Tuesday, December 10, 2019

13 - மேட்டுர் அணையும்...காவிரி தன்னீரும்

வேண்டாம் என்றாலும் நாட்கள் நகர்ந்து கொண்டுதானே இருக்கின்றன.

பண்ணையாரின் நிலங்களில் நாற்று நடவு தொடங்கியது.நடவு முடிந்து மாலை கோயிலை நோக்கி வந்த பண்ணையாரை அர்ச்சகர் எதிர்கொண்டார்.

"என்ன பண்ணை..வயல்ல நடவு எல்லாம் முடிஞ்சுதா?" என்றார் அர்ச்சகர்.

'அதெல்லாம் முடிஞ்சுப் போச்சு.ஆனா இந்த சமயத்துல தண்ணீ தேங்கி நிற்கணும் வயல்ல.காவிரிலேயோ தண்ணீ இல்ல.இரண்டு வருஷமா மழை இல்லாம..நீர் பாசனக் கிணறுகளும் வத்திப் போச்சு.மாரியைத்தான் நம்பிக்கிட்டு இருக்கோம்.மாரி வர இந்த மாரிதான் உதவி செய்யணும்" என்றார்.

அதைக் கேட்ட மூக்கன் நாராயணனிடம் வந்து,"பண்ணை மாறி..மாறி..மாரி..மாரிங்கறாரே! புரியலையே" என்றான்.

அதற்கு நாராயணன், "மாரின்னா மழை..அந்த மழைவர மாரி..அதாவது இந்த மாரியம்மன் கருணை வைக்கணும்னு சொல்றார்" என்றான்.

அர்ச்சகம் பண்ணையாரிடம், "ஒரு விஷயம் கவனிச்சீங்களா? காவிரில பெரும் பகுதி தமிழ்நாட்ல இருக்கு.ஆனா ..நம்ம நதியில தண்ணீ வரணும்னா..நாம கர்நாடகக்காரனை நம்பி இருக்க வேண்டியிருக்கு.அவனோ..அதிக மழை இருந்தா..உபரி நீரை நமக்கு அனுப்பறான்.இப்ப எல்லாம் சரியான நேரத்தில தண்ணீ வராததாலே..கதிர் எல்லாம் வாடிப்போகுது" என்றார்.

"ஆமாம்..இதுக்கு இந்த அரசியல்வாதிங்க ஒரு வழி பண்ணமாட்டேன்னு சொல்றாங்களே! மக்கள் வயிறு நிரம்பணும்னு விவசாயி வெயில்ல உடம்பை வருத்திக்கிறான்..ஆனா..இந்த அரசாங்கம், அந்த விவசாயியோட வயிறு நிரம்பறதைப் பற்றி கவலைப்படறதில்லையே!" பண்ணையார் பேசிக்கொண்டிருக்கும் போதே ராமன் இவர்களை நொக்கி வருவதைக் கண்ட பண்ணை "இந்த ஏடாகூடம் இப்ப ஏன் இங்கே வர்றான்"என்றார்.

"அது என்ன நம்ம ராமனுக்கு ஏடாகூடம்னு பேர் வைச்சு இருக்கீங்க?"

"ஆமாம்...உருப்படியா அவனும் எதுவும் பேச மாட்டான்.நாம ஏதாவது சொன்னா..அதுக்கு ஏடாகூடமா எதாவது பதிலைச் சொல்லுவான்.அவனுக்குத் தெரியாத விஷயமேக் கிடையாதுன்னு சொல்லுவான்.நாட்டுல பூமிக்கு பாரமா இப்படியும் சில பேர் இருக்காங்க"

இவர்களை நோக்கி வந்த ராமன், திரும்ப என்ன நினைத்தானோ ...திரும்பி வந்து டீக்கடை பெஞ்சில் அமர்ந்தான்.அங்கே தரையில் மண்டியிட்டு அமர்ந்திருந்த மூக்கன், ராமனைப் பார்த்து"உங்கக்கிட்ட ஒண்ணு சொன்னா தப்பா நினைக்க மாட்டீங்களே!" என்றான்

"பரவாயில்லை..என்னன்னு சொல்லு"

"காம இச்சையைப் போல மோசமான வியாதி வேற எதுவும் இல்ல..இந்தக் காலத்துல ஒன்னைக் கட்டி காலம் தள்றதே கஷ்டம்..ஆனா..உங்களுக்கு இரண்டு கேட்குதே"

"ஆமாம்..மூக்கா..இவ வலக்கையைப் பிடிச்சு இழுத்தா அவ இடக்கையைப் பிடிச்சு இழுக்கறா..."

