Sunday, July 16, 2023

பினம் தின்னிக் கழுகுகள் -3

 


பினம் தின்னிக் கழுகுகள் -3
2000ஆம் ஆண்டு..
----------------------------------
புது வருடம் பிறந்தது.
ஆனால் இரவு முழுதும் தூக்கம் இல்லாமல் புரண்டு கொண்டிருந்தார் ரமேஷ்.
நேற்று அவர் அலுவலகத்தில் புது மில்லியினம் ஆண்டை கொண்டாடும் விதமாக ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
அதில் புத்தாண்டு 2000 எப்படியிருக்கும் என் ஒரு பட்டி மன்றம்.அதற்கு நடுவராக ரமேஷ்..
பத்திரிகைகளில் ஒன்றிரெண்டு கதைகள் எழுதி விட்டதால்..ரமேஷிற்கு அலுவலகத்தில் மிகுந்த மரியாதை.
ஒவ்வொருவரும்..ஒவ்வொரு விதமாக பேசினார்கள்.
கடைசியில் நடுவர் தீர்ப்பாக ரமேஷ் பேசியது..
"2000ம் ஆண்டும் மற்ற ஆண்டுகளைப் போலத்தான் இருக்கும்.மழை வானிலிருந்துதான் பெய்யும்.செடி..மரங்கள் மண்ணில் வேரூன்றிதான் வளரும்.தொழிலாளிகள் வேலை செய்தால் தான் வீட்டில் அடுப்பு எரியும்.பிரமாதமான மாற்றங்களை கொண்டுவர யுகமா மாறப்போகிறது..பிரளயமா வரப்போகிறது.
நம்மால் முடிந்ததெல்லாம் ஔவை "வரப்புயர" என வாழ்த்தியதைப் போல.."நம் நிறுவனம் வளர" என பிரார்திப்பதுதான்.
ஆம். நம் நிறுவனம் வளர்ந்தால்..நிறுவனத்திற்கான லாபம் அதிகரிக்கும்..லாபம் அதிகரித்தால்..தொழிலாளர்கள்..நமக்கான சம்பளம் உயரும்.
இதுதான் நடைமுறை..நாம் உழைப்போம்..ஆண்டுகள் எது வந்து போனால் என்ன..எந்த ஆண்டானாலும் உழைப்பவர்க்கே மரியாதை.."
என்று முடித்தார்.
அந்த தொழிற்சாலை அதிபர் உட்பட..அனைவரும் அவரைப் பாராட்டினர்.
அனைவரிடமும்..விடை பெற்று..நிறுவனம் வழங்கிய இனிப்பு பொட்டலத்துடன் ..அவர் வீடு வந்து சேர்ந்த போது.. இரவு மணி எட்டாகியிருந்தது.
வீட்டில் மனைவி ரம்யா..இவருக்காகக் காத்திருந்தாள்.இவர் உள்ளே நுழைந்ததும்.."என்னங்க..நம்ம லாவண்யா..இன்னமும் ஆஃபீஸ்ல இருந்து வரலே.." என்றாள் கவலையுடன்.
லாவண்யா..அவரது ஒரே மகள்.தேசியமயமாக்கப்பட்ட வங்கித் தேர்வு எழுதி..ஒரு வங்கியில் வேலை செய்து வருகிறாள்.வேலையில் சேர்ந்து இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது.ஐந்து மணிக்கு வேலை முடிந்ததும் ஆறுமணிக்குள் வீடு வந்து விடுபவள்..இன்னமும் வரவில்லை என்றதும் கவலை ஏற்பட்டது.
இந்த சமயத்திலும்..மாலை தான் பேசும் போது.."எந்த ஆண்டு வந்தாலும்..எவ்வளவு முன்னேற்றங்கள் ஏற்பட்டாலும்..பெண்களைப் பெற்றவர்கள்..வெளியில் சென்ற பெண்கள் வீடு வந்து சேரும் வரை வயிற்றில் புளியைக் கரைத்துக் கொண்டிருக்கும் நிலைதான் தொடரப் போகிறது..என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாமோ..?" என்ற எண்ணம் தோன்றியது.
"பயப்படாதே..அவ வந்துடுவா.."என்று சொன்னாலும்..அவருக்கும் உள்ளத்தில் பயம் ஏற்பட்டது.
இரவு மணி..பத்து
லாவண்யா வரவில்லை.
"நீங்க வேணா ஒருநடை போய் பார்க்கறீங்களா?"
"சரி" என்று சொல்லிவிட்டு லாவண்யா வேலை செய்யும் அலுவலகத்திற்கு சென்றார்.
அந்த வங்கியில் வெளியே விளக்குகள் எல்லாம் அனைந்திருந்தது.உள்ளே ஓரிரு குழல் விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன.
வெளியே நின்று கொண்டிருந்த செக்யூரிட்டியிடம் "தான் யார்" என்று சொல்லிவிட்டு.."லாவண்யா உள்ளே இருக்கிறாளா?" என்று கேட்டார்.
"ஆமாம் சார்..யாரும் போகவில்லை..எல்லோரும் உள்ளேதான் இருக்காங்க"
"ஒருநிமிஷம் லாவண்யாவை வரச் சொல்ல முடியுமா?"
உள்ளே சென்று திரும்பியவன்.."ஸார்..அவங்க ரொம்ப பிசியா இருக்காங்க.சீக்கிரம் வீட்டுக்கு வந்துடுவாங்களாம்..பயப்படாமல் உங்களைப் போகச் சொன்னாங்க" என்றான்
அவள் பத்திரமாக உள்ளே இருக்கிறாள் என்பதை அறிந்து..நிம்மதியுடன் வீடு திரும்பினார் ரமேஷ்.
ஆனால் அவள் அவள் வரவில்லை.
விபரீதமாக எதேனும் ஆகியிருக்குமா.அவருக்கான புத்தாண்டு கலவரத்தோடுதான் பிறக்கிறதா?
எங்கோ.."ஹேப்பி நியூ இயர்..இளமை இதோ..இதோ..என கமல் பாடிக் கொண்டிருந்தார்.
அங்கங்கு பட்டாசு வெடிக்கும் ஒலி.
லாவண்யா வரவில்லை.ரமேஷ் புரண்டு கொண்டிருந்தார்.
விடிந்தது...
காலை 6 மணி..
வாசலில் ஒரு கார் வந்து நிற்க..அதிலிருந்து லாவண்யாவும்..வேறு ஒரு இளைஞனும் இறங்கினர்.
(தொடரும்)

No comments:

Post a Comment