Saturday, December 7, 2019

10 - விவசாய நிலங்கள்

தாமோதரனையும், செங்கமலத்தையும் வெளியே அனுப்பிவிட்டு சென்ற மயில்வாகனன் மீண்டும் வந்து கற்பகத்திடம் பேசியதையும், மூக்கன் உள் நுழைந்து , மயில்வாகனனை வெளியேற்றியதையும் அறிந்த கிராமத்து மக்கள், மயில்வாகனன் ஏதோ உள் நோக்கத்துடன் தான் வந்திருக்க வேண்டும் என்றும்..இது போன்ற காரணங்களால்தான் கிராமத்திற்குள் அரசியலே நுழையக்கூடாது என கட்டுப்பாடு இருந்தது என்றும் பேச ஆரம்பித்தனர்.

இந்த விஷயங்கள் தெரியவந்ததும் தாமோதரனும் சற்று குழப்பம் அடைந்தான்.

"தலைவர் நல்லவரா? இல்லை கெட்டவரா?" என்ற சந்தேகம் அவன் மனதில் எழுந்தது.

இந்நிலையில் ஒருநாள், மயில்வாகனின் உதவி ஆள் எனச் சொல்லிக் கொண்டு ஒருவன் தாமோதரன் வீட்டிற்கு வந்தான்.வந்தவன், "தாமோதரா! தலைவர் அடுத்த கிராமத்துக்கு வந்திருக்கார்.உன்னை உடனே வந்து பார்க்கச் சொன்னார்" என்றான்.

சற்று யோசித்த தாமோதரன், "நீங்க போங்க.நான் மாடசாமி அண்ணனைப் போய்ப் பார்த்து அவரோடு வண்டியில வந்துடறேன்' என்றான்.

"இல்லை..இல்லை..தலைவர் உன்னை   தனியாகத்தான் வரச்சொல்லியிருக்கார்.உன் கிட்ட முக்கியமா ஏதோ பேசணுமாம்"

தலைவன் தன்னிடம் முக்கியமாகப் பேசணும்னா அது என்ன விஷயமாக இருக்கும்..என பயமும், சற்று ஆவலும் உண்டாக"என்ன விஷயமா பேசணும்னு சொல்றார்னு உங்களுக்குத் தெரியுமா?"என்றான்.

'அதெல்லாம் தெரியாது.உன்னை உடனே கூட்டியாரச் சொன்னார்.அவ்வளவுதான் எனக்குத் தெரியும்"

"சரி..நான் குப்பால் சைகிள் கடையிலிருந்து ,சைகிள் எடுத்துக்கிட்டு அதுல வரேன்..நீங்க போங்க: என்றவன், உள்ளே சென்று, தோய்த்து வைத்திருந்த ஒரு லுங்கியைக் கட்டிக்கொண்டு..மேல் துண்டினை தலைக்குக் கட்டிக் கொண்டு,மஞ்சள் கலரில் ஒரு பனியனுடன் குப்பால் கடைக்கு விரைந்தான்.

குப்பால் என்பவன் வடக்கே இருந்து வந்தவன்,அவனுக்கு எது சொந்த ஊர், எப்படி இங்கு வந்தான் என்றெல்லாம் யாருக்கும் தெரியாது.பார்க்க ..பார்க்க என்ன பார்க்க..உண்மையிலேயே கொஞ்சம் முரட்டு சுபாவம் உள்ளவன்.ஊர் எல்லையில் சிறு குடிசை வீட்டைக் கட்டிக் கொண்டு..வெளியே மூன்று..நான்கு சைகிள்களுடன்..சைகிள் வாடகைக்கு விடும் கடை வைத்திருந்தான்.ஒண்டிக்கட்டை..சைகிள் விட பழகும் சிறுவர்களிடம் அதிகம் பேரம் பேசாது சைகிளை விட்டு வாழ்நாளை ஓட்டிக் கொண்டிருந்தான்.

"என்ன தாமோதரா..காலைலேயே எங்கக் கிளம்பிட்ட" என்றான் தாமோதரனை வழியில் பார்த்த மூக்கன்.

