Sunday, December 8, 2019

11 - பஞ்சமி நிலம்

மயில்வாகனன் வீட்டிலிருந்து திரும்பிய தாமோதரன் சைக்கிளை குப்பால் கடையில் விட்டு விட்டு..நாராயணனின் டீக்கடையை நோக்கி வந்தான்.

கடையில் மூக்கன் தரையில் அமர்ந்திருக்க அருகில் பெஞ்சில் ராமன் அமர்ந்திருந்தான்.மூக்கனின் அருகில், வண்டி மாட்டை அவிழ்த்து விட்டு சிறிது புல்லை அதற்குப் போட்டு விட்டு மாடசாமி வந்து அமர்ந்தான்.

கோயிலில் உச்சகால பூஜை முடிந்ததை அறிவிப்பது போல கோயில் மணி அடிக்க..அர்ச்சகர் தீபாராதனை செய்தார்.திடீரென மணியின் சப்தத்தைக் கேட்ட கோயில் மாடங்களில் அமர்ந்திருந்த புறாக்கள்.."பட..பட.." என சிறகு அடித்து தேர்முட்டிக்கு வந்து தேரின் உச்சியில் அமர்ந்தன.

மிகவும் களைப்புடன் வரும் தாமோதரனைப் பார்த்த மூக்கன், "வா...தாமோதரா..வா.. ரொம்ப சோர்வாயிருக்க.ஒரு டீ சாப்பிடு"என்று உபசரித்து ,நாராயணனை ஒரு டீ போடச் சொன்னான்.


தேநீரை வட்டிலில் கொணர்ந்து தாமோதரன் அருகில் வைத்தான் நாராயணன்.அதை எடுத்துப் பருகியபடியே மயில்வாகனன் தன்னிடம் பேசியவற்றை தாமோதரன் கூறினான்

அதுவரை ஏதோ செய்திகளைப் படித்துக் கொண்டிருந்த ராமன், "தாமோதரா..உன் கிட்ட இருக்கிறது அரசாங்கம் உன் மூதாதரையருக்குக் கொடுத்த பஞ்சமி நிலம்" என்றான்.

"பஞ்சமி நிலமா" அப்படின்னா என்ன?" என்றான் மூக்கன்.

அதற்கு ராமன் சொல்லப் போவதை நாராயணனும்,தாமோதரனும், மூக்கனும் கேட்கத் தயாராயினர்.

'சொல்றேன் கேளுங்க!
சுதந்திரத்திற்குப் பிறகு அரசின் சார்பாக பட்டியல் இன மக்களுக்காக  வழங்கப்பட்ட நிலமே பஞ்சமி நிலம்னு சொல்றது.எந்த உபயோகமும் இல்லாது,தரிசாகக் கிடந்த அந்த நிலங்களை , பணத்தேவைக்காக பிற்காலத்தில்  பெரும்பாலானோர்..மயில்வாகனன் போன்ற ஆட்களிடம் ஏமாந்து விற்றுவிட்டனர்.அந்த நிலங்களை விற்ற மக்கள்..பட்டடைக்கல் போல...அவங்களை வைத்தே.."

"பட்டடைக் கல்னா" என்றான் மூக்கன்.

"சொல்றேன்..பட்டடைக்கல்னு சொல்றது..கொல்லன் உலைக்களத்தில், காய்ச்சிய இரும்பினை தங்கள் இஷ்டம் போல வளைக்க செம்மட்டியால் அடிக்கும் அடிகளை எல்லாம் தாங்கிக் கொண்டு நிலைகலங்காது இருக்கும் இரும்புக்கல்தான் பட்டடைக்கல் ஆகும்.உங்களுக்குப் புரியும்படி சொல்வதானால்..உங்களை வைச்சே..உங்களை அழிக்கும் வேலைன்னு சொல்லலாம்."

புரிந்ததோ இல்லையோ..மூக்கன் தலையாட்டினான்..

"நீ மேல சொல்லு ராமா.." என்றான் நாராயணன்.

