Friday, January 17, 2020

31 - பஞ்சாயத்துக் கலைந்தது

தாமோதரன் வீடும்,நிலங்களும் தீக்கிரையான பின்னர், அது பற்றியும் அவனுக்கு இழப்பீடு தருவது குறித்தும், அவன் கைது குறித்தும் விசாரிக்க பஞ்சாயத்தைக் கூட்டினார் பண்ணையார்.

பண்ணையார் முதலில்பேச ஆரம்பித்தார்,,

"தாமோதரன் வீடு நிலம் ஆகியவற்றை எரித்தவர் யார்? என ஓரளவு நம்மால் யூகிக்க முடியும் ஆனாலும், அதை சட்டப் பூர்வமாக நாம் நிரூபிக்க வேண்டும்.

ஏற்கனவே..பக்கத்து கிராம காவல்துறை, இது குறித்து ஒரு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.இதனைடையே நாம் தாமோதரனுக்கு ஏதேனும் நஷ்டஈடு வழங்கலாம்.உடனடியாக பஞ்சாயத்து செலவில் அவனுக்கு வீடு கட்டித் தரப்படும்.தீ விபத்தில் உயிரிழந்த செங்கமலம் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்துவோமாக.

கூடியிருந்த அனைவரும் எழுந்து நின்று மௌன அஞ்சலி செலுத்தி, அமர்ந்த பின்னர்..ராமன் எழுந்து..

"நம்ம கவுண்டர் தற்கொலை செய்து கொண்டதும், அது பற்றியும், நம் கிராமத்து வறுமை குறித்தும், அதற்கான நிவாரணம் கேட்டும், நம்ம ஊர் கிராம அதிகாரி மூலமாக அரசாங்கத்துக்கு ஐந்து..ஆறு மாதம் முன்னால ஒரு மனு கொடுத்தோமே..அது பற்றிய விவரம் ஏதேனும் தெரியுமா?" என்றான்.

"அது விஷயமாகவும் பேசத்தான் இப்பஞ்சாயத்துக் கூடியுள்ளது.அது குறித்து விசாரிக்க இன்று அதிகாரிகள் வர்றாங்களாம்" என்றார் பண்ணையார்.

உடன் அர்ச்சகர், "மனு கொடுத்தோம்..போராட்டமும் பண்ணினோம்.நீங்களும் தாக்கப்பட்டீங்க!இது எல்லாம் நடந்து முடிஞ்சுப் போன விஷயங்கள்.இதில் அதிகாரி வந்து விசாரிக்க என்ன இருக்கிறது?"

"நீஙக இங்க பேசிட்டீங்க.இதையே அதிகாரிகள் கிட்டக் கேட்டா கோபம் வரும்.இந்த  நாட்டுல அரசியல்வாதிங்க எல்லாம் கடிவாளம் மாட்டிய குதிரைகள் போலத்தான்.அக்கம் பக்கத்துல என்ன நடக்குது..என்ன நடந்தது என்று எல்லாம் தெரிவதில்லை.சம்மந்தப்பட்ட பிரிவுக்கு ஒரு மனு அனுப்பினா அதை உடனடியாக விசாரணைக்கு எடுக்கறப்போ..எல்லாமே முடிஞ்சுடும்" என்றான் ராமன்.

"ஆமை புகுந்த வீடு உருப்படாதுன்னு ஒரு பழமொழி சொல்லுவாங்க.எல்லா அரசு அலுவலகங்களும் ஆமை வேகத்துலதான் செயல்படுது" - பண்ணையார்.

"நீங்க சொல்றது எல்லாம் அந்தக் காலம்.இப்ப எல்லாத் துறையிலும் கம்ப்யூட்டர் வந்தாச்சு.பட்டனைத் தட்டினா அடுத்த நிமிஷமே நமக்கு வேணும்கற விவரங்கள் எல்லாம் கிடைச்சுடும்.ஆனா..என்ன ஒன்னு..அந்த பட்டனைத் தட்ட வேண்டிய கை மனுஷனுடையதுதானே! அதுக்கே, அதிகாரிங்களுக்கு மாசக்கணக்குல டயம் வேண்டியிருக்கே"

