Saturday, January 18, 2020

33 - கிராம அதிகாரியின் அறிக்கை

அன்று வெள்ளிக்கிழமை

விடியலிலேயே..பண்ணையார் கோயிலுக்குக் கிளம்பி வந்தார்..அப்போது, மாடசாமியின் வண்டியில் கையில் ஒரு செய்தித் தாளுடன் வந்த ராமன்..பண்ணையைப் பார்த்ததும் இறங்கி ஓடி வந்தான்.

வந்தவன், "பண்ணை..பண்ணை..இன்னிக்கு பேப்பர்ல நம்ம கிராமத்து அதிகாரியோட விசாரணை அறிக்கையை, ஒரு அமைச்சரோட விசாரணை அறிக்கைன்னு தலைப்புப் போட்டு செய்தி வந்திருக்கு" என்றான்.

"நம்ம கிராமத்து அதிகாரிதானே! நடக்கற விஷயங்கள் எல்லாம் அவருக்குத் தெரியும்தானே..அதன்படி அறிக்கைக் கொடுத்திருப்பார்" என்றார் கோயில் அருகே நின்று கொண்டிருந்த அர்ச்சகர்.

"அதுதான் இல்லை..நம்ம ஆளுங்கதான் நம்ம கழுத்தை அறுப்பாங்க"

"என்ன சொல்ற ராமா?"

"சொல்றேன்..நாம கொடுத்த மனுவுல சொன்ன அளவிற்கு நம்ம கிராமத்துல வறுமை இல்லையாம்.மழையில்லாம வறட்சி, பயிர் விளையலங்கறதெல்லாம் உணமையில்லையாம்.அப்படி நாம காட்டின வயல்கள் எல்லாம்..அறுவடை நடந்து முடிஞ்ச வயல்களாம்.ஊர்ல இருக்கற யாரோ ஒருத்தர் தூண்டிவிட..நாம பொய் மனு கொடுத்திருக்கோமாம்"

"அப்படியா போட்டு இருக்காங்க?"

"அதுமட்டும் போடலை.நம்ம கவுண்டர் வறுமை தாங்காம தற்கொலை செய்து கொள்ளவில்லையாம்.அவர் தற்கொலைக்குக் காரணம் வறுமை இல்லையாம்.அவர் ஒரு ஜாலி பேர்வழியாம்.அதனால் அவருக்கு வெளியே சொல்ல முடியாத வியாதியாம்.அதனாலத்தான் மனசு உடைஞ்சு குடும்பத்தோட தற்கொலை செய்துக் கிட்டாராம்"

"அடப்பாவி  மனுஷா..உண்ட வீட்டுக்கு இரண்டகம்னு சொல்வாங்களே..அது இதுதானா?"

இப்போது ராமன் அர்ச்சகரைப் பார்த்து, "அர்ச்சகரே! இப்ப சொல்லுங்க..நீங்க இன்னமும் சாமி இருக்கார்னு நம்பறீங்களா?உண்மையா நீங்க சொல்ற சாமி இருக்கார்னா அந்த அண்டப்புளுகை விசாரணை அறிக்கையாய்க் கொடுத்த கிராம அதிகாரியை உடனே தண்டிச்சு இருக்க வேண்டாம்?" என்றான்.

அதற்கு அர்ச்சகர், "ராமா...நீ சொல்ற அறிக்கையை நம்ம அதிகாரி மனசு வந்து எழுதிக் கொடுத்து இருப்பார்னு நீ நினைக்கிறியா? பாவம்..அவருக்கு எங்கே..என்ன பிரஷரோ?"

