Monday, December 16, 2019

17 - சம்பாவில் இத்தனை வகையா?

மகன் வீட்டை விட்டு காணாமல் போன துயரத்திலிருந்து மீள மூக்கனுக்கு சிறிது காலம் தேவைப்பட்டது.

அதை சற்று மறந்து..

"காலுக்கு செருப்புமில்ல
கால் வயிற்றுக்குக்கூட கூழுமில்ல
பாழுக்குழைத்தோமடா..என் தோழா
பசையற்று போனோமடா..

என்று பாடியவாறே(?) டீக்கடையை நோக்கி வந்து கொண்டிருந்த மூக்கனை...மாடசாமியின் மாட்டு வண்டி ஓசை தடுத்து நிறுத்தியது.

தேரடியில் வண்டி நிற்க, வண்டியிலிருந்து இறங்கினான் ஒரு இளைஞன்.பார்க்க பட்டணத்திலிருந்து வருபவன் போல இருந்தான்.கையில் ஒரு சிறு சூட்கேஸ்.

மாடசாமியைப் பார்த்து "யார் இது?" என சைகையால் மூக்கன் வினவ, மாடசாமி, தனக்கும் தெரியாது என உதட்டினைப் பிதுக்கினான்.

மூக்கன் அவனிடமே சென்று "தம்பி யாரு? ஊருக்கு புதுசுங்களா?" என்றான்.

"ஆமாம்..நான் ஒரு பத்திரிகை நிருபர்.இந்த ஊர் கோயில் அர்ச்சகர் என்னோட சித்தப்பா" என்றான்.

"அடடே..அர்ச்சகரோட அண்ணன் மகனுங்களா? வாங்க தம்பி..ஐயா வீடு தெரியுங்களா? அர்ச்சகரும் இப்ப கோயிலுக்கு வரும் நேரம்தான்" என்றான்.

டீக்கடையிலிருந்து நாராயணன் பார்க்க 'என்ன நாராயணன் பார்க்கறே..தம்பி..நம்ம அர்ச்சகரோட தம்பி மகன்" என்ற மூக்கன், "தம்பி முதல் முதல் ஊருக்கு வந்து இருக்கீங்க.நம்ம நாரயணன் கடை டீயைக் குடிச்சுப் பாருங்க" என்றவன், "இரண்டு டீ போடுங்க..மலாய் இல்லாமல் " என்றான் நாராயணனிடம்.

"வக்கனையோட...டீ போடுன்னு சொல்ற..கடைத் தேங்காயை எடுத்து வழிப்புள்ளையாருக்கு உடைக்கறாப்போல...ஏற்கனவே உன் டீ பாக்கியே ஏகத்து இருக்கு" என்றான் நாராயணன்.

"இருக்கட்டுமே .தந்தாப் போச்சு,நான் எங்கே போயிட்டேன்..இல்ல நீதான் எங்கப் போயிட்ட? அந்த ஆண்டவன் புண்ணியத்துல, இந்த முறை மழை பொய்க்கலேன்னா,அறுவடை பொய்க்காது" என்றவன், "தம்பி..என்ன விஷயமா வந்து இருக்கீங்க?" என்றான். 

"நான் எங்க சித்தப்பாவை இதுவரைக்கும் பார்த்ததில்லை.முதல்ல அவரைப் பார்க்கணும்.அப்புறம் இந்த ஊர் விவசாயம் பத்தி, விவசாயிகள் வறுமையைப் பத்தி எல்லாம் செய்தி சேகரித்து எங்க பத்திரிகையில் போடணும்.அதுக்காகத்தான் வந்திருக்கேன்"

"ஓஹோ..அப்படியா? விவசாயத்தைப் பத்தி தெரியணும்னா, இந்த மூக்கனைக் கேளுங்க.இவனுக்கு எல்லாம் அத்துப்படி" என்றான் நாராயணன்.

"அப்படியா?" என்ற இளைஞன், மூக்கனைப் பார்த்து "நீங்க ஒரு விவசாயியா?சொந்தமா நிலமிருக்கா?" என்றான்.

"சொந்தமா நிலமா? இருந்தது தம்பி..எங்க பாட்டன்,முப்பாட்டன் காலத்துல.இப்ப, எல்லாம் போச்சு.இப்ப பண்ணையார் நிலத்துல கூலி வேலை செஞ்சுகிட்டு இருக்கேன்"

"அப்படியா..விவசாயம் பத்தி ஏதேனும் சொல்லுங்களேன்" என்றபடியே, தன் கையிலிருந்த குறிப்பேட்டைத் திறந்து, பேனாவினையும் கையில் எடுத்து கொண்டான்.