'மூக்கா..தலைவரு மயில்வாகனன் என்னைப் பார்க்கணும்னு சொன்னாராம்.என்ன விஷயம்னு தெரியலை.நம்ம குப்பால் கடையில வாடகை சைகிள் எடுத்துக்கிட்டு போலாம்னு போறேன்.."

"நான் வேணும்னா கூட வரட்டா?"

"வேணாம்...என்னத் தனியாத்தான் வரச் சொல்லியிருக்காராம்"

வாடகை சைகிளை எடுத்துக் கொண்டு நான்கு கிலோமீட்டர் மிதித்து தலைவர் இருக்குமிடம் வந்து சேர்ந்தான்.அவனுக்கு முன்னால் சிலர் தலைவரைப் பார்த்துப் போக அமர்ந்திருந்தனர்.

ஒவ்வொருவராக தலைவனைப் போய்ப் பார்ப்பதும்..தங்கள் குறைகளை சொல்வதும், மனுக்களைக் கொடுப்பதும்,திரும்பி வருவதுமாய் இருந்தனர்.

தாமோதரன் முறை வந்ததும்..தலையில் கட்டிக் கொண்டிருந்த தலைப்பாகையை அவிழ்த்து இடுப்பில் கட்டிக் கொண்டு உள்ளே சென்றான்.பல் குச்சி ஒன்றினால் பல்லைக் குத்திக் கொண்டு தலைவன் தனியாகத்தான் அமர்ந்து இருந்தான். அருகே குப்பைத்தொட்டியில், இவனுக்கு முன்னால் மனு கொடுத்துப் போனவர்களின் மனுக்கள் வீசப்பட்டிருப்பதையும் பார்த்தான்.

"தலைவா...ஆள் அனுப்பிவிட்டீங்களே! என்ன விஷயம் தலைவா?"

"தாமோதரா..எனக்காக நீ எதையும் செய்வ இல்லையா?"

இம்முறை சற்று யோசித்த தாமோதரன், பின் "அதுல என்ன சந்தேகம் தலைவா..உங்களுக்காக என் உசுரக் கூடத் தயார்"

"உன் உசுரக் கேட்கற அளவுக்கு உம் தலைவன் கல்நெஞ்சுக்காரன் இல்ல...சரி அது போகட்டும்..உன் பொண்ணு...அது பேரு என்ன?"

"கற்பகம்"

"கற்பகம்...ம்..கற்பகம்  ..ரொம்ப நல்ல பேரு.அவளும் கற்பகம் படத்துல வந்த விஜயா மாதிரி தளதளன்னு தான் இருக்கா.ஆமா..அவ எப்படி இருக்கா? படிப்பெல்லாம் எப்படி போய்கிட்டு இருக்கு"

"உங்க தயவால நல்லாயிருக்கா தலைவா.நல்லா படிக்கறா.என்னோட ஆசை..எங்க கிராமத்துல..எங்க ஜாதிப்பொண்ணை ஒரு பெரிய டாக்டர் ஆக்கி..எங்க ஊர் ஏழை மக்களுக்கு இலவசமா சேவை செய்ய வைக்கணும்கறதுதான்"

"ம்ம்ம்..பொட்டப்புள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு சொல்ற பாமர ஜனங்க இருக்கற கிராமத்துல..உன் பொண்ணை படிக்க வைக்கணும்னு நினைக்கிறியே.. உன்னைப் பாராட்ட வார்த்தையே இல்லைய்யா?

"ஐயா..உங்க வாயால என்னைப் பாராட்டறதைக் கேட்கும் போது எனக்கு வெட்கமா இருக்குய்யா"

"இதோ பாருடா..இவன் வெட்கத்தை.இந்த காலத்துல பொண்ணுங்களுக்கே வெட்கம்ன்னா என்னன்னு தெரியாது..இதுல இவன் வெட்கப்படறானாம்"

"தலைவரே! இப்ப என்னை எதுக்கு வரச் சொன்னீங்க..உங்களுக்கு என்ன வேணும்னு சொல்லவே இல்லையே1"

"காரியத்திலேயே கண்ணா இருக்க...ம்..ஆமாம்..உன் கிட்ட மொத்தம் எவ்வளவு ஏக்கர் நிலம் இருக்கு?"

