Wednesday, December 18, 2019

19 - மாடசாமி சொன்ன செய்தி

கற்பகத்திற்கு, கல்லூரியில் தொடர் விடுமுறை விடப்பட்டது.

அதையொட்டி அவள் தங்கியிருந்த மாணவிகள் விடுதியினையும் பத்து நாட்கள் மூடிவிட்டனர்.அவள் தன் உடைமைகள் சிலவற்றை எடுத்துக் கொண்டு ,வாஞ்சிநாதனிடம் சொல்லிவிட்டு தன் கிராமத்திற்குக் கிளம்பினாள்.

பூங்குளத்தின் மண்ணை மிதித்ததுமே,தனக்குள் இனம் புரியா புத்துணர்ச்சி ஒன்று ஏற்படுவதை உணர்ந்தாள்.

அது, நாம் பிறந்த மண்ணின் சக்தியாய்க் கூட இருக்கக்கூடும் என எண்ணினாள்.

ரயில் நிலையத்தில் இறங்கிய அவளது பெட்டியை போர்ட்டர் சங்கரன் தூக்கி வந்து,அவளை அழைத்துச் செல்ல வந்த மாடசாமியின் வண்டியில் வைத்துவிட்டு.."வரேன் பாப்பா" என அவளிடம் விடை பெற்றுச் சென்றான்.

கற்பகம் தன் கைப்பையிலிருந்து சில்லறையை எடுத்து அவனிடம் கொடுக்க,"பணத்தைக் கொடுத்து என்னைப் பிரிச்சுடாதே ஆத்தா..என்னிக்கிருந்தாலும் நாம ஒண்ணு.நீ என் பொண்ணாயிருந்தா..பெட்டியைத் தூக்க விட்டு இருப்பேனா? அதுபோலத்தான்.எனக்கு நீ வேற..என் பொண்ணு வேற இல்ல" என்றான் சங்கரன்.

வசதி இல்லாதவர்களின் மனம் என்றுமே விசாலமானது என்பதை நிரூபித்தான் சங்கரன். .

கற்பகம் வண்டியில் ஏறி அமர..வண்டியை மாடசாமி ஓட்ட ஆரம்பித்தான்.மாட்டின் மூக்கணாங்கயிற்றினை சற்று இழுத்தும் காளை வேகமாக ஓடாததால்..வண்டி சக்கரத்தில்..குச்சியை நுழைத்து "டக..டக" என சத்தத்தை உருவாக்கினான்.ஆனாலும் வேகம் கூடவில்லை.உடன் அதன் புட்டத்தில்..தன் கையை வைத்தான்.காளை கூச்சம் தாளாமல் ஓடத்துவங்கியது.

மாடசாமி, கற்பகத்திடம், "பாப்பா..இப்ப எத்தனாங்கிளாஸ்...டாக்டராக இனும் எவ்வளவு வருஷம் படிக்கணும்" என்றான்.

"மாடசாமி..சங்கரன் தான் என்னை பாப்பான்னு கூப்பிடறார்னா..நீயுமா? என்னை கற்பகம்னே கூப்பிடு.அப்புறம் என்ன கேட்ட...நான் டாக்டராக எவ்வளவு வருஷம் இருக்குன்னா..அதுக்கு இன்னமும் இரண்டு வருஷம் இருக்கு" என்றாள் கற்பகம்.

"பாப்பா...இல்லை..இல்லை..கற்பகம், நீ டாக்டராக ஆகி..நம்ம கிராமத்து ஜனங்களுக்கு ஃப்ரீயா வைத்தியம் பார்க்கணும்.நம்ம கிரமத்துக்குள்ள எந்த வியாதியும் உள்ள வர உன்னைப் பார்த்து பயப்படணும்"

ஒரு புன்முறுவலுடன், அவனுக்கான பதிலைச் சொன்னாள் கற்பகம்,"கண்டிப்பா..மாடசாமி.நம்ம கிராமத்தைப் பத்தி எனக்கு எவ்வளவு கனவுகள் இருக்கு தெரியுமா?.இதை ஒரு சுவர்க்கபூமியா மாத்தணும்"

