Thursday, December 12, 2019

15 - காணாமல் போன செல்வம்

உண்ணாவிரதம் முடிந்த நாள் இரவு, தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி எண்ணி அழுதுக் கொண்டிருந்தான் செல்வம்.

மூக்கனும் அவன் மனைவியும் எவ்வளவு ஆறுதல் சொல்லியும்..அவன் அழுகையை நிறுத்தவில்லை.

"நம்ம சாதியை வைச்சுதானே அந்த மயில்வாகனன் என்னை அவமானப்படுத்தினான்...ஒருநாள் அந்த மயில்வாகனனை எனக்கு மாலையை போட்டு வணங்க வைக்கிறேன்" என்றான் மூக்கனிடம்.

அடுத்தநாள் விடியலில் செல்வம் காணாமல் போனான்.

மூக்கனும், குருவம்மாவும் எங்கெங்கோ தேடினர்..ஊரில் உள்ள கிணற்றில் எல்லாம் போய் மூக்கன் பார்த்தான்..எந்த இடத்திலும் செல்வத்தைக் காணவில்லை.

மூக்கன் கோயிலுக்கு வந்து அந்த அம்மன் முன்னால் "சாமி கடவுளே! என்னை ஏன் சோதிக்கற.." என அழுதான்.

அப்போது டீக்கடையிலிருந்து நாராயணன் வந்தான், வந்தவன்" மூக்கா நான் கடைக்கு சரக்கு வாங்க பக்கத்து கிராமத்துக்கு விடியல்ல கிளம்பினேன்...அப்ப..உன்னோட பையன் என் கிட்ட இந்த கவரைக் கொடுத்துட்டு, தான் அவசர காரியமா வெளியே போறதாகவும், இதை உன்னிடம் கொடுத்துடச் சொன்னான்" என்றான்.

அந்த கவரில் இருந்து ஒரு கடிதத்தை எடுத்த மூக்கன், அந்தக் கடிதத்தை நாராயணனைப் படிக்கச் சொன்னான்.

நாராயணன் படிக்க ஆரம்பித்தான்..

அன்பு அப்பா, அம்மாவிற்கு,
நான் ஊரை விட்டேச் செல்கிறேன்.நான் உங்களிடம் சொன்னாற்போல மயில்வாகனன் எனக்கு மாலை போட்டு வணங்கும் நிலை எனக்கு வரும்போது திரும்பி வருவேன்.
அதுவரை, என்னை எங்கும் தேட வேண்டாம்.என்னைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம்

இப்படிக்கு
உங்கள் அன்பு மகன்
செல்வம்

நாராயணன் , கடிதத்தைப் படித்து முடிந்ததும் , மூக்கன் தலையில் அடித்துக் கொண்டு "ஐயோ..செல்வம்..என்னை விட்டுட்டு போயிட்டியா"  என அழ ஆரம்பித்தான்.

அவனிடம் ,நாராயணன், "மூக்கா...கவலைப்படாதே! உன் பையனைப் பத்தி எனக்குத் தெரியும்.கண்டிப்பா அவன் சொன்னது போல பெரிய ஆளா ஆகிட்டித்தான் வருவான்" என்றான்.

++++++      ++++

நாட்கள் கழிந்துக் கொண்டு இருந்தன..

அவ்வப்போது, தாமோதரனை, அவன் நிலத்தை தனக்குக் கொடுத்துவிடுமாறு மயில்வாகனன் வற்புறுத்திக் கொண்டிருந்தான்.

ஒருநிலையில் அவனது தொந்தரவினைத் தாங்க முடியாமல், கற்பகத்திடம் கலந்து ஆலோசிக்க,தாமோதரன் தஞ்சாவூர் வந்தான்.அவள் தங்கியிருக்கும் பெண்களுக்கான விடுதிக்குச் சென்றபோது, அவள் சிவகங்கை பூங்காவிற்குச் சென்றுள்ளதாக அவளது தோழி கூற அங்குச் சென்றான்.

பூங்காவில், கற்பகம், வாஞ்சியுடன் பேசிக் கொண்டிருந்தாள்.தாமோதரனைக் கண்டதும் "வாங்க அப்பா..எப்ப வந்தீங்க?" என்றாள்.
விடுதிக்குச் சென்றுவிட்டு இங்கு வந்ததாகச் சொன்ன தாமோதரன், வாஞ்சியைப் பார்த்து, "தம்பிதான் வாஞ்சியா?" என்றான்

"ஆமாங்க..நான்தான் வாஞ்சி, கற்பகத்தோட படிச்சுக்கிட்டு இருக்கேன்"

"அப்பா..இவர் தாத்தா சிதம்பரம்.ஒரு பெரிய சுதந்திரப் போராட்டத் தியாகி"

"போம்மா..யாராவது சுதந்திரத்தைப் பத்தி பேசினாலே..எனக்குக் கோபம்தான் வருது" என்றான் தாமோதரன்.

"ஏன் அப்படி சொல்றீங்க?" வாஞ்சி..

"பின்ன என்ன தம்பி..சுதந்திரத்துக்கு முன்னால வெள்ளையந்தான் நம்மை சுரண்டினான், ஆனாலும் நமக்கு வேணும்கற சௌகரியங்களையும் செஞ்சுக் கொடுத்தான்.ஆனா, இப்ப., இன்னிக்கு தலைக்குத் தலை, நான்தான் தலைவன்னு சொல்லிக் கிட்டு..சாதிக்கு ஒரு கட்சியை வைச்சுக்கிட்டு..தாதாக்களைப்போல அரிவாளும் கையுமா..நாட்டையும், நாட்டு மக்களையும் சுரண்டறாங்க"

"அப்பா..என்ன சொல்றீங்க?" என்றாள் கற்பகம்.

"அம்மா..நேத்து மயில்வாகனன் என்னைக் கூப்பிட்டு அனுப்பினார்"

"என்னப்பா..வார்த்தைக்கு வார்த்தை..தலைவர்..தலைவர்னு சொல்வீங்க..ஆனா..இப்ப மயில்வாகனன்னு பேரைச் சொல்றீங்க"

"போம்மா..இப்ப அதுவா முக்கியம்..நான் அவரைப் போய்ப் பார்த்ததும்..பழையபடி நிலத்தைக் கொடுத்துடுன்னு தொந்தரவு பண்ண ஆரம்பிச்சுட்டார்.நான் அதுமட்டும் முடியாதுன்னு கண்டிப்பா சொல்லிட்டு வந்துட்டேன்.ஏம்மா..நான் சொன்னது சரிதானே"

"ரொம்ப சரிப்பா..உங்க உயிர் உங்க நிலம்ப்பா.அதைக் காப்பாத்திக்க வேண்டியது உங்க உரிமை"

தன் பங்குக்கு வாஞ்சிநாதனும்"ஐயா..என் தாத்தாவும் ஒரு வக்கீல்தான்/நீங்க எந்த அச்சுறுத்தலுக்கும் பயப்படாதீங்க.வளைஞ்சுக் கொடுக்காதீங்க.எந்தவித சட்ட உதவின்னாலும்  தாத்தா செஞ்சுக் கொடுப்பார்" என்றான்.

No comments:

Post a Comment