Tuesday, December 17, 2019

18 - இயற்கையே கடவுள்

அடுத்தநாள்..
விடியலுக்கு முன்னரே ப்ருத்வி எழுந்துவிட்டான்.காலைக்கடன் முடித்து, குளித்து தன் சித்தப்பாவுடன் கோயிலுக்குப் புறப்பட்டான்.

"உன்னோட அப்பா வேலையிலிருந்து ஓய்வு பெற்றதும், இந்த கிராமத்திற்கே வந்து தங்கிவிடும்படிக் கூறினேன்.ஆனா..உங்கப்பா கேட்கலை" என்றபடியே அர்ச்சகர் ப்ருத்வியுடன் நடந்தார்.

"அப்பாவுக்கு சென்னைப் பிடிச்சுப் போச்சு. யாராயிருந்தாலும் மெட்ராஸ்ல இருந்துட்டா, அப்புறம் அந்த இடத்தைவிட்டு வரமாட்டாங்க.அங்கே இருக்கற வசதியையெல்லாம் விட்டுட்டு வசதியே இல்லாத கிராமத்துல வந்து இருக்கறது கஷ்டம்"

"ஆமாமாம்.இப்படி காலங்கார்த்தால சுதந்திரமா நடக்கமுடியுமா?நடக்கறதுக்குன்னு காலைல நேரத்தை ஒதுக்கினாத்தான் முடியும்.சிரிக்கறதுக்கும் காலைல ஒரு இடத்துல கூடி சிரிக்கணும்.பாக்கெட் பால் தான் வாங்கணும்.பலதரப்பட்ட மாடுகள் கலந்த பால் கலவை.அப்புறம் அந்த பால்ல ஏதோ வைட்டமின்களைக் கலந்து சுத்தீகரிச்சு தர்றாங்க. இப்படியெல்லாம் இருந்து பழகிட்டா, அதைவிட்டு விட்டு சுத்தமா எல்லாம் கிடைக்கும்னு இருக்கற கிராமத்துல வந்து இருக்கறது கஷ்டம்தான்" என்ற அர்ச்சகரின் முகத்தை ஏறிட்டான் ப்ருத்வி."என்ன பாக்கறே" என்றார்.

"ஒன்னும் இல்லை..அப்பா சொன்னது சரியாகத்தான் இருக்கு"

"அப்படி என்ன சொன்னார் உங்கப்பா"

"டேய்  சித்தப்பாக்கிட்ட கிராமத்தைப் பத்தி பேசறத்த ஜாக்கிரதை.எதாவது குறை சொன்னா கோபம் வந்திடும்னார்."என்றான் சிரித்தபடியே ப்ருத்வி.

அதற்குள் கோயிலை அவர்கள் எட்டிவிட, நாராயணன் டீக்கடையில் ராமன் உட்கார்ந்திருந்தான்.அவன் ப்ருத்வியைப் பார்த்து, "என்ன தம்பி..கிராமத்துல வசதியெல்லாம் சென்னை மாதிரி இருக்கா?எப்படி?" என்றான்.

"சென்னையில இருக்கற வசதி போல இங்கே வருமா?"

ப்ருத்விக்கு ராமன் பதில் சொன்னான்."என்ன தம்பி..சென்னையில பெரிய வசதி.உங்க சென்னையில வசதி வேணும்னா,நமக்கு சம்பந்தமே இல்லாதவங்கக்கிட்டக் கூட எல்லாம் திட்டு வாங்கணும்.இங்க உங்க சித்தப்பா "சாமி"ன்னுட்டு ஒரு கல்லுக்கு அர்ச்சனைப் பண்ணிக்கிட்டு இருக்காரு.ஆனா உங்க சென்னையில ஆசாமிக்கு ஆசாமி அர்ச்சனைப் பன்ணிக்கிட்டு இருக்காங்க"

"நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலையே"

