தெரியாது தவித்தனர்.அதற்குள் செங்கமலம் தீக்கு இரையாய் இருந்தாள்.

அக்கம் பக்கம் இதற்குள் எழுந்து, தாமோதரனையும், கற்பகத்தையும் காப்பாற்றினர்.சிலர் வாளி வாளியாக தண்ணீரையும், மண்ணையும் கொட்டி நெருப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொணர முயற்சித்தனர்.

தாமோதரன் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.


இதனிடையே..இரவு..வயல்களைக் காவல் காத்துக் கொண்டிருந்த தாமோதரனின் உறவினன் ஒருவன் ஓடி வந்தான், "தாமோதரா..உன் வயல் முழுவதிலும் பெட்ரோலை ஊற்றி ஒருந்தன் நெருப்பு வைச்சுட்டான்.பயிர்கள் எல்லாம் அழிஞ்சுக்கிட்டிருக்கு" என்றான்.

தலையில் அடித்துக் கொண்டு தாமோதரன் அழுதவாறே இருந்தான்.கற்பகம் அவனைத் தேற்றிக் கொண்டிருந்தாள்.

விவரம் அறிந்து அதிகாலை, பண்ணையார் உட்பட ஊரே அங்குக் கூடியது.

பண்ணையாரைப் பார்த்ததும் அழுகையை தாமோதரனால் கட்டுப் படுத்த முடியாது அழுதான்.பின் என்ன நினைத்தானோ, தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்..

"இதெல்லாம் அந்த மயில்வாகனன் வேலைதான்.அவனை நான் உயிரோட விட மாட்டேன்" என்றபடியே கொலைவெறியுடன் கையில் ஒரு அரிவாளை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அடுத்த சில மணிநேரங்களில்,மயில்வாகனனைக் கொலை செய்ய முயன்றதாக, தாமோதரன் கைது செய்யப்பட்ட செய்தி பூங்குளத்திற்கு வந்த்து.



Tuesday, January 14, 2020

28 - ரத்தம் ஒரே நிறம்

போராட்டம் நடந்து முடிந்து, பூங்குளம் சிறிது..சிறிதாக அமைதிக்குத் திரும்பி..ஒருமாதம் ஓடி விட்டது.

அன்று, வழக்கம் போல மூக்கன் ,நாராயணனின் டீக்கடை முன் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருக்க, ராமன், தினசரி ஒன்றை படித்துக் கொண்டிருந்தான் பெஞ்சில் அமர்ந்தபடியே.நாராயணன் கடையில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தான்.

செய்தித் தாளை மடித்து வைத்த ராமன், மூக்கனிடம், "என்ன மூக்கா..பண்ணையார் நேத்து ஆஸ்பத்திரிலே இருந்து டிஸ்சார்ஜ் ஆகிட்டாராமே!இப்ப எப்படியிருக்கார்?" என்றான்.

"ஆமாம்..அவர் அரிவாளால்வெட்டப்பட்டு, ஆசுபத்திரி போய்..நேத்து திரும்பி வந்தவரை விளையாட்டுப் போல ஒரு மாசம் ஓடிப்போச்சு.காலம் றெக்கைக் கட்டிப் பறக்குது"

"நாம செஞ்ச போராட்டம்..இந்திய பாராளுமன்றம் வரைக்கும் போய்,ஒரு கலக்குக் கலக்கிடுச்சே! பிரதமர் உடனடியாக ஒரு குழுவை பெங்களூர்க்கு அனுப்பி தண்ணீர் பிரச்னைப் பற்றி ஆராயச் சொல்லி இருக்காராம்"

"ஆமாம்..அந்தக் குழு என்ன செய்யும்?"

"பாவம்..அது என்ன செய்யும்...திரும்பி முதலே இருந்து, தமிழகத்திற்குத் தண்ணீ தேவையான்னு ஆராயும்..விசாரிக்கும்..அப்புறம்..அறிக்கைத் தாக்கல் செய்யும்...மீண்டும் திருத்த அறிக்கைத் தாக்கல் செய்யும்..இப்படி மாத்தி..மாத்தி அறிக்கைத் தாக்கல் செய்துக் கொண்டே இருக்கும்.நாம் நேத்து எப்படி இருந்தோமோ...இன்னிக்கு எப்படி இருக்கோமோ..அப்படியேத்தான் நாளைக்கும் இருப்போம்"

'விவசாயிகள் சேத்துல காலை வைச்சாத்தான் ..மக்கள் சோத்துல கை வைக்க முடியும்னு அரசாங்கத்துக்குத் தெரியாதா?"

"ஏன் மூக்கா...எவ்வளவு நாள் இதே டயலாக்கை சொல்லிக்கிட்டு இருப்பீங்க..மாத்துங்க..விவசாயிகள் உழுது பயிரிட்டாத்தான் ..மக்கள் தொழுதுண்டு உண்ணமுடியும்னு சொல்லுங்க"

"அப்படின்னா?"

"விவசாயி விளைவிக்கிற ஒவ்வொரு நெல் முத்தும் அவனோட வியர்வைல முளைச்ச முத்துக்கள்.இது பட்டணத்து ஜனங்களுக்குப் புரியணும்.பொங்கல் அன்னிக்கு குக்கர்ல பொங்கல் வைச்சு..சூரியனை வணங்கறோம்னு சொல்லிட்டு..சாமிமேல ஒரு கண்ணும்,டி வி நிகழ்ச்சிலே ஒரு கண்ணும் இருக்கற பட்டணத்து மக்கள்..இது உழவர் திருநாள்..அந்த உழவன் வாழ்வு செழிக்கணும்னு..எல்லாம் நீங்க இருக்கறதா சொல்ற..அந்த ஆண்டவனை வேண்டிக்கலாம் இல்லையா?"

