Thursday, December 19, 2019

20 - ஒருநாள் மனைவி

கற்பகம் வீட்டிற்குள் நுழைந்த போது தாமோதரனும், செங்கமலமும் சந்தைக்குக் கிளம்பிக் கொண்டிருந்தனர்.

மகளைப் பார்த்ததும் செங்கமலம் வாய் நிறைந்த சிரிப்புடன், "வா..வா" என வரவேற்றாள்

"என்னம்மா காலேஜ் லீவா?" என்றான் தாமோதரன்.

"ஆமாம்ப்பா...இன்னும் ஒரு வாரம் இங்கேதான்.ஆமாம்.. எங்கே வெளியே கிளம்பிட்டு இருந்தீங்களா?" என்றாள்.

"ஆமாம்மா..சந்தைக்குக் கிளம்பிக் கிட்டு இருந்தோம்"

"சரி நீங்க கிளம்புங்க..எனக்கும் ரொம்ப டயர்டா இருக்கு.. ரெஸ்ட் எடுக்கறேன்..ஆமாம்..சாப்பிட ஏதாவது இருக்கா?" என்றாள்.

"உள்ளே கேப்பைக் களி இருக்கு கீரை கடைஞ்சு வைச்சு இருக்கேன்..சாப்பிடு" என்றாள் செங்கமலம்.

தாமோதரனும், செங்கமலமும் வெளியே சென்ற சிறிது நேரத்தில், கற்பகம் வந்த செய்தியை தன் ஆட்கள் மூலம் அறிந்த மயில்வாகனன், காரில் தாமோதரன் வீட்டிற்குக் கிளம்பினான்.

தன் விட்டிலிருந்து பண்ணையார் நிலத்தில் களை எடுக்கக் கிளம்பி வந்து கொண்டிருந்த மூக்கன், மயில்வாகனனின் கார், தாமோதரன் வீட்டு முன் வந்து நிற்பதைப் பார்த்தான்.

காரிலிருந்து இறங்கிய மயில்வாகனனை வம்புக்கு இழுக்க எண்ணி,இதற்குமுன் ராமன் தன்னிடம் சொல்லியிருந்த ஒரு நிகழ்வை , மயில்வாகனை வம்புக்கிழுக்க உபயோகித்து கொண்டான்.

"ஐயா கும்புடறேங்க"

மயில்வாகனன், தலையை அசைத்து அதை ஏற்றுக்கொண்டான்.

"தாமோதரனைப் பார்க்க வந்தீங்களா?"

மயில்வகனன் தலையை ஆட்டினான். 

"அவர் இல்லீங்களே! புருஷனும் ,பொண்ஜாதியுமா இப்பத்தான் வெளியே கிளம்பிப் போனாங்க"

"எங்க போயிருக்கான்..."என்ற மயில்வாகனன், முக்கனையும் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்த எண்ணி, "நீ போகலியா?" என்றார்.

"இல்லீங்க..வீட்டு மாடுங்களுக்கு சாப்பாடு போடற வேலையை என் கிட்ட ஒப்படைச்சுட்டுப் போயிருக்கார் தாமோதரன்"

"அப்படியா?" என்றவர்,தனக்கும் மாடுகள் பற்றி ஏதேனும் விவரம் தெரிஞ்சால் அதை வைத்து வீட்டினுள் இருக்கும் கற்பகத்திடம் பேச்சினை ஆரம்பிக்கலாம் என எண்ணி,அதைப் பற்றி மூக்கனிடம் கேட்க எண்ணினான்.

"ஆமாம்..மூக்கா! மாடுகளுக்கு என்ன சாப்பாடு போடுவே"

"கருப்பு மாட்டுக்கா  இல்லை வெள்ளை மாட்டுக்கா"

"ம்..வெள்ளை மாட்டுக்குத்தான்"

"வைக்கோலுங்க"

"அப்ப..கருப்ப மாட்டுக்கு.."

"அதுக்கும் வைக்கோல்தானுங்க"

"ஆமாம்..அதை எங்கே கட்டிப் போடுவே"

"எதை..கருப்பு மாட்டையா இல்லை வெள்ளை மாட்டையா"

"வெள்ளை மாட்டைத்தான்"

"வீட்டுக்குப் பின்னால இருக்கற தொழுவத்துலதானுங்க"

"அப்ப கருப்பு மாட்டை"

"அதையும் வெளியே இருக்கற தொழுவத்துலதான்"

"எங்கே குளிப்பாட்டுவ"

"எதை..கருப்பு மாட்டையா? வெள்ளை மாட்டையா"

வெள்ளை மாட்டைத்தான்"

"பக்கத்துல இருக்கற குட்டையிலதான்"

 "அதையும் பக்கத்துல இருக்கற குட்டையிலதான்"

அப்போதுதான், மூக்கன் தன்னைக்  கிண்டல் செய்கிறான் என்பதை உணர்ந்த மயில்வாகனன், சற்றே கோபத்துடன், "லூசாடா  நீ..கருப்புமாடு, வெள்ளை மாடு இரண்டுக்கும் ஒன்னாதான் செய்யற..அப்புறம்..வார்த்தைக்கு வார்த்தை கருப்பா, வெள்ளையான்னு ஏன் கேட்கற"