"உங்க ஊருக்கு வந்து ஆட்டோவில ஏறினோம்னா, இறங்கறப்போ அவன் கேட்கற அதிகப்படியான பணத்தைக் கொடுக்கலைன்னா "சாவு கிராக்கி"ன்னு திட்டு வாங்கறோம்.சில்லறை இல்லாம நோட்டை நீட்டினா பஸ் கண்டக்டர் கிட்ட திட்டு வாங்கணும்."சம்திங்" கொடுக்கலைன்னா தெருவில குப்பை எடுக்க வர கார்ப்பரேஷன் ஊழியர்ங்கக்கிட்ட திட்டு வாங்கணும்.அரிசி ஸ்டாக் இல்லைன்னு பொய் சொல்லி மக்களை விரட்டற ரேஷன் கடைக்காரங்களை எதிர்த்து ஏதாவது கேட்டா அவங்கக் கிட்ட திட்டு.கையில காசு இல்லேன்னா, வண்டியில போறவனை மடக்கி,எதாவது காரணம் சொல்லி சம்திங் வாங்கற போலீஸ்காரன் கிட்ட திட்டு, இதைத்தவிர அப்பப்ப தலையை சொரியற தொலைபேசி ஊழியருங்க, ஈபி ஊழியருங்க,தகராறு பண்ற தண்ணீ லாரிக்காரங்க, கோயில்ல கூழ் ஊத்தறோம்னு வர போலி பக்தர்கள்னு எல்லோர் கிட்டேயும் காசு கொடுக்கலைன்னா திட்டுதான்"

"ஆமாம்..நீங்க யாரு?"

அதற்கு அர்ச்சகர், "இவர் பேரு ராமன்.எதற்கெடுத்தாலும் இப்படி ஏடாகூடமா எதாவது சொல்வாரு.எந்த ஒரு விஷயமும்..நமக்குத் தோணற மாதிரி இவருக்குத் தோணாது" என்றார்.

"தம்பி நான் பேசறது எல்லாம் நடைமுறை உண்மைகள்.அதனால இவங்களுக்கு என்னைப் பிடிக்காது.உதாரணமா..எனக்கு இப்ப ஒரு நல்லது நடந்ததுன்னு வைச்சுக்கங்க..என்னோட மகிழ்ச்சியை எப்படிக் கொண்டாடறதுன்னு கேட்டா..இவங்க எல்லாம், அந்த அம்மனுக்கு அபிஷேகம் பண்ணலாம், தங்கக் கவசம் போடலாம்னு சொல்வாங்க.ஆனால் நானோ நாம பார்க்காத ஆண்டவனுக்கு எதாவது செய்யறதைவிட , ஏழை மக்களுக்கு உதவு செஞ்சாப் போதும்னு சொல்லுவேன்,உடனே இவங்க என்னை நாத்திகவாதின்னு ஒதுக்கிடுவாங்க"

"உங்கக்கிட்ட தெரிஞ்சுக்க நிறைய விஷயங்கள் இருக்கும் போல இருக்கே" என்று ப்ருத்வி சொன்னதும், அர்ச்சகர் ..

"இதுதான்டா..இதுதான்..இவரோட தனித்தன்மை.யாரோட பேசினாலும் அவங்க உடனே இவருக்கு ஃபிரண்ட் ஆயிடுவாங்க.அப்படி ஒரு ராசி இவருக்கு" என்றார்.

"தம்பி..இவங்கக் கிட்ட எல்லாம் நான் அதிகம் பேசமாட்டேன்..ஏன் கேட்டா..என்னோட இவங்களாலே வாதம் பண்ணமுடியாதுஅதனால உடனே..என்னோட பலவீனமான பாயிண்டைத் தொடங்கிடுவாங்க.எனக்கு இரண்டு....நான் என்ன சொல்றேன்னு புரியுதா? அது என்னோட தனிப்பட்ட விஷயம்.இதுல தலையிடறுத்துக்கு இவங்க எல்லாம் யாரு? நீங்க கும்பிடற சாமிகளே இரண்டு பொண்டாட்டிக்காரங்களா இருக்காங்களேன்னு கேட்டா,உடனே ஒன்னு இச்சா சக்தி..இன்னொன்னு கிரியா சக்தின்னு ஏதாவது சொல்வாங்க..ஆனா என்னையோ நாத்திகவாதி, ஏடாகூடம்னு எல்லாம் சொல்லிடுவாங்க"

"டேய்..அவன் கிட்ட அதிகம் பேசாதேடா..அப்புறம் அவன் உன்னையும் மாத்திடுவான்..உங்கப்பனுக்கு நான்தான் பதில் சொல்லணும்" என்றார் அர்ச்சகர்.