இச்சமயத்தில் இவர்கள் பேச்சில் குறுக்கிட்ட நாராயணன்."எது எப்படியோ..நம்ம போராட்ட விஷயத்தையும், தண்ணீ பிரச்னையும் பிருத்வி தம்பி..எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதிடுச்சு..அதுபோல இரட்டை தம்ளர் முறையும் ஒழிஞ்சா நல்லா இருக்கும்"

"நம்ம பண்ணையார் இருக்காரே..அவர் இரட்டை தம்ளர் முறையை ஒழிக்கக் கூடாது என நினைக்கறவங்கள்ல ஒருத்தர்.என் உடம்புல பரம்பரை ,பரம்பரையா உயர்ந்த ஜாதி ரத்தம் ஓடுதுன்னு சொல்வாரு.ஆனா பாரு நாராயணா, அவர் வெட்டுப்பட்டு ஆஸ்பத்திரிக்குப் போனப்ப, அவர் உடம்புல இருந்து அதிக ரத்தம் வெளியேறிடுச்சுன்னு..உடனடியா ரத்தம்கொடுகக்ணும்னு டாக்டர் சொல்லிட்டாரு.அவரது ரத்த குரூப் ஏபி பாசிடிவ்.அது ரொம்ப பேருக்கு இல்லாத ஒன்னு.அதே குரூப்பைச் சேர்ந்த அவரோட ஒன்னு, இரண்டு உறவும்..கொடுக்கப் பயந்து ஓடிப்போயிடுச்சு.
தற்செயலா..நம்ம மூக்கனுக்கும் அதே வகை ரத்தம்தான்.அவந்தான், என் உடம்புல இருந்து எவ்வளவு ரத்தம் வேணும்னாலும் எடுத்துக்கங்கன்னான்.அவன் மட்டும் அன்னிக்கு ரத்தம் கொடுக்கலைன்னா..பண்ணையாருக்கு அன்னிக்கே சங்கு ஊதியிருக்கணும்"

இந்த விஷயங்களை எல்லாம் நாராயணன் அறிந்திருந்தாலும், தெரியாதது போல "அப்ப..பண்ணையார் உடம்புல மூக்கன் ரத்தம்தான் ஓடுதுன்னு சொல்லுங்க" என்றான்.

"அப்படியும் சொல்லலாம்..தப்பு இல்லை.இனிமேலாவது பண்ணையார் மனசு மாறுதான்னு பார்ப்போம்.என்ன மூக்கா...நீ மௌனமாயிட்ட"

"நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? பண்ணையார் உப்பைத் தின்னு வளர்ந்தவன் நான்.அதனாலதான் அவர் ரத்த வகையும் என்னுது ஒன்னா இருந்ததோ என்னவோ! அவரால்..இந்த உடம்புல ஊறின ரத்தம்..அவருக்கேப் பயன் பட்டது ரொம்ப சந்தோஷம்"

இந்த நேரத்தில், அர்ச்சகர் ஓட்டமும், நடையுமாக அங்கு வந்தார்..வந்தவர்..அவர்களிடம் "இதோ பாருங்க..எவ்வளவு சொல்லியும் கேட்காம..பண்ணையார், மூக்கனைப் பார்க்கணும்னு வந்துக்கிட்டு இருக்கார்,உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்றேன்.நடந்த விஷயங்கள் எல்லாம் அவருக்கு ஓரளவுதான் தெரியும்.இருந்தாலும், மூக்கன் ரத்தம் கொடுத்ததால்தான் அவர் பொழச்சார்னு அவர் கிட்ட யாரும் சொல்லிடாதீங்க"

"ஓஹோ..அவர் சாதி வெறி..இன்னமும் போகலையா? அது சரி.உங்க ஆண்டவனே சாதி பார்க்கறவர்தானே"

"ராமா..என்ன சொல்ற?"

"நந்தன் அந்த ஆண்டவனை தரிசிக்க ஆசைப்பட்டப்போ, கோயிலுக்கு வெளியிலேயே அவரை நிக்க வைச்சு,"சற்றே விலகி இரும் பிள்ளாய்"ன்னு அந்த நந்தியத்தானே நகரச் சொல்லி தரிசனம் தந்தார் உங்க ஆண்டவன்.அவர் நினைச்சிருந்தா..அந்த நந்தனை அருகிலேயே அழைத்து தரிசனம் தந்திருக்கலாமே!"

"ராமா! எந்த ஒரு விஷயத்தையும் காரணம் இல்லாம அந்த ஆண்டவன் செய்ய மாட்டான்.அவனோட எண்ணத்தை மனுஷங்களான நாம என்ன அறிவோம்? நீ சொல்றபடியே இருந்தாலும், தன்னை தினசரி பூஜித்து வந்த அந்தணனரோட பக்தியைவிட கண்ணப்பரோட பக்தி உயர்ந்தது என உணர்த்தி, அவரை தன்னோட வலது பக்கம் இடம் கொடுத்து வைச்சுக்கலையா?"

நடுவில் புகுந்த மூக்கன்,"என்னை மன்னிக்கணும்.தயவு செஞ்சு இப்ப நாத்திகப் பேச்சு எல்லாம் வேண்டாமே..இந்தத் தீண்டத்தகாதவனோட ரத்தம்தான் தன் உடம்புலே ஓடுதுங்கற எண்ணத்தை பண்ணையாரால பொறுக்க முடியாது.இந்த விஷயங்களே அவருக்குத் தெரிய வேண்டாம்"என்றான் மூக்கன்.

"அது எப்படி தெரியாமல் இருக்கும் மூக்கா..அவரை பிழைக்க வைக்க நாம பட்ட பாடு...இந்த ஊருக்கேத் தெரியுமே"" என அர்ச்சகர் சொல்லிக் கொண்டிருந்த போது..பண்ணையார் அங்கு வந்து விட்டார்.

அவரைப் பார்த்த ராமன், "வாங்க! பண்ணை..இப்ப எப்படி இருக்கீங்க?" என்றான்.

