Saturday, December 14, 2019

16 -எல்லாமே விளையும் நாடு

அந்த வீட்டின் பூஜை அறையில் மற்ற சுவாமி படங்களுடன் பாரதமாதா படமொன்றும் மாட்டப்பட்டிருந்தது.

சுதந்திரப் போராட்ட வீரரும் 90 வயதினைக் கடந்தவருமான சிதம்பரம், குளித்து வந்ததும் தனது அன்றாட வேலைகளின் ஒன்றான பூஜையை முடித்துவிட்டு..பாரதமாதாவின் படத்தில் ஒரு மலரையும் வைத்துவிட்டு "பாரதமாதாவிற்கு ஜே" என்று ஒரு குரலும் கொடுத்தார்.

பின், மூப்பின் காரணமாக உடல் சற்றே ஒத்துழைக்க மறுத்ததால், தள்ளாடியபடியே ஹாலிற்குள் வந்து அங்கு போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்தார்.

வெளியே கிளம்பிக் கொண்டிருந்த வாஞ்சிநாதன் "தாத்தா..எனக்கு ஒரு சந்தேகம் கேட்கலாமா?" என்றான்.

"ம்..கேள்" என்றார் சைகையில் தாத்தா.

"நம்ம நாடு சுதந்திரம் வாங்கி 68 வருஷங்களுக்கு மேல் ஆச்சு.இன்னமும் வளரும் நாடு..வளரும் நாடுன்னு சொல்றாங்களே! ஏன்?" என்றான்.

"வளர்ந்த நாடு..வளரும் நாடு என்பதற்கெல்லாம் மேலோட்டமாக அர்த்தம் பார்க்கக் கூடாது..அதற்கான குறியீடுகள் பல இருக்கு.அதைப் பத்தி பேசணும்னா எவ்வளவோ இருக்கு. ஆனா..உன்னோட சந்தேகம்..சுதந்திரத்திற்குப் பிறகு நாம வளர்ந்திருக்கோமாங்கறதுதானே! அப்படிப் பார்த்தா நாம கண்டிப்பா வளர்ந்த நாடுதான்.ஆனா, கட்டுமஸ்தான உடல் இல்லாதவனை வளர்த்தி போறாதுன்னு சொல்றது இல்லையா" அது போலத்தான் வளரும்நாடு ன்னு சொல்றதும்.நம்ம நாட்டு விசேஷம் ஒன்னு சொல்றேன் தெரிஞ்சுக்க...

அபுதாபிலே பேரிச்சம் விளையும் மிளகு விளையாது
ருமேனியாவில ஆப்பிள் விளையும், தேங்காய் விளையாது
கனடாவில உருளை பயிராகும்.பூண்டு விளையாது
இங்கிலாந்திலே கோதுமை விளையும் கொய்யா விளையாது
ஆனா..இங்கே..எல்லாம் விளையற அற்புத மண் இந்தியநாடுதான்டா..

நம்ம நாட்டு தட்ப வெப்ப நிலை அப்படி"

"தாத்தா..அமெரிக்காவுல ஊழல் பண்ணினா..உயிரோட இருக்க முடியாது.ஆனா, இந்தியாவுல ஊழல் பண்ணினா அவன் தான் ராஜா...ராஜா மாதிரி இருக்கலாம்.நம்ம நாட்டுல லட்சக்கணக்குல, கோடிக்கணக்குல ஊழல் பண்றவனையெல்லாம் ஏசிரூம்ல உட்கார வைச்சு..விருந்து உபசரித்து விசாரிக்கறாங்க.ஆனா, வயத்துப்பாட்டுக்கு நூறு ரூபா திருடறவனை, அரை நிர்வாணமாக்கி..போலீஸ் ஸ்டேஷன்ல அடிச்சு..உதைச்சு விசாரிக்கறாங்க.ஏன்னா நம்ம மண்ணு அப்படி...இல்லையா தாத்தா"