ராமன், இதையெல்லாம் சட்டை செய்யாது பேசினான்"இப்படித்தான்..இப்படித்தான்நான் புத்திசாலித்தனமா நான் ஏதாவது பேசினா இவங்களுக்குப் பிடிக்காது.உங்க சித்தப்பாக்கிட்ட நான் கேட்கறேன்..நாளைக்கே நீ ஒரு குறத்தியைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, மயில் மேல உட்கார்ந்து வந்து வீட்டுக் கதவைத் தட்டினா..இவர் என்ன பன்ணுவார்? கடவுளே இப்படி செஞ்சு இருக்கார்னு சொல்லி, உன்னை வரவேற்பாரா இல்லை உன்னை வீட்டை விட்டு ஒதுக்கிடுவாங்களா? தம்பி, என்னைப் பொறுத்தவரை ஒன்றே குலம் ,ஒருவனே தேவன்.இயற்கைதான் கடவுள்.இதை ஏன் இவங்க புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றாங்க.ஒரு கல்லை சிலையாக்கி,அதுக்கு பாலையும்,தேனையும், பன்னீரையும், பஞ்சாமிருதத்தையும் அபிஷேகம் பண்றாங்க! மொத்தத்துல நான் உருவ வழிப்பாட்டிற்கு எதிரி.அவ்வளவுதான்" என்றான் ராமன்.

"ராமா...உனக்கு ஒரு விஷயம் சொல்றேன்.பூனைகள் எல்லாம் சேர்ந்து..தங்களுக்குள்ளேயே ஒரு கடவுளை ஏற்படுத்திக்க நினைச்சன.அப்போ, அதுங்களுக்கு தெரிஞ்ச பூனை உருவத்தைத்தானே கடவுளா படைச்சு இருக்க முடியும்.அப்படி மனுஷனால் படைக்கப்பட்டதே உருவ வழிபாடுகள்.தீவிரமா யோசனைப் பண்ணிப் பார்த்தா..நம்ம அறிவுக்கு எதுவும் புலப்படாது.நாத்திகம் பேசறவன் வீட்டுல கடவுளை வணங்கறதும் உண்டு..கடவுளே கதின்னு கிடக்கறவன் வீட்டுல அந்தக் கடவுளை நிந்திக்கறதும் உண்டு" என்ற அர்ச்சகர் மேலும் சொன்னார், "ஒரு ஐந்து முக குத்து விளக்கை ஏத்தி வைச்சா..அந்த சுடர் தரும் தெய்வீகத்தன்மையை...வேற எது தரும் சொல்லு"

உடனே ராமன், "நான் எதைப் பெசினாலும் இப்படி எதையாவது பேசி என் வாயை அடைச்சுடுங்க.ஆனால் உங்களை அறியாமல் பஞ்சபூதங்கள்தான் கடவுள்னு ஒத்துக்கிட்டீங்களே..அது போதும் எனக்கு" என்றான்.

"நான் எங்கே அப்படி சொன்னேன்?'

"சுடர்..தெய்வீகத்த்ன்மையைத் தருதுன்னு சொன்னீங்களே..அந்தச் சுடர்...நெருப்பு..பஞ்சபூதங்கள்ல ஒன்னுதானே"

இவர்கள் பேசுவதையெல்லாம் ரசித்து கேட்டுக் கொண்டிருந்தான் ப்ருத்வி.

No comments:

Post a Comment