"நாலு ஏக்கர் தலைவா..எல்லாம் தரிசா இருந்தது.எங்க மூதாதையருக்கு அரசாங்கம் கொடுத்தது.அப்பறம் நல்லா உழைச்சு..நிலத்தை பண்படுத்தி..விளைநிலங்களா நன்செய்யா மாத்திட்டாங்க.விவசாயம் செய்ய ஆரம்பிச்சு, இப்ப நல்ல விளநிலங்களா, பொன்னு விளையற பூமியா ஆக்கிட்டாங்க. என்ன ஒண்ணு..முன்னெல்லாம் மூணு போகம் விளையும்..இப்ப விவசாயத்துக்குத் தேவையான தண்ணீ கிடைக்கறதில்ல.அணையைத் திறந்தாக் கூட கடைக்கோடியில இருக்கறதால தேவையான தண்ணீர் கிடைக்கறதில்லை.அதனால மானம் பாத்த பூமி போல ஆகிப் போச்சு.ஒரு போகம் தான்.மழை பொய்க்காத வருஷம் வேணும்னா இரண்டாம் போகம் விளையும்"

"தாமோதரா...உனக்கு இருக்கறது ஒரே பொண்ணு.அதுவும் டாக்டருக்குப் படிக்குது.உனக்கும் வயசாவுது.உனக்குப் பிறகு உன்னோட வயல்கள்..வெளச்சல்னு ..இதையெல்லாம் யாரால பார்க்க முடியப் போகுது..."

அவன் சொல்லிக் கொண்டே வர..அவன் மேலே என்ன சொல்லப் போகிறான் என ஏறிட்டுப் பார்த்த தாமோதரன், அவனது தயக்கத்தைப் பார்த்து...

"என்ன தலைவரே! அப்படிச் சொல்லிட்டீங்க! என் பொண்ணு நாளைக்கே..ஒரு டாக்டராக ஆகிட்டாலும்..அவ இந்த விவசாயியோடப் பொண்ணு.அது வயல்களைக் கவனிச்சுக்கும்.அப்படியே அதால முடியாயிட்டாலும்..அதுக்கு வர மாப்பிள்ளையா ஒரு விவசாயியைத்தாங்கப் பார்ப்பேன்" என்றான்.

"அப்போ..விவசாயத்துல..உன் வயல்கள் மேல உனக்கு அவ்வளவு உசுரு..இல்லையா..சரி..தாமோதரா...உனக்கு உங்க ஊர் மேல..உங்க ஊர் மக்கள் மேல..எல்லாம் அன்பு இல்லையா..பாசம் இல்லையா?"

"என்ன தலைவா..அப்படி சொல்லிட்டீங்க! எங்க கிராமத்துக்காக, எங்க கிராமத்து மக்களுக்காக..நான் என்ன வேணும்னாலும்...எவ்வளவு வேணும்னாலும் செய்வேன்.. பொறந்த மண்ணை நேசிக்காதவன் மனுஷனே இல்ல"

'அப்படிப் போடு..நீ சொன்னதை நிரூபிக்க உனக்கு இப்ப ஒரு சந்தர்ப்பம் கிடைச்சு இருக்கு.உன்னோட கிராமம் வளர இப்போ உன்னோட உதவி தேவையாயிருக்கு"

"நீங்க சொல்றது எனக்குப் புரியலையே!"

