Saturday, December 21, 2019

21 - வறுமை கொடிது

விடியில் நேரம்...நடைப்பயிற்சி செய்வது போல கிராமத்தைச் சுற்றி வந்த ப்ருத்வி, நாராயணனின் டீக்கடைக்கு வந்து அங்கு போட்டிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.
அதே நேரம் ராமனும் வந்து ஒரு செய்தித் தாளுடன் அங்கு வந்து சேர்ந்தான்.

'என்ன தம்பி..ஊரைச் சுற்றிப்பார்த்து, பேட்டி எடுக்க வேண்டியவங்கக்கிட்ட எல்லாம் பேட்டி எடுத்துட்டியா" எப்போ அதை உன் பத்திரிகையில போடப்போறே" என்றான் நாராயணன்.

"ஆமாம்..இந்த ஊர்ல சுத்திப் பார்க்க ..பேட்டிக் காண என்ன இருக்கு.மொத்தமே 300 குடும்பங்கள்.அக்ரஹாரம்னு சொல்லிட்டு ஒரு தெரு..அதுல அவங்க ஐம்பது பேர் இருப்பாங்க.தலித்துகளுக்குன்னு ஒரு இடம்..அதுல ஒரு ஐம்பது பேர்.மத்தபடி ஊர்ல 200 குடும்பங்க.. அவ்வளவுதானே உங்க பூங்குளம்"

"தம்பி, நான் கேட்டது உங்களுக்குப் புரியலை போல இருக்கு.இங்கு எல்லோர் வீட்டிலேயும் வறுமைதான் பொதுவா குடியிருக்கு.அந்த வறுமையைத்தான் பேட்டி எடுத்துட்டீங்களான்னு கேட்கறேன்"

"இங்க வந்ததுல எனக்கு ஒன்னு புரிஞ்சுப் போச்சு.வறுமைக்கு ஜாதி,மத பேதமில்ல.எல்லா ஜாதியிலேயும் வறுமை இருக்கு.ஆனா..அப்படிப்பட்ட வறுமை நிலைமையிலும்..பிறப்புப் பற்றி  சுமத்தப்படும் அவமானம்..அது தரும் வேதனை..வறுமை தர வேதனையைவிட அதிகம்"

ப்ருத்வி சொல்வதைக் கேட்டுக் கொண்டே வந்த பண்ணையார்,"அப்போ இந்த கிராமம் உங்களுக்குப் பிடிக்கலையா தம்பி?" என்றார்.

பண்ணையாரை ஒருமுறைப் பார்த்த ராமன் மீண்டும் செய்தித்தாளைப் படிப்பது போல பாசாங்கு செய்ய ஆரம்பித்தான்.

"இந்த கிராமத்துல சில விஷயங்கள் பிடிச்சு இருக்கு..சில விஷயங்கள் பிடிக்கல.வெள்ளந்தி மனசுள்ள மக்களைப் பிடிச்சு இருக்கு..தீண்டாமை இருக்கறது பிடிக்கல.வயல்கள் பிடிச்சு இருக்கு..அதுல பயிரிடமுடியாத நிலமை பிடிக்கலை.இங்க  காவிரியை பிடிச்சு இருக்கு..ஆனா..அது வெறும் மணலா இருக்கறது பிடிக்கல"

"என்ன தம்பி பண்றது.கர்நாடகாதான் தண்ணீ தரமாட்டேன்னு சொல்றாங்களே.இந்த வருஷம் இப்படியே இருந்துதுன்னு வைச்சுக்கங்க..எங்க வயிற்றில ஈரத்துணியைக் கட்டிக்கலாம்னாக் கூட..அதுக்கான தண்ணீர் கிடைக்காது போல இருக்கே"

"கர்நாடக மக்களை மட்டும் குறை சொல்லிப் பயனில்லை.நீங்கக் கூட என்ன செஞ்சீங்க யோசனைப் பண்ணிப் பாருங்க.சென்னையில குடிக்கக் கூட தண்ணீ இல்லைன்னு சொன்னப்ப இங்கிருந்து தண்ணீ கொடுக்க மாட்டோம்னு ஒரு தரம் சொல்லலை?"

"தம்பி, நீங்க சொல்றது சரி..ஆனா..ஏன் தண்ணீ தரமாட்டோம்னு  சொன்னோம்னு யோசனைப் பண்ணுங்க.காவிரில தண்ணீ இல்ல.மழையும் இல்ல.இருக்கற ஆற்றுப் படுகை நிலத்தடி நீரையும், ஆழ்துளைக் கிணறு தோண்டி தண்ணியை எடுத்துட்டா..கிராமங்கள்ல எந்தக் காலத்திலும் பயிரிட முடியாத நிலை ஏற்படும்.மக்களுக்கு உணவு கிடைக்காத நிலை உருவாகும்.அதுபோல ஒரு நிலை வரக்கூடாதுன்னுதான் தண்ணீ கொடுக்கக் கூடாதுன்னு தகராறு பண்ணினோம்...

