Friday, January 10, 2020

25 - போராட்டம்

"காட்டுவழிதனிலே அண்ணே கள்ளர் பயமிருந்தால்
எங்கள் வீட்டுக் குலதெய்வம் வீரம்மை காக்குமே!
நிறுத்து வண்டியென்று கள்ளர் நெருக்கிக் கேட்கையிலே
எங்கள்  கருத்த மாரியின் பெயர் சொன்னால் காலனும் அஞ்சுமடா..டண்..டணா..டண் என்று மூக்கனை பாடவிட்டு கேட்டுக் கொண்டிருந்தனர் ராமனும், நாராயணனும்.

திடீரென ராமன், "ஆமாம்..மாரி..இந்த மாரியால நம்ம ஊர் மக்களையேக் காப்பாத்த முடியல..உங்க மாரி காலனைப் பார்த்து பயப்படறா..அதனாலத்தான் இங்கே இப்படி ஒரு வறுமை தலைவிரிச்சு ஆடுது" என்றான்.

"உண்மைதான்..பாவம் நம்ம கவுண்டர் எப்படிப்பட்ட பரம்பரை,அவரே வறுமை தாங்காம குடும்பத்தோட தற்கொலை  பண்ணிக்கிட்டாரே"  என்றான் மூக்கன்.

"நல்ல மனுஷன் தான்.ஆனா, கோழையாகவும் இருந்துட்டாரே!இந்த பூமியில பிழைக்கவா வழியில்லை.தற்கொலை ஏன் செஞ்சுக்கணும்?,மழை இல்லாமல் இருக்கலாம்.தண்ணீர் வராமல் இருக்கலாம்..வயல்ல விளைச்சல் இல்லாம, வயல் வாடி நெருஞ்சிக்காடா இருக்கலாம், சோற்றுக்கே வழி இல்லாமல் இருக்கலாம்..ஆனா இரண்டு கைகள் இருக்கே..மனுஷனுக்கு இந்த இரண்டு கைகள் இருக்கறச்சே ..எந்த பஞ்சமும் நம்மை ஒன்னும் செஞ்சுடாது"

இதைக்கேட்ட நாராயணன், "ஆமாம்..நீ ஏன் பேச மாட்டே! உனக்கு உன் தொடுப்பால பணக் கஷ்டம் இல்ல.." என்றான்.

"பணம் இருந்து என்ன பணத்தையாத் திங்க முடியும்? பணம் கொடுத்தாலும் வாங்க..பொருள் கிடைக்கணுமே" என்றான் மூக்கன்..

அதற்கு ராமன், "மூக்கா..வர வர .. ரொம்ப புத்திசாலியா மாறிக்கிட்டு இருக்கே" என்றான்

"இப்படியே போச்சுன்னா ..நானும் வேற எங்கேயாவது போய் டீக்கடை வைச்சு பொழச்சுக்க வேண்டியதுதான்" என்ற நாராயணனிடம் ராமன், "உனக்கு என்ன எங்கேயாவது போய் டீக்கடை வைச்சு பொழச்சுப்ப..ஆனா மூக்கன் மாதிரி ஆளுங்க நிலைதான் மோசம்" என்றான்,

"அன்னிக்கு அரசாங்க அதிகாரிகள் வந்து பார்த்துட்டுப் போனாங்களே..அப்புறம் நாமும் தாசில்தார்கிட்ட மனு கொடுத்தோம்.அதெல்லாம் என்ன ஆச்சு?"

