Tuesday, January 14, 2020

28 - ரத்தம் ஒரே நிறம்

போராட்டம் நடந்து முடிந்து, பூங்குளம் சிறிது..சிறிதாக அமைதிக்குத் திரும்பி..ஒருமாதம் ஓடி விட்டது.

அன்று, வழக்கம் போல மூக்கன் ,நாராயணனின் டீக்கடை முன் தரையில் மண்டியிட்டு அமர்ந்திருக்க, ராமன், தினசரி ஒன்றை படித்துக் கொண்டிருந்தான் பெஞ்சில் அமர்ந்தபடியே.நாராயணன் கடையில் பாலைக் காய்ச்சிக் கொண்டிருந்தான்.

செய்தித் தாளை மடித்து வைத்த ராமன், மூக்கனிடம், "என்ன மூக்கா..பண்ணையார் நேத்து ஆஸ்பத்திரிலே இருந்து டிஸ்சார்ஜ் ஆகிட்டாராமே!இப்ப எப்படியிருக்கார்?" என்றான்.

"ஆமாம்..அவர் அரிவாளால்வெட்டப்பட்டு, ஆசுபத்திரி போய்..நேத்து திரும்பி வந்தவரை விளையாட்டுப் போல ஒரு மாசம் ஓடிப்போச்சு.காலம் றெக்கைக் கட்டிப் பறக்குது"

"நாம செஞ்ச போராட்டம்..இந்திய பாராளுமன்றம் வரைக்கும் போய்,ஒரு கலக்குக் கலக்கிடுச்சே! பிரதமர் உடனடியாக ஒரு குழுவை பெங்களூர்க்கு அனுப்பி தண்ணீர் பிரச்னைப் பற்றி ஆராயச் சொல்லி இருக்காராம்"

"ஆமாம்..அந்தக் குழு என்ன செய்யும்?"

"பாவம்..அது என்ன செய்யும்...திரும்பி முதலே இருந்து, தமிழகத்திற்குத் தண்ணீ தேவையான்னு ஆராயும்..விசாரிக்கும்..அப்புறம்..அறிக்கைத் தாக்கல் செய்யும்...மீண்டும் திருத்த அறிக்கைத் தாக்கல் செய்யும்..இப்படி மாத்தி..மாத்தி அறிக்கைத் தாக்கல் செய்துக் கொண்டே இருக்கும்.நாம் நேத்து எப்படி இருந்தோமோ...இன்னிக்கு எப்படி இருக்கோமோ..அப்படியேத்தான் நாளைக்கும் இருப்போம்"

'விவசாயிகள் சேத்துல காலை வைச்சாத்தான் ..மக்கள் சோத்துல கை வைக்க முடியும்னு அரசாங்கத்துக்குத் தெரியாதா?"

"ஏன் மூக்கா...எவ்வளவு நாள் இதே டயலாக்கை சொல்லிக்கிட்டு இருப்பீங்க..மாத்துங்க..விவசாயிகள் உழுது பயிரிட்டாத்தான் ..மக்கள் தொழுதுண்டு உண்ணமுடியும்னு சொல்லுங்க"

"அப்படின்னா?"

"விவசாயி விளைவிக்கிற ஒவ்வொரு நெல் முத்தும் அவனோட வியர்வைல முளைச்ச முத்துக்கள்.இது பட்டணத்து ஜனங்களுக்குப் புரியணும்.பொங்கல் அன்னிக்கு குக்கர்ல பொங்கல் வைச்சு..சூரியனை வணங்கறோம்னு சொல்லிட்டு..சாமிமேல ஒரு கண்ணும்,டி வி நிகழ்ச்சிலே ஒரு கண்ணும் இருக்கற பட்டணத்து மக்கள்..இது உழவர் திருநாள்..அந்த உழவன் வாழ்வு செழிக்கணும்னு..எல்லாம் நீங்க இருக்கறதா சொல்ற..அந்த ஆண்டவனை வேண்டிக்கலாம் இல்லையா?"