மொத்தத்துல நாட்டில தண்ணீர் அடிப்படை உரிமைங்கற நிலை மாறி ..அடிப்படைத் தேவைங்கற நிலைமை வந்துடுச்சு.இனிவரும் நாட்கள்ல..உலகத்துல ஏற்படப்போகும் தண்ணீப் பஞ்சம்..மூன்றாம் உலகப் போரைக்கூட உண்டாக்கும்னு சொல்றாங்க"

"நதிநிர் இணைப்பு திட்டம் ஏற்படட..இதுக்கெல்லாம் ஒரு தீர்வு ஏற்படும்.அதுக்கு நம்ம பொருளாதாரம் ஒரு சவாலா இருக்கே"

"நதிநீர் இணைப்புக்கு சவால் விடறது பொருளாதார நிலை மட்டுமில்லை...மாநிலங்களுக்கிடையே ஆன உறவு.மாநிலங்கள் ஒன்றொக்கொன்று விட்டுக் கொடுத்து எல்லா மாநிலங்களும் சம்மதித்தால்தான் நதிநீர் இணைப்பு சாத்தியமாகும்.சரி..தம்பி..இதைப் பத்திப் பேசி பேசி அலுத்துப் போச்சு..வாங்க கோயிலுக்குள்ள போயிட்டு வருவோம்"

"கவலைப்படாதீங்க..காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவின் இறுதித் தீர்ப்பு வந்தால்..எல்லாம் சரியாயிடும்"

இதுவரை இவர்கள் பேசிக் கொண்டிருந்ததையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராமன்..

"ப்ருத்வி...நீங்க இரண்டு பேரும் பேசினதையெல்லாம் கேட்டேன்.நான் ஒன்னு கேட்கிறேன்.காவிரி நதிநீர் பங்கீட்டுக் குழுவின் இறுதித் தீர்ப்பு வந்தாலும், கர்நாடகா அதற்கு அடிப்பணியும் என்பது என்ன நிச்சயம்.நீங்க சொல்றீங்களே இந்த காவிரி நதிநீர் நடுவர் குழு..அது 1990 ஆம் வருஷம் ஜூன் மாதம் இரண்டாம்   தேதி அமைக்கப்பட்டது.இதுவரைக்கும் கிட்டத்தட்ட 450 நாட்கள் விசாரணை நடந்துள்ளது.தமிழ்நாடு தனக்கு 562 டிஎம் சி தண்ணீர் வருஷத்திற்கு வேணும்னு தன் நியாயத்தை உணர்த்த 3000 பக்கங்களுக்கு டாகுமென்ட்ஸூம் 1662 விட்னெஸ்களையும் கொடுத்து இருக்கு.கர்நாடகாவும் தன் பங்கிற்கு அவ்வளவு தண்ணீர் தேவையில்லைன்னு 253 டி எம் சி தண்ணீ போதும்னு கிட்டத்தட்ட அதே அளவு டாகுமென்ட்ஸ் சப்மிட் பண்ணியிருக்காங்க"

இதைக் கேட்ட பண்ணையார், "தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தேவையா..இல்லையா..எவ்வளவு தேவை..இதைத் தீர்மானிக்க இவ்வளவு டாகுமென்ட்ஸா..இவ்வளவு சாட்சிகள் தேவையா?" என்றார்.

ராமன் தொடர்ந்தான்,"தேவையா இல்லையாங்கறது ஒருபுறம் இருக்கட்டும்.இதனால மக்கள் வரிப்பணம் கோடிக்கணக்குல வீணாகுதே..அதைப்பாருங்க"

"அதைக்கேட்டா..இதுதான் ஜனநாயகம்னு சொல்வாங்க!சில சமயங்கள்ல..நம்ம நாடு பெரிய ஜனநாயகநாடுன்னு பெருமைப்பட்டுக்கிட்டாலும், அதைச் சொல்லிக்கிட்டு பணம் செலவழியறதைப் பார்த்து வருத்தப்படவும் வேண்டியிருக்கு.எனக்கு இது நாலாவது வருஷம்..பயிர் கருகப் போகுது.ஒவ்வொரு வருஷமும்..மழை வரும், மழை வரும்..காவிரில தண்ணீ வரும்னு நம்பித்தான் பயிரிடறோம்.இனிமே விதை நெல்லுக்குக் கூட பஞ்சம் வந்திடும் போல இருக்கு.இப்படியே நிலமைப்[போச்சுன்னா, கூண்டோடு கிராமத்து ஜனங்க அழிஞ்சுப் போக வேண்டியதுதான்".

