Sunday, December 22, 2019

22 - ராணுவ மரியாதையுன் செல்வத்தின் உடல்

அன்று பொழுது விடிந்ததும்,அர்ச்சகர் கோயிலைத் திறக்கக் கிளம்பினார்.

ஏதோ அவசர வேலை என இருநாட்கள் முன்பு ப்ருத்வி சென்னை சென்று விட்டான்.

மேலும், அவன் பூங்குளம் பற்றி எழுதியக் கட்டுரைகள் ,அவன் வேலை செய்யும் "சந்தனம்" பத்திரிகையில் தொடராக வரப்போவதாகவும், அது சம்பந்தமாக தான் ஊருக்குச் செல்ல வேண்டும் என்றும் கூறிச் சென்றான்.

வந்து தங்கியிருந்த சில நாட்களிலேயே அவனுக்கு பூங்குளம் கிராமத்தின் மீது ஈடுபாடு அதிகரித்துள்ளதை அர்ச்சகர் அறிந்தார்.

ராமனும், மூக்கனும்,நாராயணனும் கூட ப்ருதிவியைப் பிரிந்திருப்பதால், தங்களுக்கும் வருத்தம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்தார்கள்.

இதையெல்லாம் அசை போட்டபடியே, தேரடிக்கு வந்தார் அர்ச்சகர்.

அப்போது ஒரு போலீஸ் வேன் அங்கு வந்து நின்றது.அதிலிருந்து இரு காவலர்கள் இறங்கினர்.

பூங்குளத்தில் காவல்நிலையம் கிடையாது.குற்றம் செய்பவர்கள் இருக்கும் இடத்தில்தானே அது அவசியம்.

இந்நிலையில் அங்கு போலீஸ் வேனும், காவலர்களும் வந்திருந்தது அர்ச்சகருக்கு வியப்பினை ஊட்டியது.

'உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றார் காவலர்களைப் பார்த்து.

"ஐயா..நாங்க பக்கத்து ஊர் காவல் நிலையத்திலிருந்து வருகிறோம்,இந்த கிராமத்துல மூக்கன் யாரு? அவர் வீட்டுக்கு எப்படிப் போகணும்..?" என்றனர்.

டீக்கடையிலிருந்த நாரயணனுக்கும் அவர்கள் கேட்டது காதில் விழ, மூக்கனைத் தேடி இவர்கள் ஏன் வர வேண்டும் என எண்ணினான்.

"என்ன விஷயமாக நீங்க மூக்கனைப் பார்க்கணும்?" என்றார் அர்ச்சகர்.

"அய்யா..அவரோட பையன் செல்வம், ரானுவத்துல எல்லைப் பாதுகாப்புல இருந்தப்போ..அத்து மீறி நுழைஞ்ச இரு தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றான்.அவனும் சுடப்பட்டான்.ராணுவத்துல சேரும் போது கொடுத்த தகவலை வைச்சு, அவர் பூங்குளத்தைச் சேர்ந்தவர்.தந்தை பெயர் மூக்கன்.தாய் செங்கமலம் என்றெல்லாம் பதிவாகியிருக்கறதை வைச்சு, இந்த செய்தியை மூக்கனுக்குத் தெரிவிக்கச் சொல்லி எங்களுக்குக் கட்டளை.அவரோட உடல் தனி விமானம் மூலம் திருச்சிக்கு வந்து..அங்கிருந்து ராணுவ மரியாதையுடன் இந்த ஊருக்கு வரும்.இதை மூக்கனுக்குத் தெரிவிக்க நாங்கள் வந்து இருக்கிறோம்" என்றார் ஒரு காவலர்

விஷயம் கேள்விப்பட்டதும் அர்ச்சகருக்கு மயக்கம் வருவது போல இருந்தது..அப்படியே அமர்ந்தவர், நாராயணனைக் கூப்பிட்டு, மூக்கனின் இருப்பிடத்தை அவர்களுக்குக் காட்டச் சொன்னார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

சென்னை..