"நான் செத்துப் பொழச்சு வந்திருக்கேன்" என்ற பண்ணையிடம், "அப்படிச் சொல்லாதீங்க..நாம இந்த உலகத்துல எதுக்குப் பொறந்தோமோ..அதுக்கான வேலை முடியலைன்னு நினையுங்க.அது முடிஞ்சதும் நாம போற வேளை தெரிஞ்சுடும்" என்றார் அர்ச்சகர்.

அடுத்து மூக்கனைப் பார்த்த பண்ணையார்,"மூக்கா..உனக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.நான் இன்னிக்கு உயிரோட இங்கே நிக்கறேனா..அது உன்னாலத்தான்.உன் கிட்ட எல்லா வேலையையும் வாங்கிக் கிட்டு..எவ்வளவு கேவலமா நடத்தியிருக்கேன்.அப்ப எல்லாம் விதை நெல்லை சிந்தினா அள்ளிடலாம்.சிந்தின சொற்களை அள்ள முடியாதுன்னு தெரியாமப் போச்சு"

"ஐயா..பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க.நீங்க மட்டும் என்ன..எங்களைச் சேர்ந்த தாமோதரன் மேலே விழ இருந்த அரிவாள் வெட்டை நீங்க தாங்கி அவனைக் காப்பாத்தினீங்க.அவனுக்காக உயிரையும் கொடுக்க இருந்தீங்களே..ஐயா..நாம் என்னிக்குமே உங்க மூக்கந்தான்.இந்த உடம்பே உங்க உப்பைத் தின்னு வளர்ந்தது"

பேச்சை திசை திருப்ப எண்ணிய நாராயணன், "பண்ணை..டீ சாப்பிடறீங்களா?" என்றான்.

"நாராயணா நல்ல டீயாப் போடு.ராமா, நீயும் டீ சாப்பிடறியா?"

"நான் இப்பதான் கொஞ்ச நேரம் முன்னால சாப்பிட்டேன்.மூக்கன்தான் சாப்பிடலை"

"அப்படியா...நாராயணா..எனக்கும், மூக்கனுக்கும் இரண்டு டீ போடு.அப்பறம் மறந்துடாதே..தம்ளர்ல ஒன்னும், வட்டில்ல ஒன்னு"

"பண்ணை உங்களை மாத்தவே முடியாது" என்றான் ராமன்.

"என்ன செய்யறது ராமா? இந்த உடம்புல பரம்பரை ரத்தம் ஓடுதே" என்று சொன்ன பண்ணையார்...திடீரென நாத்தழுதழுக்க, "இல்லை;;இல்லை மூக்கனோட ரத்தமில்ல ஓடுது" என்றபடியே, மூக்கனை அணைத்துக் கொண்டார்.

மூக்கன் அதிர்ச்சியுடன் "ஐயா..என்ன இதெல்லாம்"

"ஆமாம் மூக்கா...எல்லா மனுஷ உடம்புலேயும் சிவப்புநிற ரத்தம்தான் ஓடுதுன்னு எனக்குப் புரிய வைத்தவனே நீதானே!"

இதற்குள் நாராயணன் டீ  கொண்டுவர.."நாராயணா..அந்த வட்டிலை என் கிட்டக் கொடு...தம்ளரை மூக்கன் கிட்டக் கொடு" என்றபடியே ,வட்டிலை வாங்கி டீ யினை அருந்தினார் பண்ணையார்.

இதையெல்லாம்  பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சகர், தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டார்.

பிறகு அனைவரும்...ஊர் விஷயங்களைப் பேச ஆரம்பித்தனர்.

அப்போது அங்கு வாஞ்சியின் கார் வந்து நின்றது.

அதிலிருந்து வாஞ்சியும், கற்பகமும் இறங்கினர்.காரின் பின் கதவை கற்பகம் திறக்க ,தாமோதரனும், செங்கமலமும் அதிலிருந்து இறங்கினர்.

"ஐயா...என் தெய்வமே! என் உயிரைக் காப்பாத்த உன் உயிரையேத் தியாகம் பண்ணப் பார்த்தியே!"என்று கதறியபடியே வந்த தாமோதரன் , பண்ணையாரின் கால்களில் விழுந்தான்.

அவனை அணைத்து எழுப்பிய பண்ணையார், "தாமோதரா! ஒரு உயிருக்கு ஆபத்துன்னா..அது என் உயிராய் இருந்தா என்ன..உன் உயிராய் இருந்தா என்ன.யார் உயிர் ஆனாலும் அதற்கு ஒரு விலையுண்டா?" என்றார்..பின்.."உன்னை குப்பால் ஏன் வெட்ட வேண்டும்? உனக்கும் அவனுக்கும் என்ன பகை? அவன் கூட இப்ப ஜாமீன்ல வந்துட்டதா கேள்விப்பட்டேன்" என்றார்.

"ஆமாம் ஐயா..எல்லாம் அந்த படுபாவி  மயில்வாகனனை  இந்த கிராமத்துக்குள்ள நான் வர விட்டதுதான்.அரசியல் ஒரு சாக்கடைங்கற பாடத்தை நான் படிச்சுட்டேன்.மயில்வாகனனுடைய எண்ணங்களுக்கு நான் படியாததால..நம்ம கிராமத்து ஆளு குப்பாலை அவனுக்கு அடியாளா ஆக்கிக்கிட்டு, போராட்டம் அன்னிக்கு என்னைத் தாக்கச் சொல்லியிருக்கான்" என்றான் தாமோதரன்.

"தாமோதரா..நீ ஜாக்கிரதையா இரு.அந்த மயில்வாகனன் யானை மாதிரி.உன்னைத் திரும்பித் தாக்க முயற்சிப்பான்." என்றவர்..வாஞ்சியைப் பார்த்து, "தம்பி..உன்னை நான் முன்ன பின்ன பார்த்தது இல்ல.ஆனா, என்னை வெட்டினதுமே..நேரத்தை வீணாக்காமல்..உன் கார்ல என்னை பக்கத்து ஊர் ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போன..நான் இன்னிக்கு உசுரோட இருக்கேன்னா..அதுக்குக் காரணமாய் இருக்கறவங்கள்ல நீயும் ஒருத்தன்..உனக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேனோ..நன்றி தம்பி" என்றார்.

