Wednesday, January 22, 2020

39 - ஆத்திகவாதியானான் ராமன்

மூக்கன் தேரடியில் அமர்ந்து பாடிக் கொண்டிருந்தான்

"குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும்
குருட்டு உலகமடா - இது
கொள்ளையடிப்பதில் வல்லமைக்
காட்டிடும் திருட்டு உலகமடா - தம்பி
உலகம் புரிந்து நடந்து கொள்ளடா"

காலத்தால் அழியாத பட்டுக்கோட்டையாரின் வரிகள்..

அப்போது மாடசாமியின் வண்டியில் வந்து இறங்கினான் ப்ருத்வி.

ப்ருத்வியைக் கண்டதும் ஓடி வந்து வரவேற்றான் மூக்கன்.

"ப்ருத்வி தம்பி..உங்களைப் பார்த்து எவ்வளவு நாளாச்சு? நல்லா இருக்கீங்களா?" என்றான்.

"நான் நல்லாயிருக்கேன்.நான் இங்கே வந்து நாலு வருஷம் ஓடி போச்சு.கிராமத்துல என்ன விசேஷம்?"

"விசேஷம் ஒன்னுமில்ல தம்பி.வர்ற வழியில பார்த்து இருப்பீங்களே! கெமிகல் ஃபேக்டரி வந்துடுச்சு.அதற்குப் பக்கத்திலேயே கார் கம்பெனி ஒன்னு வரப்போறதாகவும் சொல்றாங்க"

"உள்ளூர் ஜனங்களுக்கு வேலை கிடைக்குமே"

"எங்கே தம்பி..எல்லாம் வட நாட்டிலே இருந்து தொழிலாளிகள் வந்துட்டாங்க.நம்ம ரயில்வே ஸ்டேசன் மேக்கால இருந்த தென்னந்தோப்பு அழிஞ்சுப் போச்சு.அங்கே..தொழிற்சாலைல வேல பாக்கறவங்களுக்காக  காலனி தயாராகுது.பாத்து இருப்பீங்களே!'

இதற்குள் ப்ருத்வியைப் பார்த்த நாராயணன், மூக்கனுக்கும், ப்ருத்விக்கும் டீ கொணர்ந்தான்.

மூக்கனுக்கான டி வட்டிலை கீழே வைத்து விட்டு, தம்ளரை ப்ருத்வியிடம் கொடுத்தான்.

"இந்த இரட்டை தம்ளர் முறை இன்னமும் மாறலியா?" என்றான் ப்ருத்வி.அதற்கு நாராயணன் ஏதோ பதில் சொல்லிக் கொண்டிருக்க..மூக்கன் கோயிலுக்குப் போய் அர்ச்சகரை அழைத்து வந்தான்.

"வாடா..ப்ருத்வி..எப்படி இருக்கே?"

"நலலயிருக்கேன் சித்தப்பா" என்றவன், "ஊர்ல நிறைய மாற்றம் தெரியுது..பண்ணை எப்படியிருக்கார்? என்றான்.

'இயற்கை தொடர்ந்து ஏமாத்திக்கிட்டுத்தான் இருக்கு.இருந்தால் ஒரேயடியா வறட்சி..இல்லைன்னா ஒரே வெள்ளம்.வெள்ளம் வர்றப்ப அதைத் தேக்கி வைக்க தடுப்பணைகள் கட்டணும்னு அரசுக்கு ஏன் தோணலைன்னு தெரியல.எல்லாத்துலேயும் அரசியல்"

"அடடே! சித்தப்பா நீங்களும் ராமனைமாதிரியே பேசறீங்க"

"இப்ப //இங்கேயும் எல்லா செய்தித்தாள்களும் வருது தம்பி" என்றான் நாராயணன்.

"ஆமாம்..பண்ணையாரைப் பத்திக் கேட்டேன்..யாரும் சொல்லலியே"

"என்ன சொல்றது.கடும் வறட்சி.தொடர்ந்து விளைச்சல் இல்லை.வறுமை அவரையும் விட்டு வைக்கவில்லை.எத்தனை நாளைக்கு மத்தவங்க கைகளை எதிர்பார்க்கிறது.  அப்பதான்..இங்க கார் கம்பெனி வர ஏற்பாடுகள் ஆச்சு.அது..பண்ணையாரின் பெரும்பான்மையான நிலங்கள்லதான் வருது.அதனால்..அவருடைய நெலங்களை வேற வழியில்லாம அவங்களுக்கு விற்க அரசாங்கம் பிரஷர் கொடுக்க ஆரம்பிச்சாங்க.இவ்வளவு நாள் சாப்பாடு போட்ட நெலத்தை கொஞ்சம் கூட நன்றி இல்லாம வித்துட்டேனே..பெத்தத்தாயை வித்துட்ட மாதிரின்னு மனசு உடைஞ்சுப் போன பண்ணையார்..படுக்கையிலே விழுந்துட்டார்.அப்பறம் ஆறு மாசம் படுக்கை..ஒருநாள் உயிர் போயிருச்சு" என்றார் அர்ச்சகர்.

"ஆனா..பாரு தம்பி...அப்ப கூடபண்ணை வயல வித்து வந்த காசுல//தனக்கு உழைச்ச மூக்கன் குடும்பம் நல்லாயிருக்கணும்னு..நம்ம கிராமத்துல வந்திருக்கற கூட்டுறவு வங்கிலே மூக்கன் பெயர்ல கொஞ்சம் பணம் டெபாசிட் பண்ணியிருக்கார்.அதுல வர்ற வட்டியிலதான் மூக்கன் பொழப்பு ஓடுது" என்றான் நாராயணன்.