இந்த இளைஞனும், நம் கதையில் முக்கியப் பாத்திரம் என்பதால் ,அவனைப் பற்றி..

அவன் பெயர் பிருத்வி.சென்னையிலிருந்து . அவன் வேலை செய்யும் பத்திரிகை, கிராமத்தில் விவசாயிகள் பற்றியும், விவசாயம் பற்றியும் எழுதும் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தது.தன் சித்தப்பா அர்ச்சகராய் இருக்கும் பூங்குளத்தை அவன் தேர்ந்தெடுத்து, அக்கிராமத்துக்கு வந்துள்ளான்.

விவசாயம் பற்றி, அவன் கேட்டதும் மூக்கன் ஆரம்பித்தான்..

"விவசாயம் பத்தி..விவசாயிகள் பத்தி..என்ன சொல்றது தம்பி..இன்னிக்கு இருக்கற நிலைமைல..

தம்பி...நான் படிச்சவன் இல்லை.என்னோட அனுபவத்துல எனக்குத் தெரிஞ்சதச் சொல்றேன்.சோழநாடு சோறுடைத்துன்னு சொல்வாங்க.இப்ப தஞ்சை மாவட்டமே சாப்பாட்டுக்குத் திண்டாடுது,அந்த நாட்கள்ல நெல்லு ரகங்கள் மட்டும் நாலு லட்சம் இருந்ததாம்.தினமும் மனுஷன் ஒருரக அரிசையை சாப்பிட்டா..மொத்த அரிசி வகைகளையும் அவன் ருசி பார்த்து முடிக்க..500 வருஷங்கள் ஆகுமாம்.ஆனா..இன்னிக்கு...?

இருக்கற அரிசி வகைகளை விரல் விட்டு எண்ணிடலாம்.சீரகச் ச்ம்பான்னு ஒரு அரிசி கேள்விப்பட்டு இருப்பீங்களே! அடேங்கப்பா..அந்த ருசி..அதை சாப்பிட்டுப் பாத்தவங்களுக்குத்தான் தெரியும்.அந்த சீரக சம்பா அரிசி எத்தனைவகைத் தெரியுமா?

ஈர்க்குச்சி சம்பா,இலுப்பைச் சம்பா,கருவாலன் சம்பா,கம்பஞ்சம்பா,கனகச் சம்பா,கோட்டைச் சம்பா,மல்லிகைச் சம்பா,மாப்பிள்ளைச் சம்பா,மூங்கில் சம்பா,பொய்கைச் சம்பா,பொட்டிச் சம்பா,வரகச் சம்பா,சின்னட்டிச் சம்பா,சீரகச் சம்பா,சுந்தரப்புழுகுச் ச்ம்பா,சூரியச் சம்பா,சொல்லச் சம்பா,பூலஞ்சம்பா,பூவாளிச் சம்பா,டொப்பிச் சம்பா,பிரியாணிச் சம்பா...இப்படி..ஆனா..இன்னிக்கு? என்னிக்கு இந்த ரசாயன உரங்கள் வர ஆரம்பிச்சதோ,அன்னிலேருந்து நிலத்தோட சத்தும் குறைய ஆரம்பிச்சுடுத்து,பல நெல் ரகங்களும் அழிஞ்சுப் போச்சு"

பிருத்வி வாயை பிளந்து கொண்டு ஆச்சரியத்துடன் மூக்கன் சொன்னவற்றைக் கேட்டுக் கொண்டிருக்க, நாராயணனோ,"இவ்வளவு சம்பாவா? எனக்கு ஊர்ல இருக்கற என் பொண்டாட்டி சம்பாவைத்தான் தெரியும்" என்றான்.

'அடேங்கப்பா..இவ்வளவு தெரிஞ்சு வைச்சு இருக்கீங்க!'என்ற பிருத்வி, "இந்த கிராமத்துக்கு இதுக்கு முன்னால ஏதாவது பத்திரிகைக்காரங்க வந்து இருக்காங்களா?" என்றான் .