"கிண்டலா...இதோ பாருடா..அதுக்கு நம்மை நாட்டை மட்டும் குத்தம் சொல்லி பிரயோசனமில்லேடா..இயற்கையிலேயே அப்படித்தான் அமைஞ்சு இருக்கு.தண்ணீ கீழே இருக்கறப்போ கனமா இருக்கு..அதுவே ஆவியாகி மேலே போறச்சே லேசா ஆயிடறது.அதுபோல கீழ் மட்டத்துல ஒருத்தர் தப்பு பண்ணினா..அது பெரிய தப்பாத் தெரியுது..அதுவே மேல் மட்டத்துல லேசா ஆயிடறது"

"நீங்க என்ன சொன்னாலும், சுதந்திரத்திற்கு அப்புறம் நாடு சீரழிஞ்சுப் போனது நிச்சயம்.1972ல ஒரு ரூபாயோட மதிப்பு 13 அமெரிக்க டாலர்..ஆனா இன்னிக்கு...?ஒரு டாலரோட மதிப்பு 61 ரூபாய்."

"உன்னைச் சொல்லிக் குத்தமில்லடா..சுதந்திரத்தோட அருமை உன்னைப் போல இருக்கற இளைஞர்களுக்குத் தெரியல..அவ்வளவுதான்"

"போங்க தாத்தா...உன்னைப் போல சுதந்திரம் வாங்கிக் கொடுத்த தியாகிகள் இன்னிக்கு கொஞ்சம் பேர்தான் உயிரோட இருக்கறாங்க! அவங்களுக்கு அரசாங்கம் என்ன செஞ்சுது?"

"ஆமாம்டா..இந்த விசயத்தில எனக்கும் ஒரு வருத்தம் இருக்கத்தான் செய்கிறது.வெள்ளக்காரனுக்கு எதிரா சுதேசி கப்பல் விட்ட..கம்பீரமான வ உ சி க்கு ஆங்கில அரசு ஆயுள் தண்டனை விதிச்சுது.உடம்பு முழுக்க சங்கிலியால் கட்டப்பட்டு..அவரை செக்கிழுக்க வைச்சாங்க.அப்படி, தேச விடுதலைக்காக செக்கிழுத்தவரோட பேரன்கள் சுதந்திர இந்தியாவுல பெயிண்டர்களா தினக்கூலிக்கு பெயிண்ட் அடிச்சுக்கிட்டு இருக்காங்க"

"ஆனா  சம்பந்தம் இல்லாதவங்க எல்லாம்..சுதந்திரத்தோட பலனை அனுபவிச்சுக்கிட்டு இருக்காங்க. தாத்தா..இன்னிக்கு நேர்மைங்கறது..எழுத்துல மட்டும் தான் எழுத முடியும்.நேர்மையா ஒருத்தர் இருந்தா, அவங்களுக்கு வேதனையும், சோதனைகளும்தான் மிஞ்சும்.இன்னொரு விஷயம் தெரியுமா உங்களுக்கு? நம்ம பூங்குளம் கிராமத்துல கெமிகல் ஃபேக்டரி மட்டுமில்ல, ஒரு கார் கம்பெனியும் வர்றதாம்.அதுக்காக எல்லா விளைநிலங்களையும் ஆக்கிரப்பு பண்ணி வர்றாங்க"

"நான் கூட கேள்விப் பட்டேன்.எனக்கென்னவோ உனக்கு அடுத்த ஜெனரேஷன் அரிசியை வெளிநாட்டுல இருந்துதான் இறக்குமதி பண்ணுவாங்களோன்னு தோணுது.இதையெல்லாம் பாக்காம நான் கண்ணை மூடிடுவேன்".

"தாத்தா," என்றபடியே உணர்ச்சி பொங்க அவரை அணைத்துக் கொண்டான் வாஞ்சி. 

No comments:

Post a Comment