"ஐயா..உயிருக்குப் போராடற ஒருத்தரைக் காப்பாத்த வேண்டியது மனிதநேயம்.அதைத்தான் நான் செஞ்சேன்."என்றான் வாஞ்சி,

"சரி நான் கிளம்பறேன்" என்ற படியே..பொதுவாக எல்லோருக்கும் சேர்த்து தன் கைகளைக் கூப்பி விடை பெற்றார் பண்ணையார்.

இவ்வளவு நேரமும் அங்கு நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் அரச மரத்தின் பின்னால் இருந்து கவனித்துக் கொண்டிருந்த குப்பால்..உடனே அவற்றையெல்லாம் மயில்வாகனனிடம் தெரிவிக்க விரைந்தான். 

Monday, January 13, 2020

27 - புயல் கடந்த பூமி

போராட்ட நாள்...

வழக்கமாகக் காலையிலேயே சுறுசுறுப்புடன் விடியும் பூங்குளம்..அன்று சற்று சோம்பலுடனேயே விடிந்தாற் போலத் தோன்றியது.

அவரவர் வேலைகளைக் கவனித்துச் செல்லும் வழக்கமான நாளாய் இல்லாது..ஆங்காங்கே குழுக்களாகக் கூடி மக்கள் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

நாராயணன் டீக்கடையைத் திறக்கவில்லையாயினும், மூடியக் கடையின் முன்னர் மாடசாமி,ராமன், மூக்கன்,நாராயணன் மற்றும் சிலர் கூடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மாடசாமி, "காலையில் நான் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வண்டி ஓட்டி வரும்போது, நம்ம வாரச்சந்தை கூடும் திடலில் ஐந்து, ஆறு லாரிகள் நின்றுக் கொண்டிருந்தன.ஒவ்வொரு லாரியிலும் ஐம்பதற்கும் மேற்பட்ட ஆட்கள் இருந்தனர்.உருட்டுக் கட்டையும், அரிவாள்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.குப்பால் அங்கே நின்னுக் கிட்டு இருந்தான்..அநேகமாக கலாட்டா செய்ய வந்த மயில்வாகனன் ஆட்களாக அவர்கள் இருக்கக் கூடும்" என்றான்.

"கூடும்..என்ன கூடும்..அவனோட ஆட்கள்தான்.இதோ பாருங்க..நம்ம கிராமத்து ஆட்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது.பண்ணையார், அர்ச்சகர் எல்லாம் வயசானவங்க.அதனால அவங்களைத்தான் முதல்ல குறி வைப்பாங்க.அதனால, நாம பண்னையாருக்கும், அர்ச்சகருக்கும் பாதுகாப்பாக இருக்கணும்.அவங்களுக்கு இந்தக் கூலிப்படையால எந்த ஆபத்தும் வந்துடக் கூடாது." என்றான் ராமன்.பின்  மூக்கனிடம், "மூக்கா..தாமோதரன் என்ன  சைடு எடுத்து இருக்கான்னு உனக்குத் தெரியுமா?" என்றான்.

"ராமண்ணே..இப்ப எல்லாம் தாமோதரன் மாறிட்டு இருக்கான்னு நெனக்கிறேன்.அந்த மயில்வாகனன் தாமோதரனை வைச்சே எங்களை அழிக்க நெனச்சான்.ஆனா தாமோதரன் சரியான நேரத்துல முழிச்சுக்கிட்டான்னு நெனக்கிறேன்"

அந்த வேளையில், ஒரு கார் வந்து அங்கு நின்றது.அதிலிருந்து வாஞ்சி இறங்கினான்.புதிதாக ஒரு இளைஞன் அங்கு வந்து இறங்கியதைக் கண்ட நாராயணன் அவனை அணுகி, "தம்பி யாரு? ஊருக்கு புதுசா வந்து இருக்காப்போல இருக்கு" என்றான்.

"என் பெயர் வாஞ்சிநாதன்.நான் தாமோதரனின் பொண்ணு படிக்கிற காலேஜ்லதான் படிக்கிறேன்.கற்பகம் இப்ப எப்படி இருக்கான்னு பார்க்க வந்தேன்.பார்த்துட்டேன்.அவதான் இன்னிக்கு கிராமத்துல ஏதோ போராட்டம்..அதுல நானும் கலந்துக்கணும்னு சொல்லிட்டா..என்னை கோவில் பக்கத்துல இருக்கச் சொன்னார் அவளோட அப்பா" என்றபடியே, தாமோதரன் அங்கு இருக்கின்றானா? என நோட்டமிட்டான்.

"அப்ப சரி" என்றான் நாராயணன்.

அந்த நேரத்தில் பண்ணையாரும், அர்ச்சகரும் அங்கு வர..அவர்கள் பின்னால் அந்த கிராமத்து முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள்  என ஒரு பட்டாளமே வந்தது.அவர்களுடன் அங்கிருந்த மாடசாமி, நாராயணன், மூக்கன், ராமன் மற்றும் இளைஞர்கள் அனைவரும் இணைந்தனர்.

கடைசியில் ஒடி வந்த தாமோதரன், பண்ணையாரைப் பார்த்து,ஒரு அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான்.அதற்கான அர்த்தம் "என்னை மன்னித்துவிடுங்கள்" என்பதே என்பதை பண்ணை அறிந்தார்.தாமோதரனுடன் செங்கமலமும் வந்திருந்தாள்.

அனைவரும், அரசின் விவசாயக் கிடங்குமுன் குவிந்தனர்.

