Wednesday, January 15, 2020

29 - தாமோதரன் கைது

பகலுக்கு விடை கொடுத்து இரவை வரவேற்கத் தயாரானாள் இயற்கை அன்னை.

மயில்வாகனனும்..வேறு சில அரசியல்வாதிகளும் மயில்வாகனன் இல்லத்தில் கூடி இருந்தனர். ஒவ்வொருவர் கைகளிலும் இருந்த கண்ணாடி தம்ளர்களில் பொன்னிற திரவம்.எதிரில் தட்டுகளில் உப்பு, காரம் சரியாகக் கலந்து பசு நெய்யில் வறுத்தெடுக்கப்பட்ட முந்திரி.

தங்களுக்குள் சம்பந்தா சம்பந்தமில்லாமல் பேசி சிரித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது ஒருவன் மயில்வாகனனிடம் ,"என்ன அரசியல்வாதிய்யா நீ..பூங்குளத்தில் டாக்டருக்குப் படிக்கும் உன் தொண்டன் ஒருவனின் மகளைப் பற்றி ஆஹா..ஓஹோன்னு சொல்லிக் கிட்டு இருந்தே..அவளை அனுபவிச்சேத் தீரணும்னு சொன்னே..ஆனா.. வாய்ச்சவடால்தான்..செயல்ல ஒன்னும் காணோம்" என்றான்.

அதைக் கேட்டதும் மற்றவர்கள் சிரித்தார்கள்.

மயில்வாகனனுக்கு போதை மட்டுமில்லாமல், கோபமும் தலைக்கேறியது.

"டேய்..இந்த மயில்வாகனன் கேரக்டரை யாருமே புரிஞ்சுக்கலையே! எதுவுமே தானாகப் பழுத்தால் தான் ருசி.தடிகொண்டு அடிச்சு பழுக்க வைத்தால் சுவை குறைவுதான்னுதான் காத்துக் கிட்டு இருக்கேன்.கற்பகம் விஷயத்துல மாசக்கணக்குல மௌனமா இருந்தது உண்மைதான்.இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க...இன்னும் எண்ணி பதினைஞ்சே நாட்கள்ல..நான் அவளை அடைஞ்சேத் தீருவேன்.அது..இதோ என் கையில இருக்கே அந்த விஸ்கி மேல் சத்தியம்"

மயில்வாகனன் இதைச் சொன்னதும் இதற்கும் அவர்கள் சிரித்தனர்.

இச்சமயத்தில்..மயில்வாகனனின் ஆள் ஒருவன் வந்து  அவனிடம் "ஐயா..பூங்குளத்திலிருந்து குப்பால்" வந்திருக்கான்' என்றான்.

கற்பகம் பற்றிப் பேசும்போதே, அவள் ஊரைச் சேர்ந்த குப்பால் வந்திருந்தது ஒரு நல்ல சகுனமாக மயில் நினைத்தான்.உடனே அவனைக் கூட்டி வரச்சொன்னான்.

குப்பால் வந்து மயில்வாகனனைப் பார்த்து கும்பிட்டான்.

"என்ன குப்பால்..ஜெயில்ல ஒரு மாசம் களி தின்னியா" என்று மயில் கூற, இதற்கும் மற்றவர்கள் சிரித்தனர்.

குப்பாலின் முகம் மாறியது.இருந்தாலும்..மயில்வாகனனால் ஏற்பட்ட, ஏற்படப்போகும் வசதிகளை எண்ணி வாளாயிருந்தான்.மேலும் மயில் முழு போதையில் பேசுகிறான் என்பதை அவனின்  செக்கச் சிவந்த கண்களும்,சூழலும், பேச்சும் அவனுக்கு உணர்த்தியது.

"ஐயா..நான் வந்த விஷயம் என்னன்னா.." என்றபடியே, அன்று காலையில் , பண்ணையார்,மூக்கன்,ராமன், இடையே நடைபெற்ற நிகழ்வுகளைச் சொன்னான். பின்னர் தாமோதரனும், கற்பகமும் வாஞ்சியின் காரில் வந்ததையும், தாமோதரன் பண்ணையாரின் கால்களில் விழுந்துஅழுதுமன்னிப்புக் கேட்டதையும் கூறினான்.

தாமோதரனைப் பட்டடைக்கல்லாக வைத்து மற்ற தலித்துகளையும் தன் விருப்பத்துக்கு ஏற்ப மாற்றி தன் வாக்கு வங்கியையும் அதிகரித்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்தில் இருந்த அவனுக்கு,நடப்பது எல்லாமே எதிராக இருந்து வருவதாகத் தோன்றியது.இனியும் தாமோதரன் சம்மந்தப்பட்ட விஷயத்தைத் தள்ளிப் போடக் கூடாது என எண்ணினான்.

தடுமாறியபடியே எழுந்து குப்பாலை அடுத்த அறைக்குள் அழைத்துச் சென்றான்.

அடுத்த பத்தாவது மணித்துணிகளில் குப்பால் கையில் சில பணக்கட்டுகளுடன் வெளியேறினான்.

===       --------     ---------

அன்று இரவு மணி பன்னிரெண்டு

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த கற்பகம்..திடீரென வெப்பம் அதிகமாவது போலத் தோன்றியதால் கண் விழித்தாள்.வீடு தீப்பற்றி  எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்தாள்.

"ஐயய்யோ..அப்பா..அப்பா..என உறங்கிக் கொண்டிருந்த தாமோதரனையும், செங்கமலத்தையும் எழுப்பினாள்.

நிலைமையை  அறிந்த மூவரும் வெளியே தப்ப முயன்றனர்.அந்நேரம்..எரிந்தபடியே ஓலைக்குவியல் ஒன்று செங்கமலம் மேல் விழுந்தது.செங்கமலம் அலற, தாமோதரன், கற்பகம் அவளைக் காப்பாற்ற வழி தெரியாது தவித்தனர்.அதற்குள் செங்கமலம் தீக்கு இரையாய் இருந்தாள்.

அக்கம் பக்கம் இதற்குள் எழுந்து, தாமோதரனையும், கற்பகத்தையும் காப்பாற்றினர்.சிலர் வாளி வாளியாக தண்ணீரையும், மண்ணையும் கொட்டி நெருப்பைக் கட்டுப்பாட்டிற்குள் கொணர முயற்சித்தனர்.

தாமோதரன் வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது.


இதனிடையே..இரவு..வயல்களைக் காவல் காத்துக் கொண்டிருந்த தாமோதரனின் உறவினன் ஒருவன் ஓடி வந்தான், "தாமோதரா..உன் வயல் முழுவதிலும் பெட்ரோலை ஊற்றி ஒருந்தன் நெருப்பு வைச்சுட்டான்.பயிர்கள் எல்லாம் அழிஞ்சுக்கிட்டிருக்கு" என்றான்.

தலையில் அடித்துக் கொண்டு தாமோதரன் அழுதவாறே இருந்தான்.கற்பகம் அவனைத் தேற்றிக் கொண்டிருந்தாள்.

விவரம் அறிந்து அதிகாலை, பண்ணையார் உட்பட ஊரே அங்குக் கூடியது.

பண்ணையாரைப் பார்த்ததும் அழுகையை தாமோதரனால் கட்டுப் படுத்த முடியாது அழுதான்.பின் என்ன நினைத்தானோ, தன் கண்களைத் துடைத்துக் கொண்டான்..

"இதெல்லாம் அந்த மயில்வாகனன் வேலைதான்.அவனை நான் உயிரோட விட மாட்டேன்" என்றபடியே கொலைவெறியுடன் கையில் ஒரு அரிவாளை எடுத்துக் கொண்டு வெளியேறினான்.

அடுத்த சில மணிநேரங்களில்,மயில்வாகனனைக் கொலை செய்ய முயன்றதாக, தாமோதரன் கைது செய்யப்பட்ட செய்தி பூங்குளத்திற்கு வந்த்து.



No comments:

Post a Comment