"ஐயா..கோபப்படாதீங்க..நான் ஏன் அப்படிக் கேட்கறேன்னா,அந்த வெள்ளைமாடு தாமோதரனுடையது ..அதனாலத்தான்"

"அப்படியா..சரி..சரி..அப்போ அந்த கருப்பு மாடு"

"அதுவும் தாமோதரனுடையதுதான்"

மயில்வாகனன் ,மூக்கனை நோக்கிப் பாய, மூக்கன் அந்த இடத்தை விட்டு ஒரே ஓட்டமாக ஓடினான்.அவனை சற்று துரத்தியதில், கட்டிய வேட்டி அவிழ..சற்று நிதானித்து அவிழ்ந்த வேட்டியைக் கட்டிக் கொண்டு "கற்பகம்..கற்பகம்.." எனக் குரல் கொடுத்தபடியே வீட்டின் உள்ளே நுழைந்தான் மயில்வாகனன்.

"அங்கே என்ன சத்தம்?" என்றபடியே கொல்லையிலிருந்து வந்த கற்பகம், மயில்வாகனன் உள்ளே நுழைந்ததைப் பார்த்ததும் "அப்பா வீட்ல இல்லையே" என்றாள்.

"அப்பா இல்லேன்னா என்ன..நீ இருக்கியே..நீ என்னோட பேசமாட்டியா?

"அதெல்லாம் இல்ல..என்ன விஷயம்னு சொல்லுங்க.எனக்கு நிறைய வேலை இருக்கு"

மயில்வாகனன் சற்றே அசடு வழிய,"கற்பகம் உங்கூட நிறைய பேசணும்னு நினைக்கிறேன்.ஆனா உன்னைப் பார்த்ததும், உன் அழகிலே நான் பேச நினைக்கறது எல்லாம் மறந்துடுது.அப்படி என்ன மந்திரம் போட்டு வைச்சு இருக்கேன்னு தெரியல" என்றான்.

"நீங்க என்ன சொல்ல வர்றீங்கன்னு புரியல"

"நான் அரசியல்வாதி.நாங்க பேசறது எல்லாம் புரியறது மாதிரியும் இருக்கும்..புரியாதது மாதிரியும் இருக்கும்.கேட்கறவங்கதான் புரிஞ்சுகக்ணும்.இப்ப நான் சொல்ல வந்தது என்னன்னு புரிஞ்சு இருக்குமே"

"இல்லை..எனக்குப் புரியல"

"சரி, நான் நேராகவே விஷயத்துக்கு வர்றேன்.என்னை மாதிரி அரசியல்வாதிங்க பதவியை இழந்துட்டா..அதை மறுபடியும் பிடிக்க வெளி உலகத்துக்குத் தெரியாம ஒரு சின்னப் பொண்ணை..கன்னித்தன்மை அழியாத பொண்ணாப்பார்த்து கல்யாணம் பண்ணிப்போம்.அரசியல்வாதிங்க ஜாதியில இதெல்லாம் சகஜம்"

"பதவிக்காக ஒரு சின்னப் பொண்ணைக் கல்யாணமா...நான்சென்ஸ்"

"நான் சென்ஸோ..நீசென்ஸோ..இந்த பகுத்தறிவு, பகுத்தறிவுன்னு பேசறோமே..அதெல்லாம் மக்களை ஏமாத்தத்தான்.உண்மையைச் சொல்லணும்னா..ஜோசியத்தை நம்பறவங்க நாங்க..ரொம்ப நாளா மந்திரி பதவி கிடைக்காத எனக்கு..ஒரு பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு..அவ கூட ஒருநாள் மட்டும் வாழ்ந்தாக்கூடப் போதும்..பதவி கிடைச்சுடும்...ஏன் கற்பகம், அந்தப் பொண்ணு...ஒரே ஒருநாள் எனக்கு மனைவியா இருக்கப் போறப் பொண்ணு நீயா இருந்தா என்ன?"

"என்ன பேசறீங்க நீங்க..இப்படி எல்லாம் பேசறுதுன்னா இப்பவே வெளியே போங்க" 

"நான் வெளியே போகணுமா? இது மாதிரி சமயத்துல..நீ தனியா இருக்கற நேரத்துல..இப்ப நான் போகலைன்னு சொன்னா என்ன பண்ணுவ? அடடா..இந்த பொண்ணுங்களே கொஞ்சம் அழகா இருக்கக்கூடாதே..இருந்துட்டா உடனே கர்வம் வந்துடுமே! இதோபாரு..கற்பகம்..உன்னோட இந்த அழகை அழிக்க எனக்கு ஒரு செகண்ட் போதும். ஆனா..இந்த மயில்வாகனன் எதுக்கும் அவசரப்படமாட்டான்.உனக்கு ஒருவாரம் டயம் தரேன்..அதுக்குள்ள நல்லா யோசனைப் பண்ணி நல்ல முடிவுக்கு வா..வரட்டா"

மயில்வாகனன் , கற்பகத்தின் கன்னத்தை தட்டிவிட்டு வெளியே சென்றான்.

No comments:

Post a Comment