"ம்..உங்களை மாதிரி பத்திரிகைக்காரங்க அடிக்கடி வருவாங்க.எந்தக்கட்சி ஆட்சியில இருக்கோ அதுக்கு எதிர்கட்சி ஆளுங்க வருவாங்க.டிவி காரங்க வருவாங்க.ஆனா..எங்க ஊர் கட்டுப்பாட்டால..எந்த அரசியல் கட்சிக்காரனும் இங்க அரசியல் பண்ணமுடியாது" என்றபடியே, நாராயணன்..டீ தம்ளரை பிருத்வியிடம் கொடுத்துவிட்டு, வட்டிலை மூக்கன் இருக்குமிடத்தின் கீழே கொண்டுவந்து வைத்தான்.

"என்ன இது? எனக்கு ஒரு மாதிரி, இவருக்கு ஒரு மாதிரி டீ கொடுக்கறீங்களே!"என்றான் பிருத்வி வட்டிலைப் பார்த்தபடியே"

அது வந்து தம்பி..இங்க இரட்டை டம்ளர் முறைதான்" என்றான்.

"ஏன்? இவர் தலித்ங்கறதால ஆண்டவன் ஒத்தக் கண்ணு இல்ல ஒத்தக் கையோட படைச்சு இருக்கானா..இல்லை நாம எல்லாம் தலித் இல்லைங்கறதால மூணு கண்..மூணு கையோட படைச்சு இருக்கானா? எல்லாரும் வாயாலதானே சாப்பிடறோம்" என்றான் சற்று கோபத்துடன்.

"தம்பி..இது எல்லாம் பெரிய இடத்து சமாச்சாரம்.இந்த விஷயத்துல உங்க சித்தப்பா அர்ச்சகராலேயே ஒன்னும் செய்ய முடியலை.நீ சின்னப் பையன்..இதுல எல்லாம் தலையிட்டு பேரைக் கெடுத்துக்கிட்டு ஊர் போய் சேராதே!"

"எனக்கு இந்த கிராமத்துல என்ன வேலையிருக்குனு நெனச்சென்..நிறையவே வேலை இருக்கும் போல இருக்கு"

இந்நிலையில் மூக்கன் குறுக்கிட்டு, "அதைவிடு தம்பி..எங்களுக்கு இதெல்லாம் பழகிப் போச்சு.உன்னைப் பார்த்தா என் மகன் ஞாபகம் வருது தம்பி" என்றான்.

"உங்களுக்கு ஒரு பையன் இருக்காரா? அவர் எங்கே இருக்கார்?என்ன பண்றார்?"

"அதெல்லாம் பெரிய கதை தம்பி.என் பையன் நல்லா படிச்சான்.பட்டணத்துல போய் மேல படிடான்னேன்.முடியாதுன்னுட்டான்,'வியர்வையின் விளைச்சலில் பசியாறறதுதான் சுய மரியாதை.உனக்கு வேண்டிய ரொட்டித் துண்டை உன் வியர்வையில் தேடு.உழைப்பு இன்றி உண்ணும் உணவு திருட்டுக்கு சமம்" இப்படி ஏதேதோ சொல்வான்.

வயக்காட்டில மும்முட்டியோட இறங்கி வேர்வை சிந்தி பாடுபட்டாத்தான் குடித்த கஞ்சி செரிக்கும்னு சொல்வான்."

"நீங்க சொல்றதைப் பார்த்தா..எனக்கு உங்கப் பையனைப் பார்க்கணும் போலத் தோணுது"

'என் மகனைப் பார்க்க இப்ப என்னாலேயே முடியாது தம்பி.எங்கே போனான்? என்ன ஆனான்"ன்னு தெரியல.ஒருநாள் அவன் வயல்ல வேலை முடிஞ்சு..வரப்புல நடந்து வந்துக் கிட்டிருந்தான்"ஒரு தாய் மக்கள் நாமென்போம்னு" எம் ஜி ஆர்., பாட்டைப்பாடிக்கிட்டே..அப்போ அவனுக்கு எதிர..தன்னை உயர்ந்த சாதின்னு நினைச்சுக்கிட்டிருந்த ஒருத்தர் வந்தார்.அவருக்கு வழிவிட இந்தப்பய வயல்ல ஒருகாலும், வரப்புல ஒரு காலும் வைச்சுக் காத்திருந்தான் அவர் போக.ஆனா..அந்தப் பெரிய மனுஷன் "பளார்"னு கன்னத்துல ஒரு அறைவிட்டு,"கீழ்சாதி மவனே! உனக்கு அவ்வளவு கொழுப்பா"ன்னாராம்.ஏன் தம்பி,எங்களை தீண்டக்கூடாத சாதின்னு சொல்ற அந்த மனுஷன் என் பையனை கன்னத்துல அறைஞ்சாரே..அப்ப அவர் கை என் பையன் கன்னத்தைத் தீண்டிச்சே..அது பரவாயில்லையா?

