Tuesday, January 21, 2020

37 - நதிநீர் இணைப்பு

காலச்சக்கரம் சுழன்றது..

ஒருநாள் காலை  பூங்குளம் வந்தான் ப்ருத்வி.

ரயில் நிலையத்தில் அவனை நிலைய அதிகாரியும், போர்ட்டர் சங்கரனும் வரவேற்றனர். வெளியே வந்தவன் மாடசாமி வண்டி நிற்பதைப் பார்த்தான்.

அதில் ஏறி கிராமத்துக்கு வரும் வழியில் . குப்பால் கடை மீண்டும் வளர்ந்து பல புதிய இரு சக்கர வாகனங்கள் வெளியே நின்றிருந்ததைப் பார்த்தான்.குப்பாலின், திடீர் வளர்ச்சிக்கான காரணம் அவனுக்குப் புரிந்து.விட்டது.

தாமோதரன் வயல்கள் இருந்த இடம், மற்றும் சிலர் வயல்கள் அனைத்திலும் முள்வேலி அமைகக்ப்பட்டு இருந்தது.கெமிகல் ஃபேக்டரி பெயர் தாங்கிய பலகை ஒன்றும் காணப்பட்டது.வயல்கள் முழுதும் மயில்வாகனன் ஆக்கிரமித்திருப்பான் என ப்ருத்வி யூகித்தான்.

அதற்குள் தேரடி வர..அங்கேயே இறங்கிக் கொண்டான்.மாடசாமி வண்டியை நிறுத்தி, அவனை இறக்கி விட்டுவிட்டு..மாட்டை வண்டியிலிருந்து அவிழ்த்து , வண்டியிலேயே கட்டிவிட்டு, அதன் முன் சிறிது வைக்கோலைப் போட்டான்.பின், பிருத்வியுடன், நாராயணன் டீக்கடைக்குச் சென்றான்.

டீக்கடையின் முன் மூக்கன், ராமன் அமர்ந்திருந்தனர்.

ப்ருத்வியின் திடீர் வருகை அவர்களுக்கு சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்த, "வாங்க தம்பி" என மூக்கன் வரவேற்றான்.

பிருத்வி, அவர்களைப் பார்த்து, குடுகுடுப்பைக்காரர் போல,"நல்ல காலம் பொறக்குது..நல்ல காலம் பொறக்குது" என்றான்.

"என்ன விஷயம் தம்பி" என்றான் ராமன்.

"கிராம அதிகாரியின் உண்மையான அறிக்கையும், அவர் மரணச் செய்தி பற்றியும் அனைத்து பத்திரிகைகளிலும் செய்தி வந்துவிட்டது.இப்போது உங்க பூங்குளம் பெயரே தமிழ்நாடு முழுதும் பிரபலமாகி விட்டது.உடனே,நிவாரணப்பணிகளில் ஈடுபடச் சொல்லி அரசாங்கம் ஆணை பிறப்பித்து இருக்கிறது" என்றான்.

"உடனடியா நமக்கு எதுவும் அதனால பிரயோசனம் இருக்கா?" என்றான் மூக்கன்.

"மின்சாரக் கட்டணம்,வரி இவற்றிலிருந்து விவசாயிகளுக்கு விலக்குக் கிடைக்கும்.விவசாயிகளின் வங்கிக் கடன்கள் தள்ளுபடியாகும்.இன்னுமொரு முக்கிய விஷயம், எல்லா பத்திரிகைகளும் வாசகர்களிடமிருந்து நிதி திரட்டுகிறார்கள்.இந்த கிராமத்தால..இதுபோல பிரச்னை உள்ள எல்லா கிராமங்களுக்கும் பலன் கிடைக்கப் போகுது,நம்ம ஊர் ஜனங்களுக்கு ஆறுமாசம் இலவசமா உணவுப் பொருள்களை வழங்க ஏற்பாடாகியுள்ளது" என்றான் ப்ருத்வி.