"உனக்குப் புரியற மாதிரியே சொல்றேன்..உங்க கிராமத்துல ஒரு கெமிகல் ஃபேக்டரி வரப்போகுது.அது வந்தா உங்க கிராமத்து இளைஞர்களுக்கு...குறிப்பா..உங்க இனத்தவர்களுக்கு எல்லாம் வேலை கிடைக்கும்"

"கெமிகல் ஃபேக்டரியா..அது வந்தா சுற்றுச் சூழல் பாதிக்கப்படும்னு எங்க ஊரு ராமன் சொன்னார்.அதுல இருந்து வர கழிவு நீரை..காவிரி நதியில விட்டு..நதியையும் மாசுபடிய வைச்சுடுவாங்கலாமே! அதானல நிலத்தடி நீரும் பாதிக்கப்படும்.கிராமத்து ஜனங்களுக்கு தோல் நோய் எல்லாம் வருமாம்"

"இப்படி, ராமன் சொன்னான்..லட்சுமணன் சொன்னான்னு  எல்லாம் சொல்லாதே! அவங்களுக்கு எல்லாம் என்ன தெரியும்? இதோ பாரு தாமோதரா..அவங்க எல்லாம் சிவப்புச் சட்டைக்காரங்க..கிராமத்து ஜனங்களைக் கலவரப்படுத்த அப்பப்ப இப்படித்தான் சொல்வாங்க! உங்க கிராமத்து ஜனங்க முன்னேற்றத்துல அக்கறை இல்லாதவங்க அவங்க! உனக்கு உன் தலைவன் என் மேல நம்பிக்கை இருக்கா? இல்லையா?"

"அதுக்கு சொல்லலை தலைவா! சரி அதைவிடு..இப்போ எதுக்கு என்னை வரச் சொன்னீங்க?"

"ம்...கருமமே கண்ணாயிருக்க..சொல்றேன்..உங்க கிராமத்து தெக்கால இருக்கற அரசாங்க பொறம்போக்கு நிலத்துலதான் அந்த கெமிகல் ஃபேக்டரி வருது.அதை ஒட்டித்தான் அரசாங்கம் உனக்குக் கொடுத்த நிலமும் வருது வயல் நாலு ஏக்கர்னு சொன்ன இல்ல..அதுல ஒரு பகுதியிலேயும்..ஃபேக்டரி கட்டடம் வருது.அதனாலே..நீ அந்த நிலத்தை அந்தக் கம்பெனிக்கு வித்துடறே.நான் நல்லா பணம் வாங்கித் தரேன்! என்ன சொல்ற?"

தாமோதரனுக்கு இப்போது எல்லாம் விளங்கிவிட்டது.பூங்குளத்தில் தலைவன் ஏன் தன்னை கொடிக்கம்பத்தை நடவைத்து, கட்சிக் கொடியை பறக்க வைத்தான் என்று.அரசியல்வாதிகள் கிராமத்துல நுழைஞ்சா கிராமமே அழிஞ்குடும்னு கிராமத்து பெரிசுகள் சொன்னது எவ்வளவு உண்மை என்று..

அவன் என்ன சொல்லப்போகிறானோ என மயில்வாகனன் அவன் முகத்தைப் பார்த்தான்.

"இல்லை தலைவா..நான் என் நிலத்தையெல்லாம் விக்கறதா இல்லை"

"அப்போ..உன் தலைவன் மேல உனக்கு நம்பிக்கை இல்லை.உங்க ஊர் வளர்ச்சியில அக்கறையில்லை..அப்படித்தானே!"

"தலைவா..உங்களை எதிர்த்து சொல்றதுக்கு மன்னிக்கணும்...உங்க மேல எனக்கு நம்பிக்கை இருக்கு.எங்க ஊர் வளர்ச்சியிலேயும், எங்க ஊர் மக்கள் முன்னேற்றத்திலும் அக்கறை இருக்கு. ஆனா..அந்த வளர்ச்சி..எனக்கும், என் குடும்பத்துக்கும்...ஏன்..ஓரளவு எங்க ஊர் மக்களுக்கும் சாப்பாடு போடற விவசாய நிலங்களை அழிக்கறதாலத்தான் வரும்னா..அப்படிப்பட்ட வளர்ச்சி எங்களுக்குத் தேவையில்லை. எங்க ஊர் அர்ச்சகர் சொல்லுவார்.."உழவுக்கும் தொழிலுக்கு வந்தனை செய்வோம்"னு ஒரு புலவர் சொல்லியிருக்கார்னு.அந்தப் புலவர் கூட உழவுக்கு அப்புறம்தான் தொழிலைச் சொல்லியிருக்கார்.