"இப்படி விளைநிலத்தையெல்லாம் அழிச்சுட்டு...தொழிற்சாலை வர ஆரம்பிச்சா..எதிர்காலத்தை நெனச்சு பயமா இருக்கு" என்றார் அர்ச்சகர்.

"நாடு கம்ப்யூட்டர் துறையில நல்ல முன்னேற்றம் அடைஞ்சிருக்குன்னு சொன்னாலும், கம்ப்யூட்டரா சோறு போடும்?"என்றான் ப்ருத்வி.

"ஆமாம் தம்பி, நாலு வருஷ்த்துக்கு முன்னால..நதிநீர் இணைப்புக்குஅரசாங்கம் ஒத்துக்கிட்டு இருக்குன்னு சொன்னியே! அது என்னவாச்சு?"

"தமிழ்நாட்டுல இப்படி ஒரு நெலமை நீடிச்சா, குடி தண்ணீர் கூட இல்லாமல் போயிடும்.அதனால, நதிநீர் இணைப்பு அவசியம்னு..நேத்துக் கூட பிரதமர் கொள்கை அளவுல ஒப்புதல் அளிச்சிருக்கார்"

"தம்பி, இதுதான் அன்னிக்கும் சொன்னே!" என்ற நாராயணன்,"என் கடையில இருக்கற இந்த போர்டைப்  பார்த்தியா தம்பி, "இன்று ரொக்கம் -நாளை கடன்" இந்த அறிவிப்பு என்ன சொல்லுதோ..அதற்கான அர்த்தம் என்னவோ..அதே அர்த்தம்தான் நதிநீர் இணப்புக்கும்" என்றான்.

இடையில் புகுந்த மூக்கன், "ஒன்னு மட்டும் நிச்சயம் நீங்க திரும்ப நாலு வருஷம் கழிச்சு வந்தா
இந்த ஊர் முற்றிலும் ஒரு தொழில் நகரமாகவோ..இல்லை பாலைவனமாகவோ மாறியிருக்கும்.அப்பகூட நீங்க..அன்னிக்கு பேப்பர்ல நதிநீர் இணைப்பு செய்தி வந்து இருக்குன்னு சொல்விங்க" என்றான்.

பேச்சை மாற்ற நினைத்த ப்ருத்வி, அர்ச்சகரைப் பார்த்து, "ஆமாம்..ராமன் எப்படியிருக்கார்.அவரைப் பத்தி சொல்லுங்க" என்றான்.

மூக்கன் சொன்னான், "அவரோட தொடுப்பு அவரை விட்டுட்டு வேற ஒருவனோட ஓடிப் போச்சு.அப்பறம் தான் ராமனுக்கு தன் பொண்டாட்டி அருமை தெரிஞ்சிருக்கு.ராமன் இப்ப எல்லாம் உழச்சு சம்பாதிக்கிறார்.அதோட மட்டுமல்ல..ஆத்திகவாதியாகவும் மாறிட்டார்.நம்ம ஊர் கோயில் அம்மனோட முதல் பக்தன் அவர்தான்..உங்க சித்தப்பாக் கூட இல்லை"

"நாத்திகவாதிகள் போய்க்கொண்டிருக்கும் பாதையின் முடிவு ஆத்திகம்தான்னு ராமன் விஷயத்திலேயும் நிரூபணம் ஆகிப்போச்சு" என்று ப்ருத்வி சொல்லிக் கொண்டிருக்கும் போதே காவி உடை அணிந்த ராமன் அங்கு வந்தான்..ப்ருத்வியைப் பார்க்காமல் அர்ச்சகரிடம் வந்து,"நேத்து பழநி போயிட்டு வந்தேன்..இந்தாங்க பிரசாதம்" என்றபடியே ஒரு பஞ்சாமிருத டப்பாவைக் கொடுத்தான். 

ப்ருத்வி, "ராமன்" என்றழைத்த உடன்தான் ப்ருத்வியைப் பார்த்த் ராமன்.,"அடடே! ப்ருத்வி தம்பியா? பார்க்கவே இல்லை.எப்ப வந்தீங்க..எப்படி இருக்கீங்க?" என்றான்.

'நான் நல்லாயிருக்கேன்..ஆமாம்..நீங்க எப்ப இப்படி..?"

'உடம்புல திமிர் இருக்கிறவரைக்கும் நாத்திகம் பேசினேன்.இப்ப பக்குவம் வந்துடுச்சு.ஆத்திகம் பேச ஆரம்பிச்சுட்டேன்."என்ற ராமன், அர்ச்சகரிடம், "நம்ம ரெட்டியார் நிலங்களக்கூட கார் கம்பெனி வாங்கிடுச்சாம்.அங்கே கம்பெனி ஷோரும் வரப்போகுதாம்" என்றான்.

"இனிமே இந்த பூங்குளம் கிராமம் காணாமல் போயிடும்.நெல் விளைஞ்ச இடமெல்லாம்..கான்கிரீட் கட்டடங்கள் எழுந்துடும்.அதனால் நெலமை என்னவோ மாறப்போறதில்லை.வயல்லே பயிருக்கும் தண்ணீ இல்லன்னு அவதிப்பட்ட மக்கள் குடிக்கக்கூட தண்ணீ இல்லேன்னுஅவதிப் படப் போறோம்" என்றார் அர்ச்சகர்.

"அர்ச்சகரே! இன்னுமொரு விஷயம்..நாளைக்கு தாமோதரன் வழக்குலதீர்ப்பு சொல்றாங்களாம்" என்றான் ராமன்.

No comments:

Post a Comment