Wednesday, November 6, 2019

2 - கொடிக்கம்பம்


தேரடியைக் கடக்கும்போதுதான் அர்ச்சகர் புதிதாக முளைத்திருந்த அந்தக் கொடிக் கம்பத்தையும், இரு வர்ணங்களில் அதன் உச்சியில் படர்ந்து கொண்டிருந்த கொடியையும் பார்த்தார்..நேற்றுவரை இல்லாதது, இன்று திடீரென எப்படி வந்தது என வியந்தார்.

அந்தக் கிராமத்தைப் பொறுத்தவரை சமீப காலம் வரை எந்த ஒரு கட்சியின் ஆதிக்கமோ..அல்லது கொடியோ இருந்ததும் இல்லை, மக்களிடையே தேவையில்லா அரசியலும் இருந்ததில்லை.

ஒவ்வொரு தேர்தலின் போதும் பஞ்சாயத்துக் கூடி, யாருக்கு வாக்களிப்பது என தீர்மானிப்பார்கள்.மக்களும் அந்தத் தீர்மானம் படி நடப்பார்கள்.இருநூறு ரூபாய்களுக்கு அங்கு இடமில்லை.

அப்படி ஒரு கட்டுப்பாடுடன் இருந்த ஊரில், திடீரென ஒரு கட்சியின் கொடியா?

என்றபடியே டீக்கடையைப் பார்த்தார்.இன்னமும் திறக்கவில்லை.சாதாரணமாகவே நாராயணன் விடியலிலேயே எழுந்து, கடை வாசல் பெருக்கி, தண்ணீர் தெளித்து பின் பொன்னியில் ஒரு முழுக்குப் போட்டுவிட்டு கடைக்கு வந்து பாய்லரை பத்த வைப்பான்.ஆனால் இன்று...இன்னமும் கடை வாசலில் போடப்பட்டிருந்த பெஞ்சில் உறங்கிக் கொண்டிருந்தான்.

"காந்தி டீ ஸ்டால்" என்ற பெயர்ப் பலகையின் மீது, காகம் ஒன்று அமர்ந்து கரைந்து கொண்டிருந்தது.

சிறிது தள்ளி இருந்த அரச மரத்தடியின் பீடத்தில் , கைகளை தலையணையாக்கி மூக்கன் உறங்கிக் கொண்டிருந்தான்.

மூக்கன் யார் என உங்களுக்கு சொல்லவில்லை  அல்லவா? சொல்கிறேன்..

அவன்தான் அந்தக் கிராமத்தில் உள்ளவர்களுக்கு என்ன தேவையென்றாலும் செய்து தருபவன்.வீடு என்ற பெயரில் குடிசை ஒன்றில் சேரியில் அவனது மனைவியும், மகனும் இருந்தனர்.ஆனால் அவனுக்கோ அரசமரத்தடியே இல்லமாய் இருந்தது.

கோவிலைச் சுற்றி சுத்தமாக வைத்திருப்பான்.அதற்காக தனியாக ஏதும் கூலி வாங்கிக் கொள்ள மாட்டான்.

பண்னையாரின் நிலங்களை உழுவது, பயிரிடுவது என அனைத்து பணிகளையும் செய்பவன்.

அவனைப் பொறுத்தவரை"தனி மனிதனுக்கு உணவில்லை"எனும் நிலை இன்னும் வராததால் அவன் காலமும் ஓடிக் கொண்டிருந்தது.

இன்னமும் அவன் அசந்துத் தூங்குவதைப் பார்த்த அர்ச்சகர், அவனை எழுப்பக் குரக் கொடுத்தார்.

"மூக்கா....டேய் மூக்கா... பொழுது விடிஞ்சாச்சு.இன்னிக்கு ஆடி வெள்ளிக்கிழமை.இன்னமும் கொஞ்ச நேரத்தில் பொங்கல் வைக்க..கூழ் ஊத்தன்னு பக்தர்கள் கூட்டம் வர ஆரம்பிச்சுடும்.அந்த சமயத்துல நீ இங்கே இப்படி தூங்கிக் கிட்டு இருப்பது தெரிஞ்சா, தேவையில்லமால் சிலர் தகராறு பண்ணுவாங்க...ம்...எழுந்திரு"

அர்ச்சகரின் குரல் கேட்டு சோம்பல் முறித்தவாறே எழுந்த மூக்கன், :என்ன சாமி! நேத்து ராவு பன்னிரெண்டு மணி வரைக்கும் கழனியிலே இருந்தேன்.அதுதான் அசதி...இன்னும் கொஞ்ச நேரம் படுத்துக் கிடக்கேனே!" என்றான்.

"ராத்திரி 12 மணிவரை கழனியிலே காவல் காத்த சரி..உடம்பு அலுப்பாத்தான் இருக்கும்.ஆனா..அதுக்கு அப்பறம் தீர்த்தம் சாப்பிட்டியா? அதனால்தான் இப்ப உடம்பு படுத்துது.அதை சாப்பிடாம இருந்திருந்தா..இப்ப சுறுசுறுப்புடன் எழுந்துக்கலாம்.என்னிக்குத்தான் இந்த குடிப்பழக்கம் உன்னை விட்டுப் போகப்போகுதோ?"

"போ சாமி..எதைப் பத்தி பேசினாலும்..கடைசியில நான் குடிச்சதைச் சொல்லிக் காட்டிடுவியே! இப்ப என்ன..நான் எழுந்துக்கணும் அவ்வளவுதானே! எழுந்துக்கறேன்.நான் தூங்கினாலே உனக்குப் பொறுக்காதே!"

"சரி..சரி..அப்படியே இருக்கட்டும்.சீக்கிரம் இடத்தைக் காலி பண்ணு.இல்லேன்னா நல்ல நாளும் அதுவுமாய் விவகாரம் ஆயிடும்"

"நீ சொல்றது சரி தான் சாமி.சனங்க வரதுக்கு முன்னாலேயே...பொன்னி ப் படித்துறைக்கு போய் ஒரு குளி குளிச்சாதான் முடியும்.தாமசமானா ஊருக்கு வெளியிலே போய்த்தான் குளிக்க முடியும்." என்றபடியே மூக்கன் பொன்னித்துறையை நோக்கி போக .நாராயணனிடம் வந்தார் அர்ச்சகர்.

"நாராயணா...நாராயணா எழுந்திரு,,,போய்க் குளிச்சுட்டு அடுப்பைப் பத்தவை.வெள்ளிக்கிழமை....நல்ல வியாபாரம் இருக்கும்.வேணும்னா ஒத்தாசைக்கு இன்னிக்கு யாரையாவது வெச்சுக்க" என அவனை எழுப்பினார்,

எழுந்த நாராயணன்," அது எப்படி ஐய்யரே..ராத்திரி எந்தனை மணிக்கு படுக்க போனாலும்,காலையிலே கறந்த பால் கணக்கா ஃப்ரஷ்ஷா(fresh)  ஆ ஆயிடற...ராத்திரி முழுக்க இந்தக் கொடி கம்பத்தை நடறேன்னு சொல்லிட்டு ஒரே சத்தம், தூங்கவே முடியவில்லை." என்றான்.

"நானே கேட்கணும்னு நெனச்சேன். நம்ம ஊரிலே தான் எந்த கட்சியும் இருக்கக்கூடாதே. இது என்ன புதுசா இன்னிக்கு முளைச்சிருக்கு.இது யாரோட வேலை.."

"எல்லாம் நம்ம தாமோதரன் தான்..அவன் மு.ஆ.மு.க., கட்சியில சேர்ந்துட்டானாம்.அந்தக் கட்சி ஆளு மயில்வாஹணன்..இவனைக் கூப்பிட்டு, நம்ம கிராமத்துல அவரோட கட்சி வளரணும்..அதுக்கு தாமோதரன் உழைக்கணும்னு சொல்லிட்டாராம்.தாமோதரனையும் தலித் தலைவர் ஆக்கிடறேன்னு ஆசைக்காட்டி இருக்கார்.அதனால அவன் தான் மூக்கனோட மகனை வைச்சுக்கிட்டு இந்தக் கொடிக்கம்பத்தை நட்டான்"

தாமோதரன் அந்தக் கிராமத்தில் நாலு ஏக்கருக்கு சொந்தமான ஒரே தலித்.அந்த நிலத்தை பஞ்சமி நிலமா அரசாங்கம் அவனோட மூதாதையருக்குத் தந்தது.தரிசு நிலத்தை அவங்க உழைப்பால விளைநிலமாய் ஆக்கி வைச்சுக்கிட்டு இருக்காங்க! மற்றவங்க பஞ்சமி நிலமெல்லாம்  ..ஆசைக்காட்டி பணக்காரவர்க்கங்களால் அபகரிக்கப்பட்டு விட்டன.

தாமோதரனின் மகள் கற்பகம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் விடுதியில் தங்கி மருத்துவம் படித்து வருவது..தாமோதரனுக்கு இன்னமும் வசதியாய்ப் போய் விட்டது. கிராமத்து மக்கள், அவன் தலித்தாய் இருந்தாலும் , இந்த ஒரு விஷயத்திற்காக அவனை சற்று மதித்தனர் எனலாம்.

"புதுசா முளைச்சிருக்க இந்தக் கட்சிக் கொடியால, ஊர் ஒத்துமை பாதிக்கப்படாம இருக்கணும்னு அந்த அம்பாளை வேண்டிக்கறதைத் தவிர என்னால வேற என்ன செய்ய முடியும்?" என்று தன் இயலாமையைத் தெரிவித்தபடியே , "சரி..சரி ..ஐஸ் கடைக்கு ஆளை அனுப்பி..ஐஸ் கட்டி வாங்கி வைச்சுக்க.கோயிலுக்கு வர ஜனங்க வெயில்ல வாடிப்போயிடுவாங்க. சர்பத் கேட்டா..அதுல ஐஸ் கட்டி போட்டுத் தரலாமே!" என்றார் அர்ச்சகர்.

"ஐயரே! இது என் கடையா..இல்ல..உன் கடையான்னு தெரியல.எத்தனை அக்கறையா சொல்ற..உங்கிட்ட எனக்குப் பிடிச்சதே இந்த சுயநலமில்லாத்தனம்தான்"

"வெட்டித்தனமா பேசிக்கிட்டு இருக்காம, ஆக வேண்டிய வேலையைப் பாரு"

"பொன்னி...எப்படி இருக்கா? இன்னிக்குக் குளிக்க முடியுமா?"

"அவளுக்கென்ன..புகுந்த வீட்ல சந்தோஷமா இருக்க வேண்டியவ.என்ன செய்யறது? நுங்கும் நுரையுமா கரை புரண்டு..ஆனந்தமா ஓடிக்கிட்டு இருக்கணும்.இன்னும் இரண்டு மூணு நாள்ல ஆடிப்பெருக்கு வேற..ஆனா இப்ப எல்லாம்  ஆடி மாசத்துல மட்டுமில்ல..மழைக்காலங்கள்ல கூட வாய்க்கா மாதிரிதான் தண்ணீ ஓடிக்கிட்டு இருக்கு.ஆச்சு, இந்த வாரம் பண்ணையோட நிலத்துல விதை விதப்பு வேற ஆரம்பிச்சுடும்"

"ம்..ஐயரே! ஒரு காலத்துல இந்தக் காவிரி நதியும், பச்சைப்பசேல்னு மரகத நிறத்துல விளைகிற நெற்பயிரும், இந்த அம்மன் கோயிலும், திருவிழாவும், மாசு இல்லா காற்றும், பறவைகளின் சப்தங்களும்..கிராமம்னா..நம்ம பூங்குளம் கிராமம்தான்னும் இருக்கும்.நம்ம கிராமம் மட்டுமல்ல..கிராமங்கள்னாலே அழகாக இருக்கும்..ஆனா இப்ப கிராமங்கள்ல கூட குடிநீர் பஞ்சம் வந்துடும் போல.."

"நாராயணா! கிராமம்னா இன்னிக்கும் கிராமம்தான் அழகு.அதனாலதான் அன்னிக்கே காந்தி சொன்னார்..இந்தியாவின் அழகே கிராமங்கள்லதான் இருக்குன்னு.ஆனா, அப்ப அவருக்குத் தெரியல..இந்தியாவின் அவலங்களும் கிராமங்கள்லதான் இருக்குன்னு"

"ஐயரே! நீ என்ன சொல்றன்னு புரியலயே"

"உனக்குப் புரிய வேண்டாம்..நேரமாச்சு..நீ ஆகவேண்டிய வேலைகளைப்பாரு" என்றவாறே கோயிலை நோக்கிச் சென்றார் அர்ச்சகர். 

No comments:

Post a Comment