Monday, January 13, 2020

27 - புயல் கடந்த பூமி

போராட்ட நாள்...

வழக்கமாகக் காலையிலேயே சுறுசுறுப்புடன் விடியும் பூங்குளம்..அன்று சற்று சோம்பலுடனேயே விடிந்தாற் போலத் தோன்றியது.

அவரவர் வேலைகளைக் கவனித்துச் செல்லும் வழக்கமான நாளாய் இல்லாது..ஆங்காங்கே குழுக்களாகக் கூடி மக்கள் ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

நாராயணன் டீக்கடையைத் திறக்கவில்லையாயினும், மூடியக் கடையின் முன்னர் மாடசாமி,ராமன், மூக்கன்,நாராயணன் மற்றும் சிலர் கூடி பேசிக் கொண்டிருந்தனர்.

அப்போது மாடசாமி, "காலையில் நான் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வண்டி ஓட்டி வரும்போது, நம்ம வாரச்சந்தை கூடும் திடலில் ஐந்து, ஆறு லாரிகள் நின்றுக் கொண்டிருந்தன.ஒவ்வொரு லாரியிலும் ஐம்பதற்கும் மேற்பட்ட ஆட்கள் இருந்தனர்.உருட்டுக் கட்டையும், அரிவாள்களும் குவித்து வைக்கப்பட்டிருந்தன.குப்பால் அங்கே நின்னுக் கிட்டு இருந்தான்..அநேகமாக கலாட்டா செய்ய வந்த மயில்வாகனன் ஆட்களாக அவர்கள் இருக்கக் கூடும்" என்றான்.

"கூடும்..என்ன கூடும்..அவனோட ஆட்கள்தான்.இதோ பாருங்க..நம்ம கிராமத்து ஆட்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் வந்துவிடக் கூடாது.பண்ணையார், அர்ச்சகர் எல்லாம் வயசானவங்க.அதனால அவங்களைத்தான் முதல்ல குறி வைப்பாங்க.அதனால, நாம பண்னையாருக்கும், அர்ச்சகருக்கும் பாதுகாப்பாக இருக்கணும்.அவங்களுக்கு இந்தக் கூலிப்படையால எந்த ஆபத்தும் வந்துடக் கூடாது." என்றான் ராமன்.பின்  மூக்கனிடம், "மூக்கா..தாமோதரன் என்ன  சைடு எடுத்து இருக்கான்னு உனக்குத் தெரியுமா?" என்றான்.

"ராமண்ணே..இப்ப எல்லாம் தாமோதரன் மாறிட்டு இருக்கான்னு நெனக்கிறேன்.அந்த மயில்வாகனன் தாமோதரனை வைச்சே எங்களை அழிக்க நெனச்சான்.ஆனா தாமோதரன் சரியான நேரத்துல முழிச்சுக்கிட்டான்னு நெனக்கிறேன்"

அந்த வேளையில், ஒரு கார் வந்து அங்கு நின்றது.அதிலிருந்து வாஞ்சி இறங்கினான்.புதிதாக ஒரு இளைஞன் அங்கு வந்து இறங்கியதைக் கண்ட நாராயணன் அவனை அணுகி, "தம்பி யாரு? ஊருக்கு புதுசா வந்து இருக்காப்போல இருக்கு" என்றான்.

"என் பெயர் வாஞ்சிநாதன்.நான் தாமோதரனின் பொண்ணு படிக்கிற காலேஜ்லதான் படிக்கிறேன்.கற்பகம் இப்ப எப்படி இருக்கான்னு பார்க்க வந்தேன்.பார்த்துட்டேன்.அவதான் இன்னிக்கு கிராமத்துல ஏதோ போராட்டம்..அதுல நானும் கலந்துக்கணும்னு சொல்லிட்டா..என்னை கோவில் பக்கத்துல இருக்கச் சொன்னார் அவளோட அப்பா" என்றபடியே, தாமோதரன் அங்கு இருக்கின்றானா? என நோட்டமிட்டான்.

"அப்ப சரி" என்றான் நாராயணன்.

அந்த நேரத்தில் பண்ணையாரும், அர்ச்சகரும் அங்கு வர..அவர்கள் பின்னால் அந்த கிராமத்து முதியவர்கள், பெண்கள், இளைஞர்கள்  என ஒரு பட்டாளமே வந்தது.அவர்களுடன் அங்கிருந்த மாடசாமி, நாராயணன், மூக்கன், ராமன் மற்றும் இளைஞர்கள் அனைவரும் இணைந்தனர்.

கடைசியில் ஒடி வந்த தாமோதரன், பண்ணையாரைப் பார்த்து,ஒரு அசட்டு சிரிப்பொன்றை உதிர்த்தான்.அதற்கான அர்த்தம் "என்னை மன்னித்துவிடுங்கள்" என்பதே என்பதை பண்ணை அறிந்தார்.தாமோதரனுடன் செங்கமலமும் வந்திருந்தாள்.

அனைவரும், அரசின் விவசாயக் கிடங்குமுன் குவிந்தனர்.

"கர்நாடக அரசே தண்ணீர் கொடு...தண்ணீர் கொடு"

"போராடுவோம்..போராடுவோம்..தண்ணீர் கிடைக்கும் வரை போராடுவோம்"

"தண்ணீர் கேட்பது எங்கள் உரிமை..கொடுக்க வேண்டியது அரசின் கடமை"

"உறவுக்குக் கை கொடுப்போம்..உரிமைக்குக் குரல் கொடுப்போம்"

என்ற பதாகைகளை கைகளில் வைத்துக் கொண்டு குரல் கொடுத்தனர்.

அந்த நேரம்..எங்கிருந்தோ ஒரு கூட்டம் ஓடி வந்து இவர்களுடன் கலந்துக் கொண்டது..வந்த கும்பல் நின்றுக் கொண்டிருந்த கிராம மக்களிடம் தேவையில்லாமல் வாதம் செய்து வம்புக்கிழுத்து..அவர்களை தாக்க ஆரம்பித்தது.

அமைதியான போராட்டத்தில் வன்முறை புகுந்தது...கூட்டத்துடன் இருந்த குப்பால், கையில் அரிவாளுடன் தாமோதரனை நோக்கிப் பாய்ந்தான்.

ஒரு நொடியில் அதைப் பார்த்துவிட்ட பண்ணையார், "தாமோதரா..தாமோதரா.."என்று குரல் கொடுத்தார்.ஆனால் கூட்டத்தின் களேபரத்தில் அது யார் காதிலும் விழவில்லை.

தாமோதரனை நெருங்கிய குப்பால், அரிவாளை ஓங்கி ஒரே வெட்டாய் வெட்ட முயல..ஓடி வந்த பண்ணையார் தாமோதரனைத் தள்ளிவிட , அந்த அரிவாள் வெட்டு அவர் மார்பில் பாய்ந்தது.பண்ணையார் பூமியில் சாய்ந்தார்.

அதைக் கண்ட கூட்டத்தின் ஒரு பிரிவினர்,"அய்யய்யோ..பண்ணையாரை வெட்டி விட்டாங்க!"பண்ணையாரை வெட்டிவிட்டாங்க" என்றபடியே..குப்பாலைப் பிடித்துக் கொண்டனர்.

தனக்கு விழ இருந்த வெட்டை பண்ணையார் வாங்கிக் கொண்டார் என்பதை உணர்ந்த தாமோதரன், உடனே வாஞ்சியைக் கூப்பிட்டு..அவனது காரில் பண்ணையாரைத் தூக்கிப் போட்டுக் கொண்டு.மூக்கனையும் வண்டியில் ஏற்றிக் கொண்டு அடுத்த ஊர் மருத்துவ மனைக்கு வண்டியை ஓட்டச் சொன்னான்.

எல்லாமே சில நொடிகளில் நடந்து முடிந்தது.

அதுவரை எங்கே இருந்தனர் என்பது தெரியாத காவல்துறை அதிகாரிகள் சிலர் அப்போதுதான் அங்கு வர, அவர்களிடம் குப்பால் ஒப்படைக்கப்பட்டான்.

மக்களை அமைதியாக திரும்பும்படி ராமனும், அர்ச்சகரும் வேண்டிக் கொள்ள, கூட்டம் அமைதியாகக் கலைந்தது.

பூங்குளம்..புயல் அடித்து ஓய்ந்த பூமியாய் அமைதிக்குத் திரும்பியது

No comments:

Post a Comment