" நான் வருத்தப்படும் போதெல்லாம் அர்ச்சகர் ஒன்னு சொல்லுவார்..அதை இப்ப உங்களுக்குச் சொல்றேன்.நடந்து போனதையெல்லாம் நம்மால மாத்த முடியாது. இனி என்ன நடக்கப்போகுதுன்னு நமக்குத் தெரியாது.அதனால..இந்த இரண்டைப் பத்தியும் நினைக்கக்கூடாதுன்னு...நீங்களும் இன்னிக்கு இதுக்கு என்ன வழின்னு பாருங்க" என்றான்.

"மூக்கா..நீ கண்ணபிரானா மாறி எனக்கு செஞ்ச கீதாஉபதேசத்தை மறக்கமாட்டேன்" என்றான் ராமன் கிண்டலாக.

இதற்கிடையே, பண்ணையாரும், அர்ச்சகரும் அங்கே வந்தனர்.

"என்ன மூக்கா...ராமன் உன் கூட ரொம்ப நேரமா பேசிக்கிட்டு இருக்கான்?" என்றார் பண்ணை.

உடனே ராமன், " அது ஒன்னுமில்ல..மூக்கன், நம்ம அர்ச்சகர் நாலும் தெரிஞ்சவர், அறிவாளின்னு சொன்னான்.அதுக்கு நான், அவருக்கு நாலும்தான் தெரியும், எனக்கு பத்தும் தெரியும்னு சொன்னேன்" என்றான்.

'ராமா..அப்பப்ப பேசும் போது ஊறுகாய் மாதிரி அர்ச்சகரையும், கடவுளையும் தொட்டுக்கலைன்னா
உனக்குப் பொழுதேப் போகாதா?"

"பண்ணை..தெரியாமத்தான் கேட்கறேன்..இன்னிக்கு பேப்பரைப் பார்த்தீங்களா? எங்கே பார்த்திருக்கப் போறீங்க!மதுரை கோயில்ல பாம் வைச்சு இருக்கறதா ஒரு ஃபோன் வந்ததாம்.அப்படி கடவுள்னு ஒருத்தர் இருந்திருந்தா..அவர் கோயில்ல வெடிகுண்டு வைச்சவனைக் காட்டிக் கொடுக்க வேண்டாமா? அதை விடுத்து..அந்த மீனாட்சி அம்மனை தரிசிக்க வர்றவங்களை சோதனைப் போடறோம்னு பக்தர்களை சோதிக்கிறது சரியா? இதுக்கு இந்த அர்ச்சகர் என்ன சொல்றார்...ஏதாவது நொண்டிக் காரணம் சொல்வார் அவ்வளவுதான்."

"ராமா..வெடிகுண்டிற்காக பக்தர்களை சோதனைப் போடறதை ஏன் சந்தேகக் கண்ணோட பார்க்கற..மடியில கனம் இல்லேன்னா ஏன் பயப்படணும். அதையே கொஞ்சம் மாத்தி யோசனைப் பண்ணிப்பாரு.வெடிகுண்டு.., வெடிகுண்டு வைச்சவனைக் கூட பாதிக்கக் கூடாதுன்னு அந்த ஆண்டவன் நடத்தற செயல் இதுன்னு புரிஞ்சுப்ப.." என்றார் அர்ச்சகர்.

"அர்ச்சகரே! இருக்காரா? இல்லையா?ந்னு தெரியாத அந்த ஆண்டவனுக்கு வக்காலத்து வாங்கறீங்களே! அவன் வந்து உங்களையெல்லாம் பாதுகாப்பார்னு நினைகக்றீங்க?"