"இதோ பார் ராமா..விசாரிக்க அதிகாரிங்க இங்க வர்ற நேரம்..நமக்கு நம்ம காரியம் முடியணும்.நீ பாட்டுக்கு இப்படி ஏதாவது ஏடாகூடமா சொல்லி அவங்களுக்கு கோபம் வந்து போயிடப்போறாங்க"

'நான் ஏன் வாயத் திறக்கப் போறேன்.நீங்க திறடான்னாலும் திறக்க மாட்டேன். ஆனா..ஒரு விஷயம்..வர்ற அதிகாரி ஏதாவது கேட்டு நீங்க சரியா பதில் சொல்லலைன்னா..நான் வாயைத் திறந்தா மூட மாட்டேன்..ஆமாம்..சொல்லிட்டேன்" என்றான் சற்று கோபமாக ராமன்.

பின்னர் சற்று நேரம் கழித்து ராமன் , "பண்ணை..வர அதிகாரிங்க முதல்லே மக்கள்கிட்டதான் விசாரிப்பாங்க.அப்புறம் வயல்களை பார்வையிடுவாங்க.அதைவைச்சு அரசாங்கத்துக்கு அறிக்கையைத் தாக்கல் செய்வாங்க.அரசு, சட்டசபையில அந்த அறிக்கையை வைக்கும்.சில சமயம் விவாதம்..சில சமயம் விதண்டா விவாதம்..எதிர்க்கட்சிகள் வெளிநடப்புன்னு எல்லாம் நடக்கும்.உடனடி நிவாரணம் கொடுக்கணும்னு எதிர்க்கட்சிகள் கேட்டா  நிவாரணம் கிடைக்காது.நிவாரணம் கூடாது அவங்க சொன்னா உடனே நிவாரணம் கிடைக்கும்" என்றான்.

"இதோ பாரு ராமா..வர்றவங்க எது கேட்டாலும்..நானோ இல்ல அர்ச்சகரோ பதில் சொல்றோம்.நீ தப்பித் தவறிக்கூட எதுவும் பேசாதே! வெண்ணெய் திரண்டு வர்ற சமயத்தில தாழியை உடைச்சக் கதை பண்ணிடாதே!"

இச்சமயம்..மூக்கன் ஓடி வந்து "ஐயா..நம்ம கிராம அதிகாரி வர்றார்" என்றான்.

"அவர் கூட வேற யாராவது வர்றாங்களா?"

"இல்லை. அவர் மட்டும்தான் வரார்"

"ஒருசமயம்..விசாரணை அதிகாரி..இப்போ வரலைப் போல இருக்கு" என்ற பண்ணையாரிடம்,. ராமன், "தான் வாயத் திறக்கலாமா?" என சைகையில் கேட்க..அதற்கு பண்ணையார் "இன்னும் யாரும்தான் வரலியே..நீ இப்ப என்ன சொல்லப் போற சொல்லு.." என்றார்.

"ஒருவேளை, நம்ம கிராமத்து அதிகாரிதான்..விசாரணை அதிகாரியோ?"  என்றான்.

"அது எப்படி ராமா..அவர்கிட்ட தானே நாம நம்ம மனுவைக் கொடுத்தோம்.மேலிடத்துக்கு அனுப்பச் சொன்னோம்.அவர் நம்ம ஊர்க்காரர் ஆயிற்றே..அவருக்குத்தான் எல்லா விஷயங்களும் தெரியுமே"

"நீங்க சொல்றது சரிதான்..ஆனா..அரசாங்கம் அவரை விசாரணை அதிகாரியாய் போட்டு விசாரிக்கச் சொன்னா விசாரிச்சுத்தானே ஆகணும்"

இவர்கள் இப்படி பேசிக்கொண்டிருந்த போதே கிராம அதிகாரி அங்கு வந்து சேர்ந்தார்.பண்ணை அவரை வரவேற்று, "இன்னிக்கு விசாரணைக்கு அதிகாரிங்க வர்றதா செய்தி வந்தது.அவங்க வர்றாங்களா?" என்றார்.

கிராம அதிகாரியோ , அத்ற்கு "இல்லை" என்பது போலத் தலையை வலமும்..இடமும் ஆட்டினார்.

"அவருக்கு பதிலாக நீங்க வந்து இருக்கீங்களா?" என்று ராமன் கேட்க, அதிகாரி "ஆமாம்" என்பது போல மேலும், கீழும் தலையாட்டினார்.

