Wednesday, December 11, 2019

14 - உண்ணாவிரதம்

தான் பலமுறை முயற்சித்தும், தாமோதரன் தனது நிலத்தை தரும் விஷயத்தில், பிடிவாதமாக இருந்ததால், மயில்வாகனன் அவனை எப்படி தன் வழிக்குக் கொண்டு வருவது என யோசிக்க ஆரம்பித்தான்.தவிரவும் அவனது மகள் கற்பகமும் அவனது நினைவில் அடிக்கடி வந்து துன்புறுத்திக் கொண்டிருந்தாள்.

 கிராமத்தில்,காவிரி தண்ணீர் சற்றும் இல்லாமல் இருந்தது.இன்னும் ஓரிரு மாதங்களில் அறுவடை ஆகவேண்டிய கதிர்களெல்லாம் வாடத் தொடங்கின.பாசனக்கிணறுகளில் புல், பூண்டுகள் விளைந்தன.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும், தாமோதரனை தன் வழிக்குக் கொணரவும்...ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்துவிடலாம் என மயில்வாகனன் திட்டமிட்டான்.

காவிரியில் தண்ணீர்விட மறுக்கும் கர்நாடகாவினை எதிர்த்து, பூங்குளத்தில் ஒருநாள் அடையாள உண்ணாவிரதம் தன் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கச் செய்தான்.

பண்ணையார்,கவுண்டர் ஆகியோர் நிலங்களும் வறண்டதால், கிராமத்தில் அரசியல்கட்சிகளே நுழையக்கூடாது என்று இருந்த கட்டுப்பாடை சற்றே தளர்த்தி.. நல்லது நடக்கும் என்ற எண்ணத்தில் உண்ணாவிரதத்துக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

டீக்கடையின் பக்கத்தில், தென்னை ஓலை வேயப்பட்ட பந்தலைப் போட்டு மயில்வாகனனும், அவன் கட்சியைச் சேர்ந்த சிலரும் ஒருநாள் காலை எட்டு மணிக்கு உண்ணாவிரதத்தை ஆரம்பித்தனர்.

உண்ணாவிரதம் ஆரம்பிக்குமுன், நாராயணனிடம் முன்னமே சொல்லி, பொங்கலும், வடையும் உண்ணாவிரதம் இருப்போருக்கு காலை உணவாக டீக்கடையின் பின்புறம் அழைக்கப்பட்டுக் கொடுக்கப்பட்டது.இந்த விஷயம் ரகசியமாகவே வைக்கப்பட்டது.

பொறுப்புகள் முழுதும் தாமோதரனின் மேற்பார்வையில் நடப்பது போல ஒரு மாயத் தோற்றத்தையும் மயில்வாகனன் செய்தான்,தாமோதரனுக்கு உதவியாக இளைஞனான மூக்கனின் மகன் செல்வம் அமர்த்தப்பட்டான்.

"தமிழக அரசே! தண்ணீர் கொடு..தண்ணீர் கொடு."
"பிறந்த வீட்டிலிருந்து புகுந்த வீட்டுக்கு வரும் பொன்னியை வாழவிடு வாழவிடு"
"விவசாயிகள் வயிற்றில் அடிக்காதே"
என்றெல்லாம் பதாகைகளும், கோஷங்களும் இருந்தன.

இதனிடையே..உண்ணாவிரதம் நடைபெறும் நேரத்தில், இயற்கை உபாதையைக் கழிக்கச் செல்வதுபோல சிலர் டீக்கடையின் பின்புறம் சென்று, திரும்பிவரும் போது வாயைத்துடைத்துக் கொண்டும் வந்தனர்.

மாலை ஆறு மணிக்கு உண்ணாவிரதம் முடிந்ததாக அறிவிக்கப் பட்டது.பழச்சாறினை அருந்தி மயில்வாகனன் உண்ணாவிரதத்தை முடித்து கொண்டான்.அவனைத் தொடர்ந்து மற்றவர்களும் பழச்சாறு அருந்தினர்.

காலை முதல் உண்மையிலேயே உண்ணாவிரதம் இருந்த செல்வம், எல்லோரும் அருந்தி முடிந்த பின் மீதமிருந்த சிறிது பழச்சாற்றினை தன் வாயில் ஊற்றிக் கொண்டான்.அப்போது பின்னால் ஒருந்து ஒரு உதை அவன் மீது விழுந்தது.

"டேய்.....(பிரசுரிக்கவும் வெட்கப்படும் வகையில் கெட்ட வார்த்தைகள் கூறிய பின்)..யே..உனக்கும் பழச்சாறு கேட்குதா" என்ற மயில்வாகனன் குரல் கேட்டது.
அப்படியே குப்புற விழுந்தான் செல்வம்.

"உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.யாரும் இருக்கும் இடத்துல இருக்கணும்,,ஞாபகம் இருக்கட்டும்.அதைவிட்டுட்டு பெரிய ஆளா ஆகணும்னு நெனச்கே...தொலைச்சுடுவேன் ..தொலைச்சு" என்றான்.

காலையிலிருந்து எதுவும் சாப்பிடாதது,எதிர்பாராமல் விழுந்த பலமான உதை எல்லாம் சேர்ந்ததால், செல்வம் உடனே மயக்கமானான்.

அதைப்பார்த்த தாமோதரன், "தலைவரே! மயக்கமாயிட்டான்" என்றான் பதட்டத்துடன்.

இதற்குள் ஊர் இளைஞர்கள் பலரும் அங்குக் கூடிவிட்டனர்.

நிலைமை மோசமாகிவிடுமோ என பயந்த மயில்வாகனன், தாமோதரனிடம், "இங்கே யாராவது என்ன ஆச்சுன்னு கேட்டா,செல்வம், உண்ணாவிரதம் முடிஞ்சதும் தலைவரைத் தாக்கப் பார்த்தான்..அதனாலே நான்தான் அவனைத்தாக்கினேன்னு ,சொல்லிடு"  என்றான்.

"அது எப்படி தலைவா..பொய் சொல்றது" என்றான் தாமோதரன்.

வந்த இளைஞர்கள் தன்னை சந்தேகத்துடன் பார்ப்பதைப் பார்த்த மயில்வாகனன் உடனே.."என்ன தாமோதரா...இப்படி பண்ணிட்டே.செல்வம் யாரு..உங்க ஆளு..அப்படியிருக்கும் போது அவன் என்னைத் தாக்குவானா ? உண்ணாவிரதம் முடிஞ்சதும் எனக்கு வாழ்த்து சொல்லத்தான் வந்தான், அதைப்போய் என்னைத் தாக்க வந்ததாய் நினைச்சு..அவனை இப்படி மயக்கம் வர மாதிரி அடிச்சுட்டியே!" என்றான் மயில்வாகனன் 

அதைக்கேட்டு, தாமோதரன் அதிர்ந்து நிற்க, வந்த கூட்டம் தாமோதரனை வெறுப்புடன் பார்த்தது.அதில் ஒருவன், "அவன் நம்ம ஆளாய் இருந்தா என்ன? செல்வத்தை அடிச்சு இருக்கான்..அவனை சும்மா விடக்கூடாது" என தாமோதரன் மீது பாயத் தயாராக.."ஐயய்யோ..செல்வம்..உனக்கு என்ன ஆச்சு?" எனக் கதறியபடியே வந்த மூக்கனைப் பார்த்து அப்படியே நின்றது கூட்டம்.

No comments:

Post a Comment