"ராமா...நீ கேட்கறதால சொல்றேன்..இன்னிக்கு, பிராமணர்களும் சரி, தலித் மக்களும் சரி..தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ளும் நிலமைலதான் இருக்காங்க. என்ன ஒன்னு, இந்த பிராமணர்கள் என்னிக்கும் கோஷம் போட்டதோ, கொடி பிடிச்சதோ கிடையாது.ஏன்னா..அவங்க அவமானங்களைத் தாங்கிக்கப் பழகிட்டாங்க.ஆனா அதுவே பூமராங்கா, அவமானப்படுத்தினவங்களையே திருப்பித் தாக்குது
இப்படி பிராமண துவேஷத்தில இருக்கியே..இன்னிக்கு எந்த பிராமணன் நீ சொல்றாப்போல இருக்கான் சொல்லு.உங்களுக்கு ஏத்தாப்போல அவனும் மாறிட்டான் இல்ல.சில அடையாளங்களையும் அவங்க மாத்திக்கிட்டாங்க.பல விடுகள்ல பிராமண பேச்சும், வழக்கும் கூட மாறிப்போச்சு.அப்படியும் நீங்க அவனை திட்டறதை விடலை.இது அரசியல்ல மட்டும் நடக்கல..இலக்கிய உலகம் அவனைக் கேலி செய்யுது..தமிழ் சினிமாக்கள் கிண்டல் பண்ணுது..தமிழ் நாடகங்கள் கிண்டல் பண்ணுது..." அர்ச்சகரின் குரல் தழுதழுத்தது.

உடன் பண்னையார், "அவன் கிடக்கறான் விடுங்க.அவனுக்கு எதுக்கு இப்படி விலாவாரியா பதில் சொல்றீங்க.நாம வேற விஷயங்களைப் பேசுவோமே"

அதைக் கேட்ட ராமன்.."வேற விஷயமா..அதையும் நானே சொல்றேன்.இந்த வருஷமும் மேட்டூர் அணையில தண்ணீ இல்லை.அதனால சரியான நேரத்துக்கு இந்த முறையும் திறக்கமாட்டாங்க" என்றான்,

"காவிரி தண்ணீரை கர்நாடகா விட்டாதானே மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரும்"

"தண்ணீ வரணும்னா காவிரி கண்காணிப்புக் குழுவின் உத்தரவை கர்நாடகா மதிக்கணும்.நமக்கு அதிர்ச்சி அளிக்கக்கூடிய செய்தி ஒன்னும் இன்னிக்கு பத்திரிகையில வந்திருக்கு. வான் பொய்த்தாலும் தான் பொய்க்காது என காவியங்களில் பாராட்டப்பட்ட காவிரியின் பாசனப்பகுதிகள் விரைவில் பாலைவனமாக மாறிடும்னு பொறியியல் வல்லுநர்கள்  எச்சரிச்சிருக்காங்க.நாசா விண்வெளி மையமும் இதை படம் பிடிச்சு காட்டியிருக்கு.இந்திய வனத்துறையினர் குடகு மலைக் காடுகளைப் பாதுகாத்து காவிரி நதியைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்கணும்" என்ற ராமன், "தமிழக அரசும் இதுபற்றி ஆராய நிபுணர்கள் குழுவை அனுப்ப இருக்கு.கூடிய சீக்கிரம் அதிகாரிகள் வந்து வறட்சி பற்றி நம்ம கிராமத்திலேயும் விசாரிப்பாங்கன்னு நினைக்கிறேன்" என்றான்.

இதையெல்லாம் பாதி புரிந்தும்..பாதி புரியாமலும் கேட்டுக் கொண்டிருந்த மூக்கன், "அதிகாரிகள் வந்த பிறகு என்னாகும்" என்றான்.

அதற்கு ராமன் "என்ன ஆகும்..அதிகாரிகள் விசாரிப்பாங்க...விசாரிப்பாங்க...விசாரிச்சுக்கிட்டே இருப்பாங்க " என்றான். 



No comments:

Post a Comment