"நாட்டில் எவ்வளவு அட்டூழியம்,அநீதி நடந்தாலும் நல்லது பண்றவங்களும் இருக்காங்கன்னு சொல்லு"

"ஆமாம் ராமன். நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லோருக்கும் பெய்யும் மழை.ஆனா..இன்னிக்கு நல்லத்தலைவருங்க யாருன்னு தேட வேண்டியிருக்கு,எல்லாமே சுயநலத் தலைவரா ஆயிட்டதாலேதான் மழைகூட சரியான பருவத்துல பெய்யறதில்லை'

இப்போது ப்ருத்வியிடம் மூக்கன், "தம்பி,ஒரு வேடிக்கைப் பாத்தியா..இந்த ஊர் விவசாயிகள் கைகள் பல பேருக்கு உணவை விளைய வைச்சுக் கொடுத்து இருக்கு.ஆனா, இன்னிக்கு அதே விவசாயியோட கைகள் உணவை யாசகம் பெறப்போகுது.ஆனா, விவசாயிங்க தன்மானம் மிக்கவங்க.எந்த ஒரு பொருளையும் இலவசமா வாங்க ஆசைப்படமாட்டாங்க"  என்றான். 

"நீங்க அப்படி நினைக்கக் கூடாது.இவ்வளவு வருஷமா நீங்க மக்கள் வயிற்றை நிரப்பி இருக்கீங்க..அந்த மக்களுக்கு உங்க வயிற்றை நிரப்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சிருக்கு.மக்கள் தங்கள் நன்றியைத் தெரிவிக்க இது ஒரு சந்தர்ப்பம் அவ்வளவுதான்" என்ற ப்ருத்வி, இவ்வளவு நேரம் நடந்ததையெல்லாம் மௌனமாகவேப் பார்த்துக் கொண்டிருந்த நாராயணனை நோக்கி"நீங்க எதுவும் பேசாம இருக்கீங்க?" என்றான்.

"நான் சொல்ல என்ன இருக்கு..இந்த கிராமத்து ஜனங்களுக்கே சாப்பாடே இல்லைங்கற நிலைமை.என் கடையிலும் டீ சாப்பிடற கும்பல் குறைஞ்சுப் போச்சு.கடையை மூடிட்டு வேற எங்கேயாவதுப் போய் புழப்பைத் தேட வேண்டியதுதான்"

"நாராயணன் கவலைப்படாதீங்க..இன்னும் கொஞ்ச நாள்ல எல்லாம் சரியாயிடும்"

இதனிடையே, நாராயணன் போட்ட டீயைக் கொணர மூவரும் அருந்தினர்.ராமன் செய்தித்தாளைப் படிக்க ஆரம்பித்தான்.

கோயிலுக்கு வந்த பண்ணையார்..டீக்கடையில் ப்ருத்வியைப் பார்த்து குசலம் விசாரித்தார்.

இதற்கிடையே அர்ச்சகரும் அங்கு வந்தார்.


"அடடே! வாடா ப்ருத்வி எப்ப வந்தே! வந்ததும் சித்தப்பா நான் கூட முக்கியமில்ல..டீக்கடை நண்பர்கள்தான் உனக்கு முக்கியமாய்ப் போய்விட்டது இல்லையா?" என்றார் சற்றே ஆதங்கத்துடன்.

ப்ருத்வியும், அதற்கான பதிலைச் சொல்லாமல்..அசட்டு புன்னகை புரிந்தான்.

இப்போது ராமன்.."தம்பி...இந்தச் செய்தியைப் பாரு" என செய்தித்தாளை ப்ருத்வியிடம் நீட்டினான்.

"அப்படி என்ன செய்தி" என்றார் அர்ச்சகர்.

"நானே படிக்கிறேன் ..கேளுங்க" என ராமன் படிக்க ஆரம்பித்தான்.

"தமிழ்நாட்டு அவல நிலைமையை மத்திய அரசு மனதில் கொண்டு..தேவையான நிவாரணப்பணிகளை போர்க்கால அடிப்படையில் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது.மத்திய நிதி அமைச்சரும்..நிதி ஒரு பிரச்னையாய் இருக்காது என சொல்லியுள்ளார்.மேலும், பிரதமர்..நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு கொள்கை அளவில் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார்"

இச்செய்தியைக் கேட்டதும் அர்ச்சகர்,'நதிநீர் இணைப்புக்கு சம்பந்தப்பட்ட மாநிலம் ஒத்துக்கணுமே" என்றார்.

