Monday, December 2, 2019

8 - சிறுபான்மையினர்

அந்தி சாயும் நேரம்..

டீக்கடையில் போட்டிருந்த மர பெஞ்சில் அமர்ந்திருந்தான் ராமன்.கீழே தரையில் குந்தியிட்டு அமர்ந்திருந்தான் மூக்கன்.

"என்ன ராமா,,பஞ்சாயத்து முடிஞ்சதுமே இங்கு வருவேன்னு எதிர்பார்த்தேன்.." என்றான் நாராயணன்.

'பஞ்சாயத்து...பஞ்சாயத்தாகவா இருந்தது.எதுக்கு பஞ்சாயத்துக் கூடியதோ..அது நடந்ததா? அந்த தாமோதரன், அப்படி..இப்படி..அரசியலை நம்ம கிராமத்துக்கும் கொண்டு வந்துட்டான் இல்ல"

"அதைவிடு அண்ணே! இரண்டு நாளா உன்ன கிராமத்துல காணும்..எங்கே போயிருந்த..காலைலதான் வந்தியா?"

"ஆமாம்..மூக்கா..வெளியூர் போயிருந்தேன்.நான் இல்லாதப்போ ஊர்ல வேற ஏதாவது விசேஷம் உண்டா?"

"அண்ணே! நாட்டு ந்டப்பு எல்லாம் நீ தானே எங்க எல்லாருக்கும் சொல்லுவ..உனக்கு..நம்ம கிராமமே நடமாடும் செய்தித்தாள்னுதானே பெயர் வைச்சு இருக்கு.செய்திகளை இங்கே முந்தித் தர்றது நீ தானே!"

"என்ன பன்னச் சொல்ற. சுதந்திரம் வந்து எவ்வளவோ அஞ்சாண்டு திட்டங்கள்னு போட்டுட்டாங்க..அப்ப இருந்து இப்ப வரைக்கும் என்ன சொல்றாங்க.எல்லா கிராமங்களுக்கும் எங்க ஆட்சியில மின்சார வசதின்னு.ஐயா,நமக்கு மின் வசதிக் கூட வேண்டாம்..குறஞ்சது    அடுத்த டவுனுக்குப் போக ஒரு பஸ் வசதியாவது செஞ்சுத்தரலாம் இல்ல.அதைக் கூட காதுல போட்டுக்க எந்த தலையும் இல்ல.இப்பத்தான் ஒரு அரசியல்வாதி தலை உள்ளே வரப்பாக்குது.பார்ப்போம்..இனிமே என்ன நடக்கப்போகுதுன்னு"

"ஊர் விசயத்தை விடுப்பா..உன் வீட்ல நடந்த விசயத்தைச் சொல்லு.உன் வீடு இரண்டு நாளா ரணகளப்படுதாமே" என்றான் நாராயணன்.

"இன்னொருத்தன் வீட்டு விசயத்தைத் தெரிஞ்சுக்க எவ்வளவு ஆசைப்பாரு.சொல்றேன்.முதல்ல ஸ்ட்ராங்கா மலாய் இல்லாம ஒரு டீ போடு..மூக்கா..டீ சாப்பிடறியா"

மூக்கனும் தலையை ஆட்ட.."நாராயணா..மூக்கனுக்கும் ஒரு டீயைப் போடு" என்றான் ராமன்.

"பாலை அடுப்புல வைச்சு இருக்கேன்..இன்னும் காயலை"

"ஆமாம்..என் வீட்டு விஷயத்தைக் கேட்டு முடிக்கிறவரை உனக்கு பால் காயாதே...சரி..சொல்றேன் கேட்டுக்க..நம்ம விட்டு ஆனந்தவள்ளிக்கிட்ட கோமளம் வந்தது தப்பாப்போச்சு." ..மூக்கன் ஏதும் புரியாது பார்க்க, "என்ன புரியலையா? சரி, புரியற மாதிரியே சொல்றேன்..ஆனா, நான் சொல்ற விஷயத்தை இங்கயே மறந்துடணும்.."

மூக்கன் தலையை ஆட்ட, பாலைக் கிளறியபடியே நாராயணனும் கேட்கத் தயாரானான்.

"நமக்குக் கோமளம்னு ஒரு தொடுப்பு இருக்கு..தெரியும் இல்ல"

"நமக்கு இல்லண்ணே..உனக்கு.."

"ஆமாம்..எனக்குத்தான்..அது என்ன பண்ணிச்சு..இரண்டு நாள் முன்னாலே வந்திடுச்சு.அதனால அந்த விஷயம் ஆனந்தவள்ளிக்குத் தெரிஞ்சுப் போச்சு.அவ வாயிலிருந்துத் தப்பிக்க ஐயா இரண்டு நாளா ஊரைவிட்டு ஜூட்"

உடன் நாரயணன் "ராமா, உனக்கு புத்தி ஏன் இப்படிப் போச்சு" என்றான்.