"என்ன பிரஷரா இருந்தா என்ன? உண்மையை எழுத ஏன் பயப்படணும்?நம்ம கிராமம் போலவே டெல்டா மாவட்டங்கள்ல பல கிராமங்கள் பயிரிட முடியாம..வறுமை கோரத்தாண்டவம் ஆடிட்டு இருக்கு.இனிமே இந்த வருஷம் பயிரிட்டு..பயிர் வெளஞ்சாத்தான் ஒவ்வொரு விவசாயியும் கொஞ்சம் சில்லறையைப் பார்க்க முடியும்.அதுவரைக்கும் தேவையானப் பொருட்களை வாங்கக் கூட யார் கிட்டேயும் காசு இல்லை.காசு வைச்சிருக்கவங்களும் வாங்கப் பொருள் கிடைக்காம தவிக்கிறாங்க.இந்த லட்சணத்துல நம்ம தாமோதரன் நிலம் கூட எரிஞ்சுப்போச்சு பாவம் . பண்ணை. நீங்க உண்மையைச் சொல்லுங்க..உங்க பரம்பரையில இதுவரைக்கும் நீங்க இப்படி ஒரு வறுமையைப் பார்த்து இருப்பீங்களா?" என்றான் ராமன்.

அதற்கு அர்ச்சகர், "ராமா..நாம கோபப்பட்டு ஒரு பிரயோசனமும் இல்லை. இன்ப..துன்பம்ங்கறது ஒவ்வொருத்தர் வாழ்க்கையிலும் மாறிமாறி வரக்கூடியது.அதுதான் இயற்கை நியதி" என்றார்.

"அர்ச்சகரே! நீங்க சொல்ற துன்பங்களும்..நாம் சொல்ற வறுமையும் வேற..வேற அர்த்தம்.நம்ம கிராமத்து அதிகாரி இன்னமும் என்ன சொல்லியிருக்கார் பாருங்க.." என செய்தித்தாளில் வந்துள்ள செய்தினைப் படிக்க ஆரம்பித்தான் ராமன்..

"பண்ணையாருக்கு ஊரில் விரோதிகள் அதிகம்.போராட்டம் நடந்த அன்று..தனிப்பட்ட  விரோதம் காரணமாகவே பண்ணையார் அரிவாளால் வெட்டப்பட்டார்.அவர் தாக்குதல்களுக்கும்..அரசியலுக்கும் சம்மந்தமில்லை'
படித்து முடித்த ராமன், "பார்த்தீங்களா? முழுப்பூசணிக்காயை சோத்துல மறைச்சு இருக்காங்க" என்றான்.

அந்த சமயத்தில் கிராம அதிகாரி அங்கு வர..அவரைப் பார்த்ததும் ராமன் ,அர்ச்சகரிடம். "நீங்க தேங்காய் உடைக்க..ஒரு இரும்பு சுத்தியல் வைச்சு இருப்பீங்களே! அதைக் கொடுங்க..இப்பவே அவர் தலையில ஒரே போடா போட்டு..உங்க அம்மனுக்கு பலி கொடுத்துடறேன்" என்றான் கோபமாக.

'ராமா! உன்னை நான் பல சமயத்துல தப்பா நினைச்சு இருக்கேன்..உனக்கு இந்த ஊர் மேல இருக்கிற பற்றும், பண்ணையார் மேல இருக்கற மரியாதையும் இப்பதான் எனக்கு புரியுது.கூடவே இருந்து குழி தோண்டிக்கிட்டு இருக்காங்களே..அவங்களை விட நேர்மையா..மனசுல இருக்கறதை "பட்"டுன்னு பேசற உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு" என்றார் அர்ச்சகர்.

"நான் ஒரு பிராமணதுவேஷி..என்னைப் போய்..."

"நீ ஒரு பிராமணதுவேஷியாய் இருக்கலாம்.ஏன்னா..என்னோட முன்னோர்கள் உங்களையெல்லாம் கேவலமா நடத்தி இருப்பாங்க! அது உங்க மனசுல பதிந்துப் போச்சு.ஆனா..இப்ப காலம் மாறிப்போச்சு.அதை நீங்க உணரலை.நீ நாத்திகவாதியா இருக்கறது உன் இஷ்டம்.ஆனா..நாத்திகவாதிங்க..தங்களை அறியாமல் ஆத்திகத்தை வளர்த்துக்கிட்டுத்தான் இருக்காங்க!"