"கர்நாடக அரசே தண்ணீர் கொடு...தண்ணீர் கொடு"

"போராடுவோம்..போராடுவோம்..தண்ணீர் கிடைக்கும் வரை போராடுவோம்"

"தண்ணீர் கேட்பது எங்கள் உரிமை..கொடுக்க வேண்டியது அரசின் கடமை"

"உறவுக்குக் கை கொடுப்போம்..உரிமைக்குக் குரல் கொடுப்போம்"

என்ற பதாகைகளை கைகளில் வைத்துக் கொண்டு குரல் கொடுத்தனர்.

அந்த நேரம்..எங்கிருந்தோ ஒரு கூட்டம் ஓடி வந்து இவர்களுடன் கலந்துக் கொண்டது..வந்த கும்பல் நின்றுக் கொண்டிருந்த கிராம மக்களிடம் தேவையில்லாமல் வாதம் செய்து வம்புக்கிழுத்து..அவர்களை தாக்க ஆரம்பித்தது.

அமைதியான போராட்டத்தில் வன்முறை புகுந்தது...கூட்டத்துடன் இருந்த குப்பால், கையில் அரிவாளுடன் தாமோதரனை நோக்கிப் பாய்ந்தான்.

ஒரு நொடியில் அதைப் பார்த்துவிட்ட பண்ணையார், "தாமோதரா..தாமோதரா.."என்று குரல் கொடுத்தார்.ஆனால் கூட்டத்தின் களேபரத்தில் அது யார் காதிலும் விழவில்லை.

தாமோதரனை நெருங்கிய குப்பால், அரிவாளை ஓங்கி ஒரே வெட்டாய் வெட்ட முயல..ஓடி வந்த பண்ணையார் தாமோதரனைத் தள்ளிவிட , அந்த அரிவாள் வெட்டு அவர் மார்பில் பாய்ந்தது.பண்ணையார் பூமியில் சாய்ந்தார்.

அதைக் கண்ட கூட்டத்தின் ஒரு பிரிவினர்,"அய்யய்யோ..பண்ணையாரை வெட்டி விட்டாங்க!"பண்ணையாரை வெட்டிவிட்டாங்க" என்றபடியே..குப்பாலைப் பிடித்துக் கொண்டனர்.

தனக்கு விழ இருந்த வெட்டை பண்ணையார் வாங்கிக் கொண்டார் என்பதை உணர்ந்த தாமோதரன், உடனே வாஞ்சியைக் கூப்பிட்டு..அவனது காரில் பண்ணையாரைத் தூக்கிப் போட்டுக் கொண்டு.மூக்கனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு அடுத்த ஊர் மருத்துவ மனைக்கு வண்டியை ஓட்டச் சொன்னான்.

எல்லாமே சில நொடிகளில் நடந்து முடிந்தது.

அதுவரை எங்கே இருந்தனர் என்பது தெரியாத காவல்துறை அதிகாரிகள் சிலர் அப்போதுதான் அங்கு வர, அவர்களிடம் குப்பால் ஒப்படைக்கப்பட்டான்.

மக்களை அமைதியாக திரும்பும்படி ராமனும், அர்ச்சகரும் வேண்டிக் கொள்ள, கூட்டம் அமைதியாகக் கலைந்தது.

பூங்குளம்..புயல் அடித்து ஓய்ந்த பூமியாய் அமைதிக்குத் திரும்பியது

Saturday, January 11, 2020

26 - மயில்வாகனனுக்கு ஒரு எச்சரிக்கை

மயில்வாகனன், குப்பால் மூலம் பூங்குளம் கிராமத்தில் நடந்து வரும் நிகழ்ச்சிகளையும், கற்பகத்திடம் அவன் ஆட்கள் நடந்து கொண்ட விதம் குறித்து எழுந்துள்ள எதிர்வினைகளையும் கேட்டு அறிந்தான்.

அதனால், தாமோதரன் எந்த நேரமும் அங்கு வரலாம் என எண்ணினான்.அப்படி அவன் வரும் போது..குப்பால் அங்கு இருக்கக் கூடாது என்றும், அடுத்து உள்ள அறையில் ஒளிந்து கொள்ளுமாறும் கூறினான்.

மயில்வாகனன் எண்ணியபடியே..தாமோதரன் ஆவேசத்துடன் மயில்வாகனன் வீட்டின்முன் நின்று கொண்டிருந்த அல்லக்கைகள் தடுத்தும்..அவர்களை ஒதுக்கி விட்டு உள்ளே நுழந்து.."மயில்வாகனா..மயில்வாகனா..: என உரக்கக் குரல் கொடுத்தான்.

"என்ன தாமோதரா...மரியாதை இல்லாமல் பெயர் சொல்லிக் கூப்பிடறே" என்றவாறே வெளியே வந்தான் மயில்வாகனன்.

"மரியாதையா...நீ செஞ்ச காரியத்துக்கு மரியாதை வேறயா? சே..உன்னைப் போய்..உனக்குப் போய் என் உயிரைக் கூடக் கொடுப்பேன்னு சொன்னேனே...அன்னிக்கே என் பொண்ணு சொன்னா..அவகிட்ட..ஒருநாளாவது ஒருநாளாவது உன் மனைவியா இருக்க முடியுமா?ன்னு கேட்டேன்னு..ஆனா நான் தான் உன் மேல இருந்த நம்பிக்கையில..என் தலைவன் ரொம்ப நல்லவன்..அப்படி எல்லாம் கேட்டு இருக்க மாட்டார்னு சொன்னேன்"

"உன் பொண்ணு கிட்ட நான் அப்படிக் கேட்டேனா?..இல்லையே!"

"படுபாவி..செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு ஒன்னுமே தெரியாதவன் மாதிரி நடிக்கிறியா?,,,நீ உருப்புடுவியா?"