இச்சமயத்தில் இவர்கள் பேச்சில் குறுக்கிட்ட நாராயணன்."எது எப்படியோ..நம்ம போராட்ட விஷயத்தையும், தண்ணீ பிரச்னையும் பிருத்வி தம்பி..எல்லாப் பத்திரிகைகளிலும் எழுதிடுச்சு..அதுபோல இரட்டை தம்ளர் முறையும் ஒழிஞ்சா நல்லா இருக்கும்"

"நம்ம பண்ணையார் இருக்காரே..அவர் இரட்டை தம்ளர் முறையை ஒழிக்கக் கூடாது என நினைக்கறவங்கள்ல ஒருத்தர்.என் உடம்புல பரம்பரை ,பரம்பரையா உயர்ந்த ஜாதி ரத்தம் ஓடுதுன்னு சொல்வாரு.ஆனா பாரு நாராயணா, அவர் வெட்டுப்பட்டு ஆஸ்பத்திரிக்குப் போனப்ப, அவர் உடம்புல இருந்து அதிக ரத்தம் வெளியேறிடுச்சுன்னு..உடனடியா ரத்தம்கொடுகக்ணும்னு டாக்டர் சொல்லிட்டாரு.அவரது ரத்த குரூப் ஏபி பாசிடிவ்.அது ரொம்ப பேருக்கு இல்லாத ஒன்னு.அதே குரூப்பைச் சேர்ந்த அவரோட ஒன்னு, இரண்டு உறவும்..கொடுக்கப் பயந்து ஓடிப்போயிடுச்சு.
தற்செயலா..நம்ம மூக்கனுக்கும் அதே வகை ரத்தம்தான்.அவந்தான், என் உடம்புல இருந்து எவ்வளவு ரத்தம் வேணும்னாலும் எடுத்துக்கங்கன்னான்.அவன் மட்டும் அன்னிக்கு ரத்தம் கொடுக்கலைன்னா..பண்ணையாருக்கு அன்னிக்கே சங்கு ஊதியிருக்கணும்"

இந்த விஷயங்களை எல்லாம் நாராயணன் அறிந்திருந்தாலும், தெரியாதது போல "அப்ப..பண்ணையார் உடம்புல மூக்கன் ரத்தம்தான் ஓடுதுன்னு சொல்லுங்க" என்றான்.

"அப்படியும் சொல்லலாம்..தப்பு இல்லை.இனிமேலாவது பண்ணையார் மனசு மாறுதான்னு பார்ப்போம்.என்ன மூக்கா...நீ மௌனமாயிட்ட"

"நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? பண்ணையார் உப்பைத் தின்னு வளர்ந்தவன் நான்.அதனாலதான் அவர் ரத்த வகையும் என்னுது ஒன்னா இருந்ததோ என்னவோ! அவரால்..இந்த உடம்புல ஊறின ரத்தம்..அவருக்கேப் பயன் பட்டது ரொம்ப சந்தோஷம்"

இந்த நேரத்தில், அர்ச்சகர் ஓட்டமும், நடையுமாக அங்கு வந்தார்..வந்தவர்..அவர்களிடம் "இதோ பாருங்க..எவ்வளவு சொல்லியும் கேட்காம..பண்ணையார், மூக்கனைப் பார்க்கணும்னு வந்துக்கிட்டு இருக்கார்,உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்றேன்.நடந்த விஷயங்கள் எல்லாம் அவருக்கு ஓரளவுதான் தெரியும்.இருந்தாலும், மூக்கன் ரத்தம் கொடுத்ததால்தான் அவர் பொழச்சார்னு அவர் கிட்ட யாரும் சொல்லிடாதீங்க"

"ஓஹோ..அவர் சாதி வெறி..இன்னமும் போகலையா? அது சரி.உங்க ஆண்டவனே சாதி பார்க்கறவர்தானே"

"ராமா..என்ன சொல்ற?"

"நந்தன் அந்த ஆண்டவனை தரிசிக்க ஆசைப்பட்டப்போ, கோயிலுக்கு வெளியிலேயே அவரை நிக்க வைச்சு,"சற்றே விலகி இரும் பிள்ளாய்"ன்னு அந்த நந்தியத்தானே நகரச் சொல்லி தரிசனம் தந்தார் உங்க ஆண்டவன்.அவர் நினைச்சிருந்தா..அந்த நந்தனை அருகிலேயே அழைத்து தரிசனம் தந்திருக்கலாமே!"

"ராமா! எந்த ஒரு விஷயத்தையும் காரணம் இல்லாம அந்த ஆண்டவன் செய்ய மாட்டான்.அவனோட எண்ணத்தை மனுஷங்களான நாம என்ன அறிவோம்? நீ சொல்றபடியே இருந்தாலும், தன்னை தினசரி பூஜித்து வந்த அந்தணனரோட பக்தியைவிட கண்ணப்பரோட பக்தி உயர்ந்தது என உணர்த்தி, அவரை தன்னோட வலது பக்கம் இடம் கொடுத்து வைச்சுக்கலையா?"