"உனக்கு என்ன சொல்லுவ..பொண்டாட்டி, புள்ளகளைப் பிரிஞ்சு ஊர்ல இருந்து வந்து டீக்கடை வைச்சு இருக்க.நீ ஊருக்குப் போய் அவங்களைப் பாத்து எவ்வளவு நாளாச்சு.ஆனாலும்.உன்னால அப்படி இருக்க முடியுது..ஆனா..என்னால முடியலையே.ஏன், என் புத்தி இப்படிப் போச்சுன்னு கேக்கிறியே.. எல்லாம் பணம்தான்.கோமளம் ஒண்டிக்கட்டை.எக்கச்சக்கமா சொத்து வைச்சு இருக்கு.அவ சொத்துமேல எனக்கு ஒரு கண்ணு..அதனாலதான் அவளை வளைச்சு போட்டுட்டேன்"

"ம்..அந்த ராமன் ஏக பத்தினி விரதன்.இந்த ராமன் ஏகப்பட்ட பத்தினிவிரதன்" என்ற நாராயணன், டீ போடுவதில் தன் கவனத்தைச் செலுத்தினான்..பின், டீயை ஒரு தம்ளரில் ஊற்றி ராமனிடம் கொடுத்துவிட்டு..ஒரு வட்டிலில் டீயை ஊற்றி மூக்கனிடம் கொண்டு வந்து வைத்தான்.

"என்ன சொன்ன..இந்த ராமன் ஏகப்பட்ட பத்தினி விரதன்னா? பேருக்கு தகுந்த மாதிரி யார் நடந்துக்கிறாங்க.உன்னோட டீக்கடைக்குக் கூடத்தான் "காந்தி  டீ ஸ்டால்"னு பேர் வைச்சிருக்க..காந்தியோட கொள்கை என்ன...தீண்டாமை ஒழியணும்..ஆனா நீ என்ன பண்ற மூக்கன் மாதிரி ஆளுங்களுக்கு வட்டிலில் டீயைத் தர.."

"என்ன செய்யறது...ஊர்க்கட்டுப்பாடுன்னு ஒன்னு இருக்கே..அதுக்கு பயப்பட வேண்டியிருக்கே"

"நீ ஊர்க்கட்டுப்பாட்டுக்கு பயப்படறே! நான் என் மனசு சொல்றதுக்குக் கட்டுப்படறேன்"

இடையில் புகுந்த மூக்கன், "நான் ஒன்னு சொல்லட்டுமா? அந்த ஆண்டவன் படைச்ச சாதி இரண்டுதான்.ஒன்னு ஆண் சாதி, இன்னொன்னு பெண் சாதி.ஆனா..நம்ம மனுஷங்க என்னப் பண்ணிட்டாங்க..அவங்க..அவங்க ..வசதிக்கேத்தாப்போல, சமூக அந்தஸ்துக்காக பல சாதிகளை உண்டாக்கிக்கிட்டாங்க.உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதின்னு"

"மூக்கா..உன்னால இவ்வளவு பேசமுடியுதா? ஆமா...இது போல எல்லாம் பேச உனக்கு யார் கத்துக் கொடுத்தாங்க?"

"நம்ம அர்ச்சகர்தான்.அவர் என் கிட்ட என்ன சொன்னார் தெரியுமா? மூக்கா...நீ எந்த விதத்திலும் யாருக்கும் குறைஞ்சவன் இல்ல.சாதி என்ன சாதி..மனுஷனா இருந்தா மனசுல நாணயம் இருக்கணும்.அன்பு, பாசம்,பக்தி இருக்கணும்.அப்படியிருக்கிறவங்க எல்லாமே உயர்ந்த சாதின்னார்"

"ஓஹோ! இப்படியெல்லாம் சொல்லி இந்த அர்ச்சகர் ஊரைக் கெடுக்கப் பார்க்கிறாரா?" என்று ராமன் சொல்லிக் கொண்டிருந்த போதே...அர்ச்சகர் அந்தப் பக்கம் வந்தார்.வந்தவர் ராமனைப் பார்த்து..

"என்ன ராமா..எப்படி இருக்க..இரன்டு நாளா ஆளைக் காணும்" என்றார்.