அண்ணாசாலையிலிருந்து பிரியும் சிறிய சந்தில்..ஒரு பழைய மூன்றுமாடிக் கட்டிடத்தின் மூன்றாம் மாடியில் செயல் பட்டுக் கொண்டிருந்தது "சந்தனம்" பத்திரிகை அலுவலகம்.

அங்கு, ஒரு மேசையின் முன் அமர்ந்து..தன்னிடம் வந்திருந்த கட்டுரையில் பிழைகளைத் திருத்திக் கொண்டிருந்தான் ப்ருத்வி.அப்போது அவன் மேசையில் இருந்த இன்டெர்காம் ஒலித்தது.

"ப்ருத்வி, கொஞ்சம் உள்ளே வா" என்றார் பத்திரிகையின் ஆசிரியர்.

அவர் அறைக்குள் நுழைந்தவனை"உட்கார்" என எதிர் இருக்கையைக் காட்டியவர், தன்னிடமிருந்த அன்றைய  தமிழ் செய்தித்தாள் ஒன்றை எடுத்துப் போட்டு, சிவப்பு மையினால் தான் கோடிட்டு இருந்த செய்தியினைப் படிக்கச் சொன்னார்.

செய்தித் தாளை கையில் எடுத்து படித்தான் ப்ருத்வி...

அதில்..

'தமிழக வீரர் வீர மரணம்.." என்று கொட்டை எழுத்துகளில் தலைப்பிட்டு கீழ் கண்டவாறு செய்தி வந்து இருந்தது.

"செல்வம் எனும் ராணுவ வீரர் ஒருவர், இந்திய எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதி இருவரை சுட்டு வீழ்த்தியதாகவும், அவரும் சுடப்பட்டு வீர மரணம் அடைந்ததாகவும்  "

மேலும்..செல்வம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பூங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும்..அவரது தந்தை மூக்கன் என்றும் போடப்பட்டிருந்தது அந்த செய்தியில்.

அதைப் படித்த ப்ருத்வி, "சார்..எனக்கு செல்வத்தின் தந்தை மூக்கனைத் தெரியும் " என்றான்.

"வெரிகுட்..நீ இப்பவே பூங்குளம் போ.அந்த செல்வத்தின் உடல் அடக்கத்தில் கலந்து கொள்.முடிந்தால் மூக்கனிடம் ஒரு பேட்டி எடுத்துவிடு நம் பத்திரிகைக்காக.வேண்டுமானால்..நம் பத்திரிகை ஃபோட்டோகிராஃபரையும் அழைத்துச் செல்" என்றார்.

@@@@@@@@@@@@@@@@@@@@@@

பூங்குளம் கிராமத்தை அடைந்த ப்ருத்வி, மூக்கன் குடியிருக்கும் பகுதிக்கு..அவன் குடிலை நோக்கிச் சென்றான்.

குடிசையின் வாசலில் சிலர் அமர்ந்திருந்தனர்."என்னைவிட்டுப் போக உனக்கு எப்படிடா மனசு வந்தது" என பெருங்குரலெடுத்து அழுதுக் கொண்டிருந்தாள் மூக்கனின் மனைவி குருவம்மாள்.அவளருகே அமர்ந்து மூக்கன் ஆறுத்ல் சொல்லிக் கொண்டிருந்தான்.

ப்ருத்வியைப் பார்த்ததும் மூக்கன் மெல்ல எழுந்து வந்தான்.வந்தவன் "என் நிலமையைப் பார்த்தீங்களா தம்பி" என்றான்.

அவனை மெதுவாக அணைத்துக் கொண்ட ப்ருத்வி, "மூக்கா..உங்க இழப்பு  பேரிழப்பு.அதில் சந்தேகமே இல்லை.ஆனா, உங்க மகன் பூங்குளம் கிராமத்துக்கே பெருமையை சேர்த்துட்டார்.அவர் உடல் ராணுவ மரியாதையுடன் வர இருக்கிறது.இந்த சமயத்துல உங்கக் கிட்ட கேட்கக்கூடாதுதான்..இருந்தாலும் கேட்கிறேன்..உங்க பையனைப் பத்தி ஏதாவது சொல்வதாய் இருந்தா சொல்லுங்க.உங்க ஆதங்கத்தை எங்க பத்திரிகையிலே போடறோம்" என்றான்.

