Monday, December 9, 2019

12 - நாட்டின் முதுகெலும்பு விவசாயி

விடுமுறை முடிந்து தஞ்சை வந்து மருத்துவக் கல்லூரி மாணவிகள் விடுதிக்குள் நுழைந்த கற்பகத்திற்கு, வாஞ்சியிடம் இருந்து அலைபேசி அழைப்பு வந்தது.

வாஞ்சிநாதன் , அவளுடன் சேர்ந்து மருத்துவம் படிப்பவன். தாய்,தந்தையரை சிறுவயதிலேயே இழந்தவன்.அவனது தாத்தா சிதம்பரம்தான் அவனை வளர்த்து வருபவர்.அவர் சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார்.அவர் 95 வயது இளைஞர்.

இளைஞரா? என்று நீங்கள் கேட்டால்..ஆம் என்பதே பதில்.தனக்கு இன்னமும் வயதாகிவிட்டது என்பதை ஒப்புக் கொள்ள மாட்டார்.அப்படி ஒரு மன உறுதி..தேச பக்தி நிறைந்தவர்.

கற்பகத்தின் அழகும்..அவளது சற்றும் கர்வம் இல்லாத பண்பும்..அவள் பேசும் இனிய சொற்களும்...வாஞ்சியை அவளிடம் காதல் கொள்ள வைத்தது.

ஆனால், கற்பகம் ஆரம்பத்தில் அவனது காதலை ஏற்கவில்லை.சாதி இருவரின் காதலுக்கும் தடையாய் இருக்கும் என மறுத்தாள்.

ஒருநாள் வாஞ்சி அவளிடம் "சாதிகள் இல்லையடி பாப்பான்னு மகாகவி பாடியிருக்கார்...சாதி இரண்டுதான் என ஔவை பாடியிருக்கிறார் என்றெல்லாம் சொல்லி அவளை தன்வயப்படுத்த  எண்ணினான்.

அவளும் தன் பங்குக்கு.."இன்றும் பலர் சாதி,மதம் என அடித்துக் கொள்வதையும், கௌரவக் கொலை எனச் சொல்லிக்கொண்டு சாதி வெறியர்கள் செய்யும் ஆணவக்கொலைகளையும் சுட்டிக் காட்டினாள்.

வாஞ்சியோ பிடிவாதமாக இருந்தான்.அவனது தாத்தாவைப் பற்றிக் கூறினான்.அவரது சம்மதத்தை வாங்கிவிடலாம் என்றான்.

கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பது போல ,ஒரு கட்டத்தில் வாஞ்சியின் மன உறுதி, அவன் காதலை ஏற்கவைத்தது.அவளும் அவனை விரும்பத் தொடங்கினாள்.

தாமோதரனுக்கும், இவ்விஷயம் அரசல் புரசலாகத் தெரிந்தது.சிதம்பரம், பற்றியும் கேள்விப்பட்டவன், மனம் நிம்மதியடைந்தது.

அன்று மாலை கல்லூரி முடிந்ததும் கற்பகத்தை , அவர்கள் எப்போதும் சந்திக்கும் சிவகங்கை பூங்காவிற்கு வரச் சொல்லியிருந்தான் வாஞ்சி.கற்பகமும் அவனிடம் பேச நிறைய செய்திகள் இருக்கிறது என சொல்லியிருந்தாள்.

அன்று மாலை..அவர்கள் சந்தித்தனர்.ஆனால், அவள் ஏதும் பேசாது அமர்ந்திருந்தாள்.

"பேச நிறைய விஷயம் இருக்குன்னு சொல்லிட்டு, இப்படி மௌனமாய் இருந்தா எப்படி?" என்றான் வாஞ்சி.

கற்பகம், அவனிடம் தன் தந்தையின் திடீர் அரசியல் ஆசையையும், அரசியல்வாதி மயில்வாகனன் வீட்டிற்கு வந்திருந்ததையும், அவன் தன்னையும் அரசியல் ஈடுபடச் சொன்னதையும் அவனிடம் சுருக்கமாகச் சொன்னாள்.

