Friday, January 17, 2020

32 - தாமோதரனுக்கு ஜாமீன்

தஞ்சை கோர்ட்..

காலை 10 மணிக்கு ஒரு போலீஸ் ஜீப் வந்து நிற்க..அதிலிருந்து இரண்டு  காவலர்கள், தாமோதரனை இறக்கி வளாகத்தினுள் அழைத்து வந்தனர்.

கறுப்பு கோட்டும்,அங்கியும் அணிந்த வக்கீல்கள் இங்கும் ..அங்கும் அலைந்து கொண்டிருந்தனர்.

ஒரு சிலர் தன் கட்சிக்காரர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.

ஒரு வக்கீல் சென்றமுறை வாய்தா வாங்கியதற்கே, கட்சிக்காரர் ஏதும் கொடுக்காமல் சென்றுவிட்டதாகக் கத்திக் கொண்டிருந்தார்.

சில வக்கீல்கள், எதிர் தரப்பு வக்கீல் என்ன கேட்பார்? அதற்கு என்ன பதில் சொல்ல வேண்டும் ..என சொல்லிக் கொண்டிருந்தனர்...கட்சிக்காரர்களும் கிளிப்பிள்ளைபோல அவர்கள் சொன்னதை திருப்ப சொல்லிப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

திடீரென.....டவாலியின்...

"சைலன்ஸ்" என்ற உரக்க குரல் கேட்க..கோர்ட் அமைதியானது...

மாஜிஸ்ட்ரேட்..தன் இருக்கைக்கு வந்தார். அனைவரும் எழுந்து நின்றனர்.அவர்...

"மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடு வாழ்வார்"

என ஒரு திருக்குறளைச் சொல்லி, அனைவருக்கும் பதில் வணக்கம் சொல்லி..அமரச் சொன்னார்.

பின்னர்..சில வழக்கு எண்கள் படிக்கப்பட்டு..அவை ஒத்தி வைக்கப் பட்ட தேதிகளை மேஜிஸ்ட்ரேட் குறிப்புகளைப் பார்த்து கோர்ட் குமாஸ்தா தெரிவித்தார்.

வேறு சில வழக்குகளில், குற்றம் சாட்டப்ப்ட்டவர் வழக்கு எண் படிக்கப்பட்டதும் கூண்டில் ஏற..அவரை  ..ஒரு சில கேள்விகள் கேட்டு..வழக்கினைத் தள்ளிப் போட்டார் மாஜிஸ்ட்ரேட்..

இந்நிலையில்..வழக்கு எண் சொல்லப்பட்டு.."பூங்குளம் தாமோதரன்" அழைக்கப்பட்டான்.அவனை..காவல்துறை கூண்டிலேற்றினர்.

அவனின் வழக்கு சம்மந்தப்பட்ட குறிப்புகள் அடங்கிய ஆவணத்தை மேலோட்டமாகப் பார்த்த மாஜிஸ்ட்ரேட், தாமோதரனைப் பார்த்து, "மயில்வாகனனை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நீங்கள் ஏதேனும் சொல்ல வேண்டுமா?" என்றார்.

அதற்கு தாமோதரன்..

"ஐயா நீங்களே சொல்லிட்டீங்களே! குற்றம் சாட்டப்பட்டவன்னு..நான் அப்பாவிங்க.எனக்கு ஒன்னும் தெரியாது.எனக்குத் தெரிந்தது எல்லாம்..மயில்வாகனனும்..ஒரு காமராஜர் மாதிரி,ஒரு கக்கன் மாதிரி,ஒரு ஜீவா மாதிரி  நல்லவராய் இருப்பார்னு நெனச்சுக்கிட்டு இருந்தேன்.ஆனால்..அவர்..அவர்..வேண்டாம்யா..அவர் எப்படிப்பட்டவர்னு என் வாயால சொல்ல விரும்பல" என்றான்.


அப்போது வாஞ்சிநாதன், ஒரு வக்கீலுடன் உள்ளே நுழைந்தான்.வக்கீல், , தான் தாமோதரனுக்காக வாதாட இருப்பதாகவும்..அதற்கான வக்காலத்து, ஜாமீன் பத்திரங்கள் தாக்கல் செய்துள்ளதாகவும் கூற, வழக்கு சம்பந்தப்பட்ட பேப்பர்களை தனியே எடுத்து வைத்த மேஜிஸ்ட்ரேட்..மாலைக்குமேல் அது பற்றி விசாரிப்பதாகக் கூறினார்.
---      -----   -----   -----   ----

மாலை மீண்டும் நீதிமன்றம் கூட..நீதிபதி தாமோதரனை 25000 ருபாய் சொந்த ஜாமீனில் விடுவிப்பதாகவும்..பக்கத்து கிராமக் காவல் நிலையத்தில் ஒவ்வொரு புதனன்றும் தாமோதரன் ஆஜராகிக் கையெழுத்திட வேண்டும் என்றும் தீர்ப்பளித்தார்.

No comments:

Post a Comment