"மனசு சரியில்ல..அதான் ஊருக்கு வெளியே எல்லையிலே உட்கார்ந்துக்கிட்டு இருக்காரே அய்யனார் கருப்பண்ணசாமி..அவருக்கு பக்கத்திலே இரண்டுநாள் உட்கார்ந்துட்டேன்.ஆனா, அதுக்குள்ள உங்களைமாதிரி ஆட்கள், என்னையும் ஒரு சாமியார்னு நினைச்சு தேங்காய்,பழம், பூ எல்லாம் எடுத்துக்கிணு தரிசனம் செய்ய வந்துட்டாங்க"

"அதானே பார்த்தேன்.எதைப்பேசினாலும் கடைசியில உன்னோட நாத்திக வாதத்தைக் கொண்டு வந்து முடிச்சிடுவியே!  சரி..சரி..உன் எண்ணத்த ,நடவடிக்கையை தடுக்க நான் யார்..ஆனா பாரு..ஒரு விஷயம் என்னால சொல்லாம இருக்க முடியலே! உன்னைப் பத்தி, அரசல், புரசலா சில விஷயத்தைக் கேள்விப்பட்டேன்.உனக்கு ஒன்னு சொல்ல ஆசைப்படறேன்..நமக்கு எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும்..சரி..அதை மறக்க வீட்டை விட்டா வேற இடமில்லை.எந்தப் பிரச்னையும் இல்லாத வீடுதான் மனுஷனுக்கு பலம்.அதான் அவனோட வளர்ச்சிக்கு அடிப்படை"

"போச்சுடா..அர்ச்சகர் பிரசங்கம் செய்ய ஆரம்பிச்சுட்டார்.நாம் இனிமே இங்கே இருக்க முடியாது.ஓடிட வேண்டியதுதான்.நாராயணா...உனக்கு  ஒரு விஷயம் சொல்லட்டா.."முன்னாளில் ஐயரெல்லாம் வேதம் ஓதுவார்..மூன்று மழை பெய்யுமடா மாதம்.இந்நாளிலே பொய்ம்மைப் பார்ப்பார்..இவர் ஏது செய்தும் காசுபெறப் பார்ப்பார்" இப்ப புரியுதா?நாட்டுல ஏன் மழை பெய்யறதில்லைன்னு"

ராமன் சொன்னதைக் கேட்ட அர்ச்சகர்,தன் காதுகளைப் பொத்திக்கொண்டு"உன் கிட்ட பேச வந்தேன் பாரு..என் புத்தியை ஜோட்டால அடிக்கணும்" என்றவாறே அந்த இடத்தை விட்டு அகன்றார்..

சென்றுக் கொண்டிருந்தவரை நோக்கி ராமன், "ஒரு ஜோட்டால அடிச்சுக்கிட்டா இன்னொரு ஜோட்டை என்னை செய்வேள்?" என்றான் கிண்டலாக.

ராமன், அர்ச்சகரைக் கிண்டல் செய்வதைப் பார்த்த மூக்கன், சமுதாயத்தில் தன் இனம் மட்டுமே தவிக்கவில்லை..உயர் இனம் என சொல்லித் திரியும் சிலரால்,அவர்கள் மொத்த இனமும் அவமானப்படுகிறதே என வருந்தி, "அந்த ஜோட்டை உங்கக்கிட்ட தருவார் அடிச்சுக்க" என்றான்.

"மூக்கா! நீ ஏன் பேச மாட்டே! என் காசுல டீ சாப்பிட்ட இல்ல..அதான் இப்படி பேசறே..அர்ச்சகரை சொன்னா உனக்கு ஏன் கோபம் வருது?"

இதற்கு  நாராயணன் "ராமா..இந்த பிராமண துவேசத்தை என்னிக்குத்தான் விடப்போறேன்னு தெரியலை.உன்னைச் சொல்லித் தப்பில்லை.நாட்டில அரசியல்வாதிங்க எல்லாம்..பிராமண சமுதாயத்தைப் பத்தி இப்படி ஒரு தப்பான எண்னத்தை மக்கள் மனசுல விதைச்சுட்டாங்க.நீ அன்னிக்கு இங்க வைச்சுட்டுப் போன பேப்பரை படிச்சேன்.அதுல போட்டு இருந்தது..இந்திய ஜனத்தொகையில நாலு சதவிகிதம் தான் பிராமணர்களாம்.அவங்களும் சிறுபான்மையினர்தான்.அவங்களைக் கண்டு உங்களுக்கு என்ன பயம்?" என்றான்

"ஓஹோ..நாராயணா..உன்னையும் அந்த அர்ச்சகர் வளைச்சுப் போட்டுட்டாரா..நான் தீர்மானம் பண்ணிட்டேன்.இனிமே பேப்பர்ல வர செய்திகளையெல்லாம் சொல்லி..உங்க இரண்டு பேரையும் முன்னேற விடக்கூடாதுன்னு" என்று சொன்னபடியே டீக்கடையை விட்டு நடந்தான் ராமன்.



No comments:

Post a Comment