"அந்த நிலங்களை உங்கக் கிட்ட இருந்து வாங்கி உங்களை வைச்சே..உங்களை உழைக்க வைச்சே..பாசன நிலங்களாக மாற்றி பெரும் பணக்கரராகிவிட்டார்கள்.அப்படி வாங்கிய நிலங்களையும் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணம் கொடுத்து கிரயம் பெறப்பட்டிருக்கு.

இப்போ...ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் பதிவு அலுவலத்தில் செய்யப்பட்ட கிரயங்கள் செல்லாது என்றும், அந்த நிலங்களை மீண்டும் அரசாங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிச்சு இருக்காங்க.இதை எதிர்த்து அவங்க நீதி மன்றம் போயிருக்காங்க.

பஞ்சமி நிலங்களை வேறு சமுதாயத்தினர் வாங்கக்கூடாது என்றால் பதிவு அலுவலகங்கள் அதை பதிவு செய்யாம நிராகரிச்சிருக்கணும்.அதையெல்லாம் செய்யாமல் நிலத்தை பண்படுத்தி விவசாய நிலமாக மாற்றிய பின் அதை எப்படி திரும்பிக் கொடுக்கமுடியும்னு கேட்கறாங்க.

பஞ்சமி நிலப்பிரச்னையை கிளப்பிவிட்டு அரசியல்வாதிங்க சாதிப்பிரச்னையை தங்கள் லாபத்துக்காக தூண்டி விடறாங்க.

இது எல்லாம் தெரிந்தும் தாமோதரன் நிலத்தை அவன் கிட்ட இருந்து அபகரிக்க மயில்வாகனன் நினைக்கிறான்"என முடித்தான் ராமன்.

"அது எப்படி.." என்றான் நாராயணன்.

"தாமோதரன் மூதாதரையர்களுக்கு அரசு கொடுத்த நிலத்தை பதப்படுத்தி, தாமோதரன் விவசாயம் செய்துகிட்டு இருக்கான்.அதை எப்படியாவது
 அபகரிக்கப் பார்க்கிறான் மயில்வாகனன்.அதுக்காகத்தான் தாமோதரனுக்கு ஆசைக் காட்டி முதல்ல அவன் கட்சிக் கொடியை நம்ம கிராமத்துல நட வைச்சு இருக்கான்.இப்ப, அவனும், அவன் மகளும் அரசியல்ல நுழையலாம்..  பெரிய ஆள் ஆகலாம்னு ஆசைக்காட்டி..அவன் நிலத்தை அபகரிக்கப் பார்க்கிறான்" என்று முடித்தான் ராமன்.

"என் உசுரே போனாலும்..என் நிலத்தை விற்கமாட்டேன்" என்றான் தாமோதரன்.

கோயில் நடையச் சாத்திவிட்டு வந்த அர்ச்சகர், டீக்கடையில் கூடியிருந்தவர்களையும், அவர்களிடம் ராமன் ஏதோ பேசிக்கொண்டிருந்ததையும் பார்த்து, "என்ன ராமா! என்ன
விஷயம்..மீட்டிங் நடக்குது" என்றார்.

'ம்..உங்காத்துக்கு சாப்பிட வரலாமான்னு யோசிச்சுக்கிட்டு இருக்கோம்' என்றான் ராமன்.

"உன் கிட்ட பேச வந்தேன் பாரு  ..என்னைச் சொல்லணும்"என்றபடியே..உச்சி வெயிலில் காலில் செருப்பும் இன்றி தத்தளித்தபடியே அக்ரஹாரம் நோக்கிச் சென்றார் அர்ச்சகர்.

"பாவம் அர்ச்சகர்.அவர் கிட்ட ஏன் இப்படி நடந்துக்கறே! அவர் உனக்கு என்ன செய்தார்" என்றான் மூக்கன்.

மூக்கனைப் பார்த்து ஒரு முறைப்பு முறைத்து விட்டு ராமனும்
கிளம்பினான்.

No comments:

Post a Comment