Monday, December 23, 2019

23 -பட்டடைக்கல்

பண்ணையாரும்,அர்ச்சகரும் மற்றும் ஊர்ப்பெரியவர்கள் அனைவரும் அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு பஞ்சாயத்தில் கூடினார்கள்.

மூக்கனின் மகன் செல்வத்தின் நாட்டிற்கான சேவையைப் பாராட்டியும், நாட்டுக்காக அவன் உயிர் நீத்ததற்குமான அஞ்சலிக் கூட்டமாக அது அமைந்தது.

மூக்கனும், அவனது மனைவி குருவம்மாவும் வந்திருந்தனர்.பஞ்சாயத்தார் சார்பில் அவர்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பின்னர் பண்ணையார் பேசுகையில்...

"நமது கிராமம் பூங்குளம் இன்று இந்தியா முழுதும் பேசப்படும் கிராமமாக ஆகிவிட்டது. அதற்குக் காரணமான  செல்வத்தை நம் கிராமம் பெற்றதற்கு நாம் மிகவும் பெருமிதம் அடைகிறோம்.மூக்கனுக்கும், அவனது மனைவிக்கும், அவர்கள் மகன் செல்வம் இறந்தது மாபெரும் இழப்பாகும். ஆனால் அந்தத் தாய், தந்தை நாட்டுக்காக தன் மகன் உயிர் விட்டான் என்பதை எண்ணி பெருமை அடையலாம்.இந்த பஞ்சாயத்து செல்வத்தைப் பெற்ற மூக்கனுக்கும், அவனது மனைவிக்கும் தங்கள் நன்றியையும், பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கிறது" என பேசி முடித்தார்.

அடுத்து, அர்ச்சகர் பேசினார்..

"திருவள்ளுவர் தனது திருக்குறளில் "தோன்றின் புகழோடு தோன்றுக..அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று" எனக் கூறியுள்ளார்.நான் கூட இளம் வயதில் அது எப்படி தோன்றும் போதே புகழுடன் தோன்ற முடியும்? என நினைத்துள்ளேன்.பிறகுதான் அதற்கான அர்த்தம் புரிந்தது.

அதாவது ஒரு தொழிலில் நீங்கள் ஈடுபட நினைத்தால், அத்தொழிலில் ஈடுபட்டு புகழ் பெற்றவராகத் திகழ வேண்டும்.அது, நம்மால் முடியாது என்று தோன்றினால், அத் தொழிலில் ஈடுபடாமல் இருக்க வேண்டும்.

நம் மூக்கனின் மகன் செல்வமும், சில கசப்பான காரணங்களால் இந்த ஊரை விட்டுப் போனான். போனவன் என்ன ஆனான் எனத் தெரியாது, மூக்கன் பல நாட்கள் என்னிடம்  புலம்பியுள்ளான்.ஆனால்..செல்வமோ..ராணுவத்தில் சேர்ந்ததுடன் நில்லாது..தன் உயிரைத் தந்துள்ளான்.செல்வம் தான் பிறவி எடுத்தன் பயனை நிரூபித்து புகழ் பெற்றுள்ளான்.நம் ஊரில் செல்வத்திற்கு ஒரு நினைவு மண்டபம் கட்ட வேண்டும்..என இப்பஞ்சாயத்தைக் கேட்டுக் கொள்கிறேன்:" என்றார்.

தாமோதரன், பண்ணையாரைப் பார்த்து, "ஐயா..நான் இரண்டு வார்த்தை பேசணும்" என்றான்.

பண்ணையார் "பேசு தாமோதரா" என்றார்.

"எல்லாரையும் கும்புட்டுக்கிறேன்..
மூக்கனின் மகன் செல்வம் இந்த ஊரைவிட்டுப் போனதற்கான உண்மையானக் காரணமாக நான் ஆகிவிட்டேன்...என நான் அப்பப்ப வருந்தியிருக்கேன்.உண்மையிலேயே, எந்த ஒரு அரசியல் கட்சியும் நம் கிராமத்தில் நுழையாத போது, என் சுயநலத்திற்காக, மயில்வாகனனின் கட்சிக் கொடிக்கம்பத்தை இந்த ஊரில் நட்டேன்.அதற்காக பஞ்சாயத்துக் கூடியபோது:இதனால் கிராமத்திற்கு தீங்கு வருமேயானால்..கொடிக்கம்பத்தை அகற்ற வேண்டும்னு சொன்னாங்க' அன்னிக்கு இந்தப் பஞ்சாயத்து மீது எனக்குக் கோபம் வந்தது,ஆனால் நாளாக..நாளாக..மயில்வாகனனின் எண்ணம் புரிந்தது.இந்த அரசு எங்கள் மூதாதையருக்குக் கொடுத்த பஞ்சமி நிலம் வேண்டும்னு என் நிலங்களுக்கு விலைபேசி..என்னை விற்க நிர்பந்தப்படுத்துகிறான். தவிர என் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளான்.இந்தக் கூட்டத்தின் மூலம் அவனுக்கு நான் எச்சரிக்கை விடுக்கிறேன்..என் சாதியை வைத்தே..என் சாதி மக்களை அழிக்க அவன் என்னை தேர்ந்தெடுத்துள்ளான்.அதை இப்போதுதான் நான் தெரிஞ்சுக்கிட்டேன்..ஒரு பட்டடைக்கல் போல  இருப்பதற்கு நான் தயாரில்லை.

இனியும் மயில்வாகனன், தனது தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்.தொடர்ந்து அவன் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அவனுக்கு சரியான பதிலை எங்கள் சமுதாய மக்கள்...இல்லை...இல்லை..நானே அளிப்பேன்.

நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா..இந்தப் பஞ்சாயத்து என்னை மன்னிக்கணும்.இன்னிக்கே அந்தக் கட்சிக் கொடியை வெட்டி சாய்ப்பேன்.எல்லருக்கும் என் நன்றி" என பேசி முடித்தான்.

பின்னர், செல்வத்திற்கு, அர்ச்சகர் கேட்டுக் கொண்டபடி நினைவிடம் கட்ட பஞ்சாயத்து ஒப்புதல் கிடைத்தது.

மூக்கனும், குருவம்மாவும்..தங்கள் கைகளைக் கூப்பி மக்கள் அனைவருக்கும் தங்கள் நன்றியைக் கூறினர்.

No comments:

Post a Comment