"உங்க கிராமம் மட்டுமில்லை..பல கிராமங்கள் நிலமையும் இது போலத்தான் இருக்கு" என்றான் ப்ருத்வி.

"தம்பி..இப்படியே போச்சுன்னா, அந்த தீர்க்கதரிசி பாரதியாரோட வரிகள் உணமையாயிடுமோன்னு பயமா இருக்கு."சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம், வெறும் சோற்றுக்கோ வந்ததிந்த பஞ்சம்"..!சரி, தம்பி..நான் அந்த அரச மரத்தடியிலே கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுக் கிளம்பறேன்" என்றார் பண்ணை.

பிருத்வியும், ராமனும் வேறு ஏதோ விவாதித்துக் கொண்டிருந்தனர்.

அரச மரத்தடியில் அமர்ந்த பண்ணையார்,..கைகளை முட்டுக் கொடுத்துக் கொண்டு படுத்தார்.கண்ணயர்ந்தார்.

திடீரென பண்ணையார் கனவில் ..ஒரு எலும்புக்கூடு தோன்றி.."செத்துப் போ''செத்துப்போ" என அவர் கழுத்தை நெரிக்க..அலறியடித்து எழுந்த பண்ணை "ஐயய்யோ..என்னை கொலை பண்ண வருது ..என்னைக் காப்பாத்துங்க..என்னை காப்பாத்துங்க"என கத்தினார்.

அந்த சப்தம் கேட்டு, கோயிலில் இருந்த அர்ச்சகர் வெளியே வந்தார்.டீக்கடையிலிருந்து ப்ருத்வி,ராமன், நாராயணன் மூவரும் பண்ணையாரிடம் ஓடி வந்தனர்.

"பண்ணை..என்ன ஆச்சு?..என்ன ஆச்சு?" என்றார் அர்ச்சகர்.

"பேய்..பேய்.."

"பேயாவது..பிசாசாவது.அதுவும் இந்த பகல் வேளையில.ஏதாவது கனவு கண்டு இருப்பீங்க."என்ற அர்ச்சகர், நாராயணனைப் பார்த்து" நாராயணா
கொஞ்சம் தண்ணீ கொண்டு வா" என்றார்,

"இல்லை அர்ச்சகரே! இது முதல் தடவை அல்ல.பலதடவை இப்படிப்பட்ட கனவு வந்திருக்கு.நம்ம கிராமத்தை வறுமைப்பேய் பிடிச்சு ஆட்டுது.இந்த வருஷமும் இப்படியே இருந்தா, நம்ம மக்கள் எல்லாம் பொழப்பைத் தேடி வெளியே போக வேண்டியதுதான்.மண்ணோட கருணைதான் மனுஷனை வாழ வைக்குது.நம்மை அறியாமல்..நாம பிறந்த மண்வாசனைதான், நம்ம பேச்சுல,சாப்பாட்டுல,நம்ம பழக்க வழக்கத்துல வெளிப்படுது.அந்த மண்ணே..இப்ப தண்ணீ இல்லாம நம்ம வாட்டுது"

"பண்ணை, நீங்களே வறுமையைப் பத்தி பேசினா..நம்ம கிராமத்து ஜனங்கள் படும் பாட்டை கொஞ்சம் யோசனைப் பண்ணிப் பாருங்க." என்றான் ராமன்.

"உங்க எல்லார் கிட்டேயும் சொல்லக்கூடாதுதான்.இருந்தாலும் சொல்றேன்..அசைவம் இல்லாம எங்க வீட்டுல சாப்பாடே இருக்காது.ஆனா..இப்ப நல்ல சோறைப் பார்த்தாப் போதும்னு ஆயிடுச்சு.அர்ச்சகரே.. ஆண்டவன் வசதியைக் கொடுக்கக் கூடாது.அப்படியே வசதியான வாழ்க்கையைக் கொடுத்துட்டு அப்புறம் ஏழ்மையைக் கொடுத்தா அதை ஒருத்தனால தாங்கிக்க முடியாது"

"அந்த அம்மன் என்ன நினைக்கிறானோ..அதுதான் நடக்கும்.கவலைப்படாதீங்க.எல்லா விஷயங்களுக்கும் ஒரு முடிவு உண்டு" என்ற அர்ச்சகரிடம்,"அந்த முடிவு என்னோட முடிவா இருந்திடக்கூடாது" என்றார் பண்ணையார்.

No comments:

Post a Comment