Wednesday, December 4, 2019

9 - மீண்டும் வந்தான் மயில்வாகனன்

மயில்வாகனன் , தாமோதரனின் வீட்டை விட்டுக் கிளம்பியதும், அவருடனேயே தாமோதரன் வெளியே வந்தான்.

வெளியே, சிறுவர்கள் சிலர் மயில்வாகனனின் காரைச் சுற்றி வந்து சந்தோஷம் மிகுதியால் கூக்குரலிட்டுக் கொண்டிருந்தனர்.

பக்கத்து வீடுகளிலிருந்து வீட்டு வாசலில் ஓடிக்கொண்டிருந்த கழிவு நீர் தன் வேட்டியில் படாதவாறு சற்று தூக்கிப் பிடித்துக்கொண்டு, ஒரு தாண்டு தாண்டினான் மயில்வாகனன்.சற்று தள்ளி அந்த சாக்கடை நீரில் சில பன்றிகள் நோண்டி, எதையோத் தின்றுக் கொண்டிருந்தன.

அவற்றையெல்லாம் பார்த்து முகத்தை சுளித்தபடியே, "பார்த்தியா..தாமோதரா..உங்க ஏரியா எவ்வளவு கலீஜா இருக்குன்னு.இதை முதல்ல சீர் படுத்தி, உங்க மக்கள் கிட்ட நல்ல பெயர் எடு.அது, உனக்கு மட்டுமில்ல, தேர்தல் வர நேரத்துல நம்ம கட்சிக்கும் உதவும்" என்றான் மயில்வாகனன்.

தாமோதரனுக்கு இதைக் கேட்டதும், தன் மீதும்..தன் சுற்றத்தின் மீதும் கோபம் கோபமாக வந்தது.தலைவன், தன் வீட்டில் உணவு அருந்தாமல் செல்வதற்கு இதுவும் ஒரு காரணமாய் இருக்கக் கூடும் என எண்ணினான்.

அதற்குள், "நான் கிளம்பறேன்" என்றவன் பார்வை, தாமோதரனின் வீட்டினுள் சென்றது.

வெளியே என்ன நடக்கிறது என்ற ஆர்வத்தில் வெளியே வந்த கற்பகத்தின் மீது மயில்வாகனின் பார்வை விழுந்தது.அதைக் கண்ட  கற்பகம் தன் உடலின் மீது ஆயிரம் கம்பளிப்புழுக்கள் நெளிவதைப் போல உணர்ந்தாள்.

மயில்வாகனன் ,தன் பார்வையை அகற்றாமல், "தாமோதரா, எனக்கு நீ ஒரு உதவி செய்யணுமே? என்றான்.

"என்ன செய்யணும்னு சொல்லு தலைவா...என் உசுரக்கூட உனக்குத்தரத் தயார்"

"தாமோதரா! உன் தலைவன் தன் தொண்டன் உயிரைக் கேட்பான்னு நினைக்கறே! நீயும், உன்னோட மனைவியும்..அடுத்த கிராமத்துல இருக்கற நம்ம கம்பெனி கெஸ்ட் ஹவுஸை கொஞ்சம் சுத்தம் செஞ்சு வைக்கணும்.நம்ம முதலமைச்சர் நாளைக்கு அங்கே வரார்" என்றான்.

தாமோதரன் சற்று தயங்க, "என்ன..ஏன் தயங்கறே!உன்னால முடியலேன்னா சொல்லு..நன் வேற ஒருத்தரை ஏற்பாடு பண்ணிக்கிறேன்"

"இல்லை தலைவா...தயங்கலே! நீங்க கிளம்புங்க.நானும், செங்கமலமும் போய்..விருந்தாளி மாளிகையை சுத்தப்படுத்திடறோம்"

"உடனே கிளம்பு தாமோதரா" என்ற மயில்வாகனன் தன் காரில் ஏறினார்.

உள்ளே நுழைந்த தாமோதரன், தன் மனைவியிடம் விவரத்தைச் சொல்லி, உடனே கிளம்பு என்றான்.

"என்ன அவ்வளவு அவசரம்? நீ இப்ப சாப்பிட வா"

"இல்ல செங்கமலம்..நாம போயிட்டு வந்து சாப்பிடலாம்.எதையுமே கேட்காத தலைவரு ஒரு வேலையை என்னை நம்பி ஒப்படைச்சு இருக்கார்.அதை உடனே செய்யணும்" என்றான்.