"ஓஹோ...எனக்குப் புரிஞ்சுப் போச்சு" என்றவன்.."நாம இந்த அதிகாரி கிட்ட கொடுத்த மனுவை இவர் கலெக்டருக்கு அனுப்பினார்.கலெக்டர், விவசாயத் துறைக்கு அனுப்பினார்.அவங்க, தண்ணீர் வழங்குத் துறைக்கு அனுப்பினார்கள்.அவங்க சம்பந்தப்பட்ட அமைச்சகத்துக்கு அனுப்பினாங்க.சம்பந்தப்பட்ட அமைச்சகம்..மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுக்கலாம்னு முதல்வர் அலுவலகத்திற்கு அனுப்பினார்கள்.முதல்வர் அலுவலகம், அதை முதல்வர் பார்வைக்கு அனுப்பினாங்க.முதல்வர் அதைப் பார்வையிட்டு, விசாரிக்கச் சொன்னதும், முதல்வர் அலுவலகம் சம்மந்தப்பட்ட  அமைச்சகத்துக்கு அதை அனுப்ப..அவங்க, தண்ணீர்த் துறைக்கு அனுப்ப..அவங்க விவசாயத் துறைக்கு அனுப்ப, விவசாயத்துறை கலக்டருக்கு அனுப்ப, கலெக்டர் நம்ம அதிகாரிக்கேத் திருப்பி அனுப்பி விசாரிக்கச் சொல்லியிருக்கார்.அதை எடுத்துக்கிட்டு..நம்ம அதிகாரி வந்து இருக்கார்.என்ன நான் சொல்றது சரிதானே!" என்றான் அதிகாரியிடம் மூக்கன்.

அதிகாரியும் "ஆமாம்" என்பது போல தலையினை ஆட்ட..

"அடடா..நம்ம மனுவிற்கு என்ன ஒரு முன்னேற்றம்" என்றார் அர்ச்சகர்.

"நான் ஏதாவது சொன்னால் உங்களுக்குக் கோபம் மட்டும் வருது..ஆனால் நடைமுறை கோபத்தை ஏன் வரவழிக்கலை?"
என்ற ராமனிடம், "பண்ணையார்"ராமா! நாம கோபப்ப்ட்டு என்ன பிரயோசனம்?நமக்கு நம்ம வேலை முடியணும்" என்று சொல்லிவிட்டு, அதிகாரியிடம், "நீங்க உங்க விசாரணையை ஆரம்பிக்கலாம்" என்றார்.

"அவர் விசாரிக்க இனிமே என்ன இருக்கு.இங்கு நடக்கற விஷயமெல்லாம் அவருக்குத் தெரியுமே!..அதனால.."மனுவில் சொல்லப்பட்டதெல்லாம் உண்மை"ன்னு, இவர் எழுதி கலெக்டருக்கு..." என்று ராமன் சொல்லிக்கொண்டிருக்கும் போதே குறுக்கிட்ட பண்ணையார், "ராமன் வாய மூடு" என்றவர், அதிகாரியிடம்"என்ன நீங்க ஒன்னும் சொல்லலியே" என்றார்.

அதற்கும் அந்த அதிகாரி மௌனம் சாதிக்க, ராமன்,"அவர் எப்படி பேசுவார்.அவர் ஏதாவது பேசினா...அதிகாரி விசாரணைக்கு வந்து நிவாரணம் தர ஒப்புக் கொண்டார்னு விஷயம் வெளியாயிட்டா..இவர் பதவிக்கு ஆபத்து வந்திடுமே! என்ன நான் சொல்றது சரிதானே!" என்றான் அதிகாரியைப் பார்த்து.

அதிகாரி, ராமன் சொல்லியவற்றிற்கு "ஆமாம்" என்பது போல தலையினை ஆட்ட.."சரியான தஞ்சாவூர் பொம்மையைத்தான் விசாரணைக்கு அனுப்பியிருக்காங்க' என்றான் ராமன்.

இறுதியில்..எந்த பிரச்னைக்கும் முடிவெடுக்க இயலாமல் பஞ்சாயத்து கலைந்தது.

No comments:

Post a Comment