அப்புறம் தம்பி, அவன் சின்ன வயசுல பள்ளிக்கூடம் போயிட்டு இருந்தப்ப அவன் கிளாசு வாத்தியார் 'இந்த கிளாசுல தீண்டத்தகாத சாதி யார்..யார்?னு கேட்டாராம்.இந்தப் பயப்புள்ள எல்லார் முன்னாலேயும் கூனிக் குறுகி எழுந்திருச்சு நின்னானாம்,இவன் என்ன சாதின்னு தெரிஞ்சதும்..இவனோட நண்பர்கள் எல்லாம் இவனோட பேசறதையே விட்டுட்டாங்களாம்.

அந்த வாத்திதான் ஸ்கூலு பசங்களுக்கு"சாதிகள் இல்லையடி பாப்பா' "காக்கைக் குருவியும் நம்ம சாதி"ன்னு  எல்லாம் சொல்லிக் கொடுத்தவராம்.வேடிக்கையா இல்லை தம்பி?"என்றான் மூக்கன்.

"இந்த உலகத்துல வாழும்..யார் யாருக்கும் நண்பனுமில்லை..யார் யாருக்கும் எதிரியுமில்லை.சூழ்நிலைதான் எல்லாவற்றிற்கும் காரணம்" என்றான் பிருத்வி.

"என்ன சூழ்நிலைத் தம்பி..எல்லாமே நாம் ஏற்படுத்திக்கிட்டதுதானே!" என்று மூக்கன் சொல்லிக் கொண்டிருந்த போதே, நாரயணன் வந்து பிருத்வி குடித்த டீ தம்ளரை எடுக்க வர..பிருத்வி குனிந்து மூக்கன் குடித்த வட்டிலையும் எடுத்தான்..உடனே மூக்கன் "தம்பி அதைத் தொடாதீங்க! நான் தான் எடுத்துக் கழுவித் தரணும்" என்றான்.

"அதை இந்த ஊர்ல இருக்கறவங்களுக்கு வேணும்னா சொல்லுங்க.என்னைப் பொறுத்தவரைக்கும் நீங்களும், என் சித்தப்பாவும் ஒன்னுதான்" என்றான்.

பிருத்வி "உங்க மகனைப் பத்தி மெலும் சொல்லுங்க" என்றான்.

மூக்கன், மயில்வாகனனின் உண்ணாவிரதம் பற்றியும்,அவன் மகன் பின் காணாமல் போனது எல்லாம் சொல்லி முடித்தான்.

"என்ன ..மூக்கா ..உன் முழுக்கதையையும் சொல்லிட்டியா"" என்றான் நாராயணன்.

"வீட்டுல வளர்க்கற நாயைக்கூட தொட்டு, கொஞ்கி விளையாடற மனுஷனுங்க ,இன்னொரு மனுஷனைத் தொடக்கூடாதாம்.என்ன ஒரு வேடிக்கை" என்றான் பிருத்வி வருத்ததுடன்.

"அந்த நாயைக்கூட நல்ல உயர்ந்த ஜாதி நாயா பார்த்துத்தானே  தம்பி வாங்கறாங்க" என்ற மூக்கன், "சர்வஜீவ சமத்துவம்..சர்வ ஜீவ ஐக்கியம்" என்றான்..

மூக்கன் சொன்னதைப் பார்த்து வியந்த பிருத்வி., "அப்படின்னா" என்றான்.

"எல்லா உயிர்களும் நமக்குள்ள நிகர்..எல்லா உயிர்களும் ஒன்னு.இதுதானே இந்து தர்மத்தின் கொள்கை" என்றபடியே மூக்கன் ,பிருத்வியைப் பார்க்க, பிருத்வி மூக்கனையே வியப்புடன் பார்த்தான்."என்ன தம்பி பார்க்கற..எல்லாம் உங்க சித்தப்பா சொல்லிக் கொடுத்ததுதான்.பூவோடு சேர்ந்து இந்த நாரும் கொஞ்சம் மணக்கிறது" என்றான்.





No comments:

Post a Comment