உயிர்கள் வாழ சாப்பாடு போடறது இந்த மண்.அந்த உழவுத் தொழிலை அழிச்சுத்தான் புதுசா ஒரு தொழில் உண்டாகும்னா..அது வளர்ச்சியில்லை..மக்களோட அழிவுக்கு ஆரம்பம்.அதுக்கு எந்தக் காரணம் கொண்டும் எள்ளளவும் என் பங்கு இருக்காது"

இச்சமயத்தில் மயில்வாகனனுக்கு சற்றே கோபம் வர, "தாமோதரா! என்ன பேசறே நீ..யார் கிட்ட பேசறே நீன்னு தெரியுதா?" என்ரான்.

"தலைவா! நான் நல்லா புரிஞ்சுதான் பேசறேன்.கொஞ்சம் பொறுங்க! நான் சொல்ல வந்ததை முழுதும் சொல்லிடறேன்.என்னோட பங்காளி ஒருவனோட முப்பாட்டனுக்கு திண்டிவனத்துக்கிட்டே தரிசு நிலம் கொடுத்தாங்க..நீங்க எல்லாம் பஞ்சமி நிலம்னு அரசியல் பண்றீங்களே..அதுபோல நிலம்தான். அதை சீராக்கி..உழைச்சு..பதப்படுத்தி..பொன்னு விளையற பூமியா மாத்திட்டாரு அவரு.அந்த சமயத்துல அரசியல் தலைவருங்க சிலர் அவை பயமுறுத்தி கொஞ்சம் பணத்தைக் கொடுத்து அந்த நிலங்களை அவர் கிட்ட இருந்து அபகரிச்சுட்டாங்க.அதை வீட்டு மனைகளாக ஆக்கி வித்துட்டாங்க.நல்லா மூணு போகம் விளஞ்ச நிலம்..ம்..இப்ப கான்கிரீட் கட்டடங்களை சுமந்துக் கிட்டு நிக்குது..இப்ப சொல்றேன் கேட்டுக்கங்க...எந்தக் காரணம் கொண்டும் சாப்பாடு போடற நிலத்துக்கு நான் துரோகம் பண்ண மாட்டேன்"

தாமோதரன் பேச்சை நிறுத்தினான்.அவனுக்கே, தானா இப்படி பேசினோம்னு ஆச்சரியமாக இருந்தது.

அவன் சொன்னதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த மயில்வாகனன், "எனக்காக உசுரக் கூட விடுவேன்னு சொன்னவன், இப்பக் கேவலம் நிலத்தைக் கூட விட்டுத்தரமாட்டேன்னு சொல்ற" என்றான்.

"தலைவா..இப்பவும் சொல்றேன்..உங்களுக்காக என் உசுரையும் தரத்தயார்.ஆனா..என்னோட வயல், விவசாயம் எல்லாம் என் உசுரவிட மேலானது"

"தாமோதரா" எனக் கோபம் மேலிட கத்திய மயில்வாகனன், உடன் தன் கோபத்தை மறைத்து கொண்டு, சாந்தமாக அவனிடம், "நீ இப்பவே சொல்ல வேணாம்.உணர்ச்சிவசப் படாம வீட்டுக்குப் போ.நல்லா யோசி.நல்ல முடிவுக்கு வா.வேணும்னா உன் பொண்ணையும் கலந்துக்க.வேணும்கிற நேரம் எடுத்துக்க.இப்ப கிளம்பு" என்றான்.

வெளியே வந்த தாமோதரன், பல எண்ணங்களுடன் சைகிளை மிதித்துக் கொண்டு ஊர் வந்து சேர்ந்தான்.

No comments:

Post a Comment