Thursday, January 16, 2020

30 - சுதந்திர அடிமைகள்

வீட்டை இழந்து..தாயையும் இழந்து..மூக்கனின் வீட்டில் அடைக்கலம் புகுந்திருந்த கற்பகத்திற்கு, தாமோதரன் கைதான செய்தி தெரிய வந்த்து.

சற்றே அதிர்ச்சி ஏற்பட்டாலும், அடுத்து என்ன செய்ய வேண்டும்? என யோசனையில் ஆழ்ந்தாள். பெண்களுக்கு படிப்பு எவ்வளவு முக்கியம் என்பதற்கு கற்பகத்தை ஒரு உதாரணமாகச் சொல்லலாம்.அதனால்தான்..இந்த சூழலிலும் அடுத்து என்ன செய்யலாம்?என்று அவளால்  யோசிக்கத் தோன்றியது.

மூக்கனிடம் வாஞ்சிநாதனைப் போய்ப் பார்த்து வருவதாகக்கூறி கிளம்பினாள்.

வாஞ்சியின் வீடு...

சிதம்பரம் அப்போதுதான் குளித்து வந்து..தனது தினசரி பூஜையை செய்து முடித்துவிட்டு சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தார்.

அவரது வாய்....

"பரித்ராணாய சாதுனாம்
 விநாஷாய சதுஷ்கிருதாம்
தர்ம சம்ஸ் தாபனார்த்தாய
சம்பவாமி யுகே யுகே1"

என முணுமுணுத்தது.

அப்போது வீட்டின் வெளியே, "வாஞ்சி..வாஞ்சி" என்று ஒரு பெண்ணின் குரல் கேட்க..எழுந்து வந்தவர் "யாரும்மா நீ..உள்ளே வா" என்றழைத்தார்.

தயங்கியப்படியே கற்பகம் உள்ளே வந்தாள்.

"யாரும்மா நீ..உனக்கு என்ன வேணும்?"

"என் பெயர் கற்பகம்.நான் வாஞ்சியைப் பார்க்கணும்"

"என்ன விஷயம்..என் கிட்ட சொல்லலாம்னா சொல்லு..நான் அவனோட தாத்தாதான்."

"தெரியும்..நீங்க ஒரு சுதந்திரப் போராட்டத் தியாகி..ஐயா..உங்களைப் போல நாட்டுப்பற்று உள்ளவங்க எல்லாம்..நம்ம நாட்டுக்கு சுதந்திரத்தை ஏன் வாங்கிக் கொடுத்தீங்க?"

"நீ ஏம்மா பேச மாட்ட..சுதந்திர நாட்டில இருக்க..அதுதான் சுதந்திரமா பேசறே! அம்மா..சுதந்திரத்தை அனுபவிக்க வேணும்னா..ஒருமுறை அடிமையாய் இருந்து பார்னு சொல்லுவாங்க.நாங்க எல்லாம் அந்த வெள்ளைக்காரன் கிட்ட அடிமையாய் இருந்ததால்தான் உங்களால எல்லாம் சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடிகிறது"

"இப்ப..இந்த அரசியல்வாதிங்க அட்டூழியம் அந்த வெள்ளைக்காரன் கிட்டேயே நாடு இருந்திருக்கலாமோ எனும் எண்ணத்தை ஏற்படுத்திடுச்சே"

"அம்மா! நம்ம நாட்டு மக்கள் எல்லாம் துன்பங்களை அனுபவிக்கறது அரசியல்வாதிகளால் மட்டும் இல்லைம்மா.அதை அமைதியா பார்த்துக்கிட்டு இருக்கிற நல்லவங்களாலும்தான்.அன்னிக்கு இருந்த தலைவர்கள் எல்லாம்..தங்களுக்கப்புறம் நாட்டை ஆளப்போறவங்க..தங்களை மாதிரி நேர்மையானவங்களா..ஊழல் இல்லாதவங்களா..தகுதி உள்ளவங்களா இருப்பாங்கன்னு நினைச்சாங்க.ஆனா..அவங்க எண்ணம் எல்லாம் தவிடு பொடியாயிடுச்சே! இந்த உலகத்துல நாம பொறந்தப்போ என்ன கொண்டு வந்தோம்..போறப்போ என்ன கொண்டு போகப்போறோம்ங்கற எண்ணம் இருந்தா..இன்னிக்கு ஒரு பயலும் பேராசைப் பிடிச்சு அலையமாட்டான்"

"ஐயா..உங்கக் கிட்ட இதைப்பத்தியெல்லாம் நிறைய பேச ஆசை.இப்ப ரொம்ப அவசரம்.வாஞ்சி  இல்லியா?"

கற்பகம், இதைக் கேட்டுக் கொண்டிருந்த போதே..வெளியே  சென்றிருந்த வாஞ்சி உள்ளே நுழைந்தான்.வீட்டினுள் கற்பகத்தைப் பார்த்தவன், "அடடே..கற்பகம்..வா..வா..எப்ப வந்தே?" என்றான்.

"அவ அப்பவே வந்துட்டா..நாந்தான் அவ கிட்ட தேவையில்லாத விஷயத்தை எல்லாம் பேசிக்கிட்டு இருந்தேன்"..
 என்ற சிதம்பரம், அவனருகே வந்து "ஏண்டா..இவதான் நீ சொல்லிக்கிட்டு இருந்த கற்பகமா?" என்று கேட்டபடியே கண்ணடித்தார்.

அதைப் பார்த்த வாஞ்சி தனக்குள் ,"கிழம் இந்த வயசிலேயும் இப்படி கண்ணடிக்குது" என நினத்தான்.

"பார்த்தா நல்லப் பொண்ணாத்தான் தெரியறா" என்றார் சிதம்பரம்.

வாஞ்சி, கற்பகத்திடம், "என்ன மேடம்..இவ்வளவு தூரம் என்னைத் தேடி வந்து இருக்கீங்க!..காஃபி சாப்பிடறீங்களா? "என்றான்.

"ப்ளீஸ்..வாஞ்சி, நீயாவது என் அவசரத்தைப் புரிஞ்சுக்க.மயில்வாகனன் ஆளுங்க நேத்து  ராத்திரி, எங்க வீட்டையும், நிலத்துல அறுவடைக்குத் தயாரான பயிர்களையும் தீ வைச்சு அழிச்சுட்டான்.அதைத் தட்டிக் கேட்கப்போன எங்கப்பாவை..தன்னை தாக்க வந்ததா புகார் கொடுத்து கைது பண்ண வைச்சுட்டான்"

"அப்படியா? வா..நாம இப்பவே உங்கப்பாவைப் போய் ..அவரை ரிமாண்ட் பண்ணிவைச்சிருக்கிற போலீஸ் ஸ்டஷனுக்குப் போய்ப் பார்ப்போம்.அப்புறம் அவரை கோர்ட்ல  ஆஜர் படுத்தறப்போ ஒரு வக்கீலை வைச்சு ஜாமீன் கேட்போம்.."என்ற வாஞ்சி, தாத்தாவிடம் "என்ன தாத்தா சொல்றீங்க" என்றான்.

"நான் சொல்ல என்ன இருக்கு? நீதான் யாரையாவது வக்கீலை வைச்சு ஜாமீன் எடுக்கலாம்னு சொல்றியே..உங்க தாத்தாவே ஒரு வக்கீல்ங்கறதை மறந்துட்டு"

"சாரி தாத்தா..நிஜமாவே அதை மறந்துட்டேன்" என்றான் வாஞ்சி.

தாத்தா கற்பகத்திடம்,"இதோ பாரும்மா..கவலைப்படாதே! நீண்ட நாள் கழிச்சு வக்கீலா உங்கப்பாவுக்காக நான் ஆஜராகப் போறேன்.அந்த ஆண்டவன் இருக்கான் ..நம்பு" என்றார்.

"தாத்தா , ஆண்டவன்னு ஒருத்தன் இருந்தா, அப்பாவிகளான எங்களுக்கு ஏன் இவ்வளவு கஷடங்களைக் கொடுக்கறான்"

"அம்மா இங்கிலீஷ்ல சொல்லுவாங்க..

When God pushes you to the edge of difficulty, Trust him fully because two things can happen either he will catch you when you fall or he will teach you how to fly "

No comments:

Post a Comment