நடுவில் புகுந்த மூக்கன்,"என்னை மன்னிக்கணும்.தயவு செஞ்சு இப்ப நாத்திகப் பேச்சு எல்லாம் வேண்டாமே..இந்தத் தீண்டத்தகாதவனோட ரத்தம்தான் தன் உடம்புலே ஓடுதுங்கற எண்ணத்தை பண்ணையாரால பொறுக்க முடியாது.இந்த விஷயங்களே அவருக்குத் தெரிய வேண்டாம்"என்றான் மூக்கன்.

"அது எப்படி தெரியாமல் இருக்கும் மூக்கா..அவரை பிழைக்க வைக்க நாம பட்ட பாடு...இந்த ஊருக்கேத் தெரியுமே"" என அர்ச்சகர் சொல்லிக் கொண்டிருந்த போது..பண்ணையார் அங்கு வந்து விட்டார்.

அவரைப் பார்த்த ராமன், "வாங்க! பண்ணை..இப்ப எப்படி இருக்கீங்க?" என்றான்.

"நான் செத்துப் பொழச்சு வந்திருக்கேன்" என்ற பண்ணையிடம், "அப்படிச் சொல்லாதீங்க..நாம இந்த உலகத்துல எதுக்குப் பொறந்தோமோ..அதுக்கான வேலை முடியலைன்னு நினையுங்க.அது முடிஞ்சதும் நாம போற வேளை தெரிஞ்சுடும்" என்றார் அர்ச்சகர்.

அடுத்து மூக்கனைப் பார்த்த பண்ணையார்,"மூக்கா..உனக்குத்தான் நான் நன்றி சொல்லணும்.நான் இன்னிக்கு உயிரோட இங்கே நிக்கறேனா..அது உன்னாலத்தான்.உன் கிட்ட எல்லா வேலையையும் வாங்கிக் கிட்டு..எவ்வளவு கேவலமா நடத்தியிருக்கேன்.அப்ப எல்லாம் விதை நெல்லை சிந்தினா அள்ளிடலாம்.சிந்தின சொற்களை அள்ள முடியாதுன்னு தெரியாமப் போச்சு"

"ஐயா..பெரிய பெரிய வார்த்தையெல்லாம் பேசாதீங்க.நீங்க மட்டும் என்ன..எங்களைச் சேர்ந்த தாமோதரன் மேலே விழ இருந்த அரிவாள் வெட்டை நீங்க தாங்கி அவனைக் காப்பாத்தினீங்க.அவனுக்காக உயிரையும் கொடுக்க இருந்தீங்களே..ஐயா..நாம் என்னிக்குமே உங்க மூக்கந்தான்.இந்த உடம்பே உங்க உப்பைத் தின்னு வளர்ந்தது"

பேச்சை திசை திருப்ப எண்ணிய நாராயணன், "பண்ணை..டீ சாப்பிடறீங்களா?" என்றான்.

"நாராயணா நல்ல டீயாப் போடு.ராமா, நீயும் டீ சாப்பிடறியா?"

"நான் இப்பதான் கொஞ்ச நேரம் முன்னால சாப்பிட்டேன்.மூக்கன்தான் சாப்பிடலை"

"அப்படியா...நாராயணா..எனக்கும், மூக்கனுக்கும் இரண்டு டீ போடு.அப்பறம் மறந்துடாதே..தம்ளர்ல ஒன்னும், வட்டில்ல ஒன்னு"

"பண்ணை உங்களை மாத்தவே முடியாது" என்றான் ராமன்.

"என்ன செய்யறது ராமா? இந்த உடம்புல பரம்பரை ரத்தம் ஓடுதே" என்று சொன்ன பண்ணையார்...திடீரென நாத்தழுதழுக்க, "இல்லை;;இல்லை மூக்கனோட ரத்தமில்ல ஓடுது" என்றபடியே, மூக்கனை அணைத்துக் கொண்டார்.

மூக்கன் அதிர்ச்சியுடன் "ஐயா..என்ன இதெல்லாம்"

"ஆமாம் மூக்கா...எல்லா மனுஷ உடம்புலேயும் சிவப்புநிற ரத்தம்தான் ஓடுதுன்னு எனக்குப் புரிய வைத்தவனே நீதானே!"