"அவனைப் பத்தி என்னத்தத் தம்பி சொல்றது.தம்பி, நாங்க தலித்துகள்.தீண்டத்தகாதவர்கள்.படிப்பறிவு இல்லாதவர்கள்.அதனாலே என் பையனாவது படிக்கட்டுமேன்னு..நாயா உழைச்சு அவனைப் படிக்க வைச்சேன் தம்பி.

அவன் படிக்கறப்போ, ஒருநாள் வாத்தி..இந்த கிளாஸ்ல தாழ்ந்த சாதி ஆளுங்க யார்னு கேட்டாராம்.கூனிக்குறுகி இவன் எழுந்து நின்னானாம்.இவன் என்ன சாதின்னு தெரிஞ்சதும்..இவனோட படிச்ச பயலுக இவன் கூட பேசறதைக் கூட நிறுத்திட்டாங்களாம்.

அப்புறம் தம்பி..அவன் ஒருநாள்..நம்ம எம் சி ஆர் இல்ல அதான் தம்பி புரட்சித் தலைவர் அவரோட 'ஒரு தாய் மக்கள் நாமென்போம்"ங்கற பாட்டைப் பாடிக்கிட்டே வரப்புல நடந்து வந்துகிட்டு இருந்தானாம்.எதிரே வந்த ஒரு உயர்சாதிக்காரரைப் பார்த்ததும் அவருக்கு வழிவிட வரப்புல ஓரமா ஒதுங்கினானாம்.உடனே அவர் "பளார்"னு இவன் கன்னத்துல ஒரு அறைவிட்டு "ஏன்டா..கீழ்ச்சாதிப் பயலே! நான்  வரேன் இல்ல..நீ வயல்ல இறங்கி வழிவிடாம..வரப் புல ஒதுங்கி நின்னு வழி விடறியா? நான் உன்னை இடிச்சுட்டுப் போகணும்னு பார்க்கிறியா?ன்னாராம்...ஏன்..தம்பி..அவர் என் பையனை "பளார்"னு அறைவிட்டாரே..அப்ப மட்டும் அவர் கை அவன் மேல படலியா?

"என்ன ஜனங்க இவங்க! நாயைத் தொட்டு..கொஞ்சி விளையாடறாங்க..ஆனா..மனுஷனைத் தொடக்கூடாதாம்"
என்றான் ப்ருத்வி.

"அந்த நாயைக் கூட அவங்க உயர்ந்த ஜாதி நாயா பார்த்துதானே தம்பி வாங்கறாங்க" என்றான் மூக்கன்.

ப்ருத்வியுடன் வந்த ஃபோட்டோகிராபர், கடமையேக் கண்ணாக "அப்புறம் உங்க மகனைப் பத்தி சொல்லுங்க" என்றார்.

மூக்கன், மயில்வாகனனின் உண்ணாவிரதத்தையும், அதில் செல்வம் பட்ட அவமானத்தையும், பிறகு அவன் காணாமல் போனதையும் கூறினான்.பின்,

"அப்படிப் போனவன் பட்டாளத்துல சேர்ந்துட்டான்கிறதும்..அவனுக்கு இப்போ நேர்ந்த கதியையும்..உங்களைப்போல எனக்கும் இப்பத்தான் தெரியும். மனசுல துக்கம் தாங்கல..ஆனாலும் ஒரு பக்கம் , என் பையன் நாட்டுக்காகத்தான் செத்து இருக்கான்னு ஒரு சந்தோஷம்.சேதி கேட்டதும் அந்த மயில்வாகனன் காலைல என்னைப் பார்த்து,'ஒரு மாவீரனைப் புள்ளையாப் பெத்து இருக்கே"ன்னு சொல்லி என்னோட ஒரு ஃபோட்டோ எடுத்துக்கிட்டார்.

