Sunday, July 2, 2023

பிணம் தின்னிக் கழுகுகள்

 பிணம் தின்னிக் கழுகுகள் (தொடர்)

முதல் அத்தியாயம்
---------------------------------------
1952 ஆம் ஆண்டு
..--------------------------
தை மாதம்..ஒரு வெள்ளிக்கிழமை
காலையிலேயே ராமநாதன் வீடு அல்லோகலப்பட்டது .
ராமநாதன் ஒரு மத்தியத்தர குடும்பத் தலைவன்.ஒரு வக்கீலிடம் குமாஸ்தா/டைப்பிஸ்ட் ஆக பணி புரிபவர்.
வீட்டில் மனைவி மரகதம்,மகள்கள் வனஜா,கிரிஜா, ஜலஜா என மூன்று பெண்கள்
வனஜா ஈ எஸ் எஸ் சி வரை படித்து படிப்பை நிறுத்தக் கொண்டவள்.வயது 23.அடுத்து கிரிஜா 16 வயது ஏழாவது படிக்கிறாள், ஜலஜா கடைக்குட்டி நாலாவது.
வரும் சொற்ப வருவாயில்..வயிற்றைக் கட்டி..வாயைக் கட்டி குடும்பம் நடந்து வந்தது
இந்நிலையில்..சுற்றமும், நட்பும்.."என்ன..ராமநாதா..பொண்ணுக்கு 23 வயசாச்சு ..எவ்வளவு நாள் வீட்டுல வைச்சுக்கப் போற.காலாகாலத்துல ஒரு கல்யாணத்தைப் பண்ணி புருஷன் வீட்டுக்கு அனுப்பப் பார்ப்பியா?.அதைவிட்டு அதைப் பற்றியெல்லாம் கொஞசமும் கவலைப்படாமல் இருக்க" என்று சொல்ல ஆரம்பித்தார்கள்.
"ஆமாம்..இப்படி சொல்பவர்களுக்கு என்ன..சொல்லிவிடுவார்கள்.யாரால் ஆயிரக்கணக்கில் செலவு செஞ்சு கல்யாணத்தை பண்ண முடியும்? எவ்வளவு சிக்கனமா பண்ணினாலும் ஒரு பத்தாயிரமாவது செலவாகும்..சொல்பவர்களுக்கு என்ன..கல்யாணத்து அன்னிக்கு வந்துட்டு..ஆசிர்வாதம் பண்ணிட்டு..அஞ்சோ..பத்தோ மொய் எழுதிட்டு போயிடுவாங்க.அப்புறம் கடனை அடைக்க முடியாமல் தவிக்கப் போவது நாந்தானே" என மனதிற்குள்சொல்லிக் கொண்டார் ராமநாதன்.
ஆனாலும்..கல்யாண வயதில் பெண் இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொண்டு சில கல்யாணத் தரகர்கள் அவ்வப்போது வந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
இந்நிலையில்,ஒருநாள் புரோக்கர் பஞ்சாபகேசன் வந்து.."ஒரு அருமையான வரன்.வந்து இருக்கு.மாப்பிள்ளை நம்ம ஊரு எலிமெண்டரி ஸ்கூல்ல இரண்டாம் வகுப்பு ஆசிரியரா இருக்கார்.நூறு ரூபாய் மாசம் சுளையா சம்பளம்.அப்பா..அம்மா..ஒரு சகோதரி அவ்வளவுதான்.பிக்கல்..பிடுங்கல் அதிகம் இருக்காது,என்னைக் கேட்டால் (யார் இவரைக் கேட்டார்கள்) கடனோ..உடனோ வாங்கி கல்யாணத்தை முதல் முடிச்சுடலாம்.என்ன சொல்றீங்க?" என்றார்.
ராமநாதன் மௌனமாய் இருக்க..அவரது மனைவி மரகதம் முந்திக் கொண்டு.."இருங்க பொண்ணு ஜாதகம் தரேன்.கொடுத்துட்டு..நம்ம குடும்பம் பத்தியும் அவங்கக் கிட்ட சொல்லிட்டு..பையன் ஜாதகம் வாங்கிட்டு வாங்க..பொருத்தம் இருந்தா மேலே பேசலாம்" என்று சொல்லிவிட்டு..வீட்டினுள் சென்று வனஜாவின் ஜாதகத்தை எடுத்து ..நான்கு புறமும் மஞ்சள் தீட்டி..சுவாமி படம் முன் வைத்து வணங்கி..எடுத்து வந்து பஞ்சாபகேசனிடம் தந்தாள்.வாங்கிக் கொண்டு அவர் சென்றார்.
இவ்வளவு நேரம் மௌனமாய் பிரமை பிடிச்சது போல இருந்த ராமநாதன்.."என்ன மரகதம்.நம்ம் கையில தம்பிடி கூட சேமிப்பு இல்லை.இப்படி சட்டுன்னு ஜாதகம் கொடுத்துட்டே.நாளைக்கே அவங்க "சரி" ன்னு சொல்லிட்டா..கல்யாண செலவுக்கெல்லாம் நாம எங்கே போறது?" என்றார்
"கையில காசை வச்சுண்டு..கல்யான காரியங்கள்ல இறங்கணும்னா..அலை அடிச்சு ஓய்ந்த பிறகு சமுத்திரத்தை பார்க்க ஆசைப்படறதைப் போல் தான்.துணிச்சலா இறங்கிடணும்.நீச்சல் தெரியாதவனை தண்ணீலே தள்ளி விட்டா..கையை காலை உதைச்சுக் கிட்டு நீச்சல் கத்துக்கறாப் போலத்தான் இதுவும்" என்றாள்.
மரகதம்..ஜாதகத்தை கொடுத்த ராசியோ என்னவோ..அடுத்த இரண்டு நாட்களில் பையன் ஜாதகமும் வர..ஜாதகத்தில் பத்து பொருத்தங்களும் சரியாய் இருக்க வெள்ளிக்கிழமை சாயங்காலம் பொண்ணு பார்க்க வருவதாக சொல்லிவிட்டார்கள் பையன் வீட்டில்.
அப்படி..இப்படி என அந்த வெள்ளிக் கிழமையும் வந்தது.
அதனால் தான் அந்த வீடு அன்று அல்லோகலப்பட்டது..
(தொடரும்)
May be an image of vulture
All reactions:
Prakash K and Lakshminarasimhan Rajaraman

No comments:

Post a Comment