இதற்குள் நாராயணன் டீ  கொண்டுவர.."நாராயணா..அந்த வட்டிலை என் கிட்டக் கொடு...தம்ளரை மூக்கன் கிட்டக் கொடு" என்றபடியே ,வட்டிலை வாங்கி டீ யினை அருந்தினார் பண்ணையார்.

இதையெல்லாம்  பார்த்துக் கொண்டிருந்த அர்ச்சகர், தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரை யாரும் அறியாமல் துடைத்துக் கொண்டார்.

பிறகு அனைவரும்...ஊர் விஷயங்களைப் பேச ஆரம்பித்தனர்.

அப்போது அங்கு வாஞ்சியின் கார் வந்து நின்றது.

அதிலிருந்து வாஞ்சியும், கற்பகமும் இறங்கினர்.காரின் பின் கதவை கற்பகம் திறக்க ,தாமோதரனும், செங்கமலமும் அதிலிருந்து இறங்கினர்.

"ஐயா...என் தெய்வமே! என் உயிரைக் காப்பாத்த உன் உயிரையேத் தியாகம் பண்ணப் பார்த்தியே!"என்று கதறியபடியே வந்த தாமோதரன் , பண்ணையாரின் கால்களில் விழுந்தான்.

அவனை அணைத்து எழுப்பிய பண்ணையார், "தாமோதரா! ஒரு உயிருக்கு ஆபத்துன்னா..அது என் உயிராய் இருந்தா என்ன..உன் உயிராய் இருந்தா என்ன.யார் உயிர் ஆனாலும் அதற்கு ஒரு விலையுண்டா?" என்றார்..பின்.."உன்னை குப்பால் ஏன் வெட்ட வேண்டும்? உனக்கும் அவனுக்கும் என்ன பகை? அவன் கூட இப்ப ஜாமீன்ல வந்துட்டதா கேள்விப்பட்டேன்" என்றார்.

"ஆமாம் ஐயா..எல்லாம் அந்த படுபாவி  மயில்வாகனனை  இந்த கிராமத்துக்குள்ள நான் வர விட்டதுதான்.அரசியல் ஒரு சாக்கடைங்கற பாடத்தை நான் படிச்சுட்டேன்.மயில்வாகனனுடைய எண்ணங்களுக்கு நான் படியாததால..நம்ம கிராமத்து ஆளு குப்பாலை அவனுக்கு அடியாளா ஆக்கிக்கிட்டு, போராட்டம் அன்னிக்கு என்னைத் தாக்கச் சொல்லியிருக்கான்" என்றான் தாமோதரன்.

"தாமோதரா..நீ ஜாக்கிரதையா இரு.அந்த மயில்வாகனன் யானை மாதிரி.உன்னைத் திரும்பித் தாக்க முயற்சிப்பான்." என்றவர்..வாஞ்சியைப் பார்த்து, "தம்பி..உன்னை நான் முன்ன பின்ன பார்த்தது இல்ல.ஆனா, என்னை வெட்டினதுமே..நேரத்தை வீணாக்காமல்..உன் கார்ல என்னை பக்கத்து ஊர் ஆஸ்பத்திரிக்கு அழைச்சுட்டுப் போன..நான் இன்னிக்கு உசுரோட இருக்கேன்னா..அதுக்குக் காரணமாய் இருக்கறவங்கள்ல நீயும் ஒருத்தன்..உனக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்யப் போறேனோ..நன்றி தம்பி" என்றார்.

"ஐயா..உயிருக்குப் போராடற ஒருத்தரைக் காப்பாத்த வேண்டியது மனிதநேயம்.அதைத்தான் நான் செஞ்சேன்."என்றான் வாஞ்சி,

"சரி நான் கிளம்பறேன்" என்ற படியே..பொதுவாக எல்லோருக்கும் சேர்த்து தன் கைகளைக் கூப்பி விடை பெற்றார் பண்ணையார்.

இவ்வளவு நேரமும் அங்கு நடந்த நிகழ்ச்சிகளையெல்லாம் அரச மரத்தின் பின்னால் இருந்து கவனித்துக் கொண்டிருந்த குப்பால்..உடனே அவற்றையெல்லாம் மயில்வாகனனிடம் தெரிவிக்க விரைந்தான். 

No comments:

Post a Comment