"அப்போ..வருங்கால முதல்வர் நீதான்னு சொல்லு"

"வாஞ்சி..என்ன உளர்றீங்க?"

"நான் உளரலே! நீதானே சொன்னே..மாணவரணி செயலாளர் ஆக்கறேன்..அப்புறம் கொள்கை பரப்பு செயலாளர்னு அந்த மயில்வாகனன் சொன்னான்னு.கொள்கை பரப்பு செயலாளர்னா..கட்சித் தலைமைக்கு வாரிசுபோலத்தான்..அதுதானே இப்ப நடக்குது.அதைத்தான் சொன்னேன்"

"வாஞ்சி நீ இப்படி கிண்டல் பண்ணுவேன்னு தெரிஞ்சா..மயில்வாகனன் எங்க வீட்டுக்கு வந்தது..அங்கே என் கூட பேசினது எல்லாம் சொல்லாமல் இருந்திருப்பேன்" என்றாள் சற்றே கோபம் வந்தவள் போல.

"அம்மையாருக்கு உடனே கோபமா? சாரி டா..சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்.இப்ப கட்சி ஆரம்பிக்கற தலைவர்கள் எல்லாம் "நாங்கள்தான் வருங்கால முதல்வர்கள்"னு சொல்றாப்போல..நானும் சொன்னேன் அவ்வளவுதான்.ஆனா இப்படி பேசறவங்களைப் பார்த்தா சிரிப்புதான் வருது"

"என்"

"பின்ன என்ன..நாளை என்ன நடக்கணும்னு திர்மானிக்கிறது அந்த கடவுள்தான்.நம்ம உயிரே நாளைக்கு இருக்குமாங்கறதே நம்ம கிட்ட இல்ல.அப்புறம் இப்படிப்பட்ட பேச்சு ஏன்?"

"கேட்டா..நாங்க பகுத்தறிவுவாதிங்க..அப்படின்னு சொல்லுவாங்க.சரி அந்தப் பேச்சு நமக்கு ஏன்? என்னோட ஒரே லட்சியம் மருத்துவராகணும் அவ்வளவுதான்"

"என்னோட ஒரே லட்சியம்..கற்பகத்தைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு, இரண்டு பேருமா ஒரு கிளினிக் திறந்து ஏழை மக்களுக்கு சேவை செய்யணும் அவவ்ளவுதான்"

"ஆனா..வாஞ்சி எங்கப்பா எனக்கு மாப்பிள்ளையா வரப்போறவர் விவசாயம் பார்க்கணும்னு நினைக்கிறார்.இந்த நாட்டுக்கு முதுகெலும்பே விவசாயிகள்தான்.எனக்கு வர மாப்பிள்ளையுடன் சேர்ந்து நான் விவசாயம் பார்ப்பேன்னு சொல்லிக்கிட்டு இருக்கார்"

"எங்க தாத்தா ஒரு சுதந்திரப் போராட்ட வீரர்.அவர் கண்டிப்பா இதுக்கு சம்மதிப்பார்.எந்த வேலை செஞ்சாலும்,அதனால நம்ம நாட்டுக்கு பலன் இருக்கணும்னு சொல்வார்.அதனால், உங்கப்பாவோட ஆசைக்கு எதுவும் தடை சொல்லமாட்டார்னு நினைக்கிறேன்"

"சரி அப்போ..நாம வேற விஷயங்கள் பற்றி பேசலாமா?" என்றாள் கற்பகம்.

"வேற விஷயமா.." என சற்றே யோசிப்பது போல இருந்த வாஞ்சி, பின், "ஓஹோ..புரிஞ்சுப் போச்சு" என்று கூறியவாறே ..கற்பகத்தின் கைகளை பற்றி தன் கரங்களுக்கிடையே சிறை வைத்தான்.

No comments:

Post a Comment