Tuesday, January 21, 2020

38 - தியாகி சிதம்பரத்தின் வாதம்

பூங்குளம் மட்டுமல்ல..அதைப்போன்ற டெல்டா கிராமங்கள் விவசாயிகளின் பல எதிர்பார்ப்புகளுடன்..சில ஆண்டுகள் கழிந்தன.

தாமோதரன் மீது மயில்வாகனனைத் தாக்கிய வழக்கும், கற்பகம் மீது திராவகம் ஊற்றப்பட்ட வழக்கும்..பல வாய்தாக்கள் வழங்கப்பட்டு இறுதி விசாரணைக்கு அன்று வந்தது.

தாமோதரனின் வக்கீலாக சிதம்பரம் வாதாடுவதாகச் சொன்னாலும், தாமோதரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் ஆன நாள் முதலாக ஒரு ஜூனியர் வக்கீலே ஆஜராகி வந்தார்,இறுதி விசாரணையில் வாதாட சிதம்பரமே வரப்போகிறார் என நீதிமன்றமே அவரை எதிர்ப்பார்த்திருந்தது.

இந்நிலையில் அன்றைய நீதிமன்றம் கூடியது.

டவாலி, "சைலன்ஸ்" குரல் கொடுக்க, நீதிபதி  இருக்கைக்கு வந்தார்.அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்த..அனைவரையும் கை கூப்பி வணங்கிய நீதிபதி..ஒரு திருக்குளைச் சொல்லிவிட்டு அமர , அனைவரும் அமர்ந்தனர்.

நீதிமன்ற ஊழியர் வழக்கு எண்ணைச் சொல்ல தாமோதரன் குற்றவாளிக்கூண்டில் வந்து நின்றான்.

மயில்வாகனனைத் தாக்கினான் என்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் தாமோதரன் அவன் குற்றவாளிக் கூண்டில்..

கற்பகம் மீது திராவகம் கொட்டிய வழக்கில்குற்றம் சாட்டப்பட்ட மயில்வாகனன் குற்றவாளிக் கூண்டில் ஏறாது..அவனது வக்கீலின் அருகில் அமர்ந்திருந்தான்.

இதுவும் நடைமுறையில்  இன்று நடைபெற்று வருவதுதானே!

"தாமோதரன், வக்கீல் யார்?" என்றார் நீதிபதி.

சிதம்பரம் தள்ளாடியபடியே , "யெஸ் யுவர் ஹானர்' என எழுந்தார்.

அவரைப் பார்த்த நீதிபதி, "ஐயா..நீங்க தியாகி சிதம்பரனார் இல்லையா?" என்றார்.

"யெஸ்..யுவர் ஹானர்..நாட்டிற்காக, நாட்டின் சுதந்திரத்திற்காக நான் ஆற்றியது அணிலைவிட சிறிய பங்கு.அது ஒரு இந்தியன் என்ற முறையில் என் கடமை.கடமையை செய்துவிட்டு அதற்காக "தியாகி" எனும் பட்டத்தை பெற நான் விரும்பவில்லை"

"நீங்க நீதிமன்றம் வந்துள்ள நோக்கம்?"

'குற்றம் சாட்டப்பட்டுள்ள தாமோதரனுக்கான வழக்கில் இறுதி வாதத்தை செய்ய நான் ஆஜராகியுள்ளேன்"

"நீங்க பார் கவுன்சில் அங்கத்தினரா?"

"ஆமாம் ..நான் ஒரு பாரிஸ்டர்.பார் கவுன்சிலில் என் பதிவு எண்ணை அவ்வப்போது புதுப்பித்தும் வந்துள்ளேன்"

:குற்றவாளிக்காக வாதாட வக்காலத்து தாக்கல் செய்துள்ளீர்களா?"

"ஏற்கனவே கொடுத்தாகிவிட்டது யுவர் ஹானர்"

"தென் புரொசீட்"

"யுவர் ஹானர்..முதலில் வழக்கிற்கு சம்பந்தமில்லாத சில விஷயங்களைக் கூற உங்கள் அனுமதியை வேண்டுகின்றேன்"

"உங்கள் கருத்துகளைக் கேட்க நானும் ஆவலாக இருக்கிறேன்.நீங்க சொல்ல வேண்டியதைச் சொல்லலாம்"

"நன்றி யுவர் ஹானர்"

சிதம்பரம் பேச அரம்பித்தார்..

அரசியல்வாதின்னா ஊழல் பண்ணத்தான் செய்வான் என சமூக சீரழிகளை சும்மா  Just like that ..சூரியன் கிழக்கேதான் உதிக்கும்னு சொல்றாப்போல சாதாரணமாக எடுத்துக் கொண்டு விட்டோம்.

காந்தி தவறு செய்துட்டார்..சமஸ்கிருதம் ஒழிக..இப்படியெல்லாம் பிதற்றிக் கொண்டு இராமல், ஆக்கப்பூர்வமாக என் தேசத்தை நான்  நேசிக்கிறேன்.இந்த நாடு எனக்கு நிறைய கொடுத்திருக்கிறது.பதிலுக்கு நாம் என்ன செய்துள்ளோம் என ஒவ்வொருவரும் நினைக்க வேண்டும்.

If you salute your duty
you need not salute anybody
If you pollute your duty
you have to salute everybody

ன்னு அப்துல் கலாம் சொன்னாரே.....அதன் பொருள் என்ன..

ஒவ்வொருவரும் செய்யும் தொழிலை நேசியுங்கள் என்பதுதானே!

இந்த வழக்கைப் பொறுத்தவரை...

இன்று தினசரியைக் கையில் எடுத்தால் தினம் தினம் கற்பழிப்புகள்,கொலை,கொள்ளை,ஊழல் இது போன்ற செய்திகள்தான்.

என்று ஒரு பெண்..கழுத்து முழுதும் நகைகள் அணிந்து...தனியாக இரவில் பயமில்லாமல் நடக்கிறாளோ, அன்றுதான் நம் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது எனலாம்..என்றார் தேசப்பிதா..ஆனால் அது இன்றுவரை நடக்கவில்லை.

ஒரு பெண்....இல்லை..இல்லை..பெண் குழந்தைகள் கூட இன்று பாதுகாப்பாக இல்லை.

காமவெறியர்கள்...

இவர்களுக்குக் குழந்தைகள், வயதானவர்கள் என்ற பாகுபாடெல்லாம் இல்லை.இன்று நாட்டில் ஐந்து வயது குழந்தையும் பாலியல் வன்முறைக்கு பலியாகிறது.எண்பது மூதாட்டியும் பலியாகிறாள்.

மக்கள் எனும் பயிர்களை காக்க வேண்டிய..இரும்பு வேலிகளாகத் திகழ வேண்டிய மக்களால், மக்களுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் கூட பெண்கள் விஷயத்தில் நூல்வேலியாய் வலுவிழந்துவிடுகிறார்கள்.

இவற்றையெல்லாம் மாற்ற வேண்டுமென்றால்..நம்நாட்டு சட்டதிட்டங்களையும் மாற்றியமைக்க வேண்டும்.அதற்கான நேரம் வந்துவிட்டது.

தவறு செய்பவன் யாராயிருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும்  சாமான்யனுக்கு என்ன தன்டனையோ..அதே தண்டனைதான் பணம் படைத்தவனுக்கும் என்ற நிலை வர வேண்டும்.

பாலியல் பலாத்காரம், ஈவ் டீசிங், வன்கொடுமை, ஆசிட் வீச்சு,கொலை போன்றவற்றால் பாதிக்கப்பட்ட பெண்கள் எண்ணிக்கை நாட்டில் அதிகரித்து வருகிறது.சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி குற்றவாளிகள் தப்பி விடுகின்றனர்.

ஆணுக்கு நிகர் பெண்கள் என படிப்பதும்,சம்பாதிப்பதும்,பெண்கள் சமுதாயத்திற்கே மரியாதையைப் பெற்று தருகிறது என்பது மறக்கமுடியாத உண்மை.

ஆனால், அதே சமயம்..ஒரு ஆபத்தைத் தவிர்க்கவோ..எதிர்கொள்ளவோ தேவையான பலத்தை அது கொடுக்குமா?

உடல்ரீதியாக பெண்கள் பலவீனமானவர்கள் என்பதை பெண்கள் சமுதாயம் ஒப்புக் கொள்வதில் எந்த அவமானமும் இல்லை.

நிலவுக்கு சமஒளி இல்லை என்றால் அது நிலவைக் கேவலப்படுத்துவது ஆகாது.

இன்று சமத்துவம் என்ற சொல் பெண்கள் சமுதாயத்தை ஆட்டிப் படைக்கிறது.

இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் இருக்காது..இருக்கவும் கூடாது.

பெண்களுக்கு இழைக்கப்படும் எந்த கொடுமைக்கும்..குறிப்பாக பாலியல் கொடுமைக்கு சம்பந்தப்பட்ட காமுகனுக்கு உடனடியாக தண்டனை  வழங்கப்பட வேண்டும்.அதற்கான சட்டதிட்டங்கள் கடுமையாக்கப் பட வேண்டும்.

நமது சட்டத்துறை, குடியரசுத் தலைவர்,பிரதமர், பாராளுமன்ற உறுப்பினர்கள் எல்லாம் ஒருமித்து பெண் கொடுமைக்கு சரியான தண்டனை வழங்குவதற்கேற்ப சட்ட திட்டங்களை மாற்ற வேண்டும்.

இப்போது..இந்த வழக்கினைப் பொறுத்தவரை..

கற்பகம்...

மருத்துவம் படிக்கும் மாணவி...படிப்பை முடித்ததும்..ஏழைகளுக்கு இலவசமாக சேவை புரிவேன் என்று சொன்னவள்.ஒரு விவசாயியின் மகள்.அழகாக இருந்தாள் என்ற ஒரே காரணத்திற்காகவும், தனக்கு இணங்கவில்லை என்பதற்காகவும் காமக்கொடூரன் மயில்வாகனால்..கதறக்..கதற...(சிறிது நேரம் மௌனம்)

அதுமட்டுமின்றி..அவள் அழகையும்..சிதைக்க ஆசிடைக் கொட்டி...(மௌனம்)

கற்பகம் இன்று உயிருடன் இல்லை.

தன் மகள் இறந்து விட்டால் என்ற காரணத்தாலும், மயில்வாகனனால்தான் இறந்தாள் என்பதாலும் உணர்ச்சிவசப்பட்டு மயில்வாகனனைக் காணப்போயிருக்கிறார் என் கட்சிக்காரர் தாமோதரன்.

அப்போது இரு தரப்பிலும் தகராறு ஏற்பட ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

தாமோதரன் மட்டுமின்றி, மயில்வாகனனும் தாமோதரனைத் தாக்கியுள்ளார்.உணர்ச்சிவசப்பட்டு நடந்த தாக்குதல் என்பதை மனதில் கொண்டு இவ்வழக்கிலிருந்து தாமோதரனை விடுவிக்க வேண்டுகின்றேன்.

யுவர் ஹானர், மலர்ந்து மணம் வீச வேண்டிய கற்பகம் என்ற சின்னச் செடியின் வேரில் திராவகத்தை ஊற்றிஅழித்துவிட்ட மயில்வாகனனுக்கு உரிய தண்டனை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தட் இஸ் ஆல் யுவர் ஹானர்.

சிதம்பரத்தின் வாதம் முடிந்ததும்..மயில்வாகனனின் வழக்கறிஞர் மயில்வாகனன் நிரபராதி எனவும், அவன் எந்தக் குற்றத்தையும் செய்யவில்லை என்றும் கூறியதுடன் ..அப்படியே அவர் செய்திருந்தார் என்று சொன்னால்..அதற்கான ஒரு சாட்சிகூடவா இல்லை என்பதைக் கூறி மயில்வாகனன் நிரபராதி என விடுவிக்க வேண்டுகின்றேன் என்றார்.

இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி..தீர்ப்பை ஒத்தி வைத்தார்.  

No comments:

Post a Comment