செங்கமலம், கற்பகத்தைப் பார்த்து, "நானும், அப்பாவும் போயிட்டு வரோம்..நீ ஜாக்கிரதையாய் இரும்மா" என்றாள்.

இருவரும் கிளம்பி வெளியே வந்த போது, மாடசாமி ஒரு சவாரி முடிந்து அப்பக்கம் வர, அவனிடம் விஷயத்தைக் கூறி வண்டியில் ஏறி அடுத்த ஊருக்குச் சென்றனர்.

அவர்கள் கிளம்பிச் சென்ற சிறிது நேரத்தில் , மயில்வாகனன் கார் மீண்டும் பூங்குளத்துக்குள் நுழைந்தது.தாமோதரன் வீட்டு வாசலில் நின்றது.இறங்கி உள்ளே நுழைந்த மயில்வாகனன், "கற்பகம்..கற்பகம்" எனக் குரல் கொடுத்தான்.மயில்வாகனனைப் பார்த்ததும் சற்று அதிர்ந்தாள் கற்பகம்.

'பயப்படாதே! நான் கிளம்பிப் போனேனா..வழியில கார் மக்கர் பண்ணிடுச்சு.அதை சரி செய்து கிளம்பறதுக்குள்ள நேரமாகிப் போச்சு.தஞ்சாவூர் இனிமே போயும் பிரயோசனமில்லை.அதான் திரும்பிட்டேன்" என்றான்.பின்,
"தாமோதரன் பாவம், எனக்காக கறிக் குழம்பும், மீன் வறுவலும் செய்யச் சொல்லியிருக்கான்.அதை சாப்பிடாட்டி பாவம் நீயும் வருத்தப்படுவே..அதான்.."

"அப்பாவும், அம்மாவும் வீட்ல இல்லையே" என்றாள் கற்பகம்.

"அதனால் என்ன..நீ இருக்கியே" என்றான் அசடுவழிய....பின், "கற்பகம் பொட்டப் புள்ளைக்கு படிப்பு எதுக்குன்னு கேட்கற பாமர ஜனங்கள் இருக்கற இந்த கிராமத்துல..நீ டாக்டருக்கு படிக்கறே! படிப்பு முடிஞ்சு ஏழை ஜனங்களுக்கு சேவை செய்யணும்னு நினைக்கற..உன்னை எப்படி பாராட்டறதுன்னேத் தெரியலை" என்றான்

அந்த நேரம் ..ஏதோ பாடலை முணுமுனூத்துக் கொண்டே மூக்கன் வீட்டினுள் நுழைந்தான்.தாமோதரனும், செங்கமலமும் , மாடசாமி வண்டில் ஏறி வெளியே சென்றதை மூக்கன் பார்த்திருந்தான்.அவங்க வீட்டில் இல்லாதப்போ மயில்வாகனன் கார் ஏன் வந்ததுன்னு அவனுக்கு சந்தேகம் ஏற்பட அந்த விட்டிற்குள் நுழைந்திருந்தான் அவன்.

கற்பகம் நிம்மதி பெருமுச்சு விட்டாள்.பின், "வாங்க பெரியப்பா..அப்பாவும், அம்மாவும் வெளியே போயிருக்காங்க.அப்பா இவர் கட்சியைச் சேர்ந்தவர்" என்றாள் மயில்வாகனனைக் காட்டி.

"அப்படியா" என ஏதும் அறியாதவன் போலக் கேட்ட மூக்கன், "வணக்கம்ங்க.ஏம்மா, ஐயாவுக்கு சாப்பிட ஏதாவது குடுத்தியா" என்றான்.

"இல்ல பெரியப்பா..அவர் கிளம்பிட்டார்.தஞ்சாவூர் போறாராம்" என்றவள், மயில்வாகனனிடம் "சரி..நீங்க கிளம்புங்க..நான் அப்பா வந்ததும் சொல்லிடறேன்"என மயில்வாகனனை நோக்கி கை கூப்பீனாள்.

மூக்கனை. மனதிற்குள் சபித்தபடியே, மயில்வாகனன் கிளம்பினான்.

அவன் சென்றதும், "பெரியப்பா...நல்ல நேரத்துல வந்து   அந்த ஆள்கிட்ட இருந்து என்னை காப்பாத்தினீங்க" என்றாள்.

பின்னாளில் மயில்வாகனனால் ஏற்படப்போகும் விபரீதம் தெரியாமல்.

No comments:

Post a Comment