Monday, January 20, 2020

35 - அவள்..அதுவானாள்

பூங்குளமே..வெறிச்சோடிக் காணப்பட்டது.

குப்பால் சைக்கிள் கடை சூறையாடப்பட்டு அங்கிருந்த சைக்கிள்கள் சில உடைந்தும்..பல காணாமலும் போயிருந்தன.பலர் கிடைத்த வாகனங்களில் தஞ்சாவூர் விரைந்தனர்.

பண்ணையாரும், அர்ச்சகரும் மாடசாமியின் மாட்டு வண்டியில் ரயில் நிலையத்திற்கு வந்தனர்.அங்கு நின்று கொண்டிருந்த குட்ஸ் வண்டியில், ஸ்டேஷன் மாஸ்டர் சொல்ல குட்ஸ் வண்டி கார்ட் தன் பெட்டியில் அவர்களை ஏற்றிக் கொண்டு, தஞ்சையில் இறக்க ஒப்புக் கொண்டார்.

அதற்கு முன்னரே....பக்கத்து கிராம மருத்துவமனையில் இருந்து வந்திருந்த ஆம்புலன்ஸில் கற்பகமும்.தாமோதரனும், மூக்கனும் தஞ்சைமருத்துவமனைக்கு கற்பகத்தை எடுத்துச் சென்றிருந்தனர்.

மருத்துவமனையில்..

கற்பகத்தின் முகத்தில் மட்டுமல்லாமல்..உடலில் பல இடங்களில் ஆசிட் வீசியிருந்ததால்..அவளை தனியாக ஒரு பிரிவில் வைத்திருந்தனர்.பார்க்க யாரையும் அனுமதிக்கவில்லை.

அதே ..மருத்துவமனையில் விஷம் அருந்தியிருந்த கிராமத்து
 அதிகாரியும் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

பூங்குளம் கிராமமே அங்கு இருந்தது எனலாம்/

விஷயம் அறிந்து வாஞ்சியும் மருத்துவமனைக்கு வந்திருந்தான்.

வந்தவன்..அங்கு சோகமாய் அமர்ந்திருந்த தாமோதரனைப் பார்த்து, "கற்பகம் எப்படியிருக்கா?"என்றான்.

அவனுக்கு பதில் சொல்ல நினைத்த தாமோதரன், "தம்பி" என்றான்.அதற்குப் பிறகு வாய் வார்த்தைகள் வராது..நாத்தழுதழுக்க அழ ஆரம்பித்தான்.

"அழாதீங்க! கற்பகத்துக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய நீங்களே இப்படி அழுதால் எப்படி?" என்றான் வாஞ்சி.

கண்களில் வழிந்த நீரைத் துடைத்துக் கொண்டு, மனதை சற்று திடப்படுத்திக் கொண்டவனாக தாமோதரன், "வலி தாங்காமல் அலறிக்கிட்டேதான் இருக்கா..இப்பதான் கொஞ்சம் கண் அசந்ததா" டாக்டருங்க சொன்னாங்க.நானும் வெளியே இருந்து இந்த கண்றாவிக் காட்சியைப் பார்த்தேன்" என்றான்.

"வருத்தப்படாதீங்க"

"வருத்தப்படாம எப்படி தம்பி இருக்கமுடியும்?அவ..எப்பவுமே மனசு முழுக்க சந்தோஷத்தோட இருக்கறவ.எதிர்காலம் குறிச்சு நெறய கனவுகளோட வாழ்ந்துக்கிட்டு இருந்தா...தம்பி..அந்த மயில்வாகனனுக்கு ஒன்னுன்னா என் உயிரையேக் கொடுக்கத் தயார்னு சொல்லியிருந்தேன்..ஆன..அந்த கேடு கெட்டவன் என் உயிரான என் பொண்ணை இப்படி சிதைச்சுட்டானே! நான் தவமிருந்து பெத்தப் பொண்ணு தம்பி இது..எங்கக் குடும்பத்திலேயே...ஏன்..எங்க கிராமத்திலேயே முதன் முதலா காலேசுக்குப் போன பொண்ணு..அவளை..அவளை..எனக்குக் கிடைச்ச புதையலா பர்த்துக் கிட்டு இருந்தேன்.."

"கற்பகத்தை நான் இப்ப பார்க்க முடியுமா?"

"யாரும் பார்க்கக் கூடாதாம்.நோய்க்கிருமிகள் தொத்திக்குமாம்...ஆனா..நீங்க டக்டரைப் பார்த்து கேளுங்க..நீங்களும் டாக்டருக்குத்தானே படிக்கிறீங்க..அதனால பார்க்க அனுமதிப்பாங்க"

வாஞ்சி, மருத்துவரைப் பார்த்து, அனுமதி பெற்று..முகவுறை அணிந்துக் கொண்டு..தாமோதரனுடன் கற்பகத்தைப் பார்த்தான்.

கற்பகம் வலி தாளாது, "அப்பா..அப்பா.." என முணகிக் கொண்டிருந்தாள்.

தாமோதரன், "அம்மா..!அப்பா..நான் பக்கத்துல இருக்கேன்.சீக்கிரம் உனக்குக் குணமாயிடும்னு டாக்டர் சொன்னார்.இதோபார், வாஞ்சித்தம்பிக் கூட உன்னைப் பாக்க வந்திருக்கு"

"நான் பாக்கறதா.." அந்த வேதனையிலும் சிரிக்க முயன்ற கற்பகம், "அப்பா..என்னால எப்படிப்பா பார்க்க முடியும்?" என்றபடியே.."வாஞ்சி ..வாஞ்சி' என்றழைத்து அவனது கைகளைப் பற்றினாள்.

"வலி அதிகமா இருக்காடா..கொஞ்சம் பொறுத்துக்க ..எல்லாம் சரியாயிடும்"

"என்ன..வாஞ்சி..நீயும் என் அப்பா மாதிரியே பேசற..நான் பொழைக்கறதே கஷ்டம்.அப்படியேப் பொழச்சாலும் எனக்குப் பார்வைக் கிடைக்க வழியே இல்லை.ஆசிட் இஞ்சுரீஸ்ங்கறது அவ்வளவு சாதாரணமானதில்லை.இது, "செப்டிகீமியா" ரத்தம் கொஞ்சம்..கொஞ்சமா..விஷமாயிட்டே வரும்.என்ன ட்ரீட்மென்ட் கொடுத்தாலும் பிரயோசனமில்ல..எனக்குத் தெரியும்"

இதைக்கேட்டு அழ ஆரம்பித்த தாமோதரன்.."இப்படித்தான் தம்பி அனத்திக்கிட்டே இருக்கா.திடீர்னு வலி தாங்காம..கதறிக் கதறி அழறா.நான் பொழச்சாலும் பிரயோசனமில்லன்னு சொல்றா.........................திடீர்னு "அப்பா..என்னை எப்படியாவது காப்பாத்துங்க..நான்  மயில்வாகனனைப் பழி வாங்கணும்னு சொல்றா.இடுப்பு, கைகள்,தோள்படடி என எங்கும் சதை இல்லாம தவிக்கிறா..ஒரு பாட்டில் ஆசிட்..பச்சைப்புள்ள..தாங்குமா? தம்பி" என்றான்

"வாஞ்சி.." என்றாள் கற்பகம்.

"என்னம்மா?"

"வாஞ்சி நான் பொழைக்க மாட்டேன்.எனக்கு எதாவது ஆயிடுச்சுன்னா..என் அப்பா பாவம்..ஒரு அப்பாவி அவருக்கு எந்த ஆபத்தும் வராம..நீதான் பாத்துக்கணும்..பாத்துப்பியா வாஞ்சி"

"உங்கப்பாவுக்கு நானும் ஒரு மகந்தான்ம்மா" என்றான் வாஞ்சி.

அடுத்த சில மணித்துளிகளில் கற்பகம் , அதுவானாள்.

அதே நேரம் அடுத்தப் பிரிவில் இருந்த கிராம அதிகாரியும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

ஒரு அரசியல்வாதியின் வருகை..ஒரு அழகிய கிராமத்தையேப் புரட்டிப் போட்டு அவல நிலைக்கு கொண்டுவந்துவிட்டதே! என பண்ணையாரும், அர்ச்சகரும் புலம்பினர். 

No comments:

Post a Comment