"அரசாங்கம் ஒரு கமிட்டியை அமைச்சு இருக்கு.அது விசாரணைப் பண்ணி..நம்ம கிராமத்துல மழையே இல்லை.குடிக்கக் கூட தண்ணீ கிடைக்கறது இல்ல.வயல் எல்லாம் விலைச்சல் இல்லாம தரிசாக் கிடக்கு..அப்படின்னும் அறிக்கைக் கொடுக்கும்.அதுக்குமேலே அரசியல் கட்சிகள் எல்லாம் நமக்கு சாதகமா குரல் கொடுத்தா...நமக்கு ஏதாவது உதவி கிடைக்கும்.இது எல்லாம் தண்ணீ இல்லாம சாகும்போது, தண்ணீர் கேட்டு செத்ததுக்கு அப்பறம்..பத்தாம் நாள் தண்ணீ ஊத்தற கதைதான்"

"சாதாரணமா கண்ணுல பார்த்தாலேயே.வறுமையும்..வயல்களோட நிலமையும் தெரியுமே..நீ சொல்ற மாதிரி கமிட்டி எல்லாம் வந்து விசாரிக்கணுமா என்ன?"

"நீ கேட்டிட்ட..இதையே நான் கேட்டா இந்த ஊர்..என்னை ஏடா கூடமா ராமன் பேசறான்னு சொல்லும். கமிட்டிங்கறது  புதுசு இல்ல.விசாரணைக் கமிஷன் அமைக்காத ஆரசாங்கமே கிடையாது.2004ல மட்டும் அரசாங்கம் 50 விசாரணைக் கமிட்டிகளை அமைச்சு இருக்கு.இதுபோல கமிட்டிகள் தான் நிலைமையை ஆராயணும்னா..மத்தியில கிட்டத்தட்ட 60 மந்திரிகளுக்கு மேல இருக்காங்க.ஸ்டேட்ஸில வேற அமைச்சருங்க..இவங்க எல்லாம் எதுக்காக?

மத்தியில மட்டும் 500க்கு அதிகமான ஐ ஏ எஸ் அதிகாரிங்க..34லட்சத்துக்கும் மேலே மத்த அதிகாரிங்க..இவங்களுக்கு எல்லாம் அரசாங்கம் தரச் சம்பளம் மட்டுமே 38000 கோடிகளுக்கு மேல..இவங்களுக்கெல்லாம் தெரியாத விஷயங்களையா//இந்த கமிட்டிகள் கண்டுபிடிக்க முடியும்? அப்படி முடியும்னா..இவ்வளவு அமைச்சர்ங்களும், அதிகாரிகளும் எதுக்கு"

"ராமா...நீ சொல்றது எனக்கு சரியா புரியல" என்றான் மூக்கன்.

"உனக்கு மட்டுமில்ல..யாருக்குமே புரியாது.காவிரில தண்ணி இல்லாதப்போ..வாயை மூடிக்கிட்டு இருக்கற அரசியல்வாதிங்க..கர்நாடகாவுல நல்ல மழை பெஞ்சு..அவங்களோட அணையெல்லாம் நிறைஞ்சு..வேற வழியில்லாம..அணைகளை திறந்துவிடறதைத் தவிர வேற வழியில்லங்கறப்போ..அதை திறக்கறப்போ.."தண்ணீயை கர்நாடக அரசே திறந்துவிடு"ன்னு போராட்டம் நடத்தறாப்போல நடத்தி..எங்களாலத்தான் தண்ணீ வருதுன்னு வெற்றிவிழா நடத்துறாங்களே..இந்த விஷயம் பாமர மக்களுக்குப் புரியுமா?"

"காவிரி மட்டும் காஞ்சு கிடக்கல.வைகை வத்திப் போச்சு..பாலாறு பாழடைஞ்சுப் போச்சு.வயலை வானம் பாத்த பூமின்னு சொல்லுவாங்க/ஆனா, நம்ம ஆறுகள் கூட வானம் பார்த்த ஆறுகள்னு ஆகிப் போச்சு" என்றான் நாராயணன்.