"நதிநீர் இணைப்பால் அந்தந்த மாநிலத்திற்கு இழப்பு இல்லைங்கறதைப் புரிய வைக்கணும்" என்றான் ராமன்.

"அப்புறம் என்ன ஆகும்" - மூக்கன்

"அப்புறம் என்ன..பீகாரில் வறட்சி..உத்தரபிரதேசத்தில் வெள்ளம்..போன்ற அரசியல் செய்திப்படங்கள் வராது" என்றான் ராமன்.

"கேட்கவே மனசுக்கு சந்தோஷமா இருக்கு.அதேநேரம் இனம் புரியாத கவலையும் இருக்கு.எல்லாம் நல்லபடியா நடந்துட்டா..இனிமே நிலங்களை தரிசா போட வேண்டாம்.நிலத்தைத் தரிசா போடறது நல்லதில்லை.பூமாதேவி, அள்ளி அள்ளிக் கொடுக்கறவ.அவள நாம காயப்போடறது பாவம்.பெத்தத் தாயை எப்படி பட்டினி போடமாட்டோமோ..அதுபோல நிலத்துக்கு விதை இல்லாம பட்டினி போடக்கூடாது.விதை விதைச்சு..தண்ணீ பாய்ச்சி,களை பிடுங்கி,உரம் போட்டு..ஆள் உயரத்துக்கு நெற்பயிர் வளர்ந்ததும் அதைத் தடவிப் பார்க்கற சுகம் இருக்கே..அந்த சுகம் வேற எதிலேயும் இல்ல" என்றார் பண்ணையார்.

"ஆனா..பாவம், அந்த தாமோதரன், செங்கோடன்,ஆனந்தன் நெலங்களை ,மயில்வாகனன் அபகரிச்சு,அவங்களை ஒன்னுமில்லாதவங்களா ஆக்கிட்டான்" என அர்ச்சகர் வருத்தப்பட்டார்.

அவரைத் தேற்றிய பண்ணை, ப்ருத்வியைப் பார்த்து "தம்பி உன்னோட பங்கு இதுல ரொம்ப அதிகம்..நன்றி தம்பி" என்றார்.

ராமனும், "பேனா முனை..கூர்மை, வாள்முனை கூர்மையை விட அதிகம்னு தெரியாமலா சொன்னாங்க" என்றான்.

"முக்கியமா இந்த செய்திகளை சொல்லி விட்டுப் போகத்தான்  வந்தேன்.நாளைக்கேக் கிளம்பிடுவேன்.அடுத்தமுறை நான் வர்றப்ப ஊர் வளமா இருக்கப் போகுது.நதிநீர் இணைப்புத் திட்டமும் நிறைவேறி, வேலையும் முடிஞ்சுதுனா..எல்லா கிராமங்களிலும் என்னிக்கும் வறுமையே இருக்காது" என்றான் ப்ருத்வி.

"தம்பி..உனக்கு நான் ஏதாவது செஞ்சாகணுமே! உனக்கு என்ன வேணும்னு சொல்லு தம்பி" என்றார் பண்ணை.

"இப்ப ஒன்னும் வேண்டாம்.அடுத்தமுறை நான் வர்றப்ப..உங்க நிலத்துல அறுவடை ஆன அரிசிலே எனக்கு விருந்து வைங்க போதும்"

"விருந்து என்ன தம்பி  விருந்து.நீ எங்களுக்கெல்லாம் செஞ்ச நல்ல காரியத்துக்கு என் உயிரையேத் தரேன்" என்றார் பண்ணையார்.

பின் ,அனைவரும் கலைந்து சென்றனர்.

ஆனாலும், அன்று இரவும் வழக்கம்போல பண்ணையாரின் கனவில் பேய் எலும்புக்கூடு அவரை சாகடிக்கத்தான் பார்த்தது. 

No comments:

Post a Comment