Wednesday, December 14, 2022

நளவெண்பா - சுயம்வர காண்டம்

(புகழேந்தி புலவர் பாடிய பாடல்களின் பொருளையே பெரும்பாலும் எடுத்து எழுதியுள்ளேன்)  

நிடத நாட்டின் மன்னன் நளன். அவனது மனைவி தமயந்தி நளனை விரும்பி சுயம்வரத்தில் அவனைத் தேர்ந்தெடுத்து மணந்ததை இந்திரன் மூலம் கேட்டு, தமயந்தியின் சுயம்வரத்தில் கலந்து கொள்ள வந்துகொண்டிருந்த கலிபுருஷன் நளனைப் பழிவாங்க முடிவு செய்வதும், அதன் பின்னர் நடக்கும் சூதாட்டத்தில் நளன் நாடிழந்து, மனைவி குழந்தைகளைப் பிரிந்து சிரமப்பட்டுப் பின்னர் இழந்த அனைத்தையும் திரும்பப்பெறுவதைக் கூறும் கதை.

சுயம்வர காண்டம், கலிதொடர் காண்டம், கலிநீங்கு காண்டம் என மூன்று காண்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ள இந்நூலில், 427 வெண்பாக்கள் உள்ளன. இவற்றுள் 7 வெண்பாக்கள், பாயிரம், நூல்வரலாறு என்பனவாகும். சுயம்வர காண்டத்தில் 171 வெண்பாக்களும், கலிதொடர் காண்டத்தில் 155 வெண்பாக்களும், கலிநீங்கு காண்டத்தில் 94 வெண்பாக்களும் (7+171+155+94= 427) உள்ளன.

2 - நிடத நாடு

-----------------------

நிடதநாடு..

நளன் ஆண்ட நாடு.

அதன் நீர்வளம்,நிலவளம், அதனைச் செல்வம் மிக்க நாடாக ஆக்கின.

கண்களைக் கவரும் பொய்கைகள்.அவற்றில் வண்ண வண்ண மலர்கள்.அந்த நிர்நிலைகளுக்கு அழகினைத் தந்தன.

வயல்களில்...பயிர் வளர்ச்சிக்கு தேங்கி இருந்த தண்ணீரில் கயல் மீன்கள் அழகாக நீந்தின.குவளை மலர்கள் பூத்துக் கிடந்தன.

கயல் மீன்களும்,குவளை மலர்ச்சியும்,தாமரை நெகிழ்ச்சியும் திருமகளின் கண்களை நினைவூட்டின.

நிடத நாடும் நிலமடந்தையின் கண்கள் போல தோற்றம் அளித்தது.

இந்த நாட்டின் தலைநகரம் மாவிந்தம் ஆகும்.

இந்நகர் செல்வம் மிக்க நகராக விளங்கியது.

மகளிர் தங்கள் நறுமண உடலுக்கு அப்பிய கலவைச் சாந்து..உலர்ந்து குப்பையாய் தெருவினை நிரப்பியது.யானைகள் அக்குப்பைக் கலவைச் சாந்தில் கால் வழுக்கி விழுந்து..தெருவை சேறாக்கியன.

அவ்வூர் மகளிர்,அவர்கள் கூந்தலுக்கு ஊட்டிய அகில் புகை வான் மேகத்தைக் கவர்ந்து,அது பொழியும் மழைநீருக்கு மணத்தை அளித்தது.அதனால் அவ்வூரில் பெய்யும் மழைநீரிலும் அகில் மணம் வீசியது.

அவ்வூர் மக்கள் கல்வியும்,ஞானமும் மிக்கவராகத் திகழ்ந்தனர்.அவ்வூர் மாணவர்கள் கல்வி பயில சிறந்த கல்வி நிலையங்கள் அமைந்திருந்தன.பல்கலைக்கழகங்களில் புலவர்கள் நூல்களை ஆராய்ந்தனர்.கவிஞர்கள் கவிதை இயற்றினர்,அரங்கேற்றங்கள் பல நடந்தன.

ஆடல்,பாடல் மகளிர் மேடைகளில் காட்சி அளித்தனர்.அவர்கள் இடை கவர்ச்சி தந்த்து.கண்புலனுக்கு அறியாத அழகைப் பெற்றிருந்தது இடை.

எங்கும் இசை முழங்க முத்தமிழ் வளர்த்த வித்தகர்கள் கலையையும்,ஞானத்தையும் வளர்த்தனர்.அறிவு மிக்க சான்றோர்கள் வாழ்ந்ததால் மக்கள் கவலையின்றி இருந்தனர்.

ஒழுக்கத்தை உயிரினும் மேலாக அவர்கள் எண்ணினர்.சோர்வும், சோம்பலும் அற்றவர்களாக இருந்தனர்.ஆண்மை மிக்கவர்களாக ஆண்கள் திகழ்ந்தனர்.விற்பயிற்சியும்,படைக்கலப் பயிற்சியும் அவர்களை சிறந்த வீரர்கள் ஆக்கின.

புறமுதுகிட்டு ஓடாத படையை உடையவன் நளன் என்ற புகழுக்கு காரணமாய்த் திகழ்ந்தான் நளன்.

வறுமை இல்லை.அதனால் திருட்டு இல்லை.

இரத்தல் இழிவு என வாழ்ந்தனர்..உழைத்தனர்..உயர்வு அடைந்தனர்.மக்கள் அழுது அரற்றியது இல்லை.கலக்கம் என்பதே இல்லை.

சோர்வு,கலக்கம்,அரற்றுதல் என்பதைக் காண வேண்டும் என்றால்..

மகளிர் கூந்தலில் சோர்வு காண முடிந்தது.

கலக்கம் என்பது நீர் குடைந்தாடும் குளங்களில் காண முடிந்த்து.

அரற்றுதல் என்பது மகளிர் கால் சிலம்பால் மட்டுமே கேட்க முடிந்த்து.

வளைவு என்பதை வில்லில் கண்டனர்.மக்கள் செயலில் காணவில்லை.

இத்தகைய வளம் மிக்க நகரில் எங்கும் சோலைகள் நிரம்பி வழிந்தன.சேலை கட்டிய மகளிர் சோலைகளில் பூப்பறித்து மகிழ்ந்தனர்.புனல் விளையாடினர்.மகிழ்ச்சியுடன் விளங்கினர்.

இளவேனிற் பருவம் வந்தது. 

மன்மதன்,தனது கரும்பு வில்லில் மலர்களாகிய அம்புகளைத் தொடுத்தான்.தென்றல் வீசியது.அது சோலைகளில் இருந்த பூக்களின் வாசத்தை தெருக்களில் வீசியது.சுகமான காற்று இளைஞர்களின் காம விருப்பத்தை தூண்டின.

பூக்களில் தேனினை நாடி வண்டுகள் சென்றன.

நளன் சோலைகளில் பூவினை நாடி சென்றான்.

அவனுடன்,அந்தபுரத்து அழகியர் சிலர் உடன் இருந்தனர்.

கருங்குவளை மலர்களாய் கண்கள் .அம்மகளிர் நளனை சுற்றி இருந்தனர்.நளன் சோலையை அடைந்தான்.

அங்கே..அழகிய அன்னப்பறவை ஒன்று பறந்து வந்த்து. 

No comments:

Post a Comment