தன் உயிரைக் கொடுத்து,அவனுக்கும், எனக்கும், என் சாதி மக்களுக்கும் ,இந்த கிராமத்துக்கும் பெருமையை வாங்கித் தந்துட்டான்.எனக்கு அது போதும் தம்பி "  என்றான்.

அதற்குள் வெளியே கூச்சல் கேட்க. மூவரும் வெளியே வந்துப் பார்த்தனர்.

ஒரு ராணுவ ஜீப்பும், அதைத் தொடர்ந்து இந்திய தேசியக் கொடி போர்த்திய செல்வத்தின் உடலை சுமந்து பல ராணுவ வீரர்கள் சூழ..ராணுவ டிரக் வண்டியும்,அதற்குப் பின்னால்  அரசு அதிகாரிகள் சிலரது கார்கள்,பல கட்சித் தலைவர்களின் கார்கள் ஆகியவற்றுடன் மயில்வாகனன் காரும் வந்து சேர்ந்தன.

மூக்கன் இல்லத்தில் வண்டி நிற்க..அதிலிருந்து செல்வத்தின் உடல் இறக்கப்பட்டது.செல்வத்தின் உடமைகளை ஒரு ராணுவ அதிகாரி மூக்கனிடம் ஒப்படைத்தார்.

பின்..ஒவ்வொரு தலைவராக வந்து..மாலை, மலர் வளையம் என மரியாதை செய்தனர்.

தமிழக அரசு சார்பிலும், முதல்வர் சார்பிலும் மலர் வளையங்கள்  வைக்கப்பட்டன.

அடுத்த சில மணி நேரத்தில், செல்வத்தின் உடலை சுமந்து ராணுவ டிரக் மயானத்திற்குப் புறப்பட்டது.

சந்தன கட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டு தகனம் செய்ய தயாராய் இருந்தது மயானம்.

மீண்டும் தலைவர்கள் இறுதி மரியாதை செய்தனர்.மயில்வாகனன் உட்பட அனைத்து தலைவர்களும், செல்வத்தின் கால்களைத் தொட்டு வணங்கினர்.

பண்ணையார்,அர்ச்சகர்,ராமன், நாராயணன்,தாமோதரன், மாடசாமி ,ப்ருத்வி, புகைப்படக்காரர் என அனைவரும் அங்கு குழுமியிருந்தனர்.

செல்வத்தின் உடலைப் போர்த்தியிருந்த இந்திய தேசியக்கொடியை எடுத்து ஒரு ராணுவ வீரர் மடித்து..மரியாதையுடன் மூக்கனிடம் தந்தார்.

இருபத்தியோரு குண்டுகள் முழங்க..செல்வத்தின் உடல் தகனம் செய்யப்பட்டது.பலர் தங்கள் கைகளால் சந்தன கட்டைகளை தகனத்தில் இட்டனர்.

இவ்வளவு நேரமும் தன் துக்கத்தை அடக்கிக் கொண்டிருந்த மூக்கன்,"டேய்..நீ சாதிச்சுட்டே டா...சாதிச்சுட்டே" என் கத்தினான்.

உடலில் உயிர் இருக்கும்வரை மதிக்காதவர்கள் உயிர் பிரிந்ததும் ஏன் இப்படி?

இவர்கள் உயர்ந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி என எதை வைத்து சொல்கிறார்கள்.

உயிரை வைத்தா,உடலை வைத்தா, புகழை
வைத்தா ,பணத்தை வைத்தா...

ப்ருத்வியுடன் வந்திருந்த புகைப்படக்காரரை அழைத்த மயில்வாகனன், மூக்கனை கட்டியணைத்தபடியே ஒரு புகைப்படம் எடுக்கச் சொன்னார். புகப்படக்காரரும், கோணம் பார்த்து ஒரு அழகிய புகைபப்டத்தினை எடுத்தார்.

ப்ருத்விக்குத் தெரியும், அந்த புகைப்படத்தையே பத்திரிகை ஆசிரியர் அடுத்த இதழில் முகப்பு அட்டையாகப் போடுவார் என. 

No comments:

Post a Comment