"ம்" சுவாரசியமில்லாமல் சொன்ன மாடசாமி, "நம்ம கிராமத்தை நெனச்சா பயமாகத்தாம்மா இருக்கு.என்னிக்கு உங்கப்பா கட்சிக் கம்பத்தையும், கொடியையும் நம்ம கிராமத்துக்குள்ள கொண்டு வந்தாரோ, அன்னிக்கே..விஷக்கிருமிகள்புகுந்துடுச்சும்மா.அந்த மயில்வாகனன் தொல்லை தாங்கலம்மா.அடிக்கடி நம்ம கிராமத்துக்கு வந்துடறான்.வயல்வெளிலே வேலைக்கு வர பொண்ணுங்களையும், வேலை முடிஞ்சு திரும்பற பொண்ணுங்களையும் பார்த்து ஒரு மாதிரி பேசறான்..ஒருமாதிரி சிரிக்கிறான்,

போன மாசம்கூட, நம்ம வூட்ல இடுந்து இரண்டு வீடு தள்ளி இருக்கிற தனசேகரன் வூட்டுக்கு வந்து, அவன் இல்லாதப்போ அவன் பொண்சாதிகிட்ட தண்ணீ கேட்டுட்டே உள்ளே போயிட்டான்.கதவை தாழ்ப்பாள் போட்டுட்டு..அவ எவ்வளவு கதறியும்..கேட்கறதுக்கு பகல் நேரமாய் இருந்ததாலே அக்கம் பக்கத்துல  யாரும் இல்லை.அப்புறம் வந்த ஜோலியை முடிச்சுட்டு கிளம்பிட்டான்.பாவம்..அந்தப் பொண்ணு..சாயரட்சை தனசேகர் வூட்டுக்கு வந்து பாத்தப்போ..அரளி விதையை அரைச்சுக் குடிச்சுட்டு நுரை தள்ளி செத்துக் கிடந்தா." என்றான்.

"என்ன..அந்த அக்கா செத்துப் போச்சுங்களா?" என கற்பகம் சற்றே வருத்ததுடன் கேட்க..மாடசாமி "ஆம்" என்றான்.பின் "அது மட்டுமில்ல அம்மா..அவங்களோட இறுதி சடங்குல..எதுவுமே தெரியாது மாதிரி பொய்முகத்தோட மயில்வாகனன்  கலந்துக்கிட்டு ஆறுதல் சொல்றான்" என்றான்.

"இது எல்லாம் பாத்துட்டு அப்பா என்ன சொல்றார்?" என்றாள் கற்பகம்.

"தாமோதரன் பாடுதான் தவிப்பாப் போச்சு புள்ள.. .தன்னாலதானே அந்த மயில்வாகனன் ஊருக்குள்ளே நுழைஞ்சான்னு சொல்லிச் சொல்லி வருத்தப்பட்டுகிட்டு இருக்காரு. இதுக்கு எப்ப்டி முடிவு கட்டறதுன்னு தெரியாம தவிக்கிறாரு"

கற்பகத்தின் மனம் கனத்தது.மயில்வாகனனிடமிருந்து தன் கிராமத்தைக் காப்பாற்றும் கடமை தனக்கும் இருப்பதாக எண்ணினாள்.

"அது மட்டுமில்ல தாயி..உங்கப்பாக் கிட்ட இருந்து, உங்க கழனியை எல்லாம் அபகரிச்சுடணும்னு அவன் நினைக்கிறான்.நீ படிச்ச புள்ள.எப்படியாவது அவனை நம்ம கிராமத்துக்குள்ள வராம செய்துடும்மா.அதுக்கு என்னால என்ன உதவி வேணுனாலும் சொல்லு..செய்யறேன்"

இதனிடையே , தாமோதரன் வீடு வந்திவிட, மாடசாமி வண்டியை நிறுத்தினான்.கற்பகம் தன் பெட்டியை எடுத்துக் கொண்டு வண்டியிலிருந்து இறங்கினாள்.

"அம்மா..நான் சொன்னதா எதையும் உன் அப்பாகிட்ட சொல்லிடாத தாயி" என விடைபெற்றான் மாடசாமி.  

No comments:

Post a Comment