Friday, November 29, 2019

7 - செத்துப் போ..செத்துப் போ

தாமோதரனைப் பார்க்க அரசியல்வாதி மயில்வாகனன் வந்தது, அவருக்காகத் தயாரான விருந்தை அவர் உண்ணாமல் சென்றது ஆகியவை கை, கால்கள் முளைத்து வித விதமான வதந்திகளாக கிராமம் முழுதும் உலா வர ஆரம்பித்தது.

தாமோதரன் ஒரு தலித் என்பதாலேயே, அவன் வசிக்கும் பகுதிக்கு மயில்வாகனன் வந்தான் என்றும், எதிர்காலத்தில் தன் வாக்கு வங்கிக்காக அவன் அப்படி செய்தான் என்றும்,சாதி ஆதிக்கத்தால்,அவ்ன் வீட்டில் சாப்பிட மட்டும் மனம் ஒப்பவில்லை என்றும் பெரியவர்கள் பலர் பேச அரம்பித்து இருந்தனர்..

தாமோதரன், மயில்வாகனன் சார்ந்த கட்சியின் செயலாளர் ஆகி விட்டான் என்றனர் சிலர்.

எது எப்படியோ, வெண்கலக் கடையில் யானை புகுந்தால் என்னவாகுமோ,..அதுபோல ஆனது மயில்வாகனனின் பூங்குளம் வருகை.

இதனிடையே, பண்ணையார் வயலில் விதை விதைக்கும் பணியும் நடந்து, மதிய உணவிற்காக சற்று நிறுத்தப்பட்டது.

மதிய வெயில் தாங்காமல், பண்ணையார் குடை பிடித்து மெதுவாக வந்து கோயில் அருகில் அரசமரத்தடி பீடத்தில் அமர்ந்தார்.

அவரைப் பார்த்த அர்ச்சகர், ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து அவருக்குக் கொடுத்தார்.அதை வாங்கிக் குடித்த பண்ணை, "அர்ச்சகரே! வெயில் தாங்கலை.கத்திரியே பரவாயில்லை போல இருக்கு.ஆடியில இவ்வளவு வெயிலா"என்றார்.

"ஆடியில வெயில் அடிக்கையில், காற்றும் இருந்தா ஐப்பசி மாசம் மழை இருக்கும்னு சொல்லுவாங்க! இந்த வருஷம் மழை பொய்க்கக் கூடாது' என்று சொல்லியபடியே, பண்ணையார் கையில் இருந்த சொம்பினை வாங்கிக் கொண்டார் அர்ச்சகர்.

"  அப்படி இருந்தாத்தான் வயல்கள்ல வெளச்சல் நல்லா இருக்கும்" என்ற பண்ணையிடம்,

 "சாப்பிட்டாச்சா" என்றார் அர்ச்சகர்.

"இல்லை..வீட்ல இருந்து தனலட்சுமி கொண்டுவரும் இப்ப.." என்ற பண்ணை "உச்சி நேரம் வந்தாச்சே..நீங்க நடை சாத்தலையா?"

"கிளம்ப வேண்டியதுதான்.நீங்க கொஞ்சம் ஓய்வு எடுங்க" என்ற கூறியவாறே அர்ச்சகர்,சொம்பை எடுத்துக் கொண்டு கோயிலினுள் சென்று வைத்துவிட்டு....கோயிலின் கதவுகளை சாத்திவிட்டு வீட்டுக்குக் கிளம்பினார்..

இடைப்பட்ட நேரத்தில்..அரசமரத்தடியில் மனைவி தனலட்சுமிக்குக் காத்துக் கொண்டிருந்த பண்ணையார், கைகளை தலைகணைகளாக ஆக்கிக் கொண்டு படுத்திருந்தார்.அசதி அதிகமாய் இருந்ததால் அவரை அறியாமல் நித்திராதேவி ஆட்கொண்டாள்.

திடீரென..இருள் சூழ..எலும்புக்கூடு ஒன்று எழுந்து..இங்கும் அங்கும் ஆட்டம் போட்டது.பண்ணையாரின் மீது ஏறி அமர்ந்து, அவர் கழுத்தினை நெரிக்கத் தொடங்கியது...உடன்.."செத்துப் போ...செத்துப்போ"ன்னு கூக்குரல் இட்டது.பண்ணையாருக்கு மூச்சு முட்டியது..

"என்னை விடு...என்னை விடு...." என அலறியபடியே கண் விழித்தார் பண்ணை.

பண்ணையாரின் அலறலைக் கேட்டு..அருகே இருந்த டீக்கடையில் இருந்து நாராயணன் ஓடி வந்தான்..

"பண்ணை...என்னாச்சு?" என அவரை ஆசுவாசப்படுத்த..

"நாராயணா...எலும்புக்கூடு பேய்...எலும்புக்கூடு பேய்..என்னை கொலை செய்யப்பாக்குது" என்றார் பதட்டத்துடன்.

"அட போங்க பண்ணை..பேயாவது..பிசாசாவது..இந்தப் பகல் வேளையில இப்படி ஒரு கனவா? ..இருங்க குடிக்க தண்ணீ கொண்டுவரேன்..குடிச்சுட்டு படுங்க" என்ற படியே கடையை நோக்கிச் சென்றான்.    

Tuesday, November 26, 2019

6.- கற்பகம்

பண்ணையார் வயலில் மூக்கனும் அவனுடன் சேர்ந்து அவனது சேரியில் இருக்கும் நாலுபேரும் சேற்றிலும் சகதியிலும் நடந்தவாறே வயலில் விதைநெல்லை விதைத்துக் கொண்டிருந்தனர்.

அவை முளைத்ததும்,சற்றே வளர்ந்ததும் கட்டு..கட்டாக பிடுங்கி வயல் முழுதும் நாற்று நடப்படும்.அவை வளரும்போது அடி உரமிட வேண்டும். பின் பயிர்களிடையே விளைந்திருக்கும் களை எடுக்கவேண்டும்...இதனிடையே வானமும் பொய்க்ககூடாது மழையும் அளவிற்கு அதிகமாக பொழியக்கூடாது..

கிராமத்து விவசாயிகளின் அன்றாடம் படும் போராட்ட வாழ்வினைப் பற்றி சற்றும் கவலைப்படாமல் அரசியல்வாதிகள் பிழைப்பும் ..நகர மக்களின் வயிறும் நிரம்பிக்கொண்டுதான் இருக்கிறன.

வயலை ஒட்டி இருந்த மரத்தடியில் ஒரு நாற்காலி இடப்பட்டு அதில் பண்ணையார் அமர்ந்திருந்தார்,

பக்கத்தில் சில சிறுவர்கள் பம்பரம் ஆடிக் கொண்டிருந்தார்கள்.

அந்த சமயத்தில் செம்மண் சாலையில் புழுதி ஏற்படுத்தியவாறு கார் ஒன்று வந்துகொண்டிருந்தது.காரைப் பார்த்த சிறுவர்கள்..பம்பர ஆட்டத்தை மறந்து 'ஓ'..என கூச்சலிட்டபடியே காரின் பின்னால் ஓட ஆரம்பித்தார்கள்.

பண்ணையாருக்கு புரிந்துவிட்டது,அரசியல்வாதி மயில்வாகனன்,தாமோதரன் வீட்டிற்கு சென்று கொண்டிருக்கிறான் என,,

தாமோதரன் வீட்டு வெளியே கார் நிற்க...ஒரு சில இளைஞர்கள் கூட்டமும் கூடிவிட்டது.

வீட்டிலிருந்து வெளியே வந்த தாமோதரன், மயில்வாகனனைக்  கண்டதும், "தலைவர்" எனக் குரல் கொடுக்க, இளைஞர்கள் கூட்டம் "வாழ்க" எனக் குரல் கொடுத்தனர்.

"தீண்டாமையை ஒழிக்க வந்துள்ள தலைவன்"

"வாழ்க..வாழ்க"

நலிந்தோரின் நலம் காக்கும் தலைவன்"

"வாழ்க..வாழ்க"

இளைஞர்களும், சிறுவர்களும் கோஷமிட, தலைவனோ யாரையும் தீண்டாமல், அனைவரையும் பார்த்து ஒரு கும்பிடு போட்டபடியே, தாமோதரனைப் பார்த்து, "தாமோதரா! உள்ளே போகலாமா?" என்றார்.

"ஒரு நிமிஷம் தலைவா" என்ற தாமோதரன் , உள்ளே நோக்கி "செங்கமலம்" என மனைவிக்குக் குரல் கொடுக்க..செங்கமலமும், "இதோ வர்றேங்க.." என்றவாறே, மகள் கற்பகம் பின்தொடர ஆரத்தித் தட்டுடன் வந்தாள்.

செங்கமலமும், கற்பகமும் ஆரத்தி எடுக்க, தாமோதரனிடம் தலைவர் கைகாட்ட, தாமோதரன் அவரிடம் ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து நீட்டினான்.தலைவர் அதை செங்கமலத்திடம் கொடுத்தார்.

பின், செங்கமலம்,தாமோதரன்,மயில்வாகனன் உள்ளே செல்ல..கற்பகம் ஆரத்தியை வாசலில் போடப்பட்டிருந்த கோலத்தின் நடுவில் கொட்டிவிட்டு உள்ளே சென்றாள் முகம் கடு கடுத்த படியே.

ஆம்..அங்கு நடக்கும் எதுவும் அவளுக்குப் பிடிக்கவில்லை.

வீட்டினுள் இருந்த மர நாற்காலி ஒன்றை , தாமோதரன் தூசு தட்ட, தலைவர் அதில் அமர்ந்தார்.

உள்ளே நுழைந்த கற்பகத்தை ஓரக்கண்ணால் பார்த்தபடியே, "தாமோதரா! நீ கட்சி ஆஃபீசுக்கே வரதில்லையாமே! உம்மேல புகார்கள் வந்துக் கிட்டு இருக்கு.."என்றவர்.."நல்லாத்தானே இருக்கே..உன்னை வைச்சு இந்த கிராமத்துல என்னன்னவோ செய்யணும் திட்டம் போட்டிருக்கேன்" 

"உங்க தயவுல நல்லா இருக்கேன் ஐயா! இப்ப வயக்காட்டுல விதை விதைக்கற நேரம்.அதுதான் வேலை அதிகம்.கட்சி ஆஃபிசுக்கு வர முடியல" என்றான்.

"ஏன்யா..எல்லரும் உன்னைப் போல விதை விதைக்கிறோம்..களைப்புடுங்கறோம்னு புடுங்கப்போயிட்டா..கட்சியோட பொது வேலைகளையெல்லாம் செய்யறது யாரு?" என்றான் இளக்காரமாக.

"மன்னிச்சுக்கங்க ஐயா.. நாளைல இருந்து எந்த வேலைன்னாலும்..அதை அப்படியே விட்டுட்டு கட்சி ஆபீசுக்கு வந்துடறேன்" என்றவன், "கற்பகம்..கற்பகம்" என குரல் கொடுத்தான் தாமோதரன்.

கறி குழம்பும், மீன் வறுவலும் கமகமக்கும் வாசனையை மோப்பம் பிடித்தவாறே..கற்பகம் வருகிறாளா? எனப் பார்த்தான் மயில்வாகனன்.

அடுக்களையில் இருந்து கற்பகம் மெதுவாக வெளியே வந்தாள்."தலைவா..இது என்னோட ஒரே ஒரு பொண்ணு. பேரு கற்பகம்" என்றான் தாமோதரன்.

"ஓ...உன் பொண்ணா..கற்பகம்..."  என பெயரை மீண்டும் ஒரு முறை உச்சரித்தவன்.."பேர் மட்டுமில்ல  தாமோதரா..பொண்ணும் அம்சமாகவே இருக்கா" என்றார் ஜொள்ளுடன்.

கற்பகம் தந்தையைப் பார்த்து ஒரு முறை முறைத்தாள்.

"இதோ பாரு தாமோதரா..உன் பொண்ணைப் பார்த்ததுல இந்த மயில்வாகனன் ரொம்ப ஹேப்பி" என்றவாறே..கற்பகத்திடம், "கண்ணு என்ன பண்ற?" என்றான்.

கற்பகம் ஏதும் பதில் சொல்லாமல் நிற்க, தாமோதரனே" தஞ்சாவூர் மெடிகல் காலேஜ்ல டாக்டருக்கு படிக்குதுங்க"என்றான்.

"ஆமாம்..ஆமாம்...மறந்துட்டேனே..நான் தானே..மெடிகல் காலேஜ் சீட் வாங்கிக் கொடுத்தென்"

"நீங்க ஒன்னும் வாங்கித் தரலே..எனக்கு மெரிட்லதான் இடம் கிடைச்சுது" என்றாள் 'வெடுக்'கென கற்பகம்.

சற்றே அதிர்ந்த மயில்வாகனன், "என்ன தாமோதரா! உன் பொண்ணும் இப்படிச் சொல்லுது.."என்றான்.

தடுமாறிப்போன தாமோதரன் "தலைவா! அது சின்னப்பொண்ணு..அதுக்கு ஒன்னும் தெரியாது..நீங்க இல்லேன்னா காலேஜ்ல இடம் கிடைச்சிருக்குமா?" என்றவன், கற்பகத்தைப் பார்த்து,"கற்பகம், தலைவர் எது சொன்னாலும்..எதுத்து பேசக்கூடாது.தலையாட்டணும்.அதுதான் கட்சித் தொண்டனோட வேலை.தலைவர் எதைச் சொன்னாலும் அதில் நியாயம் இருக்கும்" என்றான்.

'சரி விடு...சின்னப் பொண்ணு..விவரம் தெரியாம பேசுது..நான் கிளம்பறேன்"

"என்ன தலைவா..அதுக்குள்ள கிளம்பறீங்க! உங்களுக்காக இளம் வெள்ளாட்டை வெட்டி கறிக்குழம்பு...குளத்து மீனைப் புடிச்சாந்து மீன் வறுவல் எல்லாம் செங்கமலம் செஞ்சு வைச்சிருக்கு.சாப்பிட்டுட்டுப் போகலாம்." என்றவன்.."கற்பகம்..தலைவருக்கு இலையைப் போடு" என்றான்.

கற்பகம் அங்கிருந்து நகர.."தாமோதரா..உனக்கு இவ்வளவு அழகா ஒரு பொண்ணு இருக்கான்னும் எனக்கு இவ்வளவுநாளாத் தெரியலையே!" என்றான் மயில்வாகனன்.

அடுக்களைக்குள் நுழைந்த கற்பகம் அம்மாவிடம், "பொண்ணு இருக்கறதேத் தெரியாதாம்.ஆனா..தெரியாத பொண்ணுக்கு மெடிகல் சீட் வாங்கிக் கொடுத்தாராம்" என்றாள்.

"அதை விடும்மா...இந்த அரசியல், அரசியல்வாதிங்கப் பத்தி எல்லாம் தெரிஞ்சதாலேத்தான் அவங்களை நம்ம கிராமத்துல அண்டவிடாம வைச்சிருந்தாங்க.எல்லா நல்ல விஷயங்களையும் நாங்கதான் செஞ்சோம்னு சொல்லுவாங்க.எல்லாத்துலேயும் விளம்பரம்தான்.எழவு வீட்டுக்குப் போனாக்கூட..அங்க செத்தவனுக்குக் கிடைக்கிற மரியாதையைப் பார்த்து..அடடா..நாம பொணமா இல்லையேன்னு நினைப்பாங்க.உங்கப்பாவுக்கு பிடிச்ச சனியாலத்தான் இப்படியெல்லாம் நடக்குது.நாம சொன்னா அவர் கேக்கவாப் போறாரு" என்றாள் செங்கமலம்.

வெளியே தாமோதரனிடம் பேசிக்கொண்டிருந்த   மயில்வாகனன்,"என்ன தாமோதரா...நான் கேட்டதற்கு பதிலே சொல்லலை.உன் பொண்ணைப் பத்தி ஏன் இவ்வளவு நாளா சொல்லலை" என்றான்.

"தலைவா..உனக்கு ஊர் கவலையே பெரிய கவலை.இதுல என் குடும்பக் கவலையும் எதுக்குன்னு தான்..." என இழுத்தான்..

"டாக்டருக்குப் படிக்கணும்னா ரொம்ப செலவாகுமே..எபப்டி சமாளிக்கிற"

"அதை ஏன் தலைவா..கேட்கறீங்க? இன்னிக்கு இந்த உடம்புல உசுரு இருக்குன்னா..அது உனக்காகவும்..என் பொண்ணுக்காகவும்தான்.உங்க ரெண்டு பேருக்காக என் உசுரையும் கொடுப்பேன்"

"சாப்பிட வரலையா?" என்ற செங்கமலத்தின் குரல் கேட்க,,

"தாமோதரா...இன்னொரு நாள் வந்து சாப்படறேன்.இன்னிக்கு தஞ்சாவூருக்கு மந்திரி வர்றார்.கெஸ்ட் ஹவுஸ்ல தங்கறார்.எனக்கு சாப்பாடு அவரோடதான்..நான் கிளம்பறேன்.அடிக்கடி கட்சி ஆஃபிசுக்கு வா.உன் பொண்ணையும் அழைச்சுட்டு வா.அவளை நம்ம கட்சிக்கு மாணவரணி செயலாளரா ஆக்கிடறேன்.அப்பறமா..நம்ம கட்சியின் கொள்கை பரப்பு செயலாளராகவே ஆக்கிப்புடறேன்"

இதை உள்ளிருந்து கேட்டுக் கொண்டிருந்த கற்பகம் வெளியே வந்து, "எனக்கு அரசியல் எல்லாம் வேண்டாம்.என்னோட லட்சியம் நான் ஒரு டாக்டராக ஆகணும்.அவ்வளவுதான்.இந்த அரசியல் சாக்கடை எல்லாம் என் அப்பாவோட போகட்டும்" என்றாள்.

"தலைவர் கிட்ட அப்படியெல்லாம் பேசக்கூடாதும்மா" என்ற தாமோதரனிடம், " விடு தாமோதரா..இதோபாரு கற்பகம்..அரசியல் எதிர்காலத்திலே அரசியல்வாதிங்கக் கிட்ட இருக்கக்கூடாதுன்னுட்டுதான், உன்னைப் போல படிச்சவங்களைக் கட்சிக்குள்ள கொண்டு வரேன்" என்றான் மயில்வாகனன்.

"அரசியல், அரசியல்வாதிங்கக் கிட்ட இருந்தா தப்பில்லை.அயோக்கியர்கள் கிட்ட தான் இருக்கக் கூடாது"

அதைக் கேட்டு, அசடு வழிந்த படியே.."நல்லாச் சொன்ன பொண்ணு..தாமோதரா..இப்பதான் இந்த மயில்வாகனன் ரொம்ப ஹேப்பி" என்ற படியே வில்லத்தனமாக சிரித்தபடியே வெளியே செல்ல, தாமோதரன் அவரைப் பின் தொடர்ந்தான்.

Saturday, November 23, 2019

5 - நீயும் நானும் ஒன்று

பஞ்சாயத்து கலைந்ததும்,பண்ணையார் அர்ச்சகரிடம் வந்து "கோயிலுக்குள்ள வர்றீங்களா? இன்னிக்கு வெத வெதக்கிற நாள்.பஞ்சாயத்து இருந்ததால தாமதம் ஆயிடுச்சு.வந்து..அந்த அம்மனுக்கு ஒரு பூசையைச் செய்துட்டு என்னை அனுப்பிவையுங்க" என்றார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த மாடசாமி பண்னையாரிடம் "சாமி..நீங்க நல்லாயிருக்கணும்.நம்ம கிராமத்துல பாதிப்பேருக்கு மேல உங்க வயல்கள்தான் சாப்பாடு போடுது" என்றான்.

அதற்கு அர்ச்சகர், "ஆமா..மாடசாமி..பண்ணையார் பரம்பரப் பணக்கராய் இருந்தாலும் அவர் மனசு லேசானது.மனுஷநேயம் மிக்கவர்.ஏழ்மைன்னா என்னன்னு தெரிஞ்சவர்.யார் இல்லைன்னு வந்தாலும் இல்லைன்னு சொல்லாம கொடுக்கறவர்" என்றார்.


பண்ணையார் சற்றே நாணி "என்ன ரொம்ப புகழறீங்க" என்றார்.

அர்ச்சகர் தொடர்ந்தார்."ஆனாலும் உங்கக் கிட்ட எனக்குப் பிடிக்காத குணம் இருக்கே! இன்னமும் மேல் ஜாதி, கீழ் ஜாதின்னு பார்க்கறீங்களே! இன்னமும் காட்டுமிராண்டித் தனமான இரட்டை தம்ளர் முறை நம்ம நாராயணன் கடையிலே இருக்கறதுக்கு உங்களைப் போன்ற ஆட்கள் தானே காரணம்"

"நான் என்ன செய்யறது.என் உடம்புல பரம்பர ரத்தம் ஓடுதே! காலத்துக்கு ஏற்ப நானும் மாறணும்னு பார்க்கறேன்.ஆனா முடியலையே.ஏதோ என்னால முடிஞ்சது..எங்க ஆட்கள் கிட்ட பேசி..அம்மன் பொதுவானவ..அவளை கும்படற உரிமை எல்லாருக்கும் இருக்குன்னு மூக்கன் மாதிரி ஆட்களை கோயில்லுக்குள்ள வர வழைச்சதுதான்"

"ஆனா...அதுக்கும் ஒரு கண்டிஷன் போட்டு இருக்கீங்களே!நீங்க சாமி கும்படற நேரத்துல அவங்க வரக்கூடாதுன்னு"

"சரி..சரி..இதைப் பத்தி பேசிக்கிட்டே இருந்தா பேசிக்கிட்டே இருக்கணும்..முகூர்த்த  நேரத்துக்குள்ள பூசை செய்யணும்" என்றபடியே பண்ணை அர்ச்சகருடன் கோயிலுக்குள் சென்றார்.

"பண்ணை..நான் உங்கக் கிட்ட ஒன்னு கேக்கறேன்..விதை முகூர்த்தம் பாத்து..விதை விதைக்க நல்ல நாளா இன்னிக்கு தேர்ந்தெடுத்து இருக்கீங்க.அதுக்காக பூஜை செய்ய வந்திருக்கீங்க.உங்க வயல்ல விதை விதைக்கப்போறது நீங்களா?"

"இல்லை"

"தண்ணீ பாய்ச்சப்போறது நீங்களா?"

"இல்லை"

"நாத்து நடப்போறது..பயிர் வளர வளர பாதுகாப்புக் கொடுக்கப்போறது..அறுவடை செய்யப் போறது..அறுவடை ஆன  நெல்லை ஆலைக்கு எடுத்துட்டுப் போய் அரிசி ஆக்கப் போறது..இப்படி எதாவது ஒரு வேலையையாவது நீங்க செய்யப் போறீங்களா"

'இல்லை..இல்லை.."

"பின்ன..இந்த வேலையையெல்லாம் செய்யப் போறது யாரு?"

"நம்ம மூக்கன் தான்"

"எரு போடறது,உழறது,விதைக்கறது, அறுக்கறது, கதிரடிக்கிறது இப்படி எல்லாமே செய்யப் போறது மூக்கன் தான். ஆனா, அவனை மட்டும் உங்கக் கூட வித விதக்கற பூஜைல கலந்துக்கக் கூடாதுன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்னு சொல்லுங்க! உணமையைச் சொல்லணும்னா.. மூக்கன் போன்ற ஆளுங்கத்தான் உங்களைப் போன்றவங்களுக்கு எஜமானன்.உங்க எஜமானர்கள்தான் உங்களுக்காக உழைக்கறாங்க..விதைக்கறாங்க..அறுவடை செய்யறாங்க".

"அர்ச்சகரே! இது போல பலமுறை நீங்க கேட்டுட்டீங்க! நானும் பலமுறை பதில் சொல்லிட்டேன்.சில விஷயங்களை நம்மால மாத்திக்க முடியறதில்ல.அதுபோலத்தான் இதுவும்னு வைச்சுக்கங்க.."

"இல்ல பண்ணை..கண்டிப்பா ஒருநாள் இந்த நிலை மாறும்..என்ன ஒன்னு..அதுவரைக்கும் அதப்பார்க்க நான் உசுரோட இருக்கணும்"

"உங்க நல்ல மனசுக்கு..நீங்க அமோகமா நூறு வயசுக்கும் மேல வாழ்வீங்க.நல்ல நாளும் அதுவுமா நல்ல விஷயங்கலைப் பேசுவோமே... நீங்க பூஜையை ஆரம்பிங்க"

அர்ச்சகர் பூஜையை ஆரம்பித்து, அம்மனுக்கு கற்பூர ஆரத்தியும் எடுத்தார்.பின் கற்பூரத் தட்டை பண்ணையாரிடம் எடுத்துவர..தீபத்தை கைகளால் ஒத்தி கண்களில் வைத்து வணங்கிய பண்ணை..பின் கண்களை மூடியவாறே இறைவனை மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.

"அம்மா..தாயே! இன்னிக்கு வித விதைக்கிறோம்.இந்த வருஷமாவது எந்தவித பாதிப்பும் இல்லாம விளைச்சல் அமோகமா இருக்கணும்"

பின், ஆரத்தித் தட்டைஅம்மன் காலடியில் வைத்துவிட்டு வந்த அர்ச்சகர், "பண்ணை..காலைல எட்டு மணிக்கே வந்துட்டீங்க!ஏதாவது சாப்பிட்டீங்களா? "  என்றார்.

"காலைல எப்பவுமே நீராகாரம்தான்.இன்னிக்கு கோயிலுக்கு வரணும்னு ..எதுவும் சாப்பிடாம சாமி கும்பிட்டா விசேஷம்னு எதுவும் சாப்பிடாம வந்துட்டேன்"

"நம்ம நாராயணனை சுத்தமா தம்ளரைக் கழுவிட்டு  ஒரு டீ போடச்சொல்லி சாப்பிடுங்களேன்!"

"வேண்டாம்..வேண்டாம்..இன்னும் கொஞ்ச நேரத்துல மூக்கன் வருவான்.அவனை டீயைச் சாப்பிட்டுட்டு வயக்காட்டுக்கு வரச் சொல்லுங்க..அவனுக்கு பாவம் இன்னி முழுதும் வேலை இருக்கும்" என்று சொன்னவர், அப்போதுதான் நாரயணனும் தனக்குப் பகக்த்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்தார்.
"நாராயணா..மூக்கனுக்கு காலைல என்ன இட்லியோ, தோசையோ போட்டிருக்கியோ அதையும்..டீயையும்  கொடுத்துடு என் கணக்குல.அப்பறம் இந்தப் பண்ணைச் சொன்னேனேன்னு டீயை தம்ளர்ல கொடுத்துடப் போற..எப்பவும் போல வட்டில்தான் ஞாபகம் இருக்கட்டும்" என்றார்.

இதைக் கேட்ட ,அர்ச்சகர் சிரிக்க "என்ன  சிரிக்கறீங்க" என்றார் பண்ணை.

"ஒன்னுமில்ல..ஒரு பழமொழி ஞாபகம் வந்தது..சொன்னா...தப்பா நெனச்சுக்கக் கூடாது"

"அர்ச்சகரே..உங்களை நான் தப்பா நெனப்பேனா? சொல்லுங்க"

"புடலங்காயைக் கூட கல்லைக் கட்டி விட்டால் நேராக விளையுமாம்"

"எனக்குப் புரியுது.நீங்க எதையோ சொல்ல வந்துட்டு..எதையோ சொல்லிட்டீங்கன்னு.சரி..சரி..வெதநெல்லு வண்டி களத்து மேட்டுக்குப் போயிருக்கும்..நான் வரேன்.."

பண்ணையார் போனதும்..அதுவரை கோயிலின் உள்புறம் ஒளிந்து கொண்டிருந்த மூக்கன் வெளியே வந்தான்.அவனைப் பார்த்த அர்ச்சகர், ":மூக்கா..சீக்கிரம் அம்மன் குங்குமத்தை வாங்கிக்கிட்டு களத்துமேட்டுக்கு ஓடு..பண்ணையார் காத்துக்கிட்டு இருப்பார்" என்றார்.

மூக்கன் , அர்ச்சகரைப் பார்த்து, "சாமி,இன்னிக்கு பண்ணையார் நிலத்துல விதைக்கப் போறோம்.விளைச்சல் அமோகமாய் இருக்கணும்" என வேண்டினான்.

"அதை என் என்கிட்ட சொல்ற..அந்த ஆண்டவன் கிட்ட சொல்லு"

"என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்கதான் எனக்கு சாமி"

"மூக்கா ,என்ன சொல்ற?"

"நீங்கதானே சொல்லியிருக்கீங்க..யார் மனசுல அன்பு இருக்கோ..அவங்கதான் சாமின்னு.யார் மனசுல கருணை இருக்கோ அவங்கதான் சாமின்னு.."

மூக்கன் வார்த்தைகளைக் கெட்டு, அர்ச்சகர் அவனிடம் வந்து தட்டிக் கொடுத்தார்.

அவரது செயலால் அதிர்ச்சி அடைந்த மூக்கன் "ஐயா.." என்றான்.

"என்ன..உன்னை நான் தொட்டுட்டேனா? ஏன்..நான் உன்னைத் தொடக்கூடாதா? நீயும், நானும் சமம்.எங்களுக்கு ஊருக்குப் புறம்பா அக்ரஹாரம் உண்டு.உங்களுக்கு ஊருக்குப் புறம்பா சேரி.நீங்க இருக்கற இடத்துக்கு நாங்க வரக்கூடாது.நாங்க இருக்கற இடத்துக்கு நீங்க வரக்கூடாது.சுப, அசுப காரியங்களை  பறை கொட்டி நீங்க அறிவிப்பீங்க.நாங்க அதை நடத்தி வைப்போம்.எங்களுக்கு பூணூல் உண்டு.உங்களிலும் ஒரு சாராருக்குப் பூணூல் உண்டு.மடிசார் கட்டறேன்னு எங்க பொண்கள்..புடவைத் தலைப்பை வலது பக்கம் போடுவாங்க,உங்களைச் சேர்ந்த பொண்களுக்கும் வலப்பக்கம் தலைப்பு.
நான் உன்னை தாராளமாய்த் தொடலாம்..சரி..நேரமாச்சு, பண்ணை வயக்காட்டுல காத்துக்கிட்டு இருப்பார்.நீ போய் டீயைச் சாப்பிட்டு கிளம்பு" என்றார் அர்ச்சகர்.

மூக்கனும்..அர்ச்சகர் கொடுத்த குங்குமத்தை நெற்றியில் பூசிக்கொண்டு, டீக்கடையை நோக்கிச் சென்றான்.   

Tuesday, November 12, 2019

4 - பஞ்சாயத்துக் கூடியது

திடீரென தேர்முட்டி அருகில் நாராயணன் டீக்கடை அருகில் ஒரு அரசியல் கட்சியின் கொடிக்கம்பம் நடப்பட்டு கொடி பறக்க விட்டிருப்பதைக் கண்ட கவுண்டரும்,பண்ணையாரும் வியந்தனர்.

கட்சிகள் எதுவும் கிராமத்தினுள் நுழைந்துவிடக் கூடாது என்பதில் ,ஊரே உறுதியாய் இருக்கும் போது இப்படி ஒரு நிகழ்வு எப்படி நடந்திருக்க முடியும் என எண்ணினர்.

இதற்குக் காரணம் யாராயிருக்கக் கூடும் என நீண்ட நேரம் அர்ச்சகருடன் பேசிக் கொண்டிருந்தனர்.

"பொறுங்கள்...எப்படியும் இன்னும் ஓரிரு தினங்களில் ,இதற்கு ஒரு தீர்வு வந்துவிடும்" என்றார் அர்ச்சகர்.

"ஒருவேளை, இது நம்ம ராமனோட வேலையாய் இருக்குமோ?" என்றார் பண்ணையார்.

இச்சமயத்தில் பண்ணையார் சொன்ன ராமனைப் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

அந்த கிரமாத்தைப் பொறுத்தவரை வெளிஉலகில் நடக்கும் நடப்புகளை, பக்கத்து கிராமத்திற்குச் சென்று, பத்திரிகை வாங்கிப் படித்துத் தெரிந்து கொண்டு வருபவன் ராமன்.ஓரளவு விஷயம் அறிந்தவன்.ஆனால் என்ன ஒன்று, சற்று வாய்ச்சவடால் பேர்வழி.உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால்..தில்லானா மோகனாம்பாளில் வரும் வைத்தி நாகேஷ் போல எனலாம்.இவன்பிராமண துவேஷி வேறு.

"கண்டிப்பாக ராமன் இதை செய்திருக்க மாட்டான்.வாய்ச்சவடால்காரன்தான் அவன்.ஆனாலும் நம்மை மதிப்பவன்,.எந்தக்கட்சியின் பிடியிலும் நம் கிராமம் மாட்டிக் கொன்டுவிடக்கூடாது என்பதில் அவனுக்கும் ஒப்புதல் உண்டு.அவனைப் பற்றி முழுமையாக அறிந்து கொண்டவன் என்ற விதத்தில் சொல்கிறேன்..கண்டிப்பாக இதற்கு ராமன் காரணமாய் இருக்க மாட்டான்"என்றார் அர்ச்சகர்.

அவருக்கு யாரையும் குறைசொல்லிப் பழக்கம் இல்லை.எல்லோற்றும் அவர் கண்களுக்கு நல்லவராகவேத் தெரிந்தார்கள்.

அர்ச்சகர் மீது மிகவும் மதிப்பு வைத்திருந்த பண்ணையாரும், கவுண்டரும், இது சம்பந்தமாக மௌனம் சாதித்தனர்.

அந்த சமயத்தில் மூக்கன் அங்கு வந்து, "ஐயா..ஒரு சேதி சொல்லணும்" என்றான்.

"என்ன" என்பது போல பண்ணையார் அவனை ஏறிட்டார்.

"நம்ம தாமோதரன் வூட்டுக்கு  அரசியல்வாதி மயில்வாகனனாமே..அவரு வராராம்" என்றான்.

அர்ச்சகர் முகத்தைப் பண்ணையாரும், கவுண்டரும் பார்த்தனர்.

இரவு பத்து மணிக்கு மேல் தாமோதரன் தன் மனைவி செங்கமலத்திடம் சொன்ன செய்தியை மூக்கனிடம் விடியலில் செங்கமலம் சொல்லியிருக்கக் கூடும்.

பண்ணையாரும், கவுண்டரும் ஏதோ பேசிக்கொண்டிருக்க,அர்ச்சகர் அம்மனிடம் வந்தார்.நேற்று போட்டிருந்த மாலையை எடுத்துவிட்டு காலையில் கோயில் நந்தவனத்திலிருந்து பறித்துத் தொடுத்திருந்த ரோஜா மாலையை அம்மனுக்கு அணிவித்தார்.அம்மனின் தெய்வீக அழகை ரசித்தபடியே...எண்ணெயைவிட்டு விளக்கேற்றினார்.பின்னர் தீபாரதனை நடந்தது.கோயில் மணியடித்தபடியே.

அப்போது, "அர்ச்சகரே!"என்ற பண்ணையின் குரல் கேட்க, கருவறையிலிருந்து வெளியே வந்தவர் கவுண்டருடன், பண்ணை நிற்பதைப் பார்த்தார்.

"அர்ச்சகரே! காலை பத்து மணிக்கு, மயில்வாகனன் தாமோதரன் வீட்டிற்கு என்ன தைரியம் இருந்தா..நம்ம ஊர் மக்களுக்குக் கூடத் தெரியாமல் வருவான்.உடனே பஞ்சாயத்தைக் கூட்டறோம்.கொஞ்சம் வெளியே வாங்க" என்றார்.

அர்ச்சகர், பண்ணையார், கவுண்டர் மூவரும் கோயிலில் இருந்து வெளியே வந்து, டீக்கடையின் முன்னே தரையில் குந்தி இட்டு உட்கார்ந்து கொண்டிருந்த மூக்கனை அழைத்தனர்.

"இதோ வந்துட்டேங்க.." என்றவாறு, வட்டிலில் இருந்த சூடான தேநீரை அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, வட்டிலை பக்கத்தில் வைத்திருந்த வாளித் தண்ணீரால் கழுவி வைத்துவிட்டு அவர்களை நோக்கி ஓடி வந்தான் மூக்கன்.

"இப்பவே..ஊர் முழுக்க பறைகொட்டி நாங்க சொல்றதைச் சொல்லிடு" என அவனிடம் என்ன சொல்ல வேண்டும் என்பதை பண்ணையார் சொன்னார்.பின்னர். "தாமோதரனைப் பார்த்து எட்டுமணிக்குக் கூடும் பஞ்சாயத்துக்குக் கண்டிப்பாக வரணும்னு சொல்லு:" என்றார்.

மூக்கன் பறை கொட்ட ஆரம்பித்தான்....

"இதனால் மக்கள் அனைவருக்கும் தெரிவிப்பது என்னவென்றால்...எந்த அரசியல்கட்சியும் நுழையக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கும் நம் கிராமத்தில், இன்று பத்து மணிக்கு அரசியல்வாதி மயில்வாகனன் வர இருக்கிறார்.தாமோதரன், அவருக்கு தன் வீட்டில் விருந்து வைக்கிறான்.இது நமது கிராமத்து வழக்கத்துக்கு எதிரானது.இதற்காக காலை எட்டு மணிக்கு கோயில் அருகில் உள்ள பஞ்சாயத்து மேடையில் பண்ணையார் தலைமையில் பஞ்சாயத்துக் கூடுகிறது.எல்லோரும் வரணும்.."

டம்..டம்..டம்...

என கிராமத்து தெருக்களில் பறை கொட்டினான்.

விஷயத்தைக் கேள்விப்பட்ட தாமோதரனும், மயில்வாகனன் வரும் செய்தி, இவ்வளவு விரைவில் இவர்களுக்கு எப்படி எட்டியது என வியந்தபடியே...செங்கமலத்திடம் மயில்வாகனனுக்கு விருந்து தயார் செய்ய சொல்லிவிட்டு, பஞ்சாயத்துக்குக் கிளம்பத் தயாரானான்.

எட்டு மணிக்கு பஞ்சாயத்துக் கூடியது...

முதலில் தலைவர் பண்ணையார் பேசினார்..

"அரசியல்வாதி மயில்வாகனன் பத்து மணிக்கு நம்ம தாமோதரன் வீட்டிற்கு வருவதாக பஞ்சாயத்தாருக்கு சேதி வந்துள்ளது.இது, நம்ம கிராமத்துக் கட்டுப்பாட்டுக்கு எதிரானது.இச்செயலுக்காக தாமோதரனை இப்பஞ்சாயத்து கண்டிப்பதோடு..மயில்வாகனனை கிராமத்தினுள் நுழைய விடக்கூடாது என முடிவு செய்கிறது"

என்றார்.

மக்கள் ஆராவாரத்துடன் கைகளைத் தட்டி இம்முடிவினை வரவேற்றனர்.

ராமன் மட்டும், "ஐயா..பஞ்சாயத்தாரே! நான் ஒன்னு சொல்லட்டா..அந்த மயில்வாகனன் ,நம்ம கிராமத்துல அரசியல் பேச வரலே! தாமோதரன் வீட்டிற்குத்தான் வரார்.அதுவும் அவன் வீட்டிற்கு ஒரு விருந்தாளியாய் வர்றார்.தனிப்பட்ட முறையில் ஒருத்தர் விட்டுக்கு வருபவரைத் தடுக்க முடியுமா? இல்ல..தடுக்கலாமா? "என்றான்.

அதற்குள் கூட்டத்தில் ஒரு இளைஞன் "அப்படியானால் அவர் வந்துவிட்டுப் போகட்டுமே! ஆனால்..வர்றவரோட கட்சி கொடிக்கம்பம் எப்படி வந்தது? அதை வெட்டி எறிவோம்" என்றான்.

அவனை அமைதிப்படுத்திய பண்ணை தாமோதரனைப் பார்த்து, "தாமோதரா! ஊர் கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கு..அதை நீ மீறலாமா?" என்றார்.

மண்டியிட்டு அமர்ந்திருந்த தாமோதரன் எழுந்து..துண்டினை இடுப்பில் கட்டிக் கொண்டு, பஞ்சாயத்தை வணங்கினான்.பின் தொண்டையை சற்று கனைத்துக் கொண்டு  சொன்னான் "ஐயா...நான் இப்ப சொல்றதை பஞ்சாயத்தும், நம்ம கிராமத்து ஜனமும் கொஞ்சம் பொறுமையாக் கேட்கணும். நம்ம கிராமத்துக்கும் வெளி உலகத்துக்கும் சரியான தொடர்பு இதுநாள் வரைக்கும் இல்லை.அதனால, நம்ம கிராமத்து மக்கள் எவ்வளவோ இழந்துக் கிட்டு இருக்கோம்.அடுத்த கிராமத்துக்கு போகணும்னாக்கூட..ஐயா பிளஷர் வண்டி வேண்டாம்..மாட்டு வண்டிலே போகணும்னாக் கூட செம்மண் ரோடுதான்.ஊர்ல தெரு விளக்குகள் கூடக் கிடையாது..காவிரில தண்ணீர் வரல்லேன்னா குடிக்கக் கூட தண்ணீருக்கு ஆலாய்ப் பறக்கணும்.இதெல்லாம் தீரணும்னா.. அரசியல் கட்சிகளாலும், அரசியல்வாதிகளால் மட்டுமே முடியும்..இன்னிக்கு மயில்வாகனன் நம்ம ஊருக்கு...என் வூட்டுக்கு வரார்னா...எதிர்காலத்துல நம்ம கிராமத்துக்குப் பல நன்மைகள் உண்டாகும்.

நம்ம விவசாயிகள் எல்லாம் கூட்டமா சேர்ந்து சங்கம் அமைக்கலாமாம்.அரசாங்கம் அவர்களுக்கு மானியம் வழங்குகுமாம்.அவர்கள் கடன்கள் எல்லாம் தள்ளுபடியாகுமாம்.நம்ம வாழ்க்கையெல்லாம் செழிப்பாகும்னு அந்தத் தலைவரு மயில்வாகனன் சொன்னார்.

இதெல்லாம் வேண்டாம்னா நாம நம்ம தலைமுறைக்கு மட்டுமில்லை, அடுத்த தலைமுறைக்கே துரோகம் செய்கிறோமாம்.

நான் இதையெல்லாம் ரோசனைப் பண்ணித்தான் அவர் சொன்னாப்போல கொடிக்கம்பத்தை நட்டேன்.அவரை நம்ம கிராமத்துகு அழச்சேன்,

இவ்வளவு சொன்னப்பறமும்..அவர் நம்ம கிராமத்துக்கு வரக்கூடாதுன்னு இந்த பஞ்சாயத்தும், மக்களும் நினைச்சா..அதன் முடிவை எதிர்க்க நான் தயார்.அதற்காக இந்த பஞ்சாயத்து என்ன தண்டனைக் கொடுத்தாலும் ஏத்துக்கறேன்"

தாமோதரன் பேசுவதைக் கேட்ட பெரும்பான்மையான இளைஞர்கள் கைதட்டி வரவேற்றனர்.அவனுக்கு அதன் மூலம் தங்கள் ஆதரவைத் தெரிவித்தனர்.

நிலைமை மோசமாகி வருவதை உணர்ந்த பண்ணையும், கவுண்டரும், அர்ச்சகரும் தங்களுக்குள் விவாதித்துக் கொண்டனர்.பின்னர் கவுண்டர் மக்களிடம் பேச ஆரம்பித்தார்.

"இந்தமுறை ஒரு அரசியல்வாதி நம்ம கிராமத்துள்ள வர இந்த பஞ்சாயத்து அனுமதிக்கிறது.அவர் வந்துபோனபின் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனித்து..பின் வரும் காலங்களில் என்ன செய்யலாம் என்று பஞ்சாயத்து பின்னர் முடிவெடுக்கும்.தாமோதரன், மயில்வாகனன் வந்து போன பின்னர் நடந்த விவரங்களை ஒன்றுவிடாமல் நமக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கிறது..இப்போது நாம் கலையலாம்" என்றார்.

இளைஞர்களில் வாட்ட சாட்டமாய் இருந்த ஒருவன் தாமோதரனைத் தூக்கி தன் தோள்களில் அமர வைத்துக் கொள்ள ..மற்ற இளைஞர்கள் "தாமோதரன் வாழ்க..தாமோதரன் வாழ்க" என்று கோஷமிட்டபடியே அவனை அவன் வீடுவரை தூக்கிச் சென்றனர்.  

Friday, November 8, 2019

3- அரசியல்வாதி மயில்வாஹணன்

அன்று நான்கு கற்கள் தொலைவில் உள்ள அடுத்த கிராமத்திற்கு மாடசாமியின் வண்டியில் மாலை ஐந்து மணிக்குக் கிளம்பிய தாமோதரன் திரும்பியபோது மணி பத்தைத் தாண்டிவிட்டது.

தாமோதரன், பூங்குளத்தில் எல்லோராலும் பாராட்டப்படும் விவசாயி எனலாம்.தனது நான்கு ஏக்கர் நிலத்தை..தரிசு நிலத்தை மூதாதையர் உழைத்து விளைநிலங்களாக ஆக்கி வைத்திருந்தனர்.இப்போது அந்த வேலை முழுவதையும்..அதாவது உழுவது,விதைப்பது,நாற்று நடுவது, ,களை எடுப்பது,அறுவடை செய்வது என அனைத்து வேலைகளையையும் அவனே செய்து வந்தான்.

வண்டியிலிருந்து இறங்கி, மாடசாமிக்கு விடை கொடுத்து விட்டு..வீட்டினுள் நுழைந்து முகம், கைகால்கள் கழுவிவிட்டு வீட்டினுள் சென்றான்.

தூரத்திலேயே வண்டி வரும் ஒலி கேட்டதால், அவன் மனைவி செங்கமலம்..முன் கதவினை திறந்து வைத்திருந்தாள்.

"செங்கமலம், கற்பகம் தூங்கியாச்சா?" என்றான் மனைவியிடம்.

"இவ்வளவு நேரம்..ஏதோ படிச்சுக்கிட்டு இருந்தது.நீங்க வந்ததும் தூங்கப் போறேன்னு சொல்லிச்சு.மணி பத்து ஆகிப்போச்சா...படிக்கும் போதே தூங்கித் தூங்கி விழ ஆரம்பிச்சுடுத்து கழுதை.அதான் நான் தான், "போய் படுத்துக்க"ன்னு சொல்லிட்டேன்.காலைல அப்பாவைப் பார்த்துக்கலாம்னுட்டேன்"

கற்பகம், அவர்களது ஒரே மகள்.சிறுவயது முதலே நன்றாகப் படிக்கும் குழந்தை.ஆரம்பப் பள்ளிப் படிப்பினை பூங்குளத்தில் படித்திருந்தாள்.பின், அடுத்துள்ள டவுனில் பள்ளிப் படிப்பினை முடித்தாள்.அவளது லட்சியமே ஒரு மருத்துவராக வேண்டும் என்பது.அதற்கேற்றாற் போல பள்ளி இறுதி வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருந்ததால், தஞ்சை மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைத்தது.கிட்டத்தட்ட இருபது கல் தொலைவு என்பதால், தஞ்சையிலேயே கல்லூரி விடுதியில் தங்கிப் படித்து வந்தாள்.சேர்ந்தாற்போல விடுமுறை வந்ததால் இப்போது அங்கு வந்திருக்கிறாள்.

ஒரு சமயம் ,தாமோதரனின் நல்ல காலமோ அல்லது கெட்ட நேரமோ...பக்கத்து கிராமத்திற்கு அவன் சென்றிருந்த போது..அங்கு ஒரு அரசியல் கட்சியின் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்த இளைஞன் ஒருவன்
..தாமோதரனுக்குத் தெரிந்தவன்.அவன் அன்று கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த மு ஆ மு க கட்சித் தலைவன் மயில்வாகனனுக்கு தாமோதரனை அறிமுகப்படுத்தி..அவர் காதுகளில் "இவன் தலித்" என்று கூறினான்.

இது போதாதா அரசியல்வாதிகளுக்கு..இதைக் கேட்டதும் அந்த அரசியல் தலைவன் தாமோதரனிடம், "ஏன்யா..உங்கக் கிராமத்துல எந்தக் கட்சியும் வரக்கூடாதுன்னு சட்டம் வைச்சு இருக்கீங்களாமே..! மக்களை கிணத்துத்தவளையாகவே வைச்சு இருக்கீங்க.என் கட்சியில சேரு..பூங்குளத்துல நம்ம கட்சிக்கு ஆளுங்களை சேரு.உன்னை, பூங்குளத்து கிளைக்கு  தலைவனாக ஆக்கிகிறேன்.அப்புறம் உள்ளாட்சித் தேர்தல் வரும்போது உன்னை தலைவனாக ஆக்கிடறேன்" என ஆசை தூபம் போட்டான்.

பணக்காரர்களுக்கும், நடிகர்களுக்கும் மட்டும்தான் அரசியல் ஆசை வரவேண்டுமா என்ன....தாமோதரனுக்கும் வந்தது.

அந்தத் தலைவனை தன் தலைவனாக ஏற்றான்.அவன் சொன்னது அனைத்தும் வேதவாக்கானது.

இரண்டு நாட்களுக்கு முன்.தனது பூங்குளம் கிராமக் கோயிலுக்கு அருகில் இருந்த டீக்கடை அருகில் கொடிக்கம்பத்தை நட்டு  அக்கட்சியின் கொடியினை ஏற்றினான்.

அந்தத் தலைவனுக்காக தன் உயிரினையும் கொடுக்கும் அளவிற்கு அரசியல் பித்துப் பிடிக்க ஆரம்பித்தது அவனுக்கு.

"என்ன..இலையில சோறை வைச்சுக்கிணு ரோசனை?" என்றாள் செங்கமலம்.

இதுவரை கடந்த சில நாட்களாக நடந்து கொண்டிருந்த நிகழ்வுகளை எண்ணிக் கொண்டிருந்தவன் தன் நிலைக்கு வந்தான்.

"செங்கமலம்..நம்ம வீட்டுக்கு தலைவர் நாளை வரேன்னிருக்கார்"

அவன் ,என்ன சொல்ல வருகிறான் என அறியாமல்  ஏறிட்டாள் அவள்.

"செங்கமலம்..தலைவர் மயில்வாகனன் இன்னிக்கு பக்கத்து கிராமத்துல இருக்கார்.நாளை காலைல நம்ம வூட்டுக்கு வரேன்னு சொல்லியிருக்கார்.அவர் வந்து..நம்ம வூட்ல  சாப்பிடுவார்னு நெனக்கிறேன்.என்ன பார்க்கறே! தடபுடலா ஏதும் வேணாம்..நீராகாரம்னாக்கூட என் தலைவன் சாப்பிடுவார்.ஏழை,பணக்காரன், உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதின்னு என் தலைவன் பார்க்க மாட்டார்."என்றான்.

செங்கமலம் ஐந்தாவது வரை படித்திருந்ததாலும்,அரசியல் பற்றிஅவ்வப்போது கற்பகம் சொல்வதைக் கேட்டிருந்ததாலும்..அரசியல்வாதிகளைப் பற்றிய நல்ல எண்ணம் அவளுக்கு ஏற்பட்டதில்லை.அதற்கேற்றாற் போல பூங்குளத்தில் எந்த அரசியல் கட்சியும் உள்ளே வராமல் இருந்தது அவளுக்கு  நிம்மதியைக் கொடுத்தது இதுவரை.

"என்ன செங்கமலம்..என்ன பார்க்கறே?"

"அது எப்படிங்க?  உங்களப்போல அரசியல் பைத்தியங்கள்  அவங்க தலைவருங்க போடற வெளி வேஷத்தை நம்பறீங்க?
நம்ம வூட்ல சாப்படறாப்போல பேர் பண்ணிட்டு..வெளில போய் விரலை வாய்ல விட்டு வாந்தி எடுப்பார்ங்க"

"என்னோட தலைவன் கண்டிப்பா அப்படி செய்ய மாட்டான்.இதோ பாரும்மா என் தலைவனை நான் உசுருக்கு உசுரா நேசிக்கிறேன்.நாளைக்கு எனக்காக உம் புருஷனுக்காக தலைவரு சாப்படறதுக்கு ஏதாவது செய்ம்மா"

"உங்களை திருந்த முடியாது.இப்போ சாப்டு படுங்க" என ,அப்பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தாள் செங்கமலம். 

Wednesday, November 6, 2019

2 - கொடிக்கம்பம்


தேரடியைக் கடக்கும்போதுதான் அர்ச்சகர் புதிதாக முளைத்திருந்த அந்தக் கொடிக் கம்பத்தையும், இரு வர்ணங்களில் அதன் உச்சியில் படர்ந்து கொண்டிருந்த கொடியையும் பார்த்தார்..நேற்றுவரை இல்லாதது, இன்று திடீரென எப்படி வந்தது என வியந்தார்.

அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரை சமீப காலம் வரை எந்த ஒரு கட்சியின் ஆதிக்கமோ..அல்லது கொடியோ இருந்ததும் இல்லை, மக்களிடையே தேவையில்லா அரசியலும் இருந்ததில்லை.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பஞ்சாயத்துக் கூடி, யாருக்கு வாக்களிப்பது என தீர்மானிப்பார்கள்.மக்களும் அந்தத் தீர்மானம் படி நடப்பார்கள்.இருநூறு ரூபாய்களுக்கு அங்கு இடமில்லை.

அப்படி ஒரு கட்டுப்பாடுடன் இருந்த ஊரில், திடீரென ஒரு கட்சியின் கொடியா?

என்றபடியே டீக்கடையைப் பார்த்தார்.இன்னமும் திறக்கவில்லை.சாதாரணமாகவே நாராயணன் விடியலிலேயே எழுந்து, கடை வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து பின் பொன்னியில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு கடைக்கு வந்து பாய்லரை பத்த வைப்பான்.ஆனால் இன்று...இன்னமும் கடை வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உறங்கிக் கொண்டிருந்தான்.

"காந்தி டீ ஸ்டால்" என்ற பெயர்ப் பலகையின் மீது, காகம் ஒன்று அமர்ந்து கரைந்து கொண்டிருந்தது.

சிறிது தள்ளி இருந்த அரச மரத்தடியின் பீடத்தில் , கைகளை தலையணையாக்கி மூக்கன் உறங்கிக் கொண்டிருந்தான்.

மூக்கன் யார் என உங்களுக்கு சொல்லவில்லை  அல்லவா? சொல்கிறேன்..

அவன்தான் அந்தக் கிராமத்தில் உள்ளவர்களுக்கு என்ன தேவையென்றாலும் செய்து தருபவன்.வீடு என்ற பெயரில் குடிசை ஒன்றில் சேரியில் அவனது மனைவியும், மகனும் இருந்தனர்.ஆனால் அவனுக்கோ அரசமரத்தடியே இல்லமாய் இருந்தது.

கோவிலைச் சுற்றி சுத்தமாக வைத்திருப்பான்.அதற்காக தனியாக ஏதும் கூலி வாங்கிக் கொள்ள மாட்டான்.

பண்னையாரின் நிலங்களை உழுவது, பயிரிடுவது என அனைத்து பணிகளையும் செய்பவன்.

அவனைப் பொறுத்தவரை"தனி மனிதனுக்கு உணவில்லை"எனும் நிலை இன்னும் வராததால் அவன் காலமும் ஓடிக் கொண்டிருந்தது.

இன்னமும் அவன் அசந்துத் தூங்குவதைப் பார்த்த அர்ச்சகர், அவனை எழுப்பக் குரக் கொடுத்தார்.

"மூக்கா....டேய் மூக்கா... பொழுது விடிஞ்சாச்சு.இன்னிக்கு ஆடி வெள்ளிக்கிழமை.இன்னமும் கொஞ்ச நேரத்தில் பொங்கல் வைக்க..கூழ் ஊத்தன்னு பக்தர்கள் கூட்டம் வர ஆரம்பிச்சுடும்.அந்த சமயத்துல நீ இங்கே இப்படி தூங்கிக் கிட்டு இருப்பது தெரிஞ்சா, தேவையில்லமால் சிலர் தகராறு பண்ணுவாங்க...ம்...எழுந்திரு"

அர்ச்சகரின் குரல் கேட்டு சோம்பல் முறித்தவாறே எழுந்த மூக்கன், :என்ன சாமி! நேத்து ராவு பன்னிரெண்டு மணி வரைக்கும் கழனியிலே இருந்தேன்.அதுதான் அசதி...இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக் கிடக்கேனே!" என்றான்.

"ராத்திரி 12 மணிவரை கழனியிலே காவல் காத்த சரி..உடம்பு அலுப்பாத்தான் இருக்கும்.ஆனா..அதுக்கு அப்பறம் தீர்த்தம் சாப்பிட்டியா? அதனால்தான் இப்ப உடம்பு படுத்துது.அதை சாப்பிடாம இருந்திருந்தா..இப்ப சுறுசுறுப்புடன் எழுந்துக்கலாம்.என்னிக்குத்தான் இந்த குடிப்பழக்கம் உன்னை விட்டுப் போகப்போகுதோ?"

"போ சாமி..எதைப் பத்தி பேசினாலும்..கடைசியில நான் குடிச்சதைச் சொல்லிக் காட்டிடுவியே! இப்ப என்ன..நான் எழுந்துக்கணும் அவ்வளவுதானே! எழுந்துக்கறேன்.நான் தூங்கினாலே உனக்குப் பொறுக்காதே!"

"சரி..சரி..அப்படியே இருக்கட்டும்.சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணு.இல்லேன்னா நல்ல நாளும் அதுவுமாய் விவகாரம் ஆயிடும்"

"நீ சொல்றது சரி தான் சாமி.சனங்க வரதுக்கு முன்னாலேயே...பொன்னி ப் படித்துறைக்கு போய் ஒரு குளி குளிச்சாதான் முடியும்.தாமசமானா ஊருக்கு வெளியிலே போய்த்தான் குளிக்க முடியும்." என்றபடியே மூக்கன் பொன்னித்துறையை நோக்கி போக .நாராயணனிடம் வந்தார் அர்ச்சகர்.

"நாராயணா...நாராயணா எழுந்திரு,,,போய்க் குளிச்சுட்டு அடுப்பைப் பத்தவை.வெள்ளிக்கிழமை....நல்ல வியாபாரம் இருக்கும்.வேணும்னா ஒத்தாசைக்கு இன்னிக்கு யாரையாவது வெச்சுக்க" என அவனை எழுப்பினார்,

எழுந்த நாராயணன்," அது எப்படி ஐய்யரே..ராத்திரி எந்தனை மணிக்கு படுக்க போனாலும்,காலையிலே கறந்த பால் கணக்கா ஃப்ரஷ்ஷா(fresh)  ஆ ஆயிடற...ராத்திரி முழுக்க இந்தக் கொடி கம்பத்தை நடறேன்னு சொல்லிட்டு ஒரே சத்தம், தூங்கவே முடியவில்லை." என்றான்.

"நானே கேட்கணும்னு நெனச்சேன். நம்ம ஊரிலே தான் எந்த கட்சியும் இருக்கக்கூடாதே. இது என்ன புதுசா இன்னிக்கு முளைச்சிருக்கு.இது யாரோட வேலை.."

"எல்லாம் நம்ம தாமோதரன் தான்..அவன் மு.ஆ.மு.க., கட்சியில சேர்ந்துட்டானாம்.அந்தக் கட்சி ஆளு மயில்வாஹணன்..இவனைக் கூப்பிட்டு, நம்ம கிராமத்துல அவரோட கட்சி வளரணும்..அதுக்கு தாமோதரன் உழைக்கணும்னு சொல்லிட்டாராம்.தாமோதரனையும் தலித் தலைவர் ஆக்கிடறேன்னு ஆசைக்காட்டி இருக்கார்.அதனால அவன் தான் மூக்கனோட மகனை வைச்சுக்கிட்டு இந்தக் கொடிக்கம்பத்தை நட்டான்"

தாமோதரன் அந்தக் கிராமத்தில் நாலு ஏக்கருக்கு சொந்தமான ஒரே தலித்.அந்த நிலத்தை பஞ்சமி நிலமா அரசாங்கம் அவனோட மூதாதையருக்குத் தந்தது.தரிசு நிலத்தை அவங்க உழைப்பால விளைநிலமாய் ஆக்கி வைச்சுக்கிட்டு இருக்காங்க! மற்றவங்க பஞ்சமி நிலமெல்லாம்  ..ஆசைக்காட்டி பணக்காரவர்க்கங்களால் அபகரிக்கப்பட்டு விட்டன.

தாமோதரனின் மகள் கற்பகம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி மருத்துவம் படித்து வருவது..தாமோதரனுக்கு இன்னமும் வசதியாய்ப் போய் விட்டது. கிராமத்து மக்கள், அவன் தலித்தாய் இருந்தாலும் , இந்த ஒரு விஷயத்திற்காக அவனை சற்று மதித்தனர் எனலாம்.

"புதுசா முளைச்சிருக்க இந்தக் கட்சிக் கொடியால, ஊர் ஒத்துமை பாதிக்கப்படாம இருக்கணும்னு அந்த அம்பாளை வேண்டிக்கறதைத் தவிர என்னால வேற என்ன செய்ய முடியும்?" என்று தன் இயலாமையைத் தெரிவித்தபடியே , "சரி..சரி ..ஐஸ் கடைக்கு ஆளை அனுப்பி..ஐஸ் கட்டி வாங்கி வைச்சுக்க.கோயிலுக்கு வர ஜனங்க வெயில்ல வாடிப்போயிடுவாங்க. சர்பத் கேட்டா..அதுல ஐஸ் கட்டி போட்டுத் தரலாமே!" என்றார் அர்ச்சகர்.

"ஐயரே! இது என் கடையா..இல்ல..உன் கடையான்னு தெரியல.எத்தனை அக்கறையா சொல்ற..உங்கிட்ட எனக்குப் பிடிச்சதே இந்த சுயநலமில்லாத்தனம்தான்"

"வெட்டித்தனமா பேசிக்கிட்டு இருக்காம, ஆக வேண்டிய வேலையைப் பாரு"

"பொன்னி...எப்படி இருக்கா? இன்னிக்குக் குளிக்க முடியுமா?"

"அவளுக்கென்ன..புகுந்த வீட்ல சந்தோஷமா இருக்க வேண்டியவ.என்ன செய்யறது? நுங்கும் நுரையுமா கரை புரண்டு..ஆனந்தமா ஓடிக்கிட்டு இருக்கணும்.இன்னும் இரண்டு மூணு நாள்ல ஆடிப்பெருக்கு வேற..ஆனா இப்ப எல்லாம்  ஆடி மாசத்துல மட்டுமில்ல..மழைக்காலங்கள்ல கூட வாய்க்கா மாதிரிதான் தண்ணீ ஓடிக்கிட்டு இருக்கு.ஆச்சு, இந்த வாரம் பண்ணையோட நிலத்துல விதை விதப்பு வேற ஆரம்பிச்சுடும்"

"ம்..ஐயரே! ஒரு காலத்துல இந்தக் காவிரி நதியும், பச்சைப்பசேல்னு மரகத நிறத்துல விளைகிற நெற்பயிரும், இந்த அம்மன் கோயிலும், திருவிழாவும், மாசு இல்லா காற்றும், பறவைகளின் சப்தங்களும்..கிராமம்னா..நம்ம பூங்குளம் கிராமம்தான்னும் இருக்கும்.நம்ம கிராமம் மட்டுமல்ல..கிராமங்கள்னாலே அழகாக இருக்கும்..ஆனா இப்ப கிராமங்கள்ல கூட குடிநீர் பஞ்சம் வந்துடும் போல.."

"நாராயணா! கிராமம்னா இன்னிக்கும் கிராமம்தான் அழகு.அதனாலதான் அன்னிக்கே காந்தி சொன்னார்..இந்தியாவின் அழகே கிராமங்கள்லதான் இருக்குன்னு.ஆனா, அப்ப அவருக்குத் தெரியல..இந்தியாவின் அவலங்களும் கிராமங்கள்லதான் இருக்குன்னு"

"ஐயரே! நீ என்ன சொல்றன்னு புரியலயே"

"உனக்குப் புரிய வேண்டாம்..நேரமாச்சு..நீ ஆகவேண்டிய வேலைகளைப்பாரு" என்றவாறே கோயிலை நோக்கிச் சென்றார் அர்ச்சகர். 

Tuesday, November 5, 2019

1- பூங்குளம்

"இந்த மனிதாத்மாக்களைப் பார் மகாத்மா..உன்னையே உருக்கி நீயொரு சுதந்திர மோதிரம் செய்து கொடுத்தாய்! அணியும்போதுதான் அறிந்து கொண்டார்கள்...இவர்கள்..விரல்களே இல்லாத தொழுநோயாளர்கள் என"
(எப்போதோ எங்கேயோ படித்தது இன்றும் நிதர்சனமாய்)

பூங்குளம்...

காவிரி டெல்டா மாவட்டம் ஒன்றில் உள்ள அழகிய கிராமம்.

பூங்குளம் கிராமத்திற்கான ரயில் நிலையம் ஊரிலிருந்து இரண்டு கல் தொலைவில் இருந்தது.

ரயில் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு வடக்கே செல்லும் பாசஞ்சர் இரண்டும்...தெற்கே செல்லும் பாசஞ்சர் இரண்டும் மட்டும்தான்.

மற்றபடி "தடக்..தடக்" எனும் சப்தத்துடன்...ஒரு நாளைக்கு நான்கு அலல்து ஐந்து குட்ஸ் வண்டிகள் நிலையத்தைக் கடந்து செல்லும்.விரைந்து நிலையத்தைக் கடந்து செல்லும் பயணிகள் வண்டிகள், இரட்டை எண்ணிக்கையில் இருக்கக் கூடும்.

ரயில் நிலையத்திற்கு ஸ்டேஷன் மாஸ்டெர் என ஒருவரும், ஒரு போர்ட்டரும் உண்டு.பாசஞ்சர் வண்டி வரும் முன்னால் போர்ட்டர் மணி அடிப்பான்.டங்க்..டங்..என அங்கே மாட்டப்பட்டுள்ள இரும்புத் துண்டில் தொடர்ந்து மணியடித்துவிட்டு..தனியாக இருமுறை அடித்தால் தெற்கே போகும் வண்டியும், மூன்று முறை அடித்தால் வடக்கேபோகும் வண்டியும் வரும் என பயணிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

ரயில் நிலையத்தின் மேற்கே தென்னந்தோப்பு.அதில் இருநூறுக்கும் மேலான மரங்கள் இருக்கும்.எல்லாவற்றிலும் ஐந்து அடி உயரத்திற்கு வெள்ளைநிற பெயிண்ட் அடித்து..எண் ஒன்றினைப் போட்டிருப்பார்கள்.இரவு நேரத்தில் அத்தோப்பினைப் பார்த்தால், வெள்ளை வேட்டிக் கட்டிய ஒரு சேனையே நிற்பது போல இருக்கும்.

பலவீனமான இதயம் கொண்ட பலர் இருளில் அதைப் பார்த்து பயந்ததும் உண்டு.

அப்பயத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அவர்களுக்குப் பேய்ப்பிடித்திருப்பதாகவும்,,அதை ஓட்டுவதாகவும் கூறி வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருந்தான் ஒருவன்.

ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர் வண்டி வரும் போது கையிலுள்ள பச்சை நிறக் கொடியினை விரித்து ஆட்டிக் கொண்டிருப்பார்.பெரம்பினால் ஆன ஒரு பெரிய சாவியை வண்டி ஸ்டேஷனுள் நுழைகையில் சங்கரன்...அதுதான் அந்த போர்ட்டரின் பெயர் எஞ்சின் டிரைவரிடம் கொடுக்க, ஓடும் வண்டியிலிருந்து  லாகவமாகப் பெற்றுக் கொள்வார் அவர்.
ஸ்டேஷன் மாஸ்டரின் மற்றொரு கையில் சுருட்டி வைக்கப்பட்டிருக்கு  சிவப்பு நிறக் கொடியை அவர் உபயோகித்து யாரும் பார்த்திருக்க முடியாது.

ரயில் நிலையத்தில் எங்கு பார்த்தாலும் கல்யாண முருங்கை மரங்கள்..செக்கச்செவேல் என்று பூக்கள் பூத்து குலுங்கிக் கொண்டிருக்கும்.அப்போதுதான் பருவம் அடைந்த கன்னிப்பெண் போல மிதர்ப்புடன் தெரியும்.

கருவேல மரங்களும், முட்செடிகளும் நிறைந்த இடங்களில் ஆடுகள்..இரட்டைக் கால்களில் நின்றபடியே இலைகளைத் தின்றுக் கொண்டிருக்கும்.விவரம் தெரியாதவர்கள், இவைகளின் கால்களில் முட்கள் குத்துமே ! என வேதனைப் படுவார்கள்.

ஆடு மேய்ப்பவர்கள் ரயில்வே பிளாட்ஃபாரத்தில் கரியில் கட்டமிட்டு, கல், புளியங்கொட்டை ஆகையவற்றை வைத்துக் கொண்டு ஆடு புலி ஆட்டம் ஆடுவார்கள்.

ரயில்வே நிலையத்தை ஒட்டி வெளியே வந்தால், மாடசாமியின் மாட்டு வண்டி நின்றுக் கொண்டிருக்கும்.ஒருவருக்கு மூன்று ரூபாய் என வாங்கிக் கொண்டு ,நாலு அல்லது ஐந்து நபர்கள் சேர்ந்ததும் கிராமத்தை நோக்கி வண்டியினை ஓட்டுவான் மாடசாமி.இரண்டு கல் தூரம் போக இருபது முதல் முப்பது மணித்துளிகள் ஆகும்.

நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள காலி மைதானத்தில் வாரம் புதன், சனிக்கிழமைகளில் சந்தை கூடும்.

கிராமத்தில் விளைந்த காய், கறிகள், புளி, மஞ்சள், ஆடு,மாடுகள் என சந்தை களை கட்டும்.அண்டை கிராமங்களிலிருந்து பொருள்களை விற்பவர்கள், வாங்குபவர்கள் என மனிதத்தலைகள் அதிகமாகத் தென்படும் அப்போது.

அந்நாட்களில் மாடசாமியின் வருமானமும் கூடும்.மாடு மெதுவாகப் போனால், ஓடும் வண்டி சக்கரத்தில் இடையில் கையில் உள்ள குச்சியை லேசாகச் சொருகி சப்தத்தை உண்டாக்குவான்.மாடு பயந்து ஓட்டத்தை அதிகரிக்கும்.மாட்டின் வால் ஆரம்பப்பகுதியைத் தொடுவான்.மாடு கூச்சத்துடன் தன் வேகத்தைக் கூட்டும்.

ஊரை நோக்கிச் செல்லும் அந்த செம்மண் சாலையின் இரண்டு பகக்ங்களிலும் பச்சை பசேல் என நெல்வயல்கள் காணப்படும்.

பெண்களின் தலை வகிட்டினை நினைவு படுத்துவது போல நடு நடுவே வரப்புகள் தெரியும்>

சில  வயல்களில் பயிர் முழுதும் வளர்ந்து முற்றி அறுவடைக்குத் தயாராக இன்னும் சில நாளில் பிரிய இருக்கும் அன்னை பூமியை நோக்கியவாறு இருக்கும்.இந்நிலையில் கவிஞன் ஒருவனின் வரிகளும் நம் ஞாபகத்தில் வருவதைத் தடுக்க முடியாது.

"வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல உனக்கு வெட்கமா? தலை வணங்கி சும்மா பார்க்கிறாயே தரையின் பகக்மா?" என.

நடுவே ஒரு பாலம் குறுக்கிடும்.அதில் பொன்னி ஆறு சந்தோஷமாக பொங்கி ஓடிக் கொண்டிருக்கும்.

நதிகளில் அழகே..அழகே!  நகர்ந்து கொண்டே இருப்பதுதான் நதி.அது தன் பாதையில் தயங்கி நிற்பதில்லை.பாறைகளைக் கண்டு பயப்படுவதில்லை.ஓங்கியோ..ஒதுங்கியோ தன் பயணத்தைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

பொன்னியின் கரையோரம் இருக்கும் சோலைகளிலிருந்து எங்கேயோ குயில் கூவும்.கிளி பேசும்."கூ..கூ.." என மற்ற பறவைகளின் கூக்குரல்கள் இனிமையாக ஒலிக்கும்.

பொன்னியில் நீர் கரைபுரண்டு ஓடும் போது சிறுவர்கள் பயமென்றால் என்ன என அறியாது பாலத்திலிருந்து நதியில் குதித்து இந்தக் கரையிலிருந்து அந்தக் கரைக்கு நீந்துவார்கள்.

பாரம் அதிகம் சுமந்து நீண்ட தூரம் வந்த காளையின் வாயில் நுரை தள்ளியிருப்பது போல, ஆற்றின் இரு கரையின் ஓரங்களிலும் நீரின் வேகத்திற்கேற்ப நுரை தள்ளிக் காணப்படும்.கரையோரச் செடிகளிலிருந்து மூலிகை வாசம் மணக்கும்.

ஊர் தொடங்குவதற்கு அரைகல் தொலைவிற்கு முன்னால் சேரி இருக்கும்.

தீண்டப்படாதவர்கள் என ஒதுக்கப்ப்ட்டுள்ள ஒரு பாலார் இன்னமும் அந்த கிராமத்தில் அங்குதான் வசிக்க வேண்டும்.கிராமத்து அவலங்களாக இன்னமும் இது பல இடங்களில் காணப்படுவது வேதனைக்குரிய விஷயமே!

ஊரின் மொத்த ஜனத்தொகையே 5000க்குள்தான்.

முதல் தெருவில் பச்சை வண்ண பெயிண்ட் அடிக்கப்பட்டுக் காணப்படும் பெரிய வீடு கவுண்டர் வீடு. வீட்டிற்கு முன்னால் நெல் உலர்த்த என நீண்ட காலி இடம் இருக்கும்.கவுண்டர் பெரிய மீசை வைத்திருப்பார்.சந்தன வீரப்பன் இவரைப் பார்த்துதான் தன் மீசையும் வளர்த்திருப்பானோ எனத் தோன்றும்.கவுண்டர் பார்க்க பயங்கரமாய்த் தெரிந்தாலும் ,பிறருக்கு உதவிடும் மனம் கொண்டவர்.கிட்டிப்புள், பம்பரம், கோலி என விளையாடிவிட்டு வரும் சிறுவர்களைக் கூப்பிட்டு கை நிறைய வேர்க்கடலையைத் தருவார்.

ஊரின் கடைசித் தெருவில் பாலுச்சாமி தேவர் வீடு.பண்னையார் வீடு என்று கேட்டால் அழுத பிள்ளையும் கை காட்டும்.தலையை தியாகராஜ பாகவதர் போல வளர்த்திருப்பார்.கழுத்தைச் சுற்றி பாம்பு போல சரிகை அங்கவஸ்திரம் மின்னும்.சிரித்தால், இரண்டு, மூன்று தங்கப் பற்கள் மின்னும்.

கிராமத்தின் நடுவே அம்மன் கோயில்.கோயிலை ஒட்டிய சந்நிதித் தெருவில் கோவிலின் தேர் நிலை கொண்டிருக்கும்.

வண்டி ஓட்டிய நேரம் போக, மற்ற நேரங்களில் மாடசாமி தேர் முட்டில்தான் இருப்பான்.பக்கத்தில் உள்ள டீக்கடையில் டீ சாப்பிட்டுவிட்டு, கவ்னர் பீடி வாங்கிப் பிடிப்பான்.கடையில் நிரந்தர கணக்கு அவனுக்கு.ஆனால் கடைக்கு முன்னால் "இன்று ரொக்கம் நாளை கடன் " என்ற பலகையும் தொங்கும்.சாப்பாடு, தூக்கம் எல்லாம் அவனுக்கு அங்குதான்.அந்த டீக்கடையின் முதலாளி என்பவர்.....நாராயணன்.

அந்த டீக்கடையில் டீ குடிக்க வருபவர்களுக்கு கண்ணாடி தம்ளரில் டீ கொடுக்கப் படும்.ஆனால், தலித் என்றால் வட்டில்தான்.

அந்த ஊர் அம்மன் "ஊர் காத்த அம்மன்" என அழைக்கப்ப்டுபவர்.

ஒரு சமயத்தில் காவிரியில் வெள்ளப் பெருக்கில், ஊரே வெள்ளக் காடானதாம்.மக்கள் எல்லாம் , சிறிய கோயில் என்றாலும் எப்படியோ அதனுள் புகுந்து கொண்டனராம். .கோயிலினுள் சொட்டுத் தண்ணீர்க் கூட புகாமல், அந்த அம்மன் மக்களைக் காத்தாராம்.ஆகவே, அன்று முதல் அவர் "ஊர் காத்த அம்மன்" என அழைக்கப்படுவதாக அவ்வூரில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள்.

ஊரின் கிழக்குக் கொடியில் அக்ரஹாரம்.அதில் நாலு அல்லது ஐந்து வீடுகள் மட்டுமே.கோயில் குருக்கள் சுந்தரேசன் வீடு அங்குதான்.

சுந்தரேசக் குருக்கள் பஞ்சக்கச்சம் கட்டிக் கொண்டு..காதில் கடுக்கண்..பெண்களைத் தோற்கடிக்கும் அளவிற்கு கட்டுக் குடுமி..நெற்றி நிறைய விபூதி, கழுத்தில் ருத்திராட்ச மாலை எனக் காணப்படுவார்.முன் தலையினை சரைக்க வாரம் இருமுறை நாவிதன் கோவிந்தன் அவர் இல்லம் செல்வான்.திண்ணையிலேயே அமர்ந்து, வேலை நடக்கும்..

அவர் கையில் ஒரு சிறு கண்ணாடியைக் கொடுத்து விட்டு ,தன் பணியை மிகவும் நேர்த்தியாய் செய்வான் கோவிந்தன்.

பண்ணையார் அவ்வப்போது அர்ச்சகரின் வாயைக் கிண்டுவதுண்டு..

"ஐயரே! பிராமணன் என்பவன் எப்படிப்பட்டவன்?"

"பிராமணன் என்பவன் மனதால் சுத்தமாக, நடத்தையில் ஒழுக்கமாக இருந்தால் போதும்" என்பார் அர்ச்சகர் சுந்தரேசன்.

இப்படிப்பட்ட வாதத்தையெல்லாம் தாண்டி இருவருக்குள்ளும் நல்ல நட்பு இருந்தது.

ஊரில் பலதரப்பட்ட சமூகத்தினர் இருந்த போதும் ஜாதி சச்சரவுகள் இருந்ததில்லை.கோயில் திருவிழாவில் அனைவரும் ஒன்று கூடி கோலாகலமாகக் கொண்டாடுவர்.

ஆனாலும், அந்த நேரத்திலும் தலித்துகள் ஒதுங்கித்தான் நிற்க வேண்டும்.

அன்று..பொழுது விடிந்து , செங்கதிரோன் கிழக்கு வானிலிருந்து வெளிப்பட்டான்.

அக்கோயிலின் கோபுரம் தாங்கும் பொம்மைகளை கதிரவனின் கிரணங்கள்  ஆரத்தழுவிக் கொண்டன.

சுந்தரேசக் குருக்கள், சற்று அசந்து தூங்கி விட்டபடியால், கோயிலைத் திறக்க சற்று தாமதமானதால், வேக வேகமாக தேர்முட்டிவரை வந்து விட்டார்.