"நான் இப்பவும் சொல்றேன்..நான் கடவுள் இல்லைன்னு சொல்லலை.என்னை நீங்க தப்பாப் புரிஞ்சுக் கிட்டு இருக்கீங்க.கடவுளுக்கு உருவம் கிடையாது.இயற்கைதான் கடவுள்னு சொல்றேன்.அவ்வளவுதான்"

இருவரின் வாதத்திற்கிடையே..புகுந்த பண்ணையார்"ராமா!உன் பிரச்னையை அப்புறம் பாத்துக்கலாம்."என்று சொல்லிவிட்டு..நெருங்கி வந்துவிட்ட அதிகாரியிடம், "வாங்க..தயங்காதீங்க..எய்தவன் இருக்க அம்பை ஏன் நோகப் போறோம்" என வரவேற்றார்.

ராமன் அவரைப் பார்த்து, "நீங்க விசாரணைன்னு வந்த போதே  எதுவும் பேசலை.இப்ப மட்டும் என்ன பேசிடப் போறீங்க! ஏங்க..இந்த கிராமத்துல நடந்த விஷயங்கள் எல்லாம் உங்களுக்குத் தெரியும் இல்லையா?" என்றான்.

அதிகாரி மௌனமாய் இருக்க,அர்ச்சகர் "ஏன் மௌனமாய் இருக்கீங்க? ஏன் இப்படி செஞ்சீங்க?" என்றார்.

கிராம அதிகாரி..ஒரு கடிதத்தை பண்ணையாரிடம் கொடுக்க..அவர் அதை வாங்கி ராமனிடம் கொடுத்து படிக்கச் சொன்னார்..

ராமன் படிக்க ஆரம்பித்தான்....

'பூங்குளம் கிராமத்து அதிகாரி சுப்ரமணியனான நான்..யாருடைய நிர்ப்பந்தமும் இல்லாமல் எழுதிய கடிதம் இது.

இந்த கிராமத்து மக்கள்..அவங்க மனுவில் கூறியிருந்தபடி சொல்லியுள்ளது எல்லாம் உண்மை.வறுமை கிராமத்தில் கோரத்தாண்டவம் ஆடுது.கவுண்டர் வறுமை தாங்காமல்தான் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் .பண்ணையாரைத் தாக்கியதில் அரசியல் உள்ளது.இதையெல்லாம் அறிக்கையாய் எழுதிக் கொடுக்க இருந்த என்னை ..கட்டாயப்படுத்தி,பயமுறுத்தி, என் குடும்பத்தினரைக் கிட்டத்தட்ட மிரட்டி..மாற்றி எழுத வைத்துவிட்டார்கள்""

ராமன் இதைப் படித்து முடித்ததும்..பண்ணையார் அதிகாரியிடம் "நீங்க வெறும் அம்புன்னு எங்களுக்குத் தெரியும்...ஆனா..இந்தக் கடிதத்தை இப்ப நீங்க எழுத வேண்டிய அவசியம் என்ன?" என்றார்.

கிராம அதிகாரி மௌனமாகவே நின்றார்.

"இப்பவாவது வாயத் திறந்து ஏதாவது சொல்லுங்களேன்" என்றார் அர்ச்சகர் பொறுமை இழந்து.

கிராம அதிகாரி வாயைத் திறந்தார்..

"மக்களுக்கு இதன் மூலம் உண்மை தெரியணும்.இதை பிருத்வி கிட்ட கொடுத்து பத்திரிகையில போடச்சொல்லுங்க.இந்த கிராமத்து மக்களுக்கு என்னை அறியாமல் செய்த துரோகத்திற்கு பரிகாரமாக என்னையே அழிச்சுக்கத்   தீர்மானம் செய்து..விஷத்தை சாப்பிட்டிட்டுத்தான் இப்போ வந்திருக்கேன்" என்று அவர்களைப் பார்த்து சொல்லியவாறு..கைகளைக் கூப்பியபடியே கீழே சாய்ந்தார்

No comments:

Post a Comment