"ஓஹோ..எனக்கு சாபம் கொடுக்கிறியா...எங்களை மாதிரி அரசியல்வாதிங்களுக்கு எவ்வளவு பேர் சாபம் கொடுக்கறாங்க...அந்த சாபமெல்லாம் பலிக்காதுடா..நாங்க எல்லாம் அந்த ஆண்டவன் மாதிரி...
ஆண்டவனே! உனக்குக் கண் இல்லையா?உன் மனசு கல்லா?ன்னு கடவுளை நிந்திக்கிற பக்தன் கூட அடுத்த நிமிஷமே..ஆண்டவா காப்பாத்துன்னு வேண்டிக்கிறாப்போல, அரசியல்வாதிங்களை நீங்க எல்லாம் எவ்வளவு திட்டினாலும்..எவ்வளவு சாபம் கொடுத்தாலும்..உங்களுக்குக் காரியம் ஆகணும்னா எங்கக் கிட்டதான் திரும்பி வருவீங்க.இப்ப சொல்லு..உன் பொண்ணு கிட்ட நான் அப்படிக் கேட்டு இருப்பேன்னு நீ நம்பறியா?"

"முதல்ல நான் நம்பல.ஆனா...நேத்து நீ உன் கூலிப்படையை அனுப்பி..அவளைக் கடத்தி..நல்லவேளை..அவகூட படிக்கிற அந்த வாஞ்சித் தம்பி இருந்ததால பொழச்சா"

"நான் ஆட்களை அனுப்பி உன் பொண்ணை கடத்த முயற்சித்தேனா...நல்ல ஜோக்.இதோ பாரு தாமோதரா, நான் அப்படிப்பட்ட ஆள் அல்ல.நான் நெனச்சா பெரிய சினிமா நடிகைகள் எல்லாம் என் ஆசைக்கு வரத் தயாரா இருக்காங்க. அதையெல்லாம் விட்டுட்டு கேவலம் உன் பொண்ணை...ச்சீ..இதைச் சொல்ல உனக்கு நாக்குக் கூசலை"

"அப்போ..என் பொண்ணு பொய் சொல்றான்னு சொல்றியா?"

"அதை நான் சொல்லித்தான் நீ தெரிஞ்சுக்கணுமா?"

"என் பொண்ணு பொய் சொல்லமாட்டா.உன்னைப் பத்தி நான் எல்லாத்தையும் கேள்விப் பட்டுட்டேன்.இப்ப சொல்றேன் கேட்டுக்க..நீ எவ்வளவு பெரிய ஆளா வேணும்னாலும் இருக்கலாம்.என்ன வைச்சு எங்க ஆட்களை அடக்க நினைக்கலாம்.ஆனா என்னை மிரட்டி உன் தேவையெல்லாம் நிறைவேத்திக்கலாம்னு நெனச்சே..இது வைரம் பாஞ்ச உடம்பு.உன் வாலை ஒட்ட நறுக்கிடுவேன்.சட்டப்படி உன்னை உள்ளே தள்ளிடுவேன்"

"ஓஹோ புரிஞ்சுப் போச்சு...உன் பொண்ணோட ஃபிரண்ட்...அவனோட தாத்தா ஒரு பெரிய வக்கீல்...அது என்ன சொல்றது...ம்...பாரிஸ்டர்..அவர் இருக்கற தைரியத்துல சொல்றியா? என்ன அபப்டிப் பார்க்கறே! எனக்கு எல்லாமேத் தெரியும்..ஒருத்தர் மேல நான் ஆசைப்பட்டுட்டா அவங்களைப் பத்தின முழு விவரமும் கலெக்ட் பண்ணிடுவேன்..தாமோதரா..என் கேரக்டரையே புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றியே. நம்ம அப்ரோச்சே வேற.உன் பொண்ணோட ஃபிரண்ட்  அந்தப் பையனை எதாவது காரணத்தைக் காட்டி அரெஸ்ட் பண்ண வைச்சுடறேன்..பாக்கறியா..எனக்கு இந்த மேட்டர் எல்லாம் ஜுஜுபி...அப்பறம் அவனைக் காப்பாத்தவே அவன் தாத்தாவுக்கு நேரம் சரியா இருக்கும்..உம் பொண்ணை எப்படிக் காப்பாத்துவார் சொல்லு?"

"டேய்..மயில்வாகனா..உனக்குக் கடைசியாச் சொல்றேன்..நீ எப்படி வேணும்னாலும் இருந்துட்டுப் போ..ஆனா, என் கிட்டேயோ..இல்லை..என் பொண்ணுக் கிட்டேயோ எசகுபிசகா ஏதாவது நடந்துண்டா..உன்னை அழிச்சுடுவேன்..ஜாக்கிரதை...நாங்க பணக்காரங்க இல்லதான்..என்னால உன்னைப்போல பணத்தால சாதிக்க முடியாதுதான்..ஆனா...உடம்பால முடியும்.உன் பணம் சாதிக்க முடியாததை..என் உடம்பு சாதிக்கும்.இப்போதைக்கு இதைத்தான் சொல்லுவேன்..ஜாக்கிரதை" என மயில்வாகனனை எச்சரித்து விட்டு தாமோதரன் செல்ல, மயில்வாகனன் அடுத்த அறையில் ஒளிந்திருந்த குப்பாலை அழைத்தான்.

"குப்பால்..நடந்ததை எல்லாம் பார்த்த இல்ல..நாளைக்கு உங்க கிராமம்  முழுக்க போராட்டம் நடத்தப் போறாங்க.அந்த போராட்டத்துல இந்த தாமோதரனும் கலந்துப்பான்.நான் அஞ்சு லாரி ஆட்களை அனுப்பறேன்.அவங்க போராட்டக்காரங்களோட நுழஞ்சு குழப்பத்தை உண்டாக்குவாங்க! அந்த சமயம் பார்த்து நீ தாமோதரனை போட்டுடு.இதை மட்டும் நீ செஞ்சா...உனக்கு என்ன வேணுமோ அதை நான் செய்யறேன்"

"சரி தலைவரே! நான் வேலையை முடிச்சுட்டு வந்து உங்களை சந்திக்கறேன்.வரட்டா" என்று சொல்லிவிட்டு குப்பால் வெளியேறினான்.

"டேய் தாமோதரா! என் கிட்டயா வாலாட்டற..நான் யாருன்னு உனக்குக் காட்டறேன்" என்ற படியே மயில்வாகனன் அமர்ந்தான்.

Friday, January 10, 2020

25 - போராட்டம்

"காட்டுவழிதனிலே அண்ணே கள்ளர் பயமிருந்தால்
எங்கள் வீட்டுக் குலதெய்வம் வீரம்மை காக்குமே!
நிறுத்து வண்டியென்று கள்ளர் நெருக்கிக் கேட்கையிலே
எங்கள்  கருத்த மாரியின் பெயர் சொன்னால் காலனும் அஞ்சுமடா..டண்..டணா..டண் என்று மூக்கனை பாடவிட்டு கேட்டுக் கொண்டிருந்தனர் ராமனும், நாராயணனும்.

திடீரென ராமன், "ஆமாம்..மாரி..இந்த மாரியால நம்ம ஊர் மக்களையேக் காப்பாத்த முடியல..உங்க மாரி காலனைப் பார்த்து பயப்படறா..அதனாலத்தான் இங்கே இப்படி ஒரு வறுமை தலைவிரிச்சு ஆடுது" என்றான்.

"உண்மைதான்..பாவம் நம்ம கவுண்டர் எப்படிப்பட்ட பரம்பரை,அவரே வறுமை தாங்காம குடும்பத்தோட தற்கொலை  பண்ணிக்கிட்டாரே"  என்றான் மூக்கன்.

"நல்ல மனுஷன் தான்.ஆனா, கோழையாகவும் இருந்துட்டாரே!இந்த பூமியில பிழைக்கவா வழியில்லை.தற்கொலை ஏன் செஞ்சுக்கணும்?,மழை இல்லாமல் இருக்கலாம்.தண்ணீர் வராமல் இருக்கலாம்..வயல்ல விளைச்சல் இல்லாம, வயல் வாடி நெருஞ்சிக்காடா இருக்கலாம், சோற்றுக்கே வழி இல்லாமல் இருக்கலாம்..ஆனா இரண்டு கைகள் இருக்கே..மனுஷனுக்கு இந்த இரண்டு கைகள் இருக்கறச்சே ..எந்த பஞ்சமும் நம்மை ஒன்னும் செஞ்சுடாது"

இதைக்கேட்ட நாராயணன், "ஆமாம்..நீ ஏன் பேச மாட்டே! உனக்கு உன் தொடுப்பால பணக் கஷ்டம் இல்ல.." என்றான்.

"பணம் இருந்து என்ன பணத்தையாத் திங்க முடியும்? பணம் கொடுத்தாலும் வாங்க..பொருள் கிடைக்கணுமே" என்றான் மூக்கன்..

அதற்கு ராமன், "மூக்கா..வர வர .. ரொம்ப புத்திசாலியா மாறிக்கிட்டு இருக்கே" என்றான்

"இப்படியே போச்சுன்னா ..நானும் வேற எங்கேயாவது போய் டீக்கடை வைச்சு பொழச்சுக்க வேண்டியதுதான்" என்ற நாராயணனிடம் ராமன், "உனக்கு என்ன எங்கேயாவது போய் டீக்கடை வைச்சு பொழச்சுப்ப..ஆனா மூக்கன் மாதிரி ஆளுங்க நிலைதான் மோசம்" என்றான்,

"அன்னிக்கு அரசாங்க அதிகாரிகள் வந்து பார்த்துட்டுப் போனாங்களே..அப்புறம் நாமும் தாசில்தார்கிட்ட மனு கொடுத்தோம்.அதெல்லாம் என்ன ஆச்சு?"

"அரசாங்கம் ஒரு கமிட்டியை அமைச்சு இருக்கு.அது விசாரணைப் பண்ணி..நம்ம கிராமத்துல மழையே இல்லை.குடிக்கக் கூட தண்ணீ கிடைக்கறது இல்ல.வயல் எல்லாம் விலைச்சல் இல்லாம தரிசாக் கிடக்கு..அப்படின்னும் அறிக்கைக் கொடுக்கும்.அதுக்குமேலே அரசியல் கட்சிகள் எல்லாம் நமக்கு சாதகமா குரல் கொடுத்தா...நமக்கு ஏதாவது உதவி கிடைக்கும்.இது எல்லாம் தண்ணீ இல்லாம சாகும்போது, தண்ணீர் கேட்டு செத்ததுக்கு அப்பறம்..பத்தாம் நாள் தண்ணீ ஊத்தற கதைதான்"

"சாதாரணமா கண்ணுல பார்த்தாலேயே.வறுமையும்..வயல்களோட நிலமையும் தெரியுமே..நீ சொல்ற மாதிரி கமிட்டி எல்லாம் வந்து விசாரிக்கணுமா என்ன?"

"நீ கேட்டிட்ட..இதையே நான் கேட்டா இந்த ஊர்..என்னை ஏடா கூடமா ராமன் பேசறான்னு சொல்லும். கமிட்டிங்கறது  புதுசு இல்ல.விசாரணைக் கமிஷன் அமைக்காத ஆரசாங்கமே கிடையாது.2004ல மட்டும் அரசாங்கம் 50 விசாரணைக் கமிட்டிகளை அமைச்சு இருக்கு.இதுபோல கமிட்டிகள் தான் நிலைமையை ஆராயணும்னா..மத்தியில கிட்டத்தட்ட 60 மந்திரிகளுக்கு மேல இருக்காங்க.ஸ்டேட்ஸில வேற அமைச்சருங்க..இவங்க எல்லாம் எதுக்காக?

மத்தியில மட்டும் 500க்கு அதிகமான ஐ ஏ எஸ் அதிகாரிங்க..34லட்சத்துக்கும் மேலே மத்த அதிகாரிங்க..இவங்களுக்கு எல்லாம் அரசாங்கம் தரச் சம்பளம் மட்டுமே 38000 கோடிகளுக்கு மேல..இவங்களுக்கெல்லாம் தெரியாத விஷயங்களையா//இந்த கமிட்டிகள் கண்டுபிடிக்க முடியும்? அப்படி முடியும்னா..இவ்வளவு அமைச்சர்ங்களும், அதிகாரிகளும் எதுக்கு"

"ராமா...நீ சொல்றது எனக்கு சரியா புரியல" என்றான் மூக்கன்.

"உனக்கு மட்டுமில்ல..யாருக்குமே புரியாது.காவிரில தண்ணி இல்லாதப்போ..வாயை மூடிக்கிட்டு இருக்கற அரசியல்வாதிங்க..கர்நாடகாவுல நல்ல மழை பெஞ்சு..அவங்களோட அணையெல்லாம் நிறைஞ்சு..வேற வழியில்லாம..அணைகளை திறந்துவிடறதைத் தவிர வேற வழியில்லங்கறப்போ..அதை திறக்கறப்போ.."தண்ணீயை கர்நாடக அரசே திறந்துவிடு"ன்னு போராட்டம் நடத்தறாப்போல நடத்தி..எங்களாலத்தான் தண்ணீ வருதுன்னு வெற்றிவிழா நடத்துறாங்களே..இந்த விஷயம் பாமர மக்களுக்குப் புரியுமா?"

"காவிரி மட்டும் காஞ்சு கிடக்கல.வைகை வத்திப் போச்சு..பாலாறு பாழடைஞ்சுப் போச்சு.வயலை வானம் பாத்த பூமின்னு சொல்லுவாங்க/ஆனா, நம்ம ஆறுகள் கூட வானம் பார்த்த ஆறுகள்னு ஆகிப் போச்சு" என்றான் நாராயணன்.

திடீரென ஞாபகம் வந்தவனாக மூக்கன் "ராமண்ணே! ஒரு முக்கிய விஷயம் சொல்ல மறந்துட்டேன்.நாளைக்கு  நம்ம ஊரைவிட்டு வெளியே எங்கும் போயிடாதீங்க. பண்ணை தலைமையில..நம்ம ஊர் வறுமையைப் பத்தி, அதனால தற்கொலை செய்து கொள்பவர்கள் பற்றி, காவிரில தண்ணீ விடாததாலே..தொடர்ந்து நாலாவது வருஷமா பயிர் விளையாததைச்  சுட்டிக்காட்டி..நம்ம ஊர் விவசாய ஆஃபீஸ் எதிரே போராட்டம் நடத்தறோம்.அதுல எல்லாரும் கலந்துக்கணும்னு  சாயரட்சை நான் தண்டோராப் போடப்போறேன்" என்றான்.

"ஆமாம்..நம்ம கஷடத்தைச் சொல்லி போராட்டம் நடத்தப்போறோம்.ஆனா...மயில்வாகனன் கட்சி ஆளுங்க இதை எதிர்க்கப் போறாங்களாம்.லாரியில ஆட்களை கொண்டு வரப்போறதா ஊர்ல வதந்தி பரவிக் கிட்டு இருக்கே" என்றான் நாராயணன்.

"நம்ம கிராமத்து ஜனங்க போராட்டத்தால..இந்த ஊர்ல நல்லது நடந்தா..அந்தப் பேர் அவங்களக்கு வராமல் போயிடும் இல்லையா? அதனாலதான் அவங்க அப்படிப்பண்றாங்க."என்ற ராமன்..அப்போதுதான் பண்ணையார் அங்கு வருவதைப் பார்த்து, பண்ணையாரிடம், "வாங்க பண்ணை..நாளைக்கு ஏதோ போராட்டம் பண்னப்போறீங்களாமே!" என்றான்.

"பண்ணப்போறீங்க இல்ல..பண்னப் போறோம்" என்ற பண்ணையார்.."அதைப்பத்தித்தான் நான் எல்ல்லோர்கிட்டேயும் சொல்லிட்டு வரேன்..நம்ம கிராமம் முழுசும் கலந்து கொள்ளணும்.அப்போதான் நமக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்கும்" என்றார்,

"ஆமாம்..மயில்வாகனன் ஆளுங்க ஏதோ எதிர்ப்பு தெரிவிக்கப் போறாங்களாம்" .

"நம்ம போராட்டத்துக்கு எதிரா..நம்மை தோல்வி அடையச் செய்ய..அடுத்த ஊர்ல இருந்து லாரியில அடியாட்களை கொண்டு வரப்போறதா சொல்றாங்க.நம்ம போராட்டத்தை தோல்வியடையச் செய்யப் போறாங்களாம்.நாம எல்லாம் ஒத்துமையா இருந்து அவங்களை துரத்தி அடிக்க்கணும்"

"நீங்க கவலைப்படாதீங்க பண்னை.நமக்குள்ள அபிப்பிராய பேதம் இருக்கலாம்.அதை எதிரிங்க தங்களுக்கு சாதகமா ஆக்கிக்கக் கூடாது.உறவுக்குக் கை கொடுப்போம்..உரிமைக்குக் குரல் கொடுப்போம்..இதுதான் இப்ப நம்ம வாசகமா இருக்கணும்" என்றான் பதிலுக்கு ராமன்.

"நானும் நாளைக்குக் கடையை மூடிட்டு..போராட்டத்துல கலந்துக்கப் போறேன்" என்றான் நாராயணன்.

"நீ மட்டுமில்ல நாராயணா..நம்ம ஊர்ல நாளைக்கு எல்லாக் கடைகளும் மூடப்படும்.. நாளைக்கு எதுவுமே கிடைக்காது.தனிமரம் தோப்பாகாது..எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டோம்..இனி நம்மை வெல்ல முடியாது.நாளைக்கு நம்ம கஷடத்துக்கு ஒரு முடிவு வந்துடும்னு நினைக்கிறேன்" என்றார் பண்ணையார்.