திடீரென ஞாபகம் வந்தவனாக மூக்கன் "ராமண்ணே! ஒரு முக்கிய விஷயம் சொல்ல மறந்துட்டேன்.நாளைக்கு  நம்ம ஊரைவிட்டு வெளியே எங்கும் போயிடாதீங்க. பண்ணை தலைமையில..நம்ம ஊர் வறுமையைப் பத்தி, அதனால தற்கொலை செய்து கொள்பவர்கள் பற்றி, காவிரில தண்ணீ விடாததாலே..தொடர்ந்து நாலாவது வருஷமா பயிர் விளையாததைச்  சுட்டிக்காட்டி..நம்ம ஊர் விவசாய ஆஃபீஸ் எதிரே போராட்டம் நடத்தறோம்.அதுல எல்லாரும் கலந்துக்கணும்னு  சாயரட்சை நான் தண்டோராப் போடப்போறேன்" என்றான்.

"ஆமாம்..நம்ம கஷடத்தைச் சொல்லி போராட்டம் நடத்தப்போறோம்.ஆனா...மயில்வாகனன் கட்சி ஆளுங்க இதை எதிர்க்கப் போறாங்களாம்.லாரியில ஆட்களை கொண்டு வரப்போறதா ஊர்ல வதந்தி பரவிக் கிட்டு இருக்கே" என்றான் நாராயணன்.

"நம்ம கிராமத்து ஜனங்க போராட்டத்தால..இந்த ஊர்ல நல்லது நடந்தா..அந்தப் பேர் அவங்களக்கு வராமல் போயிடும் இல்லையா? அதனாலதான் அவங்க அப்படிப்பண்றாங்க."என்ற ராமன்..அப்போதுதான் பண்ணையார் அங்கு வருவதைப் பார்த்து, பண்ணையாரிடம், "வாங்க பண்ணை..நாளைக்கு ஏதோ போராட்டம் பண்னப்போறீங்களாமே!" என்றான்.

"பண்ணப்போறீங்க இல்ல..பண்னப் போறோம்" என்ற பண்ணையார்.."அதைப்பத்தித்தான் நான் எல்ல்லோர்கிட்டேயும் சொல்லிட்டு வரேன்..நம்ம கிராமம் முழுசும் கலந்து கொள்ளணும்.அப்போதான் நமக்கு ஏதாவது நிவாரணம் கிடைக்கும்" என்றார்,

"ஆமாம்..மயில்வாகனன் ஆளுங்க ஏதோ எதிர்ப்பு தெரிவிக்கப் போறாங்களாம்" .

"நம்ம போராட்டத்துக்கு எதிரா..நம்மை தோல்வி அடையச் செய்ய..அடுத்த ஊர்ல இருந்து லாரியில அடியாட்களை கொண்டு வரப்போறதா சொல்றாங்க.நம்ம போராட்டத்தை தோல்வியடையச் செய்யப் போறாங்களாம்.நாம எல்லாம் ஒத்துமையா இருந்து அவங்களை துரத்தி அடிக்க்கணும்"

"நீங்க கவலைப்படாதீங்க பண்னை.நமக்குள்ள அபிப்பிராய பேதம் இருக்கலாம்.அதை எதிரிங்க தங்களுக்கு சாதகமா ஆக்கிக்கக் கூடாது.உறவுக்குக் கை கொடுப்போம்..உரிமைக்குக் குரல் கொடுப்போம்..இதுதான் இப்ப நம்ம வாசகமா இருக்கணும்" என்றான் பதிலுக்கு ராமன்.

"நானும் நாளைக்குக் கடையை மூடிட்டு..போராட்டத்துல கலந்துக்கப் போறேன்" என்றான் நாராயணன்.

"நீ மட்டுமில்ல நாராயணா..நம்ம ஊர்ல நாளைக்கு எல்லாக் கடைகளும் மூடப்படும்.. நாளைக்கு எதுவுமே கிடைக்காது.தனிமரம் தோப்பாகாது..எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டோம்..இனி நம்மை வெல்ல முடியாது.நாளைக்கு நம்ம கஷடத்துக்கு ஒரு முடிவு வந்துடும்னு நினைக்கிறேன்" என்றார் பண்ணையார்.

No comments:

Post a Comment