Sunday, July 16, 2023

பினம் தின்னிக் கழுகுகள் -3

 


பினம் தின்னிக் கழுகுகள் -3
2000ஆம் ஆண்டு..
----------------------------------
புது வருடம் பிறந்தது.
ஆனால் இரவு முழுதும் தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தார் ரமேஷ்.
நேற்று அவர் அலுவலகத்தில் புது மில்லியினம் ஆண்டை கொண்டாடும் விதமாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதில் புத்தாண்டு 2000 எப்படியிருக்கும் என் ஒரு பட்டி மன்றம்.அதற்கு நடுவராக ரமேஷ்..
பத்திரிகைகளில் ஒன்றிரெண்டு கதைகள் எழுதி விட்டதால்..ரமேஷிற்கு அலுவலகத்தில் மிகுந்த மரியாதை.
ஒவ்வொருவரும்..ஒவ்வொரு விதமாக பேசினார்கள்.
கடைசியில் நடுவர் தீர்ப்பாக ரமேஷ் பேசியது..
"2000ம் ஆண்டும் மற்ற ஆண்டுகளைப் போலத்தான் இருக்கும்.மழை வானிலிருந்துதான் பெய்யும்.செடி..மரங்கள் மண்ணில் வேரூன்றிதான் வளரும்.தொழிலாளிகள் வேலை செய்தால் தான் வீட்டில் அடுப்பு எரியும்.பிரமாதமான மாற்றங்களை கொண்டுவர யுகமா மாறப்போகிறது..பிரளயமா வரப்போகிறது.
நம்மால் முடிந்ததெல்லாம் ஔவை "வரப்புயர" என வாழ்த்தியதைப் போல.."நம் நிறுவனம் வளர" என பிரார்திப்பதுதான்.
ஆம். நம் நிறுவனம் வளர்ந்தால்..நிறுவனத்திற்கான லாபம் அதிகரிக்கும்..லாபம் அதிகரித்தால்..தொழிலாளர்கள்..நமக்கான சம்பளம் உயரும்.
இதுதான் நடைமுறை..நாம் உழைப்போம்..ஆண்டுகள் எது வந்து போனால் என்ன..எந்த ஆண்டானாலும் உழைப்பவர்க்கே மரியாதை.."
என்று முடித்தார்.
அந்த தொழிற்சாலை அதிபர் உட்பட..அனைவரும் அவரைப் பாராட்டினர்.
அனைவரிடமும்..விடை பெற்று..நிறுவனம் வழங்கிய இனிப்பு பொட்டலத்துடன் ..அவர் வீடு வந்து சேர்ந்த போது.. இரவு மணி எட்டாகியிருந்தது.
வீட்டில் மனைவி ரம்யா..இவருக்காகக் காத்திருந்தாள்.இவர் உள்ளே நுழைந்ததும்.."என்னங்க..நம்ம லாவண்யா..இன்னமும் ஆஃபீஸ்ல இருந்து வரலே.." என்றாள் கவலையுடன்.
லாவண்யா..அவரது ஒரே மகள்.தேசியமயமாக்கப்பட்ட வங்கித் தேர்வு எழுதி..ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறாள்.வேலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது.ஐந்து மணிக்கு வேலை முடிந்ததும் ஆறுமணிக்குள் வீடு வந்து விடுபவள்..இன்னமும் வரவில்லை என்றதும் கவலை ஏற்பட்டது.
இந்த சமயத்திலும்..மாலை தான் பேசும் போது.."எந்த ஆண்டு வந்தாலும்..எவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும்..பெண்களைப் பெற்றவர்கள்..வெளியில் சென்ற பெண்கள் வீடு வந்து சேரும் வரை வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் நிலைதான் தொடரப் போகிறது..என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாமோ..?" என்ற எண்ணம் தோன்றியது.
"பயப்படாதே..அவ வந்துடுவா.."என்று சொன்னாலும்..அவருக்கும் உள்ளத்தில் பயம் ஏற்பட்டது.
இரவு மணி..பத்து
லாவண்யா வரவில்லை.
"நீங்க வேணா ஒருநடை போய் பார்க்கறீங்களா?"
"சரி" என்று சொல்லிவிட்டு லாவண்யா வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்றார்.
அந்த வங்கியில் வெளியே விளக்குகள் எல்லாம் அனைந்திருந்தது.உள்ளே ஓரிரு குழல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
வெளியே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் "தான் யார்" என்று சொல்லிவிட்டு.."லாவண்யா உள்ளே இருக்கிறாளா?" என்று கேட்டார்.
"ஆமாம் சார்..யாரும் போகவில்லை..எல்லோரும் உள்ளேதான் இருக்காங்க"
"ஒருநிமிஷம் லாவண்யாவை வரச் சொல்ல முடியுமா?"
உள்ளே சென்று திரும்பியவன்.."ஸார்..அவங்க ரொம்ப பிசியா இருக்காங்க.சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்களாம்..பயப்படாமல் உங்களைப் போகச் சொன்னாங்க" என்றான்
அவள் பத்திரமாக உள்ளே இருக்கிறாள் என்பதை அறிந்து..நிம்மதியுடன் வீடு திரும்பினார் ரமேஷ்.
ஆனால் அவள் அவள் வரவில்லை.
விபரீதமாக எதேனும் ஆகியிருக்குமா.அவருக்கான புத்தாண்டு கலவரத்தோடுதான் பிறக்கிறதா?
எங்கோ.."ஹேப்பி நியூ இயர்..இளமை இதோ..இதோ..என கமல் பாடிக் கொண்டிருந்தார்.
அங்கங்கு பட்டாசு வெடிக்கும் ஒலி.
லாவண்யா வரவில்லை.ரமேஷ் புரண்டு கொண்டிருந்தார்.
விடிந்தது...
காலை 6 மணி..
வாசலில் ஒரு கார் வந்து நிற்க..அதிலிருந்து லாவண்யாவும்..வேறு ஒரு இளைஞனும் இறங்கினர்.
(தொடரும்)

Tuesday, July 11, 2023

பிணம் தின்னிக் கழுகுகள்- 2 (தொடர்)

 


1970ஆம் ஆண்டு...
மாலை மணி 6
வீட்டுக்கு உள்ளேயும்..வெளியேயும் குட்டிப் போட்ட பூனையாய் பலமுறை அலைந்து கொண்டிருந்தார் சபேசன்.
"வரவ..உள்ளே வரப் போறா..?" எதுக்கு இப்படி டென்ஷனோட லைஞ்சுக் கிட்டு இருக்கீங்க.கொஞ்சம் உட்காருங்க..ஒரு வாய் காஃபி தரேன் சாப்பிடுங்க.." என்றாள் சபேசனின் மணைவி சந்திரா.
"ஆமாம்..இந்த முரளி பய எங்கே போயிருக்கான்..ஆளையேக் காணுமே"
"நாந்தான்...வரவாளுக்கு கொடுக்க வெத்தலை கூட இல்லையே.ஒரு கவுளி வைத்தலையும், அசோகா பொட்டலம் பாக்கும் வாங்கி வரச் சொல்லியிருக்கேன்"
"ஆமாம் பொட்டலம் பாக்கு எதுக்கு..ரசிக்லால் வாங்கி வரச் சொல்லி இருக்கலாமே"
"சொல்லியிருக்கலாம்.ஆனா..அவா கிளம்பறச்சே தாம்பூலம் கொடுக்கறப்போ பாக்கைலூசாவா கொடுக்க முடியும்?" அடுக்களையில் இருந்த படியே குரல் கொடுத்தாள் சந்திரா.
சபேசன்..ஒரு தனி்யார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.ஓரளவு சம்பளம் வந்த்து.
சீதா..அவரது மூத்த மகள் 25 வயது.டிகிரி முடித்து விட்டு டெலிஃபோன் ஆபரேட்டராக வேலை செய்கிறாள்.அவளுக்கு அடுத்து 6வருடங்கள் கழித்து பிறந்தவன் முரளி. பி.காம்.இறுதி ஆண்டு படிக்கிறான்.
சீதாவை பெண் பார்க்க வருகிறார்கள் அன்று.மாப்பிள்ளை ராமதுரை ஒரு வங்கியில் பணி புரிபவன்.
ஒரு நண்பர் மூலம் ராமதுரையின் வரன் வர..சீதாவின் ஜாதகத்துடன் பொருந்தியிருந்ததால்...பிள்ளை வீட்டாரும் சம்மதம் தெரிவிக்க அன்று மாலை 7 மணிக்கு பெண் பார்க்க வருவதாக சொல்லியிருந்தார்கள்.
பையனின் தந்தையும் ஒரு வங்கி ஊழியர்.
இந்த அரசாங்க உத்தியோகமும் சரி, வங்கி வேலையும் சரி அவரவர் வாரிசுகளுக்கு அங்கங்கேயே வேலை கிடைப்பதன் ரகசியம் என்னவென்று தெரியவில்லை..என்று நினத்த சபேசன்..முரளிக்காவது ஒரு வங்கியில் வேலை கிடைத்தால் நன்றாய் இருக்கும் என அந்த நிலையிலும் நினைத்தார்.
"அம்மா..உன்னைப் பார்க்க..மாப்பிள்ளை வீட்டார் வரேன்னு சொல்லியிருக்காங்க.சாயங்காலம் ஆஃபீஸ் விட்டு அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடு"ன்னு பொண்ணு கிட்ட படிச்சு..படிச்சு சொல்லியும் இன்னமும் அவள் வரவில்லையே என்ற கவலையுடன் இருந்தார் ."பெத்தவங்க அவஸ்தை குழந்தைகளுக்கு எங்கே தெரியறது"
"பஜ்ஜியும், கேசரியும்..ரெடி.காஃபி டிகாக்ஷன் போட்டு வைச்சுட்டேன்"என்றபடியே தன் கைகளை புடவைத்தலைப்பில் துடைத்த படியே வந்த சந்திரா.."நான் போய் முகத்தை அலம்பிட்டு..ஒரு நல்ல புடவையாய் கட்டிட்டு வந்துடறேன்.அதுக்குள்ள நீங்க..வரவா உட்கார நாற்காலியெல்லாம் சரி பண்ணுங்க.டீபாய்ல இருக்கற பேப்பர்.மேகசினியயெல்லாம் ஒழுங்கா அடிக்கி வையுங்க.."என்றவள்.சபேசனிடமிருந்து எந்த பதிலும் வராததால்.."ஏண்ணாா..உங்களைத்தானே" என்றாள்.
சகஜ நிலைக்கு வந்த சபேசன்.."ம்..ம்" என்றார்.
"என்ன யோசனை உங்களுக்கு கவலைப்படாதீங்க.சீதா சரியான நேரத்துக்கு வந்துடுவா"ஏன்று சொல்லிக் கொண்டிருந்த போதே ,சீதா உள்ளே நுழைந்தாள்.
"என்னம்ம..ரொம்ப லேட்டாயிடுத்தே..சரி..சரி..சீக்கிரம் ரெடியாயிக்கோ..அவா எல்லாம் 7 மணிக்கு வந்துடுவா" என்றார் சபேசன்.
அப்போது முரளியும்..வெற்றிலை,பாக்கு வாங்கிக் கொண்டு உள்ளே வந்தான்.
(தொடரும்)

Sunday, July 2, 2023

பிணம் தின்னிக் கழுகுகள்

 பிணம் தின்னிக் கழுகுகள் (தொடர்)

முதல் அத்தியாயம்
---------------------------------------
1952 ஆம் ஆண்டு
..--------------------------
தை மாதம்..ஒரு வெள்ளிக்கிழமை
காலையிலேயே ராமநாதன் வீடு அல்லோகலப்பட்டது .
ராமநாதன் ஒரு மத்தியத்தர குடும்பத் தலைவன்.ஒரு வக்கீலிடம் குமாஸ்தா/டைப்பிஸ்ட் ஆக பணி புரிபவர்.
வீட்டில் மனைவி மரகதம்,மகள்கள் வனஜா,கிரிஜா, ஜலஜா என மூன்று பெண்கள்
வனஜா ஈ எஸ் எஸ் சி வரை படித்து படிப்பை நிறுத்தக் கொண்டவள்.வயது 23.அடுத்து கிரிஜா 16 வயது ஏழாவது படிக்கிறாள், ஜலஜா கடைக்குட்டி நாலாவது.
வரும் சொற்ப வருவாயில்..வயிற்றைக் கட்டி..வாயைக் கட்டி குடும்பம் நடந்து வந்தது
இந்நிலையில்..சுற்றமும், நட்பும்.."என்ன..ராமநாதா..பொண்ணுக்கு 23 வயசாச்சு ..எவ்வளவு நாள் வீட்டுல வைச்சுக்கப் போற.காலாகாலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணி புருஷன் வீட்டுக்கு அனுப்பப் பார்ப்பியா?.அதைவிட்டு அதைப் பற்றியெல்லாம் கொஞசமும் கவலைப்படாமல் இருக்க" என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
"ஆமாம்..இப்படி சொல்பவர்களுக்கு என்ன..சொல்லிவிடுவார்கள்.யாரால் ஆயிரக்கணக்கில் செலவு செஞ்சு கல்யாணத்தை பண்ண முடியும்? எவ்வளவு சிக்கனமா பண்ணினாலும் ஒரு பத்தாயிரமாவது செலவாகும்..சொல்பவர்களுக்கு என்ன..கல்யாணத்து அன்னிக்கு வந்துட்டு..ஆசிர்வாதம் பண்ணிட்டு..அஞ்சோ..பத்தோ மொய் எழுதிட்டு போயிடுவாங்க.அப்புறம் கடனை அடைக்க முடியாமல் தவிக்கப் போவது நாந்தானே" என மனதிற்குள்சொல்லிக் கொண்டார் ராமநாதன்.
ஆனாலும்..கல்யாண வயதில் பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு சில கல்யாணத் தரகர்கள் அவ்வப்போது வந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில்,ஒருநாள் புரோக்கர் பஞ்சாபகேசன் வந்து.."ஒரு அருமையான வரன்.வந்து இருக்கு.மாப்பிள்ளை நம்ம ஊரு எலிமெண்டரி ஸ்கூல்ல இரண்டாம் வகுப்பு ஆசிரியரா இருக்கார்.நூறு ரூபாய் மாசம் சுளையா சம்பளம்.அப்பா..அம்மா..ஒரு சகோதரி அவ்வளவுதான்.பிக்கல்..பிடுங்கல் அதிகம் இருக்காது,என்னைக் கேட்டால் (யார் இவரைக் கேட்டார்கள்) கடனோ..உடனோ வாங்கி கல்யாணத்தை முதல் முடிச்சுடலாம்.என்ன சொல்றீங்க?" என்றார்.
ராமநாதன் மௌனமாய் இருக்க..அவரது மனைவி மரகதம் முந்திக் கொண்டு.."இருங்க பொண்ணு ஜாதகம் தரேன்.கொடுத்துட்டு..நம்ம குடும்பம் பத்தியும் அவங்கக் கிட்ட சொல்லிட்டு..பையன் ஜாதகம் வாங்கிட்டு வாங்க..பொருத்தம் இருந்தா மேலே பேசலாம்" என்று சொல்லிவிட்டு..வீட்டினுள் சென்று வனஜாவின் ஜாதகத்தை எடுத்து ..நான்கு புறமும் மஞ்சள் தீட்டி..சுவாமி படம் முன் வைத்து வணங்கி..எடுத்து வந்து பஞ்சாபகேசனிடம் தந்தாள்.வாங்கிக் கொண்டு அவர் சென்றார்.
இவ்வளவு நேரம் மௌனமாய் பிரமை பிடிச்சது போல இருந்த ராமநாதன்.."என்ன மரகதம்.நம்ம் கையில தம்பிடி கூட சேமிப்பு இல்லை.இப்படி சட்டுன்னு ஜாதகம் கொடுத்துட்டே.நாளைக்கே அவங்க "சரி" ன்னு சொல்லிட்டா..கல்யாண செலவுக்கெல்லாம் நாம எங்கே போறது?" என்றார்
"கையில காசை வச்சுண்டு..கல்யான காரியங்கள்ல இறங்கணும்னா..அலை அடிச்சு ஓய்ந்த பிறகு சமுத்திரத்தை பார்க்க ஆசைப்படறதைப் போல் தான்.துணிச்சலா இறங்கிடணும்.நீச்சல் தெரியாதவனை தண்ணீலே தள்ளி விட்டா..கையை காலை உதைச்சுக் கிட்டு நீச்சல் கத்துக்கறாப் போலத்தான் இதுவும்" என்றாள்.
மரகதம்..ஜாதகத்தை கொடுத்த ராசியோ என்னவோ..அடுத்த இரண்டு நாட்களில் பையன் ஜாதகமும் வர..ஜாதகத்தில் பத்து பொருத்தங்களும் சரியாய் இருக்க வெள்ளிக்கிழமை சாயங்காலம் பொண்ணு பார்க்க வருவதாக சொல்லிவிட்டார்கள் பையன் வீட்டில்.
அப்படி..இப்படி என அந்த வெள்ளிக் கிழமையும் வந்தது.
அதனால் தான் அந்த வீடு அன்று அல்லோகலப்பட்டது..
(தொடரும்)
May be an image of vulture
All reactions:
